அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் 25ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! 0 இந்துத்துவா பற்றி சர்ச்சை பதிவு; கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது 0 விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு! 0 ரேஷன் கடைகளில் இனி கம்பு, கேழ்வரகு: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு 0 பட்ஜெட் உதயசூரியனைப் போன்று ஒளியூட்டக்கூடியதே தவிர மின்மினிப்பூச்சி அல்ல: முதல்வர் ஸ்டாலின் 0 குடும்பத்தலைவிக்கு ரூ.1000 அல்ல; ரூ.29,000 வழங்கவேண்டும்: அண்ணாமலை 0 தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளா? எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 0 தமிழ்நாட்டு வரும் வருமானம் செலவு: முழு விவரம் 0 மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு விரிவாக்கத் திட்டம்: பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? 0 பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிவருகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 0 லண்டன் இந்திய தூதரகத்தில் காலிஸ்தான் கொடி ஏற்றம்! 0 தலைமறைவாக இருந்த கன்னியாகுமரி பாதிரியார் பெனடிக் ஆன்டோ கைது 0 ரஜினிகாந்த் மகள் வீட்டில் பல லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை 0 அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிடக்கூடாது: உயர்நீதிமன்றம் 0 ராகுல்காந்தி வீட்டில் குவிந்த டெல்லி போலீஸ்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

அப்பா மகிழ்ந்த தருணம்! - ஜெ.ஜெயவர்த்தன்

Posted : வெள்ளிக்கிழமை,   ஜனவரி   01 , 2021  16:31:59 IST


Andhimazhai Image1991-ஆம் ஆண்டு அமைச்சராக பொறுப்பேற்ற எனது தந்தை, மீன்வளத்துறை, பால்வளத்துறை, வனத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உள்ளிட்ட துறைகளில் அமைச்சர் பொறுப்பை வகித்தார்.


அதற்கு முன்பாக நான் 1987 இல் பிறந்தேன். மக்கள் பணி, கழகப் பணியில் இரவு பகலாக ஈடுபட்டு அம்மாவின் ஆட்சிக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுக்க வேண்டுமென அப்பா எப்போதுமே உறுதியாக இருப்பார். இத்தகைய சூழலில் அவர் எங்களுடன் நேரத்தை செலவிடுவது மிகக் குறைவுதான். மக்கள் பணியின் நிமித்தமாக பின்னிரவு நேரத்தில் வந்து அதிகாலையிலேயே புறப்படும் சூழல்கூட அதிகமாக இருக்கும்.

அதேவேளையில், பல்வேறு மாவட்டங்களுக்கு அவர் பயணம் மேற்கொள்ளும்போது என்னை, அண்ணன், அக்காவை உடன் அழைத்துச் செல்லும் சம்பவம் அவ்வப்போது நிகழும். சந்தர்ப்பத்தை பொறுத்து இப்படியான பயணம் எங்களுக்கு கிடைக்கும். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் செல்லும்போது அங்கு மக்களை சந்திப்பதற்கான வாய்ப்பு, எண்ணற்ற புதிய அனுபவங்கள், விவசாயம், பண்பாடு, நீர் நிலையங்கள்  பற்றிய அறிமுகம் போன்ற அனுபவங்கள் எங்களுக்கு கிடைக்கும். இவை பற்றியெல்லாம் நாங்கள் அறிந்துக்கொள்ள வேண்டுமென்ற நோக்கில்தான் அப்பா எங்களை அழைத்துச் செல்வார்.
பத்தாம் வகுப்பு வரை என்னிடம் கண்டிப்புடன் நடந்துகொண்டவர், அதன் பிறகு என்னை அவரது தோழனைபோல் நடத்தினார். எந்த முடிவுகளையும் சுதந்திரமாக நானாகவே எடுக்க அனுமதித்தார். நான் என்ன படிக்க வேண்டும், எதில் கவனம் செலுத்த வேண்டுமென நானே தீர்மானிக்க முடிந்தது.
தினமும் நாங்கள் அனைவரும் செய்தித்தாள்களை படிக்க வேண்டுமென்பதை மட்டும் கண்டிப்புடன் பின்பற்றச் செய்தார்.

இரவு தூங்கும் முன்பும், காலை விழித்தவுடனும் புரட்சித்தலைவரின் தத்துவப் பாடல்களை கேட்பது அப்பாவின் வழக்கம். இதே பழக்கம் அப்பாவைத் தொடர்ந்து என்னிடம் ஏற்பட்டது. 90களுக்கு பிறகு வந்த திரைப்படங்களை பார்ப்பதில் அப்பாவுக்கு பெரிய ஆர்வம் கிடையாது.

புரட்சித்தலைவர் நடித்த படங்களை உற்சாகத்துடன் பார்ப்பார். அப்பாவைப் போல எனக்கும் புதிய படங்களின் மீது ஆர்வம் குறைவாகவே இருக்கிறது. கல்லூரி காலத்தில் நண்பர்களோடு சேர்ந்து சென்றதோடு சரி. திரையரங்கில் புதுப்படம் பார்த்து ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன.

எம்.பி.பி.எஸ். முடித்த பிறகு பட்ட மேற்படிப்பு படிக்க தீர்மானித்தேன். ஆரம்பத்தில் நான் எம்.டி. அறுவை சிகிச்சை மருத்துவம் தான் கற்க விரும்பினேன். எனினும், மாவட்ட கழகச் செயலாளர், அமைச்சர் பொறுப்புகளில் இருந்த அப்பாவோடு நானும் அப்போது களத்திற்கு செல்ல தொடங்கினேன். குறிப்பாக வடசென்னை மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கு சென்றிருக்கிறேன். அதோடு மட்டுமல்லாமல் புரட்சித் தலைவி அம்மாவுடைய பிறந்தநாள் வந்தால் மருத்துவ முகாம், இரத்த தான முகாம் போன்ற முன்னெடுப்புகளை ஏற்பாடு செய்வோம். அதில் நானும் இரத்த தானம் வழங்குவேன். இவ்வாறு இயங்க தொடங்கியதால், எனக்குள்ளே ஒரு கேள்வி எழுந்தது. இத்தகைய சூழலில் அறுவை சிகிச்சை படிப்பை தேர்ந்தெடுத்தால் மக்கள் பணியில் ஈடுபடுவது பாதிக்கலாமென தோன்றியது. காரணம், அறுவை சிகிச்சை பிரிவில் பயிற்சிக்காகவே பெரும்பகுதி நேரத்தை செலவிட நேரிடும். இதுவே பொது மருத்துவம் தேர்ந்தெடுத்தால் பயிற்சியும் கிடைக்கும், மக்கள் பணிகளிலும் ஈடுபடலாமென தீர்மானித்தேன். அப்பாவுடன் கலந்தாலோசிக்- காமலேயே எம்.டி பொது மருத்துவம் எடுத்தேன்.

எனது அரசியல் வருகையும் அப்பாவுக்கு எந்த வகையிலும் தொடர்பில்லாமல் தான் நிகழ்ந்தது. புரட்சித் தலைவி அம்மா அவர்கள், வாரிசு அரசியலை விரும்பவும் மாட்டார், அதை ஊக்குவிக்கவும் மாட்டார் என அனைவருக்குமே தெரியும். சிறு வயது முதலே புரட்சித் தலைவி அம்மா எங்கள் வீட்டில் தெய்வமாக போற்றப் பட்டார். அதனை பார்த்தே வளர்ந்தவன் நான்.

எனது திருமணம் அம்மாவின் தலைமையில் தான் நடந்தது. அப்போது நான் அவர்களிடம் பேசினேன். பிறகு எதிர்பாராத விதமாக 2013 டிசம்பர் மாதம் அம்மா என்னை அழைத்து, உனக்கு அரசியலில் ஆர்வம் இருக்கிறதா? எந்த தொகுதி வேண்டுமென கேட்டார்கள். அரசியலில் எனக்கு ஆர்வம் இருக்கிறது. அம்மாவின் வழியில் சில மக்கள் பணிகளில் ஈடுபட்டு வருகிறேன் என நான் பதிலளித்தேன். சரி எந்த தொகுதி வேண்டுமென்றார்.. நீங்கள் எந்த தொகுதியில் நிறுத்தினாலும் போட்டியிடுகிறேன் என்றேன். ஆனால், அதனை ஏற்காமல் எந்த தொகுதி வேண்டுமென அம்மா என்னை மீண்டும் மீண்டும் கேட்டார். மறுக்க முடியாமல் வடசென்னை தொகுதியை கேட்டேன். வடசென்னையில் நான் களப்பணி செய்திருக்கிறேன். அங்குள்ள மக்களோடு பழகியிருக்கிறேன். அப்பா இருக்கும் தொகுதி என்பதால் நான் வடசென்னை தொகுதியை கோரினேன். சரி யாரிடத்திலும் சொல்ல வேண்டாம் நீங்கள் செல்லுங்கள் என்று அம்மா என்னை அனுப்பிவைத்தார்.

ஒரு இளைஞனுக்கு முதன்முறை வாய்ப்பளிக்கிறோம். அவன் நூறு சதவீதம் வெற்றிபெற வேண்டுமென அம்மா நினைத்ததால், அவரே தேர்ந்தெடுத்து என்னை தென்சென்னையில் போட்டியிட செய்தார். என்னை அரசியலுக்கு கொண்டுவந்தவர் புரட்சித் தலைவி அம்மா மட்டுமே. வீட்டில் அப்பாவுடனான ஒவ்வொரு சந்திப்பிலும் அவர் என்னிடம் அரசியல் குறித்து மட்டுமே உரையாடுவார். சமூகத்திலும், நமது மாவட்டத்திலும் என்ன நடக்கிறது? மக்கள் என்ன பிரச்னையை சந்திக்கிறார்கள்? என்பதையே முதன்மையாக பேசுவார். இவையெல்லாம் நான் அரசியலில் ஈடுபடுவதில் மறைமுகமாக தாக்கம் செலுத்தியது. நாடாளுமன்றத் தேர்தலில் நான் வெற்றிபெற்று திரும்பிய தருணத்தைக் கூட அப்பா மிக சாதாரணமாகவே எடுத்துக்கொண்டார். இதில் எந்த பூரிப்படையும் உணர்வும் அவரிடம் இல்லை.

நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த அம்மா பலமுறை மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தார். நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது இத்திட்டத்திற்காக நாடாளுமன்றத்தில் பேசியதோடு, நகர்ப்புற வளர்ச்சி அமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன். அதன்மூலம் அத்திட்டத்திற்கு நிதி JxURk செய்யப்பட்டு,  முதல்வர் எடப்பாடி பழனிசாமி & துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்கள். அப்போது நான் அருகில் இருக்கும்போது முதல்வர் பழனிசாமி, அப்பாவிடம் ‘‘தம்பி நாடாளுமன்றத்தில் பேசி, முயற்சி செய்து நிதி பெற்றுத் தந்ததன் மூலம் இன்று அடிக்கல் நாட்டியிருக்கிறோம்'' என்றார். அந்த தருணத்தில் தான் அப்பாவின் முகத்தில் பூரிப்பு தவழ்ந்ததை உணர்ந்தேன்.

சந்திப்பு: வசந்தன்

(அந்திமழை ஜனவரி 2021 சிறப்பிதழில் வெளியான கட்டுரை) 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...