அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 என்னை அன்பால் மாற்றியவர் என் மனைவி: ரஜினி 0 பழனி முருகனுக்கு 16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம்! 0 சாதனையாளர்களுக்கு விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 தேசியக் கொடியை ஏற்றினார் ஆளுநர் ஆர். என்.ரவி! 0 கொடியேற்றிய முதலமைச்சர்; விழாவை புறக்கணித்த முதல்வர்: தெலங்கானாவில் பரபரப்பு! 0 கொலிஜியத்தில் ஒன்றிய அரசின் பிரதிநிதிகள் வேண்டும்: சட்ட அமைச்சர் கடிதம் 0 “ஒன்று கூடுவோம் ஸ்டாலின்.. தமிழ்நாடு வாழ்க”: ட்வீட் செய்த கமல்ஹாசன்! 0 குட்கா, பான் மசாலா புகையிலை பொருட்களுக்கு நிரந்தர தடை விதிக்க முடியாது: நீதிமன்றம் உத்தரவு! 0 இருளர் பழங்குடி செயல்பாட்டாளர்களுக்கு பத்ம விருதுகள்! 0 ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்கள் ஏலம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு! 0 நாஞ்சில் சம்பத் மருத்துவமனையில் அனுமதி 0 ஆளுநரின் தேநீர் விருந்து: ஒட்டுமொத்தமாக புறக்கணித்த திமுக கூட்டணி கட்சிகள் 0 தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு விவகாரம்: தீர்ப்பு தள்ளிவைப்பு 0 "வீட்டை முற்றுகையிடுவோம்": தாமரைக்கு எதிராக ஜல்லிக்கட்டு அமைப்பு 0 மருத்துவம் தொடர்பான சர்ச்சை கருத்துகள்: சித்த மருத்துவர் ஷர்மிகாவிடம் விசாரணை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

ஜானகிராமனின் ஜப்பான்! - எஸ்.ராமகிருஷ்ணன்

Posted : திங்கட்கிழமை,   ஜுன்   28 , 2021  12:32:43 IST


Andhimazhai Image

ஜானகிராமன் தனது ஜப்பானியப் பயண அனுபவத்தை உதயசூரியன் என்ற பெயரில் சுதேசமித்திரன் வார இதழில் எழுதினார். பின்பு அது சிறிய நூலாக வெளியிடப்பட்டிருக்கிறது

அகில இந்திய வானொலியில் பணியாற்றிய போது அரசுமுறைப் பயணத்தை மேற்கொண்ட ஜானகிராமன் ஒன்றிரண்டு மாதங்கள் ஜப்பானில் இருந்திருக்கிறார். அந்த விபரங்கள் நூலில் இல்லை. நாமாக யூகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

சென்னையிலிருந்து கல்கத்தா சென்று அங்கிருந்து டோக்கியோவிற்கு விமானத்தில் சென்றிருக்கிறார். விமானப்பயணம் குறித்த அவரது பயத்திலிருந்து தான் பயணநூல் துவங்குகிறது. அறிவியல் புனைகதை எழுத்தாளரான ரே பிராட்பரி விண்வெளி ஆய்வு, ராக்கெட் பயணம் என நிறைய எழுதியிருக்கிறார். ஆனால் அவருக்கு விமானத்தில் பறப்பதென்றால் பயம். ஆகவே விமானத்தில் சென்றதேயில்லை.

ஜானகிராமனுக்கு பயம் இருந்த போதும் அதைக் காட்டிக் கொள்ளவில்லை. பக்கத்தில் இருப்பவரோ பயத்தில் பிரார்த்தனை செய்கிறார். விமானம் மேகக்கூட்டத்திற்குள் பறக்கிறது. பயம் கலைந்து போக ஆரம்பிக்கிறது.
தி.ஜானகிராமன் விமானத்தில் டோக்கியோ போய் இறங்கியதும் மரபும் நவீனமும் ஒன்று கலந்த தேசமாக இருப்பதைக் காணுகிறார். அவர் தங்கிய விடுதியில் ஆட்கள் இருக்கிறார்களா எனத் தெரியாத அமைதி. இத்தனை பேர் இருக்கிற இடத்தில் எப்படி இவ்வளவு அமைதி என ஆச்சரியமாகிறார்.

புதிய இடத்தில் உறக்கம் வருவதில்லை. உறக்கம் நாம் விரும்பும் போது ஒரு போதும் வருவதில்லை என்பது தானே நியதி.

விமானத்தில் தரப்படும் உணவு எல்லாக் காலத்திலும் ஒரே போல மோசமாகத் தானிருந்திருக்கிறது. அதிலும் சைவ உணவு என்றால் கேட்கவே வேண்டாம். வாயில் வைக்க முடியாது. அப்படிப் பசியோடு பயணித்து டோக்கியோ போய் இறங்கிய ஜானகிராமனுக்கு இரவில் சாப்பிட எதுவும் கிடைக்கவில்லை. கொண்டு போன நொறுக்குத்தீனிகளைச் சாப்பிட்டு தண்ணீரைக் குடித்துவிட்டு உறங்குகிறார்.

பயணத்தில் நாம் நமது பலம், பலவீனங்களை அறிந்து கொள்கிறோம். எதை வீட்டிலிருக்கும் போது வெறுக்கிறோமோ அதை வெளியே சென்றதும் விரும்பத் துவங்கிவிடுகிறோம் என்பதைப் பயணமே கற்றுக் கொடுக்கிறது. சாமிநாதன் என்ற நண்பர் அவர் தங்கியிருந்த அதே விடுதியில் தங்கியிருப்பதை அறிந்து அவருடன் இணைந்து கொள்கிறார் ஜானகிராமன்

ஜப்பானியப் பயணத்தில் அவர் புகழ்பெற்ற பௌத்த ஆலயங்களைத் தேடித்தேடி காணுகிறார். அது மட்டுமன்றி ஜப்பானின் பழமையான நோ, கபூகி நாடகங்களைக் காணுவதற்காகச் செல்கிறார். அந்த நாடகங்களுக்கு அங்கேயும் பார்வையாளர்கள் அதிகமில்லை. ஆனால் சிரத்தை Gkzx மிக அழகாக நாடகத்தைத் தயாரித்திருக்கிறார்கள். அரங்க அமைப்பு. இசை, நடிப்பு என மிகவும் தரமாக இருப்பதாக ஜானகிராமன் பதிவு செய்திருக்கிறார். டாக்சியில் பயணம் செய்யும் போது அதில் ஒலிபரப்பாகும் மொழிக்கல்வி மூலம் அயல்நாட்டு பாஷையை மக்கள் எளிதாக அனைவரும் கற்றுக் கொள்கிறார்கள் என்பது அவருக்கு ஆச்சரியமூட்டுகிறது.


அது போலவே ஹாலிவுட் படங்களின் தாக்கமின்றி எடுக்கப்பட்ட அசல் ஜப்பானியப் படம் ஒன்றைக் காண வேண்டும் என்று தேடி அலைகிறார். வழியில் சந்தித்த ஒரு ஜப்பானியர் நீண்ட தூரம் அலைந்து முடிவில் ஒரு திரையரங்கில் ஓடும் ஜப்பானியப் படத்தை அடையாளம் காட்டுகிறார். தனது சொந்த வேலைகளை விட்டுவிட்டு அடுத்தவருக்கு உதவி செய்யும் அந்தப் பண்பினை ஜானகிராமன் பெரிதும் புகழ்ந்து எழுதியிருக்கிறார்.

ஜப்பானிய வாழ்க்கையை அசலாகப் பதிவு செய்த திரைக்கலைஞர் யசுஜிரோ ஒசு. அவரது திரைப்படங்களை பார்த்தால் போதும் ஜப்பானிய பண்பாடும் வாழ்க்கை முறையும் எளிதாக புரிந்துவிடும்.இன்றைக்கு இருப்பது போன்று இணைய வசதிகள் கிடையாது என்பதால் பாவம் தேடி அலைந்திருக்கிறார்கள்.வெளிநாட்டிற்குச் சென்றதும் நாம் சந்திக்கும் முக்கியப் பிரச்சனை உணவே. அதுவும் ஜப்பானில் சைவ உணவு சாப்பிடுகிறவர்கள் குறைவே. அங்கே மீனும் முட்டையும் கூட சைவம் தான். ஆகவே சைவசாப்பாடு எங்கே கிடைக்கும் என்று தேடி அலைகிறார்கள்.

அவர்கள் நாயர் நடத்தும் மலபார் ஹோட்டலை தேடிப்போகிறார்கள். அங்கே இந்திய உணவு வகைகள் கிடைக்கின்றன. நாயர்ஸான் என்று அழைக்கபடும் ஏ.எம்.நாயர் பற்றி ஜானகிராமன் அறிந்திருக்கவில்லை. அவர் ஐஎன்ஏவோடு தொடர்பு கொண்டவர். நேதாஜியின் நண்பர். ஜப்பானியப் பெண்ணை மணந்து கொண்டவர். இந்திரா காந்தியோடு நெருக்கமாக இருந்தவர். எம்.ஜி.ஆர் ஜப்பான் சென்றிருந்த போது நிறைய உதவி செய்திருக்கிறார். இந்த விபரங்கள் ஜானகிராமனுக்குத் தெரிந்திருக்கவில்லை. நாயர் உணவகத்தில் விரும்பிய சைவ உணவு வகைகளை ரசித்துச் சாப்பிட்டிருக்கிறார் ஜானகிராமன்.

ஜப்பானியச் சிறுவர்கள் பழகும் விதம், அவர்களின் கல்வி பற்றியும் அழகாக எழுதியிருக்கிறார். குறிப்பாக ஒரு சிறுவனுக்கு ஆப்பிள் பழம் ஒன்றைக் கொடுத்தற்கு நன்றி சொல்ல இரவிலும் அவனது பெற்றோர் காத்திருந்தது அவருக்கு வியப்பளிக்கிறது.
இது போலவே கின்ஸா வீதிக்குச் சென்றபோது அதன் வர்ண ஜாலத்தை வியந்து இப்படி எழுதியிருக்கிறார்.  “கின்ஸா ஒரு கந்தருவ லோகம். அங்கே இரவு, பகலாக இருக்கும். மின்சார விளக்குகளால் எத்தனை ஜாலங்களும், பகட்டும் செய்ய முடியுமோ, அத்தனையும் அங்கே செய்து வைத்திருக்கிறார்கள். நியான் விளக்குகளில் எத்தனை வர்ணங்கள் சாத்தியமோ, எத்தனை ஓட்டங்கள், சலனங்கள், வடிவங்கள், கோணல்கள், வியப்புகள் எல்லாம் சாத்தியமோ, அத்தனையும் செய்து காட்டியிருக்கிறார்கள்”

அந்தக் கின்ஸா வீதியில் சந்தித்த கலைஞன் ஒருவனைப் பற்றி அழகான குறிப்பு ஒன்றை எழுதியிருக்கிறார்.காகிதத்துண்டினை கொண்டு நிழல் வடிவம் போல மனிதமுகத்தை உருவாக்கிக் காட்டும் அந்தக் கலைஞனின் அசாத்திய திறமை அவரை ஆச்சரியப்படுத்துகிறது.

ஜப்பானின், இக்கிபானா என்ற மலர் அலங்காரக் கலை, தேநீர் சடங்கு எனத் தேடித்தேடி ஜப்பானின் ஆன்மாவை அறிந்திருக்கிறார். சுமோ குஸ்தி சண்டை காணச்சென்றபோது அவ்வளவு எடையோடு எப்படி அவர்கள் சண்டையிடுகிறார்கள் என்பதையும் போட்டியில் வென்றவர்களுக்கு எப்படிப் பரிசு வழங்கப்படுகிறது என்பதையும் சுட்டிக்காட்டுகிறார், சுமோ மல்யுத்த வீரர்கள் மேடையைச் சுத்தப்படுத்த உப்பினை தூக்கி வீசுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அதன் பெயர் உப்புச் சுத்திகரிப்பு என்பதாகும். ஜப்பானில் நடக்கும் காபரே நடனம் பார்க்கச் சென்ற அனுபவத்தையும் ஜானகிராமன் இதில் பதிவு செய்திருக்கிறார். டோக்கியோவில் முழு நிர்வாண நடனம் கிடையாது. ஆனால் கியாதோவில் கோபேவில் உண்டு என்று ஒளிவுமறைவற்று தனது அனுபவங்களைப் பதிவு செய்திருக்கிறார்.

நான் ஜப்பானுக்குச் சென்றபோது அதன் புகழ்பெற்ற பௌத்த மடாலயங்கள். ம்யூசியம் மற்றும் எழுத் தாளர்களின் நினைவிடத்திற்குச் சென்று வந்தேன். AqSsk வீசி அழிந்த ஹிரோஷிமாவிற்கு  சென்றேன். ஜப்பானிய ரயில்களின் வேகம் மற்றும் குறித்த நேரத்தில் செல்லும் முறை வியப்பளித்தது. ஜானகிராமனுக்கு ம்யூசியம் விருப்பமான இடமாகயில்லை. உண்மையில் டோக்கியோ ம்யூசியம் ஒரு வாரகாலம் பார்க்க வேண்டிய கலைப்பொக்கிஷங்கள் கொண்ட இடம்.

ஜப்பானைப் புரிந்து கொள்ள அதன் பண்பாட்டினையும் மரபுகளையும் சமய நம்பிக்கைகளையும் இயற்கை குறித்த நாட்டத்தையும் அறிந்து கொள்வது அவசியம். ஷின்டோ என்பது ஜப்பானின் தொன்மையான சமயம். அந்த ஷின்டோ மதத்தின் சின்னமாக அரிசி உள்ளது. ஷின்டோ தெய்வங்களுக்கு அரிசி உணவே படையலாக வழங்கப்படுகிறது. சூரியனே முதன்மையான தெய்வம்.  மான்கள் கடவுளின் தூதர்களாக கருதப்படுகின்றன. ஆகவே அதை ஒரு போதும் வேட்டையாட மாட்டார்கள். ஷின்டோ கோயில்களுக்கு முன் எப்போதும் நாய் சிலைகள் உள்ளன. இந்த நாய்கள் சன்னதியைப் பாதுகாக்கின்றன. பூனைகள் இல்லா வீடுகளே இல்லை. பூனைகளை பற்றி அதிகம் ஜப்பானில் தான் எழுதப்பட்டிருக்கிறது. இதில் ஆங்கிலம் பிடிக்காத பூனையை பற்றி சுசூகி ஒரு நாவல் எழுதியிருக்கிறார்

ஜப்பானிய வீடுகள் மரத்தால் ஆனவை. வீட்டு தோட்டங்களை அழகாக பராமரிக்க கூடியவர்கள். வீட்டுவேலைகளுக்கு ஆட்கள் கிடையாது. ஹோட்டலில் கூட சுமைதூக்கிகள் கிடையாது. நாமாகவே நமது பொருட்களை  கொண்டு செல்ல வேண்டும். டிரைவர் வைத்திருப்பது என்பது மிகவும் வசதியான மனிதரின் அடையாளம். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்

ஜப்பானில் தவளைக்கான வார்த்தை ““கெரூ'' என்பதாகும். வெளியே பயணிக்கும் மக்கள், வீட்டிற்கு பாதுகாப்பாகத் திரும்பிச் செல்ல ஒரு தவளை உருவத்தை வாங்கிக் கொள்கிறார்கள்.ஜப்பானியர்கள் சகுரா மலர்களைக் கொண்டாடுகிறார்கள். காரணம் நம் வாழ்க்கையில் உள்ள அனைத்து அழகான விஷயங்களும் தாற்காலிகமானவை என்பதையே சகுரா மலர்கள் குறிக்கின்றன.

ஜானகிராமன் சகுரா மலர்களை மக்கள் காணும் விழாவைப் பற்றித் தனது நூலில் குறிப்பிடுகிறார்.
ப்யூஜி எரிமலை பற்றியும் அதை மக்கள் தெய்வமாக வணங்குவதையும் பற்றி எழுதும் ஜானகிராமன் அந்த ப்யூஜி எரிமலையின் அருகில் முழுநிலவு தோன்றியிருப்பதை ஓர் ஓவியம் போல எழுத்தில் அடையாளப்படுத்தியிருக்கிறார்.

புகழ்பெற்ற காமகுரா புத்தர் சிலையைப் பார்த்திருக்கிறார். அதை மிகவும் உயர்வாக எழுதியிருக்கிறார். டோக்கியோவை விடவும் அவருக்குக் கியாத்தோ பிடித்திருக்கிறது. நாராவின் பழைய வீதிகள் நெருக்கமாக இருக்கின்றன.

இயற்கைக் காட்சிகளைக் காணச்சென்ற போது கிடைத்த அனுபவம் அபூர்வமானது

‘‘செர்ரி போன்ற மரங்கள் எல்லாம் தகதகவென்று எரியும் பொன் போலச் சுற்றிலும் சிலிர்த்துக் கொண்டிருந்தன. இலைகள் அப்படித் தங்கமாக மாறி, தாமிரமும் ஆரஞ்சும் மஞ்சளும் சிவப்புமாகப் பல வர்ணத் தீயைப் போல மைல் கணக்கில் அடி வானம் வரையில் பரந்து ஜொலிக்கும் அந்த வனப்பை நான் கண்டதில்லை. உயரமும் அந்த வர்ண நெடும் பரப்பும், தனிமையும் மெல்லிய பட்சியோசையும் புறக் கண்ணை ஊடுருவி, ஒரு அமானுஷ்யமான அந்தராத்மாவில் ஆழ்ந்து தோயும் அனுபவமாக, மறதியாக, மேலும் மேலும் ஆழச் சென்றுகொண்டே இருந்தன. வாயைத் திறந்து பேசக் கூட முடியவில்லை. திறந்தால் அந்த அமைதி, ஆனந்தம், லயம் எல்லாம் கெட்டுவிடும் போலிருந்தது. மோனம் கிடப்பதைத் தவிர வேறு செய்வதற்கில்லை''

இயற்கையில் தன்னைக் கரைத்துக் கொண்ட அவருக்கு வெளியே இருந்த குளிர்தாங்கமுடியவில்லை. நண்பரின் கோட்டினையும் வாங்கி அணிந்து கொண்ட போதும் உடல் நடுங்குகிறது. இதைக்கண்ட இன்னொரு பயணி அவர் குடிப்பதற்காகச் சாக்கே எனப்படும் மதுவைத் தருகிறார். அதைக் கொண்டு குளிரைப் போக்கிக் கொண்ட அனுபவத்தையும் ஜானகிராமன் பதிவு செய்திருக்கிறார்.

அதிகம் பேசாதே என்பது தான் ஜப்பானியர்களின் பண்பாடு. ஜப்பானில் ஒருவர் பேசும்போது மற்றவர் குறுக்கிட மாட்டார்கள் பொது இடங்களில் ஒரு போதும் உரத்த குரலில் பேச மாட்டார்கள். கோபத்தைக் கூடச் சிரித்த முகத்தோடு தாள் வெளிப்படுத்துவார்கள். ஜப்பானியப் பெண்கள் சிரிக்கும்போது, அவர்கள் வாயை மூடிக்கொள்கிறார்கள்.

ஜென் தத்துவம் இப்படி ஜப்பானிய மக்களின் வாழ்க்கையை அமைதி,  நிதானம், எளிமை என உருமாற்றியிருக்கிறது என்பதை ஜானகிராமன் நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறார்.

ஜப்பானிலிருந்து ஊர் திரும்பும் பயணத்தின் போது விமானத்தில் சந்தித்த ஒரு சிறுவனுக்கு மூங்கில் பொம்மையைப் பரிசாகத் தருவது ஒரு சிறுகதை போலவே அழகாக அமைந்திருக்கிறது
ஜப்பானியப் பயணத்தின் வழியாக ஜானகிராமன் அந்தத் தேசத்தின் மரபையும் பண்பாட்டினையும் மக்கள் வாழ்க்கையினையும் அறிந்து கொண்டதோடு நமது பண்பாடு மரபுகள் நம்பிக்கைகள் சந்தோஷங்கள் இயலாமைகள் பற்றியும் பேசுகிறார் என்பதே இந்நூலின் தனிச்சிறப்பு.


(அந்திமழை அக்டோபர் 2020இல் வெளியான தி.ஜா.நூற்றாண்டு சிறப்பிதழில் வெளியான கட்டுரை)


  

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...