???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி 0 சென்னையில் இருந்து வெளியே சென்றால் கட்டாய கொரோனா பரிசோதனை 0 தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 0 நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: உள்துறை அமைச்சகம் 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது! 0 சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு 0 தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் 0 பொன்மகள் வந்தாள்- விமர்சனம் 0 ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு டிரம்ப் 0 கொரோனா பாதிப்பில் 9-வது இடத்தில் இந்தியா 0 கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர் 0 கொரோனா கட்டுக்குள் அடங்காமல் உள்ளது என்பதை அரசு உணரவேண்டும்: மு.க.ஸ்டாலின் 0 புலம்பெயர் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது; உணவு தரவேண்டும்: உச்சநீதிமன்றம் 0 சென்னையில் மாஞ்சா நூல் பயன்படுத்தினால் குண்டர் தடுப்பு சட்டம் பாயும்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சுதந்திர போராட்டத்தின் மிகப்பெரும் துயரம் ஜாலியன் வாலாபாக் படுகொலை - பேராசிரியர் மா.சு. அண்ணாமலை

Posted : சனிக்கிழமை,   ஏப்ரல்   13 , 2019  00:05:30 IST


Andhimazhai Image
 
 
இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் மிகமோசமான, மிகப்பெரிய தாக்கத்தை செலுத்திய நிகழ்வாக பார்க்கப்படுவது 'ஜாலியன் வாலாபாக் படுகொலை'. இன்றைய தினத்தோடு இப்படுகொலை நூற்றாண்டை எட்டியிருக்கிறது. ஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றி விரிவாக அறிந்துகொள்ளும் நோக்கில், விடுதலை போராட்ட வரலாற்றை பல்வேறு தளங்களில் ஆய்வு செய்திருக்கும் பேராசிரியர் மா.சு. அண்ணாமலையுடன் நடத்திய சிறிய நேர்காணல் இது.
 
 
ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்த்தப்பட்டு 100 ஆண்டுகள் கடந்திருக்கின்றன. இந்த நூற்றாண்டு நிறைவில் கொடூரமான ஜாலியான் வாலாபாக் படுகொலையை நாம் எவ்வாறு நினைவுகூர்வது?
 
சுதந்திர இந்தியாவுக்காக நமது எண்ணற்ற மக்கள் செய்த தியாகத்தை போற்றவும், ஆங்கிலேயே ஆட்சியின் கோரமுகத்தை உணரவும் நூற்றாண்டை கடந்திருக்கும் இப்படுகொலையை நினைவுகூர்வது அவசியம். இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றின் திருப்புமுனையாக கருதப்படுவது ஜாலியன் வாலாபாக் படுகொலை. சுதந்திர போராட்டத்துக்கு மட்டுமல்ல, மகாத்மா காந்தியின் போராட்ட வாழ்விலும் இந்த கோர நிகழ்வு ஒரு திருப்புமுனை என்றுதான் சொல்லவேண்டும். அப்படியான ஜாலியன் வாலாபாக் படுகொலையின் நூற்றாண்டு நினைவுதினம் மிக முக்கியமான நாளாக பார்க்கப்படுகிறது.  
 
 
ஜாலியன் வாலாபாக் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதன் பின்னணி என்ன?
 
இந்திய விடுதலைக்காக பல்வேறு மாகாணங்களில் அரசியல் மற்றும் தன்னிச்சையான குழுக்கள் உருவாகிவந்த காலகட்டமது. 1915 ஆம் ஆண்டுக்கு பிறகு பிரிட்டிஷ் ஆட்சி அதிகாரத்துக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகமாக நடைபெற்றன. இதனை ஒடுக்க தீர்மானித்த ஆங்கிலேயே அரசு, மூர்க்கத்தனமான கைது, விசாரணை, தாக்குதல் போன்றவற்றை நடத்த ஏதுவாக அங்கீகரிக்கப்படாத சட்டத்தை கொண்டுவந்தது. 'ரௌலட் சட்டம்' என அழைக்கப்பட்ட இச்சட்ட ஆதிக்கத்துக்கு எதிராக அமைதிவழி போராட்டங்கள் தீவிரமடைந்தன. காந்தியாரின் வழியில் அகிம்சைவழி சத்யாகிரக போராட்டம், கடையடைப்பு, ஒத்துழையாமை இயக்கங்கள் பரவலாக நடைபெற்று வந்தன. இதன் தொடர்ச்சியாக 1919 ஏப்ரல் 13 அன்று அமிர்தசரஸில் உள்ள ஜாலியான் வாலாபாக் திடலில் சுமார் 20,000 மக்கள் உணர்வெழுச்சியுடன் திரண்டனர். உள்ளே செல்லவும் திரும்பவும் மிக குறுகிய இடம் கொண்ட அந்த மைதானத்தில் ஜெனரல் டயர் தலைமையிலான ஆயுதப்படை நிலைநிறுத்தப்பட்டது. தங்கள் மீது செலுத்தப்படும் மோசமான அடக்குமுறைக்கு எதிராக விடுதலை உணர்வுடன் திரண்ட மக்களை குறிவைத்து ஆங்கிலேயே படை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இடைவிடாமல் நடத்தப்பட்ட துப்பாக்கிக்சூட்டை குண்டுகள் தீர்ந்த பிறகு தான் நிறுத்தினோமென பின்னர் ஆணவமாக கூறியிருந்தான் டயர். மக்களை சுற்றிவளைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 400 பேர் கொல்லப்பட்டதாக பிரிட்டிஷின் கணக்கில் கூறப்பட்டது. ஆனால் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டார்கள் என்பது தான் உண்மை. படுகொலைக்கு பிறகு போர்க்களமாக காட்சியளித்த ஜாலியன் திடலில் உயிரிழந்தவர்களும், காயம்பட்டு உயிருக்கு போராடியவர்களும் அப்படியே விடப்பட்டனர். இரவில் சடலங்களை நரிகளும், பிணம்தின்னி கழுகுகளும் நாசம் செய்த அவளமும்கூட நிகழ்ந்ததாக வரலாறு கூறுகிறது. இத்தகைய மோசமான வடிவில் நிகழ்த்தப்பட்டதுதான் ஜாலியான் வாலாபாக் படுகொலை.
 
 
இப்படுகொலைக்கு பின்பு விடுதலை போராட்டம் சந்தித்த மாற்றங்கள் என்ன? இதன் தாக்கம் எப்படி இருந்தது?
    
ஜாலியன் வாலாபாக் படுகொலை இந்திய மக்கள் மத்தியில் ஆங்கிலேயர்கள் மீது கடும் கோபத்தை ஏற்படுத்தியிருந்தது. இதன் காரணமாக விடுதலை போராட்ட உணர்வு பரவலாக அதிகரித்தது. எண்ணற்ற போராளிகள் தாமாக வெகுண்டெழுந்து விடுதலை போராட்டத்தில் பங்கெடுக்க தொடங்கியதை ஜாலியன் வாலாபாக் படுகொலை ஏற்படுத்திய தாக்கம் என கூறலாம். மகாத்மா காந்தியும்கூட தீவிரமாக செயலாற்ற தொடங்கியது இதன் பிறகு தான்.
 
 
இந்த படுகொலையை நிகழ்த்தியவர்கள் பின்பு என்ன ஆனார்கள்?
 
ஜாலியன் வாலாபாக் படுகொலையை நிகழ்த்த ரெஜினால்டு டயருக்கு அனுமதி அளித்தவர் லெப்டினன்ட் கவர்னர் மைக்கல் ஓ டயர். படுகொலை ஏற்படுத்திய கோப உணர்ச்சியில் பழி தீர்க்க காத்திருந்த உத்தம் சிங், 1940-ல் லண்டனில் நடைபெற்ற கிழக்கிந்திய சங்க ஒருங்கிணைந்த கூட்டத்தில் உரையாற்றிய மைக்கல் ஓ டயரை சுட்டுக்கொன்றார்.  கவர்னராக இருந்த மைக்கல் ஓ டயர் துப்பாக்கிச் சூட்டுக்கு அனுமதி அளித்திருந்தபோதும், படுகொலையாளன் டயர் (ரெஜினல்ட் டயர்) அதனை பிரயோகப்படுத்தாமல் இருந்திருக்க முடியும். இச்சம்பவம் குறித்து ஒருமுறை டயர் கூறும்போது, "ஜாலியன் வாலாபாக் திடலில் குழுமியிருந்த மக்களை சுட்டுக் கொல்லாமல் என்னால் விரட்டியடித்திருக்க முடியும். அவ்வாறு செய்திருந்தால் அவர்களுக்கு என் மீது அச்ச உணர்வு ஏற்பட்டிருக்காது. அவர்களை அச்சுறுத்துவதே எனது பிரதான நோக்கமாக இருந்தது" எனக் கூறியிருந்தான். இவ்வாறு, இரக்கமற்ற  படுகொலையை நிகழ்த்திய டயர், பின்னாளில் பக்கவாதம் உள்ளிட்ட மிகமோசமான நோய்களுக்கு ஆட்பட்டு, பேசுவதற்கும் நடக்கவும் முடியாமல் தனது 62-வது வயதில்  1927-ல் உயிரிழந்தான். 
 
 
சுதந்திர இந்தியாவின் தற்போதைய அரசியல் சூழலை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
 
விடுதலை போராட்டத்தின்போது கடுமையான அடக்குமுறை நிலவிய காலகட்டத்தில் கொண்டுவரப்பட்டது 'ரௌலட் சட்டம்'. ஆனால், சுதந்திர இந்தியாவிலும் அம்மாதிரியான தடா போடா போன்ற அடக்குமுறை சட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ரௌலட் சட்டத்துக்கும் இப்போது இருக்கும் அடக்குமுறை சட்டங்களுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. அதன் தொடர்ச்சியாகவே இதை நான் பார்க்கிறேன். நூறாண்டுகளுக்கு பிறகும் ஜாலியன் வாலாபாக் படுகொலையை நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால், இப்போதும் போராடும் மக்களை குறி பார்த்து சுட்டுக்கொல்லும் அநீதியை நாம் சாதாரணமாக கடந்து சென்றுகொண்டிருக்கிறோம் அல்லவா? மக்களிடம் போராட்ட குணம் குறைந்திருக்கிறது. இவைகள் உண்மையில் முழுமையான விடுதலை உணர்வை அளிக்கவில்லை.
 
-வசந்தன்


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...