அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உலக நாடுகளில் ஆராய்ச்சிப் பணியும் வாய்ப்புகளும்- -முனைவர் விஜய் அசோகன், ஆராய்ச்சியாளர், அயர்லாந்து 0 கருணாநிதி சிலையை திறக்க மிகவும் பொருத்தமானவர் வெங்கய்ய நாயுடு – முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 தமிழகத்தை தலை நிமிரச்செய்தவர் கருணாநிதி – அமைச்சர் துரைமுருகன் புகழாரம்! 0 செய்தியாளரை அவமதிப்பது அழகல்ல! - மக்கள் நீதி மய்யம்! 0 தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு மிதமான மழை! 0 தமிழ்நாடு முழுவதும் திராவிட பாசறைக் கூட்டங்கள் – திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்! 0 வாய்தா: திரைப்பட விமர்சனம்! 0 பாமக தலைவராக அன்புமணி தேர்வு! 0 "வழக்குகளை எஸ்.ஜே.சூர்யா எதிர்கொள்ள வேண்டும்" – எச்சரித்த நீதிமன்றம்! 0 தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவு! 0 அண்ணாமலையின் பேச்சுக்கு பத்திரிகையாளர் அமைப்புகள் கண்டனம் 0 சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கருணாநிதி சிலை இன்று திறப்பு 0 தலைகுனிவை ஏற்படுத்தும் செயல்களை காவல்துறையினர் செய்துவிடக்கூடாது: முதலமைச்சர் 0 நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை விடுவித்தது போதை பொருள் தடுப்பு பிரிவு! 0 குழந்தைகள் தொடர்பான வழக்கு: உயர்நீதிமன்றம் முக்கிய அறிவுறுத்தல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

ஜெய்பீம்: திரைப்பட விமர்சனம்

Posted : செவ்வாய்க்கிழமை,   நவம்பர்   02 , 2021  18:08:46 IST


Andhimazhai Image

நிஜமாக நடந்த ஒரு காவல்நிலைய மரணத்தையும் அதன் பின்னணியையும் இவ்வளவு விறுவிறுப்பாக எடுக்கமுடியுமா? எந்த இடத்திலும் அலுப்புத்தட்டாமல் அதே நேரம் சினிமாத்தனம் இல்லாத அற்புதமான நடிப்பின் மூலம் முன்வைக்க முடியுமா?


முடியும் என்று நிரூபித்திருக்கிறார் த.செ.ஞானவேல். இம்மண்ணின் ஆதிக்குடியான இருளர்கள் மீது ஒடுக்குமுறையைத் தொடர்ச்சியாகப் பிரயோகித்துவரும் இந்த கேடுகெட்ட சமூகத்தின் மனசாட்சியைத் தொட்டு எழுப்ப முயன்றிருக்கிறார் அவர்.


தன் வலிமையான நடிப்பின் மூலம் அதற்குப் பங்களித்து உயர்ந்து நிற்கிறார் சூர்யா. நினைத்திருந்தால் நாயகனுக்காக ஒரு சண்டைக் காட்சியையும் காதல் காட்சியையும் திணித்திருக்கலாம். வேண்டாம் என முடிவெடுத்ததன் மூலம் வாழும் நாயகரான ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அவர்களுக்கு நியாயம் சேர்த்திருக்கிறார்கள்.


ஜெய் பீம், கடலூர் மாவட்டத்தில் காவல்துறையினரால் திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டு தடுப்புக்காவலில் கொல்லப்பட்டு திருச்சி மாவட்ட எல்லையில் பிணமாகத் தூக்கி எறியப்பட்ட ராசாக்கண்ணு என்ற இருளரின் வழக்கு தான் கதை. நீதிபதி சந்துரு, வழக்கறிஞராக இருந்தபோது கையாண்ட வழக்கு இது. சந்துருவின் பாத்திரத்தை செய்திருக்கிறார் சூர்யா. கூர்மையான நடிப்பின் மூலம் படத்தைத் தாங்கி நிற்கிறார்.


இந்த வழக்கு தொடர்பான எல்லா நிஜப்பாத்திரங்களும் உயிரோடு இருக்கும் சூழ்நிலையில், இந்த படம் அச்சு அசலான காட்சிகளுடன் மனிதர்களுடன் ரத்தமும் சதையுமாக வெளியாகி இருக்கிறது.


ராசாக்கண்ணுவின் மனைவி செங்கேணி என்ற பாத்திரம் ஏற்று நடித்திருக்கும் லிசாமோல் ஜோஸ் மிக வலிமையான நடிப்பைத் தந்திருக்கிறார். கணவனைக் கொன்ற போலீசாரிடமிருந்து பணம் வாங்கித்தருவதாக பேரம் பேசுகையில் முடியாது என விலகிச்செல்வதாகட்டும், காவல் நிலையத்தில் கதறுவதாகட்டும், அழுத்தமாக மனதில் நிற்கிறார்.


ராசாக்கண்ணுவாக மணிகண்டன் ஒரு புறம் நெகிழவைக்க, அவருடன் சிக்கி சின்னாபின்னமாகும் மற்ற இருளர் பாத்திரங்களைச் செய்தவர்களும் மனதைப் பிசையச் செய்கிறார்கள். மொசக்குட்டியும் இருட்டப்பனும் நம் சமூகத்தின் மனசாட்சியின் இருண்ட முகத்தின் சாட்சியங்களாக உலவுகிறார்கள்.


நடிகர் இளவரசு, போலீஸ்காரர்களாக நடித்திருக்கும் நடிகர்கள் எல்லோரும் நெகட்டிவ் பாத்திரங்களில் வந்து பார்வையாளர்களின் வெறுப்பை சம்பாதிக்கிறார்கள்.


பெருமாள்சாமி என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் வந்து போகும் பிரகாஷ் ராஜ், எதார்த்தம். இருளர்கள் தங்கள் மீது காவலர்கள் நடத்தும் அராஜகங்களைப் பட்டியலிட எழுந்துபோய் கண்கலங்கும் காட்சி மிகமிக கனமானது.


அரசு வழக்கறிஞராக வரும் குரு சோமசுந்தரம், சிவப்புத்துண்டோடு வந்து கம்பீரமாக உலவும் எழுத்தாளர் பவா செல்லதுரை என நிறையப் பேர் நிறைவாக நிற்கிறார்கள்.


இப்படியொரு தீவிரமான படத்தில் சமூக சிந்தனையுடன் நடித்ததுடன், தயாரித்தும் வெளியிட்டிருக்கும் நடிகர் சூர்யா உயர்ந்து நிற்கிறார்.


ஒருபுறம் நீதிமன்றம், வழக்கு விசாரணை, இன்னொரு பக்கம் ராசாக்கண்ணு மற்றும் அவர் சார்ந்த இருளர் இன மக்கள் வாழ்வியல் என விரிகிறது இந்த திரைப்படம்.


மதுரை மன்னனிடம் நீதி கேட்டு மதுரையை அழித்தாள் கண்ணகி. இங்கே இருளர் இனப்பெண் செங்கேணி, நிறைமாத கர்ப்பிணியாக நீதிமன்றத்தின் வாயிலில் போராடி நீதியைப் பெறுகிறாள்.


கொடுமைக்குள்ளாகப்படும் செங்கேணிகளுக்கெல்லாம் சந்துரு என்ற வழக்கறிஞர் கரம் கொடுத்து நிற்கிறார். சட்டம் என்ற ஆயுதம் இதற்குத் துணையாக வருகிறது என்கிற நேர்மறையான எண்ணத்தையும் இப்படம் விதைக்கிறது.


வழக்கறிஞர் சந்துருகள் ஆயிரம் பேர் எதிர்காலத்தில் உருவாவதற்கான எண்ணத்தை இளம் குருத்துகள் உள்ளத்தில் இப்படம் விதைக்கவேண்டும். எழுதப்படிக்கத் தெரியாத ராசாக்கண்ணுவுக்குப் பிறந்த மகள் கால்மேல் கால்போட்டு இறுதிக்காட்சியில் செய்தித்தாள் படிக்கும் காட்சியில் பிறக்கிறது இந்த கனவு.
 

 எம்.எம். 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...