அந்திமழை மின் இதழ் அந்திமழை - இதழ் : 115 
|
ஜெய் பீம்: "டைப் அடிக்கும்போது மயக்கம் போட்டு விழுந்துவிட்டார்!" - பிரபா கல்விமணி
Posted : புதன்கிழமை, நவம்பர் 03 , 2021 07:27:57 IST
‘ஜெய் பீம்’ திரைப்படத்தின் மூலம் இருளர் மக்களின் வாழ்வுரிமை போராட்டம் தற்போது விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. படம் பற்றி பல்வேறு தரப்பினரும் விவாதித்துக் கொண்டிருக்கும் நிலையில், ‘பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம்’ என்ற அமைப்பை 1996ஆம் ஆண்டு நிறுவி, இருளர் மக்களின் வாழ்வுரிமை, சமூகப் பாதுகாப்பு, கல்வி, பொருளாதார முன்னேற்றம் போன்றவற்றிற்காகத் தொடர்ந்து களத்தில் நிற்கும் ஓய்வுபெற்ற பேராசிரியர் பிரபா கல்விமணி படம் பற்றி என்ன நினைக்கிறார் என்று கேட்டோம், “ஜெய் பீம் படத்தில் நடக்கும் வழக்கு உண்மையில் 1995ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த வழக்கை அப்போது வழக்கறிஞராக இருந்த சந்துரு அவர்கள் நடத்தியது.
படத்தின் ஆரம்பக் காட்சியில், சிறையிலிருந்து விடுதலையாகி வெளிவரும் கைதிகளை, சாதி பார்த்துப் பிரிப்பார்கள். அதில் வன்னியர், தேவர், நாயுடு, கவுண்டர் போன்ற சமூகங்களை சார்ந்தவர்களை விட்டுவிட்டு, குறவர், ஒட்டர், இருளர் போன்ற விளிம்புநிலை சிறுபான்மையினரைத் தனியாக நிற்க வைப்பார்கள் காவல் துறையினர்.
ஏன் அப்படிப் பிரிக்கிறார்கள் என்றால், காவல் துறையால் கண்டுபிடிக்க முடியாது திருட்டு வழக்குகளை இது போன்ற விளிம்புநிலை சமூகத்தை சேர்ந்தவர்கள் மீது தான் வழக்குகளை பதிவார்கள். அதனால் தான், சிறைத் துறை அதிகாரியிடம் பணம் கொடுத்து, அந்த விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்தவர்களைப் போட்டிப் போட்டுக் கொண்டு வாங்குகின்றனர் காவல் துறையினர். அந்த சமூகங்களை சேர்ந்தவர்களுக்காக யாரும் குரல் கொடுக்க மாட்டார்கள் என்பதால், அவர்கள் மீது பொய் வழக்குப் போட்டு, செய்யாத குற்றத்தை ஒத்துக்கொள்ள வைப்பதற்காக அவர்களை அடித்து உதைத்து சித்திரவதை செய்வார்கள். இது போன்ற சித்திரவதையால் இதுவரை நிறையப் பேர் இறந்திருக்கின்றனர்.
‘ஜெய் பீம்’ திரைப்படத்தை இருளர்களுக்கான படம் என்று சொல்வதைக் காட்டிலும், சித்திரவதைக்கு எதிரான படம் என்று சொல்வது தான் சரி. சினிமாத்தனம் எதுவும் இல்லாமல் படத்தை ரொம்ப உயிரோட்டமாகவும், இருளர் மக்களின் வாழ்க்கை போராட்டத்திற்கு நெருக்கமாகவும் எடுத்திருக்கிறார் படத்தின் இயக்குநர் ஞானவேல்.
தமிழக திரைப்பட வரலாற்றில் நான் அறிந்தவரை ‘ஜெய் பீம்’ வித்தியாசமான படமாகப் பார்க்கப்படும்.
நான் இதுவரை எழுதிய புகார் மனுக்கள் தான் அப்படியே படமாக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, திருக்கோவிலூரைச் சேர்ந்த முருகன் என்பவரை காவல் துறையினர் சித்திரவதை செய்தனர். அதை அவரிடம் ஆறேழு மணி நேரம் கேட்டு மனுவாக எழுதினேன். அந்த மனுவை டைப் அடித்த பெண் மயக்கம் போட்டு விழுந்துவிட்டார். ஏனெனில், சித்திரவதை என்பது, கைகளைக் கட்டி தொங்கவிடுவது அல்ல. கைக் கட்டைவிரலைக் கட்டி தொடங்க விடுவது. கால் கட்டை விரலில் கட்டி தொங்க விடுவது. ஆசன வாயில் கோணி ஊசி வைத்துக் குத்துவது. இதை இயக்குநர் ஞானவேல் மிக யதார்த்தமாகப் படமாக்கியுள்ளார்.
அதேபோல், இந்தப் படத்தில் நடித்துள்ள சிலரை தவிர மற்றவர்கள் அனைவரும் இருளர்கள் தான். அவர்களுக்கு நடிக்கப் பயிற்சி கொடுத்து நடிக்க வைத்திருக்கிறார்கள். இருளர்களின் வாழ்க்கை முறையை அவ்வளவு யதார்த்தமா படம்பிடிக்கப்பட்டிருக்கிறது. நடிகர் சூர்யா இந்த மாதிரியான படத்தை எடுக்க முன்வந்தது பெரிய விஷயம். பழங்குடிகளின் வாழ்க்கை போராட்டம் ‘ஜெய் பீம்’ திரைப்படத்தின் மூலமாக வெளி உலகத்திற்கு வந்துள்ளது.” என்றார்.
பிரகாஷ்
|
|