அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அதிமுக கூட்டணி: 23 தொகுதிகளில் போட்டியிடும் பாமக! 0 ட்விட்டரில் ட்ரெண்டாகும் வாடிவாசல் ஹேஸ்டேக்! 0 கோவில்களை பக்தர்களிடம் கொடுத்துவிடுங்கள்; சத்குருவிற்கு நடிகர் சந்தானம் ஆதரவு! 0 இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியிலிருந்து பும்ரா விடுவிப்பு! 0 பாஜகவால் என்னை நெருங்க முடியாது - ராகுல் காந்தி சவால்! 0 போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்! 0 திமுக ஆட்சியில் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் - மு.க.ஸ்டாலின் 0 புதிய கட்சியைத் தொடங்கிய அர்ஜூன மூர்த்தி; வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்! 0 பெட்ரோல், டீசலுக்கு லோன் கேட்டு இளைஞர்கள் நூதன போராட்டம்! 0 மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா! 0 கூட்டணி குறித்து கமல்ஹாசனுடன் பேச்சுவார்த்தை நடத்திய சரத்குமார்! 0 தொடரும் ஸ்டிரைக்: அவதிப்படும் பொதுமக்கள்! 0  தா.பாண்டியனின் உடல் நல்லடக்கம் 0 தி.மு.க பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு 0 காமராஜருக்கும் பாரதிய ஜனதாவுக்கும் என்ன தொடர்பு? திருநாவுக்கரசர் கேள்வி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

அய்யப்பன் மகாராஜன் எழுதும் தொடர்கதை- கனா மீது வருபவன் - 25

Posted : புதன்கிழமை,   அக்டோபர்   29 , 2014  17:33:45 IST

அன்புள்ள தாஜு புள்ளைக்கி...

 

இரவி எழுதிக்கொள்ளும் கடிதம். நான் இங்க நல்ல சுகம். அதேப் போல நீயும் மாமாவும் அத்தையும் சொகமா....?

 

இப்ப நா ஒனக்கு ஒரு சந்தோசமான விசியத்த சொல்லப்போறேன். என்னன்னா.... நா உன்னை காதலிக்கேன். கல்யாணம் பண்ணலாம்னு ஐடியாவும் போட்ருக்கேன். நானும் ரஜினி ரசிகன். நீயும் ரஜினி படம் பாக்கற புள்ள. நாம கமல் ரசிகர்கள் மாதிரி பிரிஞ்சிப் போயிரக்கூடாது. குண்டு சுரேஷு கமல் ரசிகன். அதான் அவங் காதல் தோத்துப் போச்சு.

 

நாம காதலிக்க விசியத்த ஒங்க வீட்டுல தெரியப்படுத்துனா பிரச்சனையாயிருமோன்னு பயப்படாதே. என்னைய நம்பி வாற ஒன்னைய நா கைவிட்ரக் கூடாதுல்லா. தங்கக்கம்பி மாதிரி பொத்தி வச்சிக் காப்பாத்துவேன். இது அம்மையான சத்தியம். நமக்கு முத்தாரம்மயும், நடுக்காட்டு ஏக்கியும், கீழத்தெரு துர்க்கம்மையும், முப்பந்தல்காரியும், அனுமாரும், புள்ளியாரும், அய்யப்பரும், காவலுக்கு இருப்பாங்க.

 

அதனால நீ எதுக்கும் கவலப்படாத.

 

நீ என்னையக் கல்யாணம் பண்ணிக்கிடதுக்கு குடுத்து வச்சவ. ஒனக்கு நல்ல பாக்கியமாக்கும்... அதுனால எல்லாத்துகிட்டேயும் நம்ப விசயத்த இப்ப சொல்ல வேண்டாம்.கண்ணு போட்ருவாவோ...

 

நாளைக்கி காலையில ஒம்பது மணிக்கு நா தெருவுக்குள்ள வருவேன். அப்போ நீ செவப்பு கலரு ட்ரெஸ்ல நெத்தியில சந்தனம் குங்குமம் வச்சிக்கிட்டு உன் வீட்டுவாசல்ல வந்து நின்னு என்னையப் பாக்கணும். அதப் பாத்ததும் ஒனக்கு என்னையக் கல்யாணம் பண்ணிகிடதுக்கு சம்மதம்னு எனக்கு வெளங்கிரும்.

                                                                                          அன்புள்ள லவ்

                                         இப்படிக்கு,

                                         ஒப்பம்

                                         K. இரவி

                                         ரஜினி ரசிகன்

 

தாஜின் விழிகள் கடிதத்தின் மீது மிரண்டபடி நின்றன. தன் மன வேகத்தைக் கட்டுப்படுத்த அவள் மிகவும் பிரயாசைப்பட வேண்டியது வந்தது. கடிதத்தோடு நிற்காமல் அத்துடன் ரவி ‘’ஸ்டார் ஸ்டுடியோ’’ வில் வைத்து எடுத்திருந்த புகைப்படம் ஒன்றையும் அத்துடன் சேர்த்து அனுப்பி வைத்திருந்தான். அவள் அந்தப் புகைப் படத்தினை உற்று நோக்கினாள். நேரில் கூட அப்படி ஒரு முகத்தினை இதுவரை அவள் பார்த்ததேயில்லை. தன்னை ரஜினி போல் பாவித்துக் கொண்டு அவன் சேட்டையாக முகத்தினைக் காண்பித்திருந்தான்.  அதுதான் அவளை ஏகத்துக்கும் வெப்புராளத்தை நோக்கித் தள்ளியது. அடுத்து என்னச் செய்வது என்று யோசிக்கையில் வீட்டினுள்ளே இருந்து அரவம் கேட்டது. உடனே அவள் கடிதத்தினை கூடைக்குள் தள்ளினாள். உதுமான் தான் அறைக்குள் வந்தார். அவளது கண்களுக்குள் மறைந்து கொள்ள முயலும் ஏதோ ஒன்று இருப்பதை சடுதியில் கண்டுகொண்டார்.

 

“என்ன புள்ளே?”

 

“ஒண்ணும் இல்ல வாப்பா. படிக்கதுக்காக இருந்தேன். மண்டக்கனமா இருந்துது. வாசிக்க முடியல. அதான் எடுத்து வச்சிட்டேன்”

 

அவர் அதனை நம்பவிரும்பாது கூடையையேப் பார்த்துக் கொண்டு நின்றார்.

 

‘’உம்மாப் பாயக் கழுவி அசையிலப் போட்டிருக்கா..காஞ்சிருக்கான்னுப் பாத்து உள்ளக் கொண்டுபோயிப் போடு..ராத்திரிப் படுக்காண்டாமா ’’ 

 

தாஜ் வெளியேச் சென்றாள். கவனம் பாயின் மீது செல்லவில்லை. வரும்போது கூடையின் உள்ளே ரவியின் படம் வெளியில் தெரியும்படி இருந்ததோ....? நன்றாக ஒளித்து வைக்காது வந்து விட்டோமோ...? அவளுக்கு அது பெரும் குழப்பமாகவும் அச்சமாகவும் இருந்தது. ‘’இந்த வெளங்காத்தவன் இப்படி ஒரு வெனப் புடிச்சக் காரியத்த செஞ்சிட்டானே...’’ தலையில் அடித்துக் கொண்டே   பாயை இழுத்தாள். இழுவையின் வேகம் தாங்காமல் அசைக் கயிறு அறுத்துக் கொண்டு வந்தது. பாயை உடனேத் தாங்கிப் பிடித்தாள். அதனை சுவற்றில் சாய்த்து வைத்துவிட்டு கொடிக் கயிற்றினை முன்பைவிடவும் உயரமாகத் தூக்கிக் கட்டினாள். மனம் நிலை கொள்ளாமல் வாப்பாவிடத்தில் ஓடியது.

 

வாப்பா எப்போது எப்படி நடந்து கொள்வார் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. விஷயம்  தெரிந்தால் உடனே ரவியிடம் சண்டைக்குப் போனாலும் போவார். அல்லது தன்மீது பாய்வார். உம்மாவின் நிலைமை மோசமாகிவிடும். சிலசமயம் எதிர்பாராத விதமாக எளிதாக எடுத்துக் கொண்டு அறிவுரைச் சொல்லித் திருத்தவும் செய்வார். படைத்தவனே அப்படியே ஆகட்டும் என்று நினைத்துக் கொண்டாள். .

 

வீட்டினுள்ளே செல்கையில் இடிபடுவதுபோல் அவஸ்தையாக இருந்தது நெஞ்சுக்குள். அவள் உட்கார்ந்திருந்த இடத்தில் வாப்பா குத்த வைத்தபடி உட்கார்ந்து இருந்தார்.  கையில் ரவியின் கடிதம் இருந்தது. தாஜூக்கு நடுக்கம் வந்தது. அவரது முகம் மிகத் தீவிரமாகவும் அதே சமயம் புரிந்து கொள்ள இயலாததாக இறுக்கமாகவும் காணப்பட்டது. கடிதத்தைப் படித்து முடித்ததும் அவளை அவர் ஏறிட்டுப் பார்த்தார். ‘’ஏங்கிட்ட யாங் சொல்லல?’’ அவர் கேட்டதும் அவள் உடனே, ‘’போங்க வாப்பா...அவன் ஒரு கிறுக்குப்பய டுப்புன்னு பேக்குக்குள்ள கொண்டந்து போட்டுட்டுப் போயிட்டான்..கண்டம்னா மூஞ்சில எறிஞ்சிட்டு ஏசிட்டு வந்துருவேன்...’’ என்றாள்.

 

அவர் எழுந்து வீட்டுக்குள்ளே சிந்தனையுடன் நடக்கத் துவங்கினார். அவள் கடிதத்தினை மடக்கி முனைகளைக் கிழித்து வைத்துக் கொண்டாள். உதுமான் நடந்தபடி அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தார். நினைத்தறியா திசையிலிருந்து பெரும்பாறை ஒன்று அவரை நோக்கி உருண்டு வந்து கொண்டிருக்கிறது. ஒரு மனிதனுக்குத் தேவையான பலம் தன்னிடத்தில் இருக்கிறது. பாறையைத் தடுப்பதற்கான பலம் இருக்கிறதா என்பதை பாறையைத் தடுத்து தான் சோதித்துப் பார்க்க வேண்டும்.

 

ரவியைப் போன்ற பையன்கள் மிகவும் மோசமானவர்களாகத் திரிகிறார்கள். அடிக்கடி போலிஸ் ஸ்டேஷன் செல்வதற்கு பழகிப் போனவர்கள். செய்தித் தாள்களில் வாசிக்கக் கிடைப்பவை அத்தனை நல்லதாக இல்லை. இதனை முளையிலேயேக் கிள்ளி விடவேண்டும். அவர் அவளது கூடையையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். ஆயீஷாவிடம் இதுபற்றி எதுவும் சொல்ல அவர் பிரியப்படவும் இல்லை.

 

மறுநாள் காலையிலேயே தெருவிற்கு வந்து நின்றான் ரவி. அவனது முகம் மிகவும்  பிரகாசமாகக் காணப்பட்டது.  அன்று தங்கையாவைக் கண்டும் கூட அவரிடம் கோளாறு எதுவும் காட்டாதது அவருக்கே ஆச்சரியமாக இருந்தது. அவனைத் திருத்தி விட்டதற்காக அவர் சுடலை மாடனுக்கு நன்றி கூறினார். சிவப்பு நிற உடையில் சந்தன கும்குமப் பொட்டுகளுடன் தாஜின் வருகைக்காக அவன் பரபரத்துக் கொண்டிருந்தான். மணி ஒன்பதை எட்டியதும் நிலைகொள்ளாது வேகமாக அவன் தாஜ் வீடு இருந்த முடுக்கினை நோக்கிச் சென்றான். உள்ளேத் திரும்பியது தான் தாமதம் அவன் எதிர்பார்த்திராத திருப்பமாக உதுமான் எதிரில் வந்து நின்றார். அவர் மீது இடித்து நிற்கும் படியாகவே ஆகிவிட்டது அவனுக்கு. அவன் திடுக்கிட்டு விட்டான் எனினும் அவரைப் பெரிதாகக் கண்டுகொள்ளாமல் வீட்டைப் பார்ப்பதிலேயே கவனத்தைத் திருப்பினான். அவன் நினைத்தபடி வீட்டின் நடையில் தாஜ் வந்து நிற்கவில்லை. ஏமாற்றமாக இருந்தாலும் காட்டிக் கொள்ளாமல் இயல்பாக இருப்பதுபோல உதுமானைப் பார்த்துப் புன்னகைத்தான். அத்தனையும் கவனித்தபடியே இருந்த உதுமான் அவனைப் பார்த்து ‘’என்னலே..?’’ என்றுக் கேட்டார். அவன் தலையை வெறுமையாக ஆட்டி ஒன்றுமில்லை என்றான். பிறகு அவரைத் தவிர்க்கும் பொருட்டு முடுக்கினை விட்டு இறங்கித் தெருவில் தடியால் நகர்ந்து கொண்டிருந்த ‘’துண்டங்குத்தி’’ பாட்டாவிடம், பேசுவதுபோல ‘’ என்னாப் பாட்டா...ஆளையேக் காண மாட்டேங்குது...? எங்க....? டீக்குடிக்கவா...?’’ என்று விசாரிக்க முயற்சித்தான். முதிர்ந்த பாட்டா தனது சொந்தப் பிரச்சனையின் பொதுமலின் காரணமாக பதிலேதும் சொல்லாமல் தனக்குத்தானே புலம்பிக்கொண்டு அவனை விட்டகன்றார். உதுமான் நகராது அவனது செய்கைகளையேப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தார். வேறுவழியில்லாது அவன் நகரப் போகையில் அவனை அவர் அழைத்தார். தயங்கியபடியே வந்த அவனிடம்,

 

‘’என்ன விசியம்?’’ என்று கேட்டார்.

 

‘’என்ன விசியம்? ஒரு விசியமும் இல்லியே?’’ என்றான் அவன்.

 

‘’ஒரு விசியமும் இல்லாமையா இங்ஙனக் கெடந்துக் கெறங்குதெ...என்னடே வேணும்...?’’ அவர் தெரியாமல் பேசுகிறாரா இல்லைத் தெரிந்துகொண்டுதான் பேசுகிறாரா என்று அவனால் அனுமானிக்க முடியவில்லை.

 

‘’சும்ம வந்தேன்...ஏன் வரப் புடாதா ?’’

 

‘’வரதுக்கு ஒனக்கு இங்க என்னடே ஜோலி?’’ அவர் கோவம் தெரியாதவாறு கேட்டார்.

 

‘’ஜோலி இருக்கே...வீட்டுக்கு முன்னுக்கெக் கிடுவுக் கெட்டணும்னு கூப்புட்டிருந்தாவோ...’’

 

‘’யாருக் கூப்புட்டது?’’

 

‘’தட்டு வீட்ல’’

 

‘’அவ்வோக் கிடுவுக் கெட்டி நாளாச்சே....யாருக்கிட்ட கத சொல்லுதே...ஆங் ?’’ என்றவர் சற்றுக் கடுமையாக ,’’இதுமாதிரி சொல்லிப்போட்டு அனாவசியமா இந்தப்பக்கம் வரப்புடாது கேட்டியா...? பொறவு நல்லா இருக்காது ஆமா..’’என்றார் உதுமான். அவனுக்கு எரிச்சலாக வந்தது.

 

‘’என்ன சாயிப்பே....தெருவையே வாங்கிட்டேரு போலருக்கே......! ஆருமே சொல்லலையா அதான் வந்துட்டேன்....சாயிப்பே...இந்த ஊரையே நீரு வெலைக்கு வாங்குனாலும் செரி... நா வாறதும் போறதும் என் இஷ்டம் கேட்டேரா? இத உட்டுட்டு ஒமக்கு வேற  சோலி எதுவும் உண்டுமானா அதப் பாரும் மொதல்ல.... ‘’

 

‘’இல்லேனா......?‘’

 

‘’இல்லேனா....வீட்டுல கஞ்சிப் பானையில எதுவும் உண்டுமானுப் போய்ப் பாரும். அத விட்டுட்டு ஏங்கிட்ட ஒடக்காதேரும்...நா எதுக்கு வாரேன்னு சமயம் வரும்போது சொல்ல வேண்டிய ஆளு சொல்லும்... ன்னா..?’’ என்றுக் கூறிவிட்டு ரஜினியைப் போன்று ஸ்டைலாக நடப்பதாக நினைத்துக் கொண்டு நடந்தான்.

 

உதுமானுக்கு அவனை ஓங்கி அறையவேண்டும் போல் இருந்தது. அணஞ்ச பெருமாள் ஆசாரி தான் விசாரித்தார்.

 

‘’என்னா மோனே......கள்ளப் பயக்கக் கூடல்லாம்....பேச்ச வச்சிக்கிட்டு...’’ என்று.

 

‘’தெருவுக்குள்ள எவன் வாரான் எதுக்கு வாரான்னே......தெரியல அதான் விசாரிச்சேன்....’’ என்று சமாளித்தார்.

 

அவர் வீட்டுக்கு வரும்போது தாஜ் பள்ளிக்கூடத்திற்குக் கிளம்பி விட்டிருந்தாள். அதைக் கண்டதுமே அவர், ‘’இன்னக்கி நானும் கூட வாரேன்’’ என்றார்.

 

‘’இல்லாப்பா நாம் போய்க்கிடுதேன்....’’ அவள் மறுத்தாள்.

 

அவருக்கு சற்று படபடப்பாகவே இருந்தது.

 

‘’சொல்லதக் கேளு புள்ளே...’’ அவர் கூடையை எடுக்கப் போனார். அவள் அதற்குள் சட்டென அதனைத் தூக்கிக் கொண்டு,

 

‘’நாகம்மக்கக் கூடச் சேந்து போறேன்....நீங்க வராண்டாம்.’’ என்றுக் கிளம்பிவிட்டாள்.

 

ஆயிஷா புரியாமல் முழித்தாள்.

 

‘’இது என்னத்தேப் புதுப் பாசம்...?’’ அவள் கேட்க, அவர் அதற்குப் பதில் சொல்லாமல் ‘’நாம வேறொரு  வீட்டப் பாக்க வேண்டியது வரும் கேட்டியா...’’ என்றார். ஆயிஷாவுக்கு லேசாக பயம் தட்டியது.

 

(கனா தொடரும்)

 

 

(அய்யப்பன் மகாராஜன் நாகர்கோவிலைச் சேர்ந்தவர். இப்போது சென்னையில் வசிக்கிறார். திரைத்துறையில் தீவிரமாக இயங்கிவரும் இவர்  தன் இளமைக் கால நினைவுகளில் இருந்து மீட்டு எழுதும் கதைத் தொடர் இது. செவ்வாய்தோறும் இது வெளியாகும்.  உங்கள் கருத்துகளை editorial@andhimazhai.com க்கு எழுதுங்கள்)

 

 

 

கனா மீது வருபவன் -22

கனா மீது வருபவன் -23

கனா மீது வருபவன் -24

 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...