அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 3 நிமிடத்தில் 900 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய சி.இ.ஓ! 0 பேரறிவாளன் விடுதலை: மத்திய அரசு இனியும் தாமதிக்க கூடாது - நீதிமன்றம் 0 காவல் துறை விசாரணையில் அதிகரிக்கும் இளைஞர்களின் மரணம்! 0 இங்கிலாந்தில் ஒமைக்ரான் வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டது: அமைச்சர் தகவல் 0 தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண் மீது வழக்குப் பதிவு! 0 மத்திய அரசு என்ற ஒன்று இருக்கிறதா? - ஜோதிமணி எம்.பி! 0 இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை பிப்ரவரி மாதம் தாக்கும்! 0 நாகலாந்தில் பொதுமக்கள் சுட்டுக் கொலை: மத்திய அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 'பஞ்சாப் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி': அமரிந்தர் சிங் அறிவிப்பு 0 திமுக அரசை கண்டித்து டிசம்பர் 9ல் அதிமுக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் 0 ரஷ்யாவின் சிறந்த நட்பு நாடாக இந்தியா நிகழ்கிறது - விளாதிமீர் புதின் 0 இந்தியா - ரஷ்யா இடையே 21ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன! 0 கொரோனா விதிமுறையை மீறிய கமல்ஹாசன்: விளக்கும் கேட்கும் தமிழக அரசு! 0 அம்பேத்கர் வழியில் உறுதியேற்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 252 வேட்புமனுக்கள் தாக்கல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

“நான் எழுத்தில் எதையாவது சாதித்திருக்கிறேனா என்று கேட்டால் எதுவுமில்லை!” –இமையம்

Posted : வியாழக்கிழமை,   ஜுன்   20 , 2019  11:54:49 IST

கோவேறு கழுதைகள் (1994), ஆறுமுகம் (1999), செடல் (2006), எங் கதெ (2015), செல்லாத பணம் (2018) ஆகிய ஐந்து நாவல்களையும் மண்பாரம் (2004), வீடியோ மாரியம்மன் (2008), கொலைச்சேவல் (2013), சாவு சோறு (2014), நறுமணம் (2016), நன்மாறன்கோட்டைக் கதை (2019) ஆகிய ஆறு சிறுகதைத் தொகுப்புகளையும், பெத்தவன் (2012) என்ற நெடுங்கதையையும் இதுவரை நான் எழுதியிருக்கிறேன்.  இந்த நூல்களை நான் எப்படி எழுதினேன் என்பதைச் சொல்ல வேண்டும் என்பது பலரின் எதிர்ப்பார்ப்பு. அந்த எதிர்ப்பார்ப்பை என்னால் நிறைவேற்ற முடியாது.  காரணம், மற்றவர்களின் தேவையை அறிந்து கொடுப்பவன் வியாபாரி.  நான் வியாபாரி அல்ல; எழுத்தாளன்.

 

நான் எழுதியுள்ள  ஐந்து நாவல்களும், ஆறு சிறுகதைத் தொகுப்புகளும், ஒரு நெடுங்கதையும் என்னுடைய அறிவின் பலத்தால், சிந்தனையின், கற்பனையின், மதி நுட்பத்தின் பலத்தால் எழுதப்பட்டதில்லை. எழுத்தாளனாகியே தீரவேண்டும் என்ற வேட்கையினாலோ, எழுத்தாளனாகிவிட்டேன், அதனால் தொடர்ந்து எழுதிதான் தீரவேண்டும் என்ற கட்டாயத்தினாலோ எழுதப்பட்டதல்ல. நடைமுறை சமூகத்தின் நிஜ வாழ்க்கை என்ற கந்தக நெருப்புத்தான் என்னை எழுதத் தூண்டியது. இப்போதும் எழுதத் தூண்டிக்கொண்டிருக்கிறது. நான் வாழ்கிற நிகழ்கால சமூகத்தை என்னுடைய சொந்த கண்களாலேயே விருப்பு வெறுப்பின்றி பார்க்கிறேன். மார்க்சிய, பெண்ணிய, தலித்திய, நவீனத்துவ, பின்நவீனத்துவ, இருத்தலியல், சர்ரியலிசம் என்பன போன்ற எந்த கண்ணாடியைப் போட்டுக்கொண்டும் இதுவரை நான் சமூகத்தைப் பார்த்ததில்லை. இனியும் அவ்வாறு பார்க்கப்போவதில்லை. இலக்கியத்தில் சார்பு நிலையைவிட முக்கியமானது நடுநிலைமை. நான் வாழும் சமூகத்தை, உலகத்தை மேலும் மேலும் புரிந்துக்கொள்வதற்கு என்னுடைய எழுத்துக்கள் உதவுகின்றன. நான் எழுத்தை, இலக்கியத்தை கலாச்சார செயல்பாடாகவே கருதுகிறேன். படைப்பின் தரம், வலிமை என்பது அதன் உண்மைத் தன்மையில் இருக்கிறது. படைப்பை படிக்கும் வாசகர்களின் எண்ணிக்கையில் இல்லை.

 

ஐந்து நாவல்களையும் ஆறு சிறுகதைத் தொகுப்புகளையும், பெத்தவன் நெடுங்கதையையும் எப்படி எழுதினேன் என்பதைவிட, ஏன் எழுதினேன் என்பது முக்கியம். வாழ்வு குறித்து, சமூகம் குறித்து, சிந்திக்க வைப்பதால் எழுதுகிறேன்.  எழுதுவதால் கூடுதலாக அக்கறைகொண்டு சிந்திக்கிறேன். நான் வாழ்கிற இந்தச் சமூகத்தின் மீது, சமூக உளவியல்மீது, வாழ்க்கை முறைமீது, சமூக நடைமுறைமீது, நீதி நியமங்கள் மீது எனக்குக் கொஞ்சம் கேள்விகளும் விமசர்னங்களும் இருக்கின்றன.  இதுதான் என் எழுத்து.

 

கேள்விகளை எழுப்புவதுதான் என் நோக்கம்.  தேடுவதும் கண்டடைவதும்தான் எழுத்தின் அடிப்படை. விடையை, முடிவை, தீர்வைத் தருவதல்ல.  மனத்தின் உள்தளங்களிலுள்ள கேள்விகளுக்கு, விமர்சனங்களுக்கு எழுத்தின் மூலம் வடிவம் கொடுப்பது, அந்த வடிவத்தை உண்மையின் பலத்தில் நிறுத்துவது. இதுதான் என் எழுத்து. படைப்பு குறித்தும் படைப்புகளுக்காகவும் பேசுவது எழுத்தாளனின் வேலை அல்ல.  ஒரு படைப்பு எழுதி முடிக்கப்பட்டதும், எழுத்தாளனுக்கும் படைப்புக்குமான உறவு முடிந்துவிடுகிறது.  என் படைப்பில் எனக்கென்று எந்த இடமுமில்லை.  இப்போது நானும் ஒரு வாசகன்தான்.  என் எழுத்து மௌனத்தை நோக்கி மட்டுமே நகர்த்தும்.  ஆர்ப்பாட்டத்தை நோக்கி அல்ல.

 

எல்லா மனிதர்களுக்கும் வாழ்க்கை ஒரே மாதிரியாக ஏன் அமைவதில்லை.  எப்படியோ இருக்க வேண்டிய வாழ்க்கை ஏன் சீர்கெட்டு இருக்கிறது.  எனக்கும் சகமனிதர்களுக்குமான உறவு எது?  பகை எது?  ஓயாமல் ஏன் முரண்பாடு ஏற்படுகிறது?  நான் என்பது என்ன?  உலகம் என்பது என்ன?  உலகம் என்பது ஒன்றுமில்லை.  வாழ்க்கை என்பது ஒன்றுமில்லை.  நான் என்பது ஒன்றுமில்லை.  எல்லாம் அபத்தம் என்று சொல்வது எதனால்?  இவ்வளவு மதங்களுக்கும் மதப் போதகர்களுக்கும் பின்னால், சமூக ஒழுக்க அறநெறியாளர்கள் வந்த பிறகும் உலகம் ஏன் இப்படி இருக்கிறது? சமூகமும் வாழ்க்கை முறையும் ஏன் நெறிமுறைகளற்று இருக்கின்றன?  காலந்தோறும் புறக்கணிப்புகள், ஒதுக்குதல், பாரபட்சங்கள், பொருளாதார உழைப்பு, சுரண்டல்கள் ஏன் நிகழ்ந்து வருகின்றன?  வாழ்க்கையை நடத்திச் செல்வதற்கு எவையெல்லாம் அவசியம்?  மனித தேவைகளின் முடிவு எது?  பண்பாடு என்பது என்ன?  மரபு என்பது என்ன?  நிஜமான சந்தோஷம், நிஜமான துக்கம் எது? நெருப்பாகச் சுட்டுப் பொசுக்கும் நெருக்கடிகளுக்கு இடையிலும் சாகசத்தோடு வாழ்வை மனிதர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள்? மனித இனத்தைத் தொடர்ந்து முன்னோக்கி நகர்த்தும் சக்தி எது?  இப்படி ஆயிரமாயிரம் கேள்விகள்.  இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடையல்ல, முடிவல்ல, தீர்வல்ல என் எழுத்து.

      

       நான் பிறந்து வளர்ந்த ஊர், அந்த ஊருக்குரிய மனிதர்கள், அவர்களுடைய வாழ்க்கை முறை, அந்த ஊருக்குரிய சட்டதிட்டங்கள், ஒழுக்க முறைகள், அறங்கள், நீதி நியமங்கள், நம்பிக்கைகள், நடைமுறைகள் இதுதான் என் வாழ்க்கை.  இதுதான் என்னுடைய படைப்புலகம்.

 

என்னுடைய பாத்திரங்கள் பெரியளவில் சிந்திப்பவர்களோ போராடுபவர்களோ அல்ல.    நிலம் சார்ந்தவர்கள்.  உழைப்பு சார்ந்தவர்கள்.  ஓயாமல் மண்ணோடும் இயற்கையோடும் போராடுகிறவர்கள்.  உழைப்புதான் அவர்களுடைய பலம்.  அதுதான் அவர்களை இயற்கையுடன் மோத வைக்கிறது. பெரிய ஆசை கொண்டவர்களோ, கனவுகள், லட்சியங்கள், எதிர்பார்ப்புக்கொண்டவர்களோ அல்ல.  பசியைத் தீர்ப்பதற்கான வழியைத் தேடுவதுதான் அவர்களுடைய வாழக்கையாக இருக்கிறது. வாழ்நாளெல்லாம் வாயையும் வயிற்றையும் நிரப்புவதற்காக போராடுபவர்கள். போராட்டத்தில் ஓயாமல் தோற்றுக்கொண்டே இருப்பவர்கள். என்னுடைய மனிதர்களுக்கு கனவுகள்கூட வருவதில்லை. மீறிவந்தாலும் வயிறு நிறைய சாப்பிட்டதுபோலவே கனவு காண்பவர்கள். காரணம் வயிறுதான் அவர்களுக்கு வாழ்க்கை. வாழ்க்கையை அது அமையும் விதமாகவே வாழ்ந்துவிட்டுப் போகிறவர்கள்.  அவர்களைப் போலவே அவர்களுடைய தேவைகளும் ஆசைகளும் எளிமையானவையே.  ஆடு இரண்டு குட்டி போட வேண்டும், மாடு கன்று ஈன வேண்டும், பன்றி குட்டி போட வேண்டும் அதைக்கொண்டு, அதை விற்று நல்லது கெட்டது செய்ய வேண்டும்.  எல்லாவற்றுக்கும் மேலாக மழை பொழிய வேண்டும்; காடு விளைய வேண்டும்.  இதுதான் அவர்களுடைய பேராவல்.  அவர்களுடைய அதிகபட்சப் பிரார்த்தனை வயிற்றுக்குச் சோறும் மானத்தை மறைக்கக் கொஞ்சம் துணியும் வேண்டும்.  அவ்வளவுதான்.  இதற்கு மேலான மனிதத் தேவைகளின் அவசியம் என்ன? தமிழ்ச்சமூகம், இந்திய சமூகம் கட்டமைத்து வைத்திருக்கும் ஒழுக்கப் பண்புகளோ, அறப்பண்புகளோ இல்லாதவர்கள்.  சமூகத்தின் கேலிக்கும் கிண்டலுக்கும், ஏளனத்திற்கும் ஆளான மனிதர்கள். சமுகத்தின் இழிவு சின்னங்களாக சித்தரிக்கப்பட்டவர்கள் எப்படி தமிழ்சமூகம் மதிக்கும் கதையானார்கள்? தமிழ் வாழ்வின் மாதிரியானார்கள்? என் மூளையிலிருந்து உருவானவர்கள் என்று என் எழுத்தில் எவரும் இல்லை. என்னுடைய பாத்திரங்கள் இன்றும் என் கண்முன்னே நடமாடிக்கொண்டிருப்பவர்கள்தான். வாழக்கையிலிருந்து விலகியதோ அந்நியப்பட்டதோ அல்ல இலக்கியம்.

                                                                              

பாலியல் தொழிலாளி ஆவதுதான் என் வாழ்வின் லட்சியம், கனவு என்று சொன்ன பெண் யார்? ஆசைப்படாதபோதும், விரும்பாதபோதும் எப்படி பெண்கள் பாலியல் தொழிலாளிகளாக மாற்றப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள்? இது யாருடைய விருப்பத் தேர்வு? சாதி சார்ந்த ஒழுக்கம், சமயம் சார்ந்த ஒழுக்கம், சமூகம் சார்ந்த ஒழுக்கம், கலாச்சார பண்பாட்டு விழுமியங்கள், பெருமைகள் அனைத்தும் ஏன் பெண்ணை மையமாகக்கொண்டே உருவாக்கப்பட்டுள்ளன? உருவாக்கப்படுகின்றன? பெத்தவன் கதையில் வரும் பாக்கியம் – அவளுடைய காதலை பல ஊர் பேசுகிறது. பல ஊர் பஞ்சாயத்து பேசுகிறது. சாதி பேசுகிறது. கட்சி பேசுகிறது. பாக்கியத்தின் காதலை – வாழ்வை யார் தீர்மானிக்கிறார்கள்? பஸ் ஏற போன பாக்கியம் தன் காதலனுடன் போய் சேர்ந்தாளா? வழியிலேயே கொலை செய்யப்பட்டாளா? தெரியாது.

 

என்னுடைய கதை மனிதர்கள் தங்களுக்கு விதித்த வாழ்க்கையை முகச்சுளிப்பு இல்லாமல் ஏற்றுக்கொண்டவர்கள். தங்களுடைய வாழ்க்கையை மற்றவர்கள் – அதாவது சமூகம் ஏன் தீர்மானித்தது என்று ஒருபோதும் கேள்வி கேட்காதவர்கள். ஆனால் விதிக்கப்பட்ட வாழ்க்கையை அவ்வளவு விருப்பத்துடன், அவ்வளவு ஈடுபாட்டுடன் – முழு அர்த்தத்தோடு வாழ்ந்தவர்கள். தாங்கள் வாழ்வது இழிவானது என்றோ, கேவலமானது என்றோ வெறுப்புடன் அவர்கள் ஒருபோதும் - வாழ்க்கையை குறை கூறியதில்லை. குற்றம் சாட்டியதில்லை. ஆசை கொண்ட மனங்களுக்குத்தான் இக்குணங்கள் இருக்கும். என்னுடைய கதை மனிதர்கள் அவர்களுடைய வாழ்க்கையை வாழ்ந்தார்கள். அவர்களுடைய மொழியைப் பேசினார்கள். தாங்கள் வாழ்ந்த வாழ்க்கையை என்னிடம் கண்ணீராகவும் சொற்களாகவும், ஒப்பாரிப் பாடலாகவும் தந்தார்கள். அதைத்தான் நான் நாவல்களாகவும் சிறுகதைகளாகவும் தந்திருக்கிறேன்.

 

என்னுடைய கதைகளில் வரும் மனிதர்கள் சமூகத்தின் நடப்புகளாக, சமூகத்தின் நிகழ்வுகளாக இருந்தவர்கள். இவர்கள்தான் தமிழ் சமூகம் குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட இடத்தில் எப்படி வாழ்ந்தது என்பதற்கான சாட்சிகள். தமிழ்ச்சமூகம் வாழ்ந்ததற்கான சாட்சிகளையே நான் உருவாக்கி இருக்கிறேன். எது இலக்கியம், யார் எழுத்தாளன் என்பதை இந்த சமூக அசைவியக்க சாட்சிகள்தான் நிர்ணயிக்கிறார்கள். என்னுடைய மனிதர்கள் கேட்பது பணமல்ல, நகை அல்ல, பங்களா, கார், அதிகாரம், காமம் அல்ல. சோறு. அதைத்தான் சமூகம் தர மறுத்திருக்கிறது. அதற்காகத்தான் போராடுகிறார்கள்.

      

ஒரு பெண்ணின் கதையை, ஒரு குடும்பத்தின் கதையை எதற்காக எழுத வேண்டும்? யாரும் வாழாத வாழ்க்கையையா அவர்கள் வாழ்ந்தார்கள்? ஒரு மனிதனின் கதைக்கும், ஒரு குடும்பத்தின் கதைக்கும் வரலாற்றில் எந்த முக்கியத்துவமும் இல்லை. மாறாக ஒரு சமூகத்தின் கதையை எழுதவேண்டும். அதுதான் ஒரு இடத்தின் வாழ்வு – ஒரு காலத்தின் வாழ்வு. ஒரு கதையை ஏன் எழுதுகிறேன் என்றால் – குறிப்பிட்ட நிலவியலை பதிவு செய்வதற்காக – ஒரு குறிப்பிட்ட காலத்தில் – சமூகம் எப்படியிருந்தது – என்பதை சொல்லவே.

 

ஒரு நிலப்பரப்பை, குறிப்பிட்ட காலத்தை, அக்கால சமூக நடவடிக்கையை சொற்களின் வழியாக மொழிக்குள் சேமித்து வைக்க – ஆரோக்கியம், செடல், கமலா, பாக்கியம், தனபாக்கியம், ரேவதி போன்றவர்கள் எனக்கு உதவினார்கள். வழிகாட்டியாக, கண்ணாடியாக இருந்தார்கள்.

 

கதாபாத்திரங்களின் குண இயல்புகளுக்குள், மொழிக்குள் என்னை நான் ஒரு போதும் திணித்துக்கொள்வதில்லை.  என்னுடைய பாத்திரங்களின் மீது எனக்குத் தனிப்பட்ட ஈர்ப்பு எதுவும் கிடையாது.  வாழ்க்கையை அதன் நிறைகுறைகளோடு நெருக்கமாக அதே நேரத்தில் விலகி நின்று எழுத்தாளன் பார்க்க வேண்டும்.  சூழலை நான் தன்னிச்சையாக எதிர்கொள்ள விரும்புகிறேன்.   கட்டுப்பாடுகள், எல்லைக்கோடுகள், வரையறைகள், கோட்பாடுகள், இசங்கள் அனைத்தும் படைப்பை ஊனப்படுத்தவே செய்யும்.  இவை எதுவும் எனக்கோ என் எழுத்திற்கோ இல்லை.  மனித உறவின் மையத்தை மட்டுமே இலக்கியம் பேச வேண்டும்.  குறைந்த வார்த்தைகளில்; முடிந்தால் வார்த்தைகள் இல்லாமல்.  அது எல்லாவிதமான வாசிப்புகளுக்கும் இடமளிக்க வேண்டும். வாழ்க்கை தந்த சொற்களும், சொற்கள் உருவாக்கிய வாழ்க்கையும்தான் என் எழுத்து.

 

நிஜ வாழ்க்கை என்பது கடலைப்போன்றது. கோட்பாடுகள் என்பது கடலில் அவ்வப்போது வந்து போகும் கப்பல்களைப் போன்றது. என்னுடைய எழுத்துக்கள் கப்பல்களைப் பார்த்து எழுதப்பட்டதல்ல. கடலைப்பார்த்தும், கடலுக்குள்ளிருந்தும் எழுதப்பட்டது. நான் வாழும் சமூகத்தின் வரைபடத்தை, நான் வாழும் இடத்தின், காலத்தின், நிலவியல் பண்பாட்டின் வரைபடத்தை உருவாக்கிக் காட்ட முயல்வதே என்னுடைய எழுத்தின் முயற்சிகள். மனித இனம் தோன்றி சிந்திக்கவும், பேசவும், எழுதவும், போதிக்கவும் ஆரம்பித்த காலத்திலிருந்து இன்றுவரை, அதிகமாகப் பேசப்பட்ட விஷயம், அதிகமாக சிந்திக்கப்பட்ட, போதிக்கப்பட்ட விஷயம், எழுதப்பட்ட விஷயம் - ‘அன்பாக இருக்கபழகு என்பதும், அன்பாக இருப்பது எப்படி என்பதும்தான். ஆனால் மனித மிருகம் இதுவரை கற்றுக்கொள்ளாத, கற்றுக்கொள்ள விரும்பாத, பின்பற்றாத, பின்பற்ற விரும்பாத விஷயங்களும் இவைதான். நான் இதுவரை எழுதியிருப்பது ‘அன்பாக இருக்க பழகு, அன்பாக இருப்பது எப்படி - என்பதைத்தான். அதையும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு எளிமையாக. வெல்ல முடியாத எளிமையின் வலிமையில் எழுதியிருக்கிறேன் என்றே நம்புகிறேன்.

 

      

என் எழுத்தின் நோக்கம் மனித வாழ்வின் அத்தனை மேன்மைகளையும், இழிவுகளையும், இயற்கையின் முன் மனிதன் தோற்றுப்போகும் கணங்களையும், வாழ்வின் வெற்றுத்தன்மையையும் புரிந்துகொள்வதற்கான முயற்சியே.  வாழ்க்கை வாழப்படுகிற விதத்தில், வாழ்க்கை அமைகிற விதத்திலிருந்து வாழ்வு குறித்தும் சமூகம் குறித்தும் வாசகனோடு சேர்ந்து கொஞ்சம் கேள்விகளை எழுப்புவதே என் எழுத்து. அப்படி எழுந்த பல கேள்விகளுக்கான பதில்கள்தான் என்னுடைய நாவல்களும் சிறுகதைகளும். நான் எழுதிய ஐந்து நாவல்களும், ஆறு சிறுகதைத் தொகுப்புகளும், ஒரு நெடுங்கதையும், நான் எழுதியவை அல்ல. சமூகம் எழுதிய நாவல்கள், சமூகம் எழுதிய  சிறுகதைகள்தான். நான் எழுத்தில் எதையாவது சாதித்திருக்கிறேனா என்று கேட்டால் எதுவுமில்லை என்பதுதான் என்னுடைய பதில்.

 

தொல்காப்பியர், திருவள்ளுவர், கம்பர், திருமூலர், இளங்கோவடிகள், ஓளவையார், ஆண்டாள், அப்பர், சம்பந்தர், திருநாவுக்கரசர், சங்க காலப் புலவர்கள், சித்தர்கள், இராமலிங்க அடிகள், பாரதி, பாரதிதாசன் போன்றவர்கள் சாதிக்காததையா நான் சாதிக்கப்போகிறேன்? இந்தப் பட்டியலில் உள்ளவர்களும், விடுபட்டவர்களும், ஒவ்வொருவரும் ஒரு பெரும் கடல். நான் ஒவ்வொரு கடற்கரையிலும் நின்று வேடிக்கை பார்க்க மட்டுமே செய்கிறவன். கடலை வெல்ல இலக்கு, ஆசை இருக்க முடியுமா? அது முடிகிற காரியமும் இல்லை. கடலை அறிவதற்கான ஆசை மட்டுமே இருக்கிறது. இதுவே பெரிய ஆசைதான். பெரிய இலக்குதான்.

 

(2018-ஆம் ஆண்டுக்கான கனடா தமிழ் இலக்கிய தோட்டம் வழங்கிய வாழ்நாள் சாதனைக்கான இயல் விருது பெற்றபோது எழுத்தாளர் இமையம் ஆற்றிய உரை)

 

 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...