செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
பெற்றோரால் கைவிடப்பட்டு, சமூகத்தால் அலைக்கழிப்பட்ட ஒருவனின் நாற்பதாண்டுக் கால வாழ்க்கையைப் போராட்டமே 'இரவின் நிழல்' திரைப்படம்.
பெற்றோரால் கைவிடப்பட்டு, சமூகத்தால் அலைக்கழிப்பட்ட ஒருவனின் நாற்பதாண்டுக் கால வாழ்க்கையைப் போராட்டமே 'இரவின் நிழல்' திரைப்படம். சிறு வயதிலேயே தாய் தந்தையை இழக்கும் சிறுவன் நந்து (பார்த்திபன்), அந்த வயதில் பார்க்கக் கூடாததைப் பார்த்தும், அனுபவிக்கக் கூடாததை அனுபவித்தும் வளர்கிறான். பருவ வயதில் வரும் காதல் ஏமாற்றத்தை அளிக்க அவனின் வாழ்க்கை தடம் புரளுகிறது. பசியும் பணமும் அவனது வாழ்க்கையைப் பாடாய்ப் படுத்த, சிறு சிறு குற்றச்செயல்களில் ஈடுபடுகிறான். குற்றங்களும், பாவங்களும் நிறைந்திருக்கும் நந்துவின் வாழ்க்கை கடைசியில் என்ன ஆனது என்பதே படத்தின் மீதிக் கதை. 96 நிமிட படத்தை ஒரே ஷாட்டில் எடுத்திருப்பதுதான் படத்தின் சிறப்பே. கதை முன்னும் பின்னுமாக சென்றாலும் திரைக்கதையில் அழுத்தமோ, விறுவிறுப்போ இல்லை. அதற்கான ஸ்கோப் இருந்தும் இயக்குநர் தவறவிட்டிருக்கிறார். "சிலர் செய்யற பாவம் கங்கைக்குப் போனா தீரும். சிலர் செய்ற பாவம் கங்கையோட போனாலும் தீராது", "செருப்பால அடிப்பான்னு பார்த்தா சிரிப்பால அடிச்சா" என படத்தில் வரும் வசனங்கள் நச்சென்று உள்ளன. படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டிருப்பதற்கு ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சனின் உழைப்பு முக்கியமானது. படம் முழுவதும் கேமரா நகர்ந்து கொண்டே இருக்கிறது. இயக்குநருக்கு ஈடான உழைப்பை ஒளிப்பதிவாளர் கொடுத்திருக்கிறார் என்பதைப் படத்தின் மேக்கிங் வீடியொவை பார்க்கும் போது அறிய முடிகிறது. படத்திற்கு முக்கியமான இன்னொரு தூண் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், 'மாயவா தூயவா', 'பாவம் செய்யாதிரு மனமே', 'காயம்' போன்ற பாடல்கள் உருக வைக்கிறது. படத்தின் செட்களை அழகாக வடிவமைத்துள்ளார் கலை இயக்குநர் விஜய் முருகன். தொழில்நுட்ப ரீதியாக தமிழ் சினிமாவை வேறொரு தளத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறது 'இரவின் நிழல்'. நந்துவாக வரும் பார்த்திபனின் நடிப்பு பிரமிக்க வைக்கிறது. நந்துவின் சிறிய வயது கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர்களும் கச்சிதமாக நடித்திருக்கின்றனர். வரலட்சுமி, ரோபோ ஷங்கர் தவிர மற்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ள புது நடிகர்களும் நல்ல நடிப்பை வழங்கியுள்ளனர். பாலியல் அத்துமீறலுக்கு சிறுவர்களும் உள்ளாகிறார்கள் என அழுத்தமாக சொன்ன பார்த்திபன், பெண்கள் பற்றிய சித்தரிப்பை மட்டும் முழுக்க முழுக்க எதிர்மறையானதாகவே உருவாக்கியிருக்கிறார். அதற்கென்று கற்பிக்கப்படும் நியாயங்கள் அபத்தமானவையாக இருக்கிறது பார்த்திபன் சார்! - தா.பிரகாஷ்