அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உலக நாடுகளில் ஆராய்ச்சிப் பணியும் வாய்ப்புகளும்- -முனைவர் விஜய் அசோகன், ஆராய்ச்சியாளர், அயர்லாந்து 0 கருணாநிதி சிலையை திறக்க மிகவும் பொருத்தமானவர் வெங்கய்ய நாயுடு – முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 தமிழகத்தை தலை நிமிரச்செய்தவர் கருணாநிதி – அமைச்சர் துரைமுருகன் புகழாரம்! 0 செய்தியாளரை அவமதிப்பது அழகல்ல! - மக்கள் நீதி மய்யம்! 0 தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு மிதமான மழை! 0 தமிழ்நாடு முழுவதும் திராவிட பாசறைக் கூட்டங்கள் – திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்! 0 வாய்தா: திரைப்பட விமர்சனம்! 0 பாமக தலைவராக அன்புமணி தேர்வு! 0 "வழக்குகளை எஸ்.ஜே.சூர்யா எதிர்கொள்ள வேண்டும்" – எச்சரித்த நீதிமன்றம்! 0 தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவு! 0 அண்ணாமலையின் பேச்சுக்கு பத்திரிகையாளர் அமைப்புகள் கண்டனம் 0 சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கருணாநிதி சிலை இன்று திறப்பு 0 தலைகுனிவை ஏற்படுத்தும் செயல்களை காவல்துறையினர் செய்துவிடக்கூடாது: முதலமைச்சர் 0 நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை விடுவித்தது போதை பொருள் தடுப்பு பிரிவு! 0 குழந்தைகள் தொடர்பான வழக்கு: உயர்நீதிமன்றம் முக்கிய அறிவுறுத்தல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

“குழந்தை எழுத்தாளர்களைக் குறைத்து மதிப்பீடும் சூழல் நிலவுகிறது!’’- மு.முருகேஷ்

Posted : சனிக்கிழமை,   ஜனவரி   01 , 2022  16:52:43 IST


Andhimazhai Image

ஹைக்கூ, சிறுகதை, சிறார் இலக்கியம் என படைப்பிலக்கிய தளத்தில் கடந்த முப்பத்து ஆண்டுகளுக்கு மேலாக இடையறாது செயல்பட்டுக் கொண்டிருப்பவர் கவிஞர் மு.முருகேஷ். அவர் எழுதிய 'அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை' என்ற குழந்தை இலக்கிய நூலுக்கு 2021 ஆம் ஆண்டிற்கான  பால புரஸ்கார் அறிவிக்கப்பட்டுள்ளது. அவரிடம்  ஒரு சிறு நேர்காணல்:

 
 “கடந்த முப்பது ஆண்டுகளாகக் கதை, கவிதை என எழுதிக் கொண்டிருந்தாலும், சிறுவர் இலக்கியத்திலும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி எழுதி வருகிறேன். தமிழகத்தில் சிறுவர் இலக்கியத்திற்கென்று தனி பாரம்பரியம் உண்டு. குழந்தை கவிஞர் அழவள்ளியப்பா  1950களிலேயே குழந்தை ‘எழுத்தாளர் சங்கத்தை’ நிறுவி, அதன் வழியாக குழந்தை படைப்பிலக்கியங்கள் வெளிவருவதற்கு ஊக்கம் கொடுத்தார். அதேபோல், தலைசிறந்த படைப்புகளை எழுதியவர்களுக்கு தங்கப்பதக்கம், வெள்ளிப்பதக்கம் கொடுத்து ஊக்கப்படுத்தினார். அந்தச்சமயத்தில், குழந்தைகளுக்கான பத்திரிகைகள் நிறைய வந்து கொண்டிருந்தது. ஆனால், இன்றைக்கு விரல்விட்டு எண்ணக் கூடிய அளவிற்கே குழந்தைகளுக்கான பத்திரிகைகள் வந்து கொண்டிருக்கின்றன. இரண்டாயிரத்திற்குப் பிறகு மெல்ல மெல்ல சிறுவர் இலக்கியம் அருகி, சிறுவர்களே படைப்பாளர்களாக மாறியிருக்கின்றனர். இப்படியான சூழலில் என்னுடைய 'அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’ என்ற குழந்தை இலக்கிய நூலுக்கு பால புரஸ்கார் விருது கிடைத்ததற்குப் பெருமைப்படுகிறேன்,”

 
நீங்கள் சொல்வது போல், சிறுவர்களுக்கான பத்திரிகைகள் ஏன் குறைந்து போனது?

மக்களிடம் வாசிப்பு பழக்கம் குறைந்திருப்பதின் பிரதிபலிப்பே சிறுவர்களுக்கான பத்திரிகைகள் குறையக் காரணம். நான் சிறுவனாக இருந்த போது அம்புலி மாமா, பூந்தளிர் போன்ற ஏராளமான சிறார் பத்திரிக்கைகளைப் படித்துள்ளேன். எங்களுடைய தலைமுறை அப்படிப்பட்டது. ஆனால் இன்றைக்குள்ள தலைமுறையினர் சொல்போனிலும், ஐ - பாடிலும் நிறைய நேரத்தை செலவழிக்கின்றனர். புத்தகம் படிக்கின்ற கலாச்சாரம் பெற்றோர்களிடம் இல்லாமல் போனதால் ஏற்பட்ட விபரீதம் இது. அதை மாற்ற வேண்டிய தேவை உள்ளது.

 
சிறுவர் பத்திரிகைகள் இன்று குறைந்து போனதற்குக் காரணம், அதனுடைய விற்பனை பாதிக்கப்பட்டதுதான். படைப்பின்மையின் காரணமாக அல்ல. சிறுவர் பத்திரிகை தொடர்ந்து வருவதற்கு மக்கள் அதை வாங்கி ஆதரிக்க வேண்டிய தேவையுள்ளது. இது நடந்தால் தமிழகத்தில் மீண்டும் நிறைய சிறுவர் பத்திரிகைகள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

 
சிறுவர் இலக்கியத்தில் தொடர்ந்து இயங்குவதில் உள்ள சிக்கல் என்ன?

முதலில் சிறுவர் இலக்கியத்தை எழுதுவதிலேயே பல சிக்கல் இருக்கின்றன. எல்லோராலும் சிறுவர்களுக்கான இலக்கியத்தை எழுத முடியாது. ஏனெனில் குழந்தைகளுக்கான மொழி என்பது இயல்பான, உண்மையான, மனதிற்கு நெருக்கமான மொழியாக இருக்க வேண்டும். மற்ற இலக்கியப் படைப்புகள் எழுதுவது மாதிரி மொழி நடையைப் பின்பற்றினால் தோல்வி அடைந்துவிடுவோம்.
 

குழந்தை எழுத்தாளர்களைக் குறைத்து மதிப்பீடும் சூழல் தமிழிலும் நிலவுவது வருத்தம் அளிக்கிறது. ஆனால் உலக அளவில் சிறுவர்களுக்காக எழுதக் கூடிய எழுத்தாளர்களைக் கொண்டாடி இருக்கிறார்கள். உலகின் மிகச்சிறந்த படைப்பாளியான லியோ டால்ஸ்டாய் கூட சிறார் இலக்கியம் எழுதியிருக்கிறார். அந்த மரபின் தொடர்ச்சி தமிழிலும் உண்டு. மகாகவி பாரதியார் தொடங்கி, பாரதிதாசன் வரைக்கும் எல்லோருமே குழந்தைகளுக்காக எழுதியிருக்கின்றனர். ஆனால், அந்த மரபு குறைந்து, இன்று பெரிய எழுத்தாளர்கள் யாரும் குழந்தைகளுக்கான படைப்புகளை எழுதுவதில்லை. அவர்களின் மனநிலையே அப்படி இருக்கிறதா? அல்லது எழுதக் கூடாது என்று நினைக்கிறார்களா? என்று தெரியவில்லை. ஆனால், அவர்கள் எழுதவேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம்.

அதேபோல், எல்லா எழுத்தாளர்களும் நாளைய தலைமுறையான குழந்தைகளுக்கான படைப்புகளை எழுத வேண்டும். அதற்கான தேவையும் அவசியமும் தமிழக சூழலில் இருக்கிறது.

ஒரு பக்கம் சிறுவர்களுக்கான படைப்புகள் குறைந்து கொண்டு வருகிறது. இன்னொரு பக்கம் சிறுவர்கள் செல்போன், தொலைக்காட்சி போன்றவற்றில் நேரத்தை செலவழிக்கின்றனர். இதை எப்படிப் பார்ப்பது?

குழந்தைகள் கையில் புத்தகத்தைக் கொடுத்துப் படிக்கின்ற கலாச்சாரத்தை வளர்க்க வேண்டும். இதை பள்ளிகளிலிருந்தே தொடங்க வேண்டும். பெற்றோர்கள் தொலைக்காட்சி பார்ப்பதை தவிர்த்து, புத்தகங்கள் எடுத்து படிக்க வேண்டும்.

சொல்போனில், தொலைக்காட்சிகளில் காட்சி ரூபமாகப் பார்க்கக் கூடிய விஷயம் குழந்தையின் கற்பனைத் திறனை ஒருபோதும் வளர்க்காது. எழுத்து வடிவமாகப் படிக்கும் போதுதான், குழந்தை கற்பனை செய்து பார்க்கும். குழந்தையின் கற்பனைத் திறனையும் சிந்திக்கும் ஆற்றலையும் புத்தகங்கள் தான் ஏற்படுத்தும். குழந்தைகள் கையில் புத்தகம் இருக்கும் கலாச்சாரத்தை வளர்த்தெடுக்க பள்ளிகளும், குடும்பங்களும் முயற்சி செய்ய வேண்டும். ஆண்டுதோறும் குழந்தைகளுக்குப் புத்தகத்தைப் பரிசாக வழங்க வேண்டும். குழந்தைகளுக்குப் பிடித்த எந்த புத்தகத்தையும் அவர்கள் வழங்கலாம். ஒவ்வொரு வீடுகளிலும் ஒரு நூலகம் இருக்க வேண்டும். குடும்பச் சூழலிலும், சமூகச் சூழலிலும் வாசிப்புப் பழக்கத்தை அதிகப்படுத்த வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள்.

நம்முடைய பள்ளி பாட புத்தகங்களில் சிறுவர் இலக்கியத்திற்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது?

சமச்சீர் பாடத்திட்டத்தை உருவாக்கும் பாடத்திட்டக் குழுவில் நானும் உறுப்பினராக இருந்தேன். தமிழின் தலைசிறந்த இலக்கியவாதிகளின் தலைசிறந்த படைப்புகளை பாடத்திட்டத்தில் சேர்த்தோம். ஆனால், பள்ளிகளில் எந்தவகையில் போதிக்கப்பட்டது என்று தான் தெரியவில்லை. முதலில் ஆசிரியர்களுக்கு இன்றைய நவீன இலக்கியம் பற்றி வாசிப்பு இருக்க வேண்டும்.

சமச்சீர் கல்வி திட்டத்தில் பணியாற்றியபோது, கவிஞர் கவிக்கோ அப்துல் ரகுமானின், ‘சுதந்திரம்’ என்ற அற்புதமான கவிதையைத் தேர்வு செய்து கொடுத்தேன். அதை கல்வி இயக்குநர், அமைச்சர் என எல்லோரும் பாராட்டினார்கள். அந்த கவிதையை ஆறாம் வகுப்பு பாடத்திட்டத்தில் வைத்தனர். ஆனால், அதற்குப் பிறகு வந்த ஆட்சி அந்த கவிதையை பாடத்திட்டத்தில் இருந்து எடுத்துவிட்டனர். படைப்பைப் படைப்பாகப் பார்க்கக் கூடிய மனநிலை ஆட்சியாளர்களுக்கு இருக்க வேண்டும்.

நாம் குழந்தைகளுக்கு கொடுக்கும் எந்த புத்தகமாக இருந்தாலும், அந்த புத்தகம் பற்றிய அனைத்து பார்வைகளும் ஆசியர்களுக்கு இருக்க வேண்டும். அதற்கு ஆசிரியர்களைப் பயிற்றுவித்து, பிறகு மாணவர்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். அதற்கு நிறையப் படிநிலைகள் இருக்கிறது. நாம் ஒவ்வொன்றாகப் போகவேண்டும். அதேபோல், சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் சமகால இலக்கியப் படைப்புகள் கொடுத்ததை நல்ல தொடக்கமாகப் பார்க்கிறேன்.

 

தா.பிரகாஷ்
  

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...