ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபம் கிராமத்தை சேர்ந்தவர் ச. துரை. இளங்கலை கணினி அறிவியல் படித்த இவர் தனது சொந்த ஊரில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். கவிதை மீது இவர் கொண்ட காதல் இவரை இலக்கிய உலகிற்கு அழைத்து வந்திருக்கிறது. இந்த ஆண்டுக்கான குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது இவருக்கு வழங்கப்படுகிறது. அவருடன் பேசியதில் இருந்து…
உங்களுக்கு கவிதை மற்றும் பிற இலக்கிய வடிவங்களுடனான அனுபவம் எப்போது கிடைத்தது என்பது பற்றி பகிர்ந்துகொள்ளுங்கள்?
இலக்கியம் கவிதை மீதான ஈடுபாடு ஆர்வம் அப்துல்ரகுமானை வாசிக்க தொடங்கிய பிறகுதான் துளிர்விட்டது. அது என்னுடைய கல்லூரி இறுதி ஆண்டு. அப்போது ஒருமுறை வகுப்பறையில்அமர்ந்து அப்துல்ரகுமான் கவிதைகளை மறைத்துவைத்து வாசித்துக்கொண்டிருந்தேன். ஏதோ மாற்று நூலை வாசிக்கிறேன் என்பதை கவனித்த வகுப்பாசிரியர் வெடுக்கென்று புத்தகத்தை பிடுங்கிஎன்னை முறைத்தார்.
பிறகு புத்தகத்தை பார்த்தவர் எதுவும் சொல்லாமல் வாசி என்று என்னிடம் திருப்பி கொடுத்துவிட்டார். எனக்கு அது அப்போதைக்கு பெரிதாக தெரியவில்லை. இப்போது யோசித்தால் ஒருவேளைஅப்போது அதை குற்றமாக எண்ணி எனக்கு தண்டனையை கொடுத்திருந்தால் ஒருவேளை நான் அன்றே கொஞ்சம் இலக்கியத்தை வெறுத்து விலகியிருப்பேனோ என்று தோன்றுகிறது. அந்தஆசிரியருக்குதான் நன்றி சொல்ல வேண்டும்.
ஏன் கவிதையாக்கத்தை மேற்கொண்டிருக்கிறீர்கள்?
கவிதைகளுக்கும் நமது தமிழ் மரபிற்கும் இரண்டாயிரம் ஆண்டுக்கு மேலான தொடர்பு இருக்கிறது. அந்த இரண்டாயிரம் ஆண்டுகால தமிழ் வம்சாவளியில் இருந்து ஒருவன் இலக்கியத்திற்குள் வரும்போது கவிதையை எடுக்காமல் போனால்தான் அபத்தமாக இருக்கும் மற்றும் எனக்கு கவிதைகளை எழுதும் போது நான் சுதந்திரமாக இருப்பதாக நம்புகிறேன். கவிதை தவிர்த்து "குறைக்கும் பியானோ" என்று சிறுகதை எழுதியிருக்கிறேன். அதுவொரு மன அழுத்தக்காரனின் சிறுகதை. மத்தி வெளியீட்டிற்கு பிறகு "பேய் பிடித்த கடல்" என்று இன்னொருகதையும் இப்போது எழுதியிருக்கிறேன்.
உங்கள் முதல் கவிதைத் தொகுப்பு வெளியானது எப்போது? அது எப்படி நடந்தது?
எனது முதல் தொகுப்பு 'மத்தி'தான். ஒரு காலையில் நரன் அலைபேசியில் கவிதைகளை அனுப்ப சொன்னார்.அனுப்பினேன். இரண்டு நாள் கழித்து மீண்டும் அழைத்து பண்ணுவோம் துரை என்றார். சால்ட் பதிப்பில் எனது நூல் வருவது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. எனெனில் நரன் எனக்கு பிடித்தஎழுத்தாளர். அது கூடுதலான நம்பிக்கையாயிருந்தது. எனது வாழ்வில் எல்லா அபூர்வமான நல்ல விஷயங்களுமே நான் துயரத்தில் இருக்கும் போதுதான் நிகழும். இப்போது வரை அது அப்படிதான்தொடருகிறது. அப்படியான ஒரு துயர நேரத்தில்தான் எனது நூலும் வெளியானது.
திருவோடு போலிருக்கும் வாஷ் பேசின்- போன்ற உங்கள் வரிகள் சிறந்த கவிஞனை அடையாளம் காட்டிவிடுகின்றன? உங்கள் கவிமனத்தின் இயங்கியல் எத்தகையது?
நான் பொதுவாகவே நிறைய தயக்கமடைபவன். அந்த வாஷ்பேசின் கவிதையில் வருகிற நபர் நான்தான். எனது தயக்கத்தின் குற்ற உணர்வுதான் அந்த கவிதை. சமயங்களில் என்னுடையதயக்கத்தை நான் எண்ணி பார்ப்பேன். அப்போதெல்லாம் இந்த உலகின் படுமோசமான பலவீனசாலி நானாகதான் தோன்றும். என் கவிமனதின் இயங்கவியல் என் தயக்கத்தில் இருந்துதான்தோன்றுகின்றன அப்படிதான் நம்புகிறேன்.
குமரகுருபரன்- விஷ்ணுபுரம் விருது உங்களுக்கு வழங்கப்படுவதை எப்படி உணருகிறீர்கள்?
அறிவிக்கப்பட்டதுமே பதற்றமாகிவிட்டேன். இப்போதும் கூட அந்த பதற்றம் இருக்கிறது. குமரகுருபரனின் சாம்பல் நிற பனியன் அணிந்த அந்த புகைப்படம் ஒருமுறை நினைவுவந்தது. இன்னும்நிறைய பொறுப்பும் நான் செய்ய வேண்டிய வேலைகள் அதிகமாக இருப்பதாகவும் என்னிடம் நானே சொல்லிக்கொண்டேன்.