அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா விதிமுறையை மீறிய கமல்ஹாசன்: விளக்கும் கேட்கும் தமிழக அரசு! 0 அம்பேத்கர் வழியில் உறுதியேற்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 252 வேட்புமனுக்கள் தாக்கல்! 0 நாகலாந்து துப்பாக்கிச் சூடு: மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை! 0 நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி! 0 கோவை வேளாண். பல்கலையில் 80% பேர் தோல்வி; மாணவர்கள் போராட்டம்! 0 நாகலாந்து: தீவிரவாதிகள் என நினைத்து ராணுவம் தாக்குதல் 13 அப்பாவி மக்கள் சுட்டுக்கொலை! 0 ரஷ்ய அதிபர் புதின் இன்று டெல்லி வருகை 0 ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 21-ஆக உயர்வு 0 எடப்பாடி பழனிசாமி கார் மீது தாக்குதல்: டிடிவி தினகரன் விளக்கம் 0 எடப்பாடி பழனிசாமி கார் மீது தாக்குதல்! 0 கன்னத்தில் அறைந்தார்: நடிகர் விஜய்சேதுபதி மீது புதிய வழக்கு! 0 போராடும் விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்த அமித்ஷா! 0 தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! 0 சென்னையில் தக்காளி விலை ரூ.90 வரை விற்பனை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

"திருக்குறளுக்கு மட்டும் 200 பதிப்புகள் வெளியிட்டு இருக்கிறோம்!" - திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் சுப்பையா நேர்காணல்!

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜுன்   04 , 2019  17:54:47 IST


Andhimazhai Image

சைவசமயத்தைப் பரப்புவதற்கும், தமிழ்மொழி இலக்கிய மூலநுால்களை பாடநுால்களாக உரையுடன் அச்சிட்டு வெளியிடுவதற்கும் திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நுாற்பதிப்புக்கழகம் 1920-ல் நெல்லையில் வ. திருவரங்கம்பி்ள்ளை, திரவியம்பிள்ளை மற்றும் தமிழ்அறிஞர்களால் தொடங்கப்பட்டது. புத்தக வெளியீட்டுக்கென தென்னிந்தியா முழுவதிலும் அமைக்கப்பட்டுள்ள ஒரே பொது நிறுவனமாக இது திகழ்ந்து வருகிறது. தற்போது அதன் மேலாண்மை இயக்குனர் சுப்பையா தங்களது பதிப்பகத்துறை கடந்து வந்த பாதை குறித்து அந்திமழைக்காக பேசினார்.  

"இக்கழகம் தொடங்குவதற்கு தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் உறுதுணையாக இருந்தனர். எங்களுடைய நோக்கமாக சைவம் மற்றும் தமிழ் இரண்டையும் இரு கண்களாக நினைத்து நாங்கள் பணி செய்துக்கொண்டு வருகிறோம். சைவசித்தாந்த சாத்திரம் சார்ந்த  நுால்களை வெளியிட்டோம். அதேமாதிரி நிறைய சைவ இலக்கியம். சைவ சமயம், வரலாறு, தத்துவம், மொழியியல், போன்ற பலதுறைகளிலும் கழகம் சார்பில் நுால்களை வெளியிட்டோம். அதேபோல் நம் பதிப்பகம் சார்பில் தமிழ் இலக்கணம் மற்றும் தமிழ் இலக்கியம் சம்பந்தமாக மிகப் பெரிய மாநாடுகளை நடத்திருக்கிறோம் அந்த மாநாட்டில்  நற்றிணை, அகநானுாறு  போன்ற பல்வேறு தலைப்புகளில் பேசிய அறிஞர் பெருமக்களின் சொற்பொழிவுகளை "சங்கஇலக்கிய சொற்பொழிவுகள்" என்ற தலைப்பில் நுால் வடிவமாக  கொண்டு வந்திருக்கிறோம்.

சைவ சாத்திரங்களான மாபாடியம், சுபக்கம், பரபக்கம், சிவப்பிரகாசம் போன்ற நுால்களை கழகப்புலவர் சித்தாந்த பண்டிதர் ப. இராமநாதபிள்ளை உரை எழுதி வெளியிட்டு இருக்கிறோம் எந்தவொரு நுாலுமே நல்ல உரையில்லையென்றால் அந்த நுால் மக்களிடம் போய் சென்று சேராது. கழகம்தான் அதற்காக அதிக முயற்சி எடுத்தது.  அவ்வை .து. துரைசாமி, அ.மு.வேங்கடசாமி நாட்டார், சோமசுந்தரனார் போன்ற தமிழ்அறிஞர்களை வைத்து உரை எழுதி மக்களிடம் வழங்கினோம். அதேபோல் சைவ சமய நுால்களான திருமந்திரம், திருவாசகம் போன்றவைகள் கழகப்புலவர் இராமநாதபிள்ளையுடைய உரையால் பரவலாயின. மறைமலை அடிகளார் சைவம் தொடர்பாக கொழும்பு சென்று உரையாற்றிய சொற்பொழிவுகள் அனைத்தையுமே நுால் வடிவில் முதன்முதலில் நாங்கள்தான் கொண்டு வந்திருக்கிறோம். அதேபோல இலக்கண நுால்களிலும் நன்னுால் எழுத்து, நன்னுால் சொல், மற்றும் தொல்காப்பிய நுால்களையும் வெளியிட்டு இருக்கிறோம்.  கா. அப்பாதுரையார், .து. இராமசாமி புலவர், புலவர் அரசு ஆகியவர்களின் சிறுவர் இலக்கியக்கதை  நுால்களாக வந்திருக்கின்றன.

இன்று தமிழ்நாடு பாடநுால் நிறுவனம் சார்பில் பாடநுால்களை  எவ்வாறு வெளியிடுகிறார்களோ அதை அன்று அதை சைவ சித்தாந்த நுாற்பதிப்பு கழகம்தான் வரையறுத்தது. அன்றைக்கு கழக வெளியீடுகள் வெளியிட்ட பாடபுத்தகங்கள் மூன்று மாதத்தில் விற்பனை ஆகிவிடும். அதற்கான தொகையும் வந்துவிடும்.

திருவரங்கபிள்ளை காலத்திற்குப் பிறகு தம்பி வ. சுப்பையாபிள்ளை பொறுப்பேற்றார். சுப்பையாபிள்ளை ஒரு சிவனடியார். பார்ப்பதற்கு மிக மெலிந்தவராக இருப்பார். இவரா இவவளவு பெரிய வேலையைச் செய்கிறார் என்று ஆச்சரியப்படுவோம். அவர் தமிழ் தழைத்தோங்க உழைத்தவர். பழந்தமிழ் இலக்கியங்களையெல்லாம் பள்ளியில் பாடம் சொல்லிக் கொடுப்பதற்கும், கல்லுாரியில் பாடம் கற்பிப்பதற்கும் மூல நுாலை மட்டுமல்லாமல் அதற்கு உரைவிளக்கமும் தந்த பெருமைக்குரியவர். யாரிடம் கொடுத்தால் இந்த நுாலுக்கு விளக்கம் தருவார்கள் என்பதை தெரிந்துகொண்டு செயல்படுவார்.  முத்தொள்ளாயிரத்திற்கு சேதுஉலகநாதன்தான் சரியாக உரையெழுதுவார் என்பதை அறிந்து அவரிடம் ஒப்படைத்தவர். நாராயணன் அப்புசாமி அறிவியல் அறிஞர் அவரிடம் அறிவியல் நுால்களை எழுதச்சொல்லி வெளியிட்டார். தேவநேயபாவாணரை "செந்தமிழ்ச்செல்வி"யில் அறிமுகம் செய்து ஒவ்வொரு சொல்லுக்கும் வேர்சொல் விளக்கம் தொடர் எழுத வைத்தார் அந்த தொடர்களை நுாலாக பதிப்பித்தும் வெளியிட்டார். தமிழ் துறைக்கு மட்டுமல்லாமல் என்னென்ன துறைகளுக்கெல்லாம் நுால்கள் வேண்டுமோ அத்தனைத் துறைகளுக்கும் தகுந்த ஆசிரியர்களைக்கொண்டு நுால் வெளியிட்டார்.

மூலநுால் உரை மட்டும் எழுதினால் போதாது அதை அச்சுப்பிழையில்லாமல் அச்சடித்து தரும் மேலாண்மை திறன் சுப்பையா பிள்ளையிடம் இருந்தது. நுால்களில் அச்சுப்பிழை ஏற்பட்டதைக் கண்டுபிடித்து கொடுத்தால் ஐந்துகாசுகள் கொடுப்பார். அதேபோல் அச்சக ஊழியர்களைக் கூப்பிட்டு தவறைச் சுட்டிக்காட்டி அவர்களிடம் ஐந்து காசு வாங்கி உண்டியலில் சேர்ப்பார். பிழையில்லாமல் கவனமாக அச்சுக்கோர்ப்பதற்காகத்தான் இதை செய்தார். மேலும், சுப்பையாபிள்ளை பிழைகளில் மிகவும் கவனமாக இருப்பார் அப்பர் அச்சகத்தை நிறுவி ஆயிரக்கணக்கான நுால்களைத் தொடர்ந்து அச்சடித்து கொடுத்தார். எங்கே தாள் வாங்க வேண்டும்  எவ்வளவு நாளைக்கு உழைக்கும் என்று கேட்டுதான் வாங்குவார். ஒவ்வொன்றையும் கூர்ந்து கவனிப்பார். தவறுகளை நுட்பமாகச் சுட்டிக்காட்டுவார். புறநானுாற்றுக்கு உரை எழுதப்பட்டபோது ஒரு பாடலில் வந்த தொடரை எடுத்துவைத்துக் கொண்டு உ.வே.சாமிநாதையருடன் "செந்தமிழ்ச்செல்வி" இதழில் ஒரு விவாதத்தை எழுப்பினார். "செந்தமிழ்ச்செல்வி" இதழ் வாயிலாக நடந்த விவாதம் அப்போது பரப்பரப்பாகப் பேசப்பட்டது.

பெரியார் ஈ.வே.ரா, 1948-ம் ஆண்டு சென்னையில் திருக்குறளுக்காக மூன்று மாநாடுகள் நடத்தி உள்ளார். அந்த மாநாட்டில் "திருக்குறளுக்கு எழுதப்பட்ட பரிமேலழகர் உரை புலவர்களுக்கு புரியும் ஆனால் எல்லோரும் படிக்கும்படி மிக எளிமையாக இல்லை. ஆதலால் திருக்குறளை எல்லோரும் படிக்கும் அளவுக்கு நாலணாவுக்கு அச்சடித்துக் கொடுக்க வேண்டும். எளிமையான விளக்கம் வேண்டும்" என திருக்குறளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பெரியார் பேசுகிறார். அந்த நேரத்தில்தான் டாக்டர் மு.வரதராசனார் எழுதிய எளிமையான உரையை அச்சிட்டு சுப்பையாபிள்ளை வெளியிடுகிறார். பெரியார் நினைத்ததுபோல சுப்பையாபிள்ளைக்கும் அது ஒரு கனவாகவும் இருந்தது. அதனால் திருக்குறள் தெளிவுரையும்  இரண்டு அல்லது மூன்று வரிக்கு மிகாமல் மு.வ.வும் எளிமையாக உரை எழுதினார். அட்டை வடிவமைப்பும் செம்மையாக செய்து செம்பதிப்பில் திருக்குறளை வெளியிட்டார்கள், முதன்முதலில் ஓரு ரூபாய்க்கு விற்பனை செய்தார்கள். தமிழ்நாட்டில் பட்டமளிப்பு விழாவில் அனைத்து மாணவர்களுக்கும் அன்பளிப்பாக திருக்குறள் வழங்கினார்கள். அதுதான் இன்றும் பொதுமக்கள் மத்தியில் பேசப்படுகிறது. திருக்குறள் தெளிவுரை என்றால் மு.வதான் என்று பொதுமக்கள் பேசுவதற்கு காரணம் அன்று செய்த அதற்கான உழைப்புதான். திருமணம், பள்ளிக்கூடம் மற்றும் பொதுநிகழ்ச்சிகளில் நம்முடைய திருக்குறள் தெளிவுரையைத்தான் இன்றும் பொதுமக்கள் வாங்கி பரிசாகக் கொடுக்கிறார்கள். திருக்குறள் மட்டும் 200 பதிப்புக்கு மேல் போட்டிருக்கிறோம். பதிப்பகதுறையில் செய்த பணிக்காக 1967-ல் சுப்பையா பிள்ளைக்கு "பத்மஸ்"ரீ விருது வழங்கினார்கள். இதுவரை பதிப்புகத் துறைக்குகென்று பத்மஸ்ரீ விருது யாருக்குமே வழங்கப்படவில்லை. அதுவும் குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படவில்லை. தமிழ்மொழியின்மீதுள்ள உணர்வால் பத்மஸ்ரீ என்ற சமஸ்கிருதச்சொல்லை தாமரைசெல்வர் வா.சுப்பையாபிள்ளை என்று தமிழ்ப்படுத்தி தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.சுப்பையாபிள்ளைக்கு பிறகு முத்துகுமாரசாமி கழகப்பதிப்பக மேலாண்மை இயக்குனராக வருகிறார். அவர் தமிழ்நாடு நுாலகர் சங்கத்தில் பொறுப்பில் இருந்தார். அதேபோல் பாபாசியிலும் 2003-05 வரை தலைவராக பொறுப்பு வகித்தார். தமிழக அரசு சார்பில் அவருக்கு 2004 திருவள்ளுவர் விருது வழங்கப்பட்டது.

சென்னையில் மறைமலை அடிகள் நுால்நிலையம் தொடங்கியபோது என்னுடைய தந்தை முத்துகுமாரசாமி நுாலகராகப் பொறுப்பேற்கிறார்.  தமிழ்நாட்டில் அனைத்து தமிழ் அறிஞர்களும் பேராசிரியர்களும் ஒருநாளாவது நுால்நிலையத்திற்கு வந்து நுால்கள் எடுத்து படித்திருக்கிறார்கள். அந்த நிகழ்வு எங்களுக்கு பெருமைதான். அதுமட்டுமல்லாமல் தமி்ழ்நாட்டில் ஆராய்ச்சி மாணவர்கள் மறறும் துணைவேந்தர்கள் உருவாவதற்கு மறைமலைஅடிகள் நுால்நிலையம் உறுதுணையாக இருந்தது என்று தாராளமாக சொல்லலாம். தற்போது மறைமலைஅடிகள் நுால்நிலையம் கன்னிமாரா நுாலகத்தின் மூன்றாவது மாடியில் கழகத்தின் பொறுப்பில்  இயங்கிவருகிறது.

தற்போது கழகத்தமிழ் கையகராதி,. ஆங்கிலம்-தமிழ்அகராதி, தமிழ்-ஆங்கிலம் அகராதி, தற்போது புதியதாக ஆங்கிலம்-ஆங்கிலம்-தமிழ்அகராதி போன்றவைகளை கொண்டு வந்திருக்கிறோம். இதுபோக கழகத்தமிழ் இலக்கணம் வெளியிட்டுள்ளோம். தென்காசி சிலம்பு அருணாசலத்தின், "தன்பொருநை நாகரிகம்" முத்தாலங்குறிச்சி காமராஜின் "தாமிரபரணி கரையோர சித்தர்கள்" போன்றவைகளையும் வெளியிட்டு இருக்கிறோம். இதில் கழகத்தமிழ் அகராதிதான் விற்பனையில் உயர்வான இடத்தில் இருக்கிறது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இலக்கணம் தொடர்பான நுால்களைப் படிப்பதற்கு வசதியாக நாங்கள் மொத்த இலக்கணத்தையும் ஒரே தொகுப்பாக கொண்டுவந்தோம். அதுவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.

சைவ சித்தாந்தத்தில் "சிவஞானியார் துவக்கம்" ஒவ்வொரு புத்தகமும் 1400 பக்கங்கள் இருக்கும். அப்படி இரண்டு தொகுப்பும் சேர்ந்து 2800 பக்கங்கள் போட்டிருக்கிறோம். அந்த இரண்டு புத்தகத்தின் விலை ரூபாய் 1700 மட்டும்தான். ஆனால் நாங்கள் சிறப்பு விலையாக 1000 ரூபாய்க்கு கொடுத்துக்கொண்டிருக்கிறோம். காரணம் சமய நுால்கள் வாங்கும்போது மக்கள் கொஞ்சம் சிரமத்தில்தான் வாங்குவார்கள். அவர்களுக்கு நாம் சலுகைகள் கொடுத்தால் மனநிறைவுடன் வாங்கிச் செல்வார்கள் என்ற நம்பி்க்கையில் செய்கிறோம்.

அதேபோல் இலக்கண இலக்கிய நுால்களை எப்படித்தான் எழுதியிருந்தாலும் ஆயிரமாயிரம் பிரதிகள் விற்பனை ஆகாது. அதேபோல சமயநுால்களுமே எல்லோரும் வாங்குவார்களா என்றால் கிடையாது. ஆனாலும்  நீங்கள் இன்னும் தொடர்ச்சியாக பண்ணிக்கிட்டு இருக்கீங்களே என்று நிறையபேர் கேட்பார்கள் மக்களி்ன் மனநிலை மாறிக்கொண்டே இருக்கும் அதற்கு தகுந்தாற்போல் நம்முடைய சமயம் மற்றும்  சாத்திரம் சார்ந்த நுால்கள் விற்பனை ஆகும், அதுவரை நாம் பொறுமையாக இருக்கவேண்டும். நாம் அதிக எண்ணிக்கையில் நுால்களை வெளியீட்டு நட்டத்தை ஏற்படுத்த கூடாது. அவ்வாறு செய்தால் நாம் களத்தில் காணாமல் போய்விடுவோம். இது ஒரு வட்டம்தான். அந்த சுழற்சியை நாம் புரிந்துக்கொள்ளவேண்டும் என்று விற்பனை நுணுக்கத்தைச் சொன்னார் சுப்பையா.1999-ல் நான் இநதத் துறைக்கு வந்தேன். 2005-ல் பாபாசியில் கமிட்டி உறுப்பினராக இருந்தேன். புத்தகக்கண்காட்சி எப்படி இருந்தால் மக்களை ஈர்க்கும் என்பதில் கவனம் செலுத்தினேன். அப்போது சந்திரசேகர் தலைவராக இருந்தார். 2005-ல் பத்து நாட்களிலும் குறைவான பார்வையாளர்களே வந்து பார்வையிட்டு உள்ளார்கள். ஹிக்கின்பாதம்ஸ், மேக்மிலன், ஆக்ஸ்போர்டு இவர்களுக்குத்தான் விற்பனையே நடந்தது. எல்லோருமே ஆங்கில நுால்கள் வாங்குவதையே பெருமையாகக் கருதினார்கள். ஆனால் தமிழிலும் உலகதரத்ததிற்கு ஏற்றார்போல் நூல்கள் இருக்கின்றன என்பதை ஊடகம் மூலம் பொதுமக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். இதனால் புத்தககண்காட்சிக்கு மக்கள் கூட்டம் அதிகமாக வர ஆரம்பித்தது.  2000-இல் புத்தகக் கண்காட்சியில் தமிழ்பதிப்பாளர்கள் கிட்டத்தட்ட 60 பேர் இருந்தார்கள். 200 அரங்குகள்தான் இருந்தன. தற்போது 800 அரங்குகள் இருக்கின்றன. அதற்குக் காரணம் நாங்கள் அன்று செய்த ஊடக விளம்பரம்தான்.

தமிழர்கள் நிறைய படிக்கவேண்டும் அதற்காகவாவது அதிகமான பதிப்பகங்கள் வரவேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

தமிழக அரசு கிட்டத்தட்ட 25 கழக நூலாசிரியர்களின் நுால்களை நாட்டுடமையாக்கியிருக்கிறார்கள். நாங்கள் அதைப்பற்றி கவலைப்படவில்லை. 700 அரங்குகள் இருந்தாலும் புத்தகக்கண்காட்சியில் பொதுமக்கள் நமது அரங்கை கேட்டு தேடிவந்து நுால்கள் வாங்கிவிட்டுதான் செல்கிறார்கள். நாங்கள் 3500க்கு மேற்பட்ட தலைப்புகளில் நுால்கள் வெளியிட்டுள்ளோம். திருப்பி திருப்பி மறுஅச்சு கண்ட தலைப்புகள் 200க்கு மேல் இருக்கும், என்கிற இவர், "எப்பொழுதுமே ஒரு நுால் அச்சடித்து வெளியே வருவது செய்தியே கிடையாது. அந்த நுாலின் ஆசிரியர்,மற்றும் அந்த நுாலின் தலைப்பு அப்புறம் மக்களுக்கு .இந்த நுால் எந்த விதத்தில் உதவும் என்பதைப் பார்த்து முடிவுசெய்வதில்தான் அந்த புத்தகத்தின் வரலாறே இருக்கிறது. அதைமட்டும் உருப்படியாக பண்ணவே இல்லையென்றால் நாங்கள் நூறாவது வருடத்தைத் தொட்டு இருக்கமாட்டோம். என்னுடைய முன்னோர்கள் எந்த நோக்கில் ஆரம்பித்தார்களோ அந்த நோக்கம் அடுத்தடுத்து வந்தவர்களிடம் .நிலை மாறாததால்தான் நாங்கள் இன்றும் மக்கள் மத்தியில் வரவேற்புடன் இருக்கிறோம்", என்று நிதானமாக சொல்லி முடிக்கிறார்.

 

-மா. கண்ணன்

 (இது அந்திமழை ஜூன் 2019 இதழில் வெளியான நேர்காணலின் முழுமையான வடிவம்)
 


English Summary
Interview of Mr. Subbiah

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...