அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 என்னை அன்பால் மாற்றியவர் என் மனைவி: ரஜினி 0 பழனி முருகனுக்கு 16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம்! 0 சாதனையாளர்களுக்கு விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 தேசியக் கொடியை ஏற்றினார் ஆளுநர் ஆர். என்.ரவி! 0 கொடியேற்றிய முதலமைச்சர்; விழாவை புறக்கணித்த முதல்வர்: தெலங்கானாவில் பரபரப்பு! 0 கொலிஜியத்தில் ஒன்றிய அரசின் பிரதிநிதிகள் வேண்டும்: சட்ட அமைச்சர் கடிதம் 0 “ஒன்று கூடுவோம் ஸ்டாலின்.. தமிழ்நாடு வாழ்க”: ட்வீட் செய்த கமல்ஹாசன்! 0 குட்கா, பான் மசாலா புகையிலை பொருட்களுக்கு நிரந்தர தடை விதிக்க முடியாது: நீதிமன்றம் உத்தரவு! 0 இருளர் பழங்குடி செயல்பாட்டாளர்களுக்கு பத்ம விருதுகள்! 0 ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்கள் ஏலம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு! 0 நாஞ்சில் சம்பத் மருத்துவமனையில் அனுமதி 0 ஆளுநரின் தேநீர் விருந்து: ஒட்டுமொத்தமாக புறக்கணித்த திமுக கூட்டணி கட்சிகள் 0 தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு விவகாரம்: தீர்ப்பு தள்ளிவைப்பு 0 "வீட்டை முற்றுகையிடுவோம்": தாமரைக்கு எதிராக ஜல்லிக்கட்டு அமைப்பு 0 மருத்துவம் தொடர்பான சர்ச்சை கருத்துகள்: சித்த மருத்துவர் ஷர்மிகாவிடம் விசாரணை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

உன் கிரீடத்தை வெளியே கழற்றி வை! - இந்திரா நூயியின் புதிய நூல் அறிமுகம்

Posted : வெள்ளிக்கிழமை,   பிப்ரவரி   18 , 2022  15:57:30 IST

அலுவலகத்தில் இருந்து இரவு வீட்டுக்குள் நுழைந்தார் இந்திரா நூயி. மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தார். எல்லோரிடமும் உறக்கக்கூவி அந்த சந்தோஷமான செய்தியை அறிவிக்க விரும்பினார். வீட்டுக்குள் எதிர்ப்பட்டார் அவரது அம்மா. ‘’ இந்திரா, பால் தீர்ந்துபோய்விட்டது. போய் வாங்கிட்டு வந்திரு”

“அம்மா… நான்….” இந்திரா இதை எதிர்பார்க்கவில்லை.

“போய்ட்டு வந்திரு”

“ஏன்.. என்னை அனுப்புகிறாய், உன் மருமகன் ராஜ் தான் முன்னாடியே வந்துட்டாரே..”

“அவர் களைப்பா இருக்காரும்மா!”

இந்திரா காரை எடுத்துக்கொண்டு ஒரு மைல் தூரம் ஓட்டிச்சென்று  பால் வாங்கி வந்தார். பால் பாட்டில்களை கோபமாக வைத்தார்.

“உனக்குத்தெரியுமா? இன்று நான் பெப்சிகோவின் தலைவராக பதவி உயர்வு பெற்றிருக்கிறேன். என்னைப்போல் பால் வாங்கிட்டு வரச் சொல்றியே?”

“நீ என்னவா வேணா இருந்துட்டுப்போ. வீட்டுக்குள் நீ ஒரு மனைவி. ஒரு அம்மா. ஒரு மகள்.  அவ்வளவுதான். உன் கிரீடத்தையெல்லாம் கார் கேராஜ்லேயே கழற்றி வெச்சுடு” என்று சொன்னார் இந்திரா நூயின் அம்மா.

எவ்வளவோ உழைக்கும் மகளிர் தங்கள் ரோல்மாடலாக கருதும் பெப்சி நிறுவனத்தின் முன்னாள் சி இ ஓ இந்திரா நூயி எழுதி இருக்கும் மை லைப் இன் ஃபுல் (My Life in full, work, family and our Future)  என்ற நூல் அவரது சொந்த வாழ்க்கை மற்றும் அலுவலக வாழ்க்கை பற்றி விரிவாகப் பேசுகிறது.

சென்னையில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து, நல்லமுறையில் படித்து கல்வி பெற்றதன் மூலமே இன்று அமெரிக்காவில் சக்திவாய்ந்த பெண்மணிகளில் ஒருவராகத் திகழும் அளவுக்கு வெற்றி பெற்றிருக்கும் இந்திராவின் இந்நூல் பல அம்சங்களில் முக்கியமானது. ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த பெருநிறுவன உலகில் ஒரு பெண்ணாக இன்றைக்கு நுழைவதும் பணியாற்றுவதும் எளிதாக இருக்கலாம். ஆனால் முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் அது அவ்வளவு எளிதாக இருந்திருக்கவில்லை. இந்திரா ஒரு பெண்ணாக பெருநிறுவனங்களில் எதிர்கொண்ட சிக்கல்களை புறக்கணிப்புகளை இந்நூலில் விவரித்துள்ளார்.

ஒரு நிறுவனத்தில் இவரது புதிய மேலதிகாரி பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார். அவருக்கு முன்பாக பணியாற்றியவருடன் இந்திரா சிறப்பாக இணைந்து பணியாற்றிய நிலையில், புதியவருக்கு பெண்களுடன் பணியாற்றுவதில் மனம் ஒப்பவில்லை. அத்துடன் இந்திராவை ‘ஹனி’ என்று அழைப்பதையே பழக்கமாகக் கொண்டிருக்கிறார். பார்த்தார் இந்திரா. முகத்துக்கு நேராக இது எனக்குப் பிடிக்கவில்லை என்று சொல்லி வெளியேறிவிட்டிருக்கிறார்.

பெப்சி நிறுவனத்தில் இவர் வேலைக்குச் சேர்ந்ததே பெரும் சுவாரசியமான சம்பவம்:

ஏபிபி என்ற நிறுவனத்தில் இருந்து விலகிய பின், திறமையான நிர்வாகி என்று பெயர்பெற்றிருந்த படியால் பல நிறுவனங்களில் இருந்து அழைக்கிறார்கள். அதில் ஒன்று புகழ்பெற்ற நிறுவனமான ஜிஇ (GE). அப்போது அதன் தலைவராக ஜாக் வெல்ச் இருக்கிறார். மிகப் புகழ்பெற்ற அமெரிக்க சிஇஓ. அவருடன் ஒரு டின்னர் மீட்டிங்கில் சந்தித்து பேசுகிறார். அவர் அளிக்கும் பணியிடங்கள் வேறு வேறு நகரங்களில் இருக்கின்றன. இரு குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளவேண்டும் என்பதால் அங்கெல்லாம் போகமுடியாது. தான் வசிக்கும் கனெக்டிகட்டில் இருந்தால்தான் வசதி என்கிறார் இந்திரா.  குடும்பத்தைப் பிரிந்து வெளியூருக்கு செல்ல விருப்பமில்லை அவருக்கு. பெப்சிகோவில் இருந்து அழைப்பு. அதன் தலைவர் வெயின் என்பவருடன் சந்திப்பு. ஒருமணி நேரப் பேச்சில் 57 நிமிடங்கள் இந்திராவே பேசவேண்டி இருந்தது. வெயின் சும்மா கேட்டுக்கொண்டே இருந்தாராம்.

அப்புறம் ஜிஇ, பெப்சி இருநிறுவனங்களும் இந்திராவை வலிந்து அழைத்தன. முடிவெடுக்க ஒரு வாரம் நேரம் கேட்டு யோசித்துக்கொண்டிருந்தார் இந்திரா. இதற்கிடையில் ஜாக் வெல்ச்சை வெயின் சந்திந்திருக்கிறார். இந்திரா எப்படியும் ஜிஇக்கு வந்துவிடுவார் என்று ஜாக் வெல்ச் பெருமையுடன் குறிப்பிட்டிருக்கிறார்.

நூயிக்குப் போன் செய்தார் வெயின். “ ஜாக் அருமையான சி இஓ. ஜிஇ ரொம்ப நல்ல கம்பெனி. அதனால் அங்குதான் நீங்கள் வேலைக்குப் போக விரும்புவீர்கள்.” என்ற வெயின், “ ஆனால் நான் கடைசியாக பெப்சிக்கு வரும்படி உங்களைக் கேட்க விரும்புகிறேன். ஏனெனில் ஜாக் வெல்ச்சை விட எனக்குதான் நீங்கள் அதிகமாகத் தேவைப்படுகிறீர்கள்! உங்களைப் போல் ஒருவர் எங்கள் அதிகாரிகள் குழுவில் எப்போதும் இடம் பெற்றது இல்லை. உங்கள் வெற்றிக்கும் நாங்கள் எல்லோரும் உறுதுணையாக இருப்போம்” என்றார்.

முடிவெடுக்க இந்திராவுக்கு ஒருவாரம் தேவைப்படவில்லை. அன்று மதியமே பெப்சி அலுவலகம் போய் தன் சம்மதத்தை தெரிவித்துவிட்டார்.

இரு பெண் குழந்தைகளின் தாய் என்கிற முறையில் குடும்பத்தையும் வேலையையும் சமாளிக்க மிகவும் சிரமப்பட்டிருக்கிறார் இந்திரா. ஆனால் வேலையின் பேரில் இருந்த ஆர்வம் அவரைத் தொடர்ந்து செலுத்தி இருக்கிறது.

இரண்டாவது குழந்தை பிறந்து படுக்கையில் இருக்கிறார். அறுவை சிகிச்சை காயம் ஆறவில்லை. இன்னும் எழக்கூட முடியவில்லை. இவரது மேலதிகாரி வந்துபார்த்துவிட்டு, ”ஒரு முக்கியமான வேலை வந்திருக்கிறது.  உங்கள் கருத்து அது பற்றி எனக்கு மிக அவசியமாகத் தேவைப்படுகிறது” என்று சொல்லி இருக்கிறார். ஒரு பக்கம் தன் அலுவலகத்தின் தன் முக்கியத்துவம் எவ்வளவு என்று இவருக்குப் புரிகிறது. மறுநாளே எல்லா கோப்புகளையும் படித்துப்பார்த்து, ஆட்களை வீட்டுக்கே வரவைத்து கூட்டம் நடத்தி செய்து கொடுத்திருக்கிறார்.

ஒரு நல்ல வீடு வாங்க படாத பாடு பட்டிருக்கிறார்கள். இந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள் என்பதால் வாடகைக்கு வீடு தர மறுத்தவர்களையும் எதிர்கொண்டுள்ளனர். கடன் பெற்று ஒரு புதிய வீடு வாங்கிய நிலையில், அதை சரிசெய்து தர ஒரு ஒப்பந்தகாரருக்குத் தந்துள்ளனர். ஒரு வாரம் கழித்து வந்துபார்த்தால் வீடு சரியில்லை என முக்கால்வாசிக்கு உடைத்து வைத்திருக்கிறார்கள் வேலையாட்கள். பதறிப்போய் நீ ஆணியே புடுங்கவேண்டாம் என்று மீண்டும் கடன்வாங்கி ரிப்பேர் செய்து குடிபோயிருக்கிறார்கள்.

இந்திராவும் அவர் கணவர் ராஜ் நூயியும் கண்ணீர் விட்ட சம்பவம் ஒன்றும் இந்த நூலில் இருக்கிறது.

முதல் பெண்குழந்தை ப்ரீத்தாவின் பள்ளியிலிருந்து திடீரென ஒருநாள் உங்கள் மகள் வீட்டுப்பாடம் எதுவும் முடிக்கவில்லை என குறிப்பு அனுப்பப்பட்டிருக்கிறது. அவளுக்கு அப்போது பத்துவயது. நல்லா படிக்கிற பெண் ஆயிற்றே என விசாரித்தால் மகள் பதில் எதுவும் சொல்லவில்லை. ஆனால் வீட்டுப்பாடங்களை முடித்து அறையில் வைத்திருக்கிறாள். ஏதோ ப்ரசனை என்று உணர்ந்து, பள்ளிக்கூட பிரின்சிபால் அனுமதியுடன் ஒரு குழந்தை மனநல ஆலோசகரை நாடினார்கள். அவர் ப்ரீத்தாவின் வகுப்பில் அமர்ந்து கவனித்திருக்கிறார். ப்ரீத்தா வகுப்பில் கேள்விகளுக்கு விடையளிக்க கைகளை உயர்த்தியபோதெல்லாம் ஒரு ஆசிரியர அவளைப் புறக்கணித்துள்ளார். மதியம் உணவு இடைவேளையில் பீரீத்தா தனியாக சாப்பிட்டுள்ளாள். சக மாணவிகள் அவளை சேர்த்துக்கொள்ளவில்லை. அவர்களுடன் அமரச் சென்றாலும் விரட்டி விட்டிருக்கிறார்கள். சாப்பிட்டு முடித்தபின் குப்பைகளைப் பொறுக்கி சுத்தம் செய்யும் வேலையும் இவளையே செய்யச் சொல்லி இருக்கிறார்கள்.சாப்பாட்டறையை கண்காணிக்கும் ஆசிரியர்களும் இதில் தலையிடவில்லை. பல வாரங்களாக இது தொடர்ந்திருக்கிறது.

இதை மனநல ஆலோசகர் விவரித்தவுடன் அவரது அலுவலகத்திலேயே இந்திராவும் ராஜும் கண்ணீர் விட்டிருக்கிறார்கள். முதல்வேலையாக ப்ரீத்தாவை வேறு பள்ளியில் சேர்த்தபிறகுதான் நிம்மதிப்பெருமூச்சு விட்டிருக்கிறார்கள்.

சென்னை கிறித்துவக் கல்லூரி பிறகு ஐஐஎம் கல்கத்தா, பிறகு இந்தியாவிலேயே வேலை. அதன் பின்னர் அமெரிக்காவில் யேல் பல்கலையில் படிப்பு, அங்கேயே ராஜ் நூயி என்ற மங்களூர் காரருடன் திருமணம், அமெரிக்காவில் உழைக்கும் பெண்ணாக வாழ்க்கை, படிப்படியாக முன்னேறி, பெப்சி நிறுவனத்தின் சி.இ,ஒவாக உச்சம் என ஒரு ஓய்வறியா உழைப்பாளிப் பெண்ணின் வாழ்க்கையை கண்முன்னே நிறுத்துகிறார் இந்திரா நூயி.  ஒரு  பெண்ணின் பார்வையில் விரியும் இந்த நூல் குடும்பம், மகப்பேறு, தாய்மை, மகள்களைப் பிரிந்து நீண்ட நேரம் உழைப்பு, குடும்ப சுமை ஆகியவற்றையும் சொந்தவாழ்வின் பார்வையில் இருந்து பேசுவதால் வெறும் பெருநிறுவன வேலையில் உச்சம் தொடுவது என்கிற நேர்கோட்டில் இருந்து வளைந்து செல்கிறது.

 

-அசோகன்
  

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...