அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அக்டோபர் 1-முதல் குற்றாலம், ஒகேனக்கல் அருவிகள் திறப்பு! 0 வங்கக் கடலில் உருவான ‘குலாப்’ புயல்: தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு! 0 உலகத்திற்கான பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது - பிரதமர் மோடி 0 கேரளாவில் இன்று 120 பேர் கொரோனாவால் உயிரிழப்பு! 0 இந்து பெண்ணான எனக்கு ஏன் அனுமதி மறுக்கப்பட்டது? - மத்திய அரசுக்கு மம்தா கேள்வி 0 காங்கிரஸ் கட்சியில் இணையும் ஜிக்னேஷ் மேவானி, கன்னையா குமார்! 0 வெளியானது சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் டிரெய்லர்! 0 ஊரக உள்ளாட்சித் தேர்தல்: வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் நிறைவு! 0 ராஜஸ்தானுக்கு எதிராக திணறும் டெல்லி அணி! 0 எஸ்.பி.பி.-க்கு மணிமண்டபம் கட்ட அரசு உதவ வேண்டும் - பாடகர் சரண் 0 ஆணவக் கொலைகள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு - தொல்.திருமாவளவன் 0 கூழாங்கல்லில் கருவி: கண்டுபிடித்திருக்கும் நியூசிலாந்து கிளி! 0 சாதிவாரி கணக்கெடுப்பு: முதல்வர் ஸ்டாலினுக்கு தேஜஸ்வி யாதவ் கடிதம்! 0 இன்று மாலை வெளியாகிறது டாக்டர் திரைப்படத்தின் டிரெய்லர் 0 சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் பாராட்டு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

இளையராஜா இசைக்கலைஞர் மட்டுமில்லை அதற்கும் அப்பால் - எழுத்தாளர் ஜெயமோகன்

Posted : ஞாயிற்றுக்கிழமை,   ஜுன்   13 , 2021  09:15:51 IST


Andhimazhai Image

இளையராஜா இசை குறித்து முதல்வன் மீடியா ஜூன் மாதம் முழுவதும் ’இசை பெருவெடிப்பு மாதம்’ என்ற தலைப்பின் கீழ் தொடர் நிகழ்வுகளை நடத்தி வருகிறது. அந்தவகையில், ’கலையும் மனிதனும்’ என்ற தலைப்பில் எழுத்தாளர் ஜெயமோகன் இன்று உரையாற்ற அழைக்கப்பட்டிருந்தார். நிகழ்வின் தொடக்கமாக எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம் தொடக்க உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “வெகுஜனதளத்தில் மேதமைதனத்தோடு பணியாற்றுவது முக்கியமான ஒன்று. படைப்பூக்கம் மிக்க மேதமையாக இளையராஜா வந்துள்ளவர். இளையராஜாவைப் பற்றி சிறுமைப்படுத்துதல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதை செய்பவர்கள் அரசியல் ரீதியாக மட்டுமே அணுகிக்கொண்டிருக்கிறார்கள், கீழ்மைப்படுத்துகிறார்கள். இளையராஜா இந்த மாதிரியான விமர்சனங்களுக்கு வெளியில் இருக்கிறார். சாதி, மத பேதங்களைக் கடந்து ஒரு கலைஞனாக எப்படி இளையராஜா தன்னை நிறுவிவந்தார் என்பது தான் முக்கியம்” என்றார்.    


இதனைத் தொடர்ந்து உரைநிகழ்த்திய எழுத்தாளர் ஜெயமோகன், “கடந்த இருபத்தைந்து முப்பதாண்டுகளில் இளையராஜாவின் இசையில் மூழ்கித் திளைத்தவர்களில், அவரின் இசை கோர்வைகளை அறிந்த மிக சிலரில் நானும் ஒருவன் என்பதில் மிகப் பெரிய பெருமை எனக்கு உண்டு. இங்கு நான் அவரின் இசை குறித்து பேசுவது அதிகபிரசங்கித்தனம். அவரின் இசைக்குப் பதிலாக அரைப் பற்றிபேசுவதுதான் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். நான் இலக்கியம், தத்துவம் குறித்துப் பேசினால் நண்பர்கள் ஏற்றுக் கொள்வார்கள்.


நான் கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் போது ’அன்னக்கிளி’ படம் வந்தது. ஒருநாள் பேருந்தில் சென்று கொண்டிருக்கும் போது அந்த படத்தின் பாடல் ஒரு இடத்தில் ஒலித்துக் கொண்டிருந்தது. உடனே பேருந்தை விட்டு இறங்கி அந்தப் பாடலை கேட்டுவிட்டுத் தான் சென்றேன். அதன் பிறகு இளையராஜாவின் பல்வேறு பாடல்களைக் கேட்டு ரசித்துள்ளேன். 2004ஆம் ஆண்டு ’கஸ்தூரிமான்’ திரைப்படத்திற்காகத் தான் முதன் முதலாக அவரை நேரில் சந்திக்கிறேன். நண்பர் சுகா தான் இளையராஜாவை அறிமுகப்படுத்தி வைக்கிறார். ஆனால், இளையராஜா என்னைப் பற்றி ஏற்கனவே அறிந்து வைத்திருந்தார். அந்த சந்திப்பு மிக அழகான சந்திப்பு. இளையராஜாவின் தனி அறையில் அவர் பாட நான் கேட்டிருக்கிறேன். டி.எம்.எஸ் உள்ளிட்ட சிலரின் பாடலை எனக்காகப் பாடிக்காட்டியுள்ளார். பல லட்சம் பேர் கொண்டாடும் ஆளுமை எனக்காக ஹார்மோனியத்தை வாசித்துக் காட்டினார். இது எவ்வளவு பெரிய விஷயம்.


கடந்து பத்து ஆண்டுகளுக்குள் கலை, இலக்கிய வெளிக்குள் வந்தவர்கள், கலைஞன் முக்கியமில்லை; கலை தான் முக்கியம் என்றார்கள். அதன் பின்னர் கலைஞனும் முக்கியமில்லை; கலையும் முக்கியமில்லை ரசிகன் தான் முக்கியம் என்றார்கள். இப்படி சொன்னவர்களுக்கு அறிவுசார்ந்த ஆழமான புரிதலில்லை என்பேன். கலை என்பது கலைஞனின் வெளிப்பாடு. பல்லாயிரக்கணக்கான பாடலின் வழியாகத்தான் இளையராஜாவை அடைய முடியும். நான் டால்ஸ்டாயை எப்படி அடையமுடியும்? நான் அவருடைய சமகாலத்தை சேர்ந்தவனுமில்லை, அவருடைய நிலப்பரப்பை சேர்ந்தவன் இல்லை. அவரின் படைப்பு வழியாகத்தான் அவரை அடையமுடியும்.


இளையராஜாவின் இசை திறன் என்பது தன்னியல்பான ஒன்று. அவரின் ஆளுமை தான் இசை. அது ஒரு பிறவிக் குணம். பல கோடி மனிதர்கள் வாழும் உலகில் ஒரு சிலருக்குத்தான் அப்படியான மூளை அமையும். அவருக்கு இருக்கும் ஒலி பற்றிய அறிவு அபரிமிதமான ஒன்று. அவரால் எளிதாக மலையாளம், தெலுங்கு பேச முடியும். காது வழியாக கேட்பதை பேசுவது அவருக்கு எளிது. அவருக்கு எல்லாமே ஒலி தான்.

அனுபவமும் ஆளுமையும் சேர்ந்த தெய்வ இருப்பு தான் இளையராஜா. சிறு சிறு நீர் துளிகள் பூமிக்கடியில் சேர்ந்து, அவை ஒரு நாள் வெளியேறும். அதேபோன்றது தான் இளையராஜாவின் இசை.


இளையராஜாவின் கலை என்பது இந்த மண்ணுக்குரியது, இந்த மரபுடையது. ஒரே தெய்வம் வெவ்வேறு நாவில் வெளிப்படுவது போல். எனக்கு எழுத்து, இளையராஜாவுக்கு இசை. கலைகளுக்கு அப்பாற்பட்டு நிற்கின்ற உடல் இளையராஜா. கம்பனை டால்ஸ்டாயை உணர்வது போல. காலநிதானமான ஒன்று. வரையறுக்க முடியாத ஒன்று. எப்போதும் இருக்கும் ஒன்று.


மேதை என்பவன் தனிமனிதன் மட்டும் இல்லை. அவன் உலகத்தில் உள்ள மற்ற மேதைகளையும் நினைவுபடுத்தும் ஒரு கன்னி. இளையராஜாவைப் பற்றி பல மெய்சிலிர்க்க வைக்கும் தருணங்கள் என்னிடம் உண்டு. ’கஸ்தூரி மான்’ படத்தின் இசைக்காக நேரில் அவரை நேரில் பார்க்கும் போது, ஹார்மோனியத்தில் ஒரு இருபது முப்பது நிமிடங்கள் எனக்காக இசைத்து காட்டினார். கடலில் தூண்டிலை போட்டு அப்படியே துலாவுவது போன்று ஹார்மோனியத்தில் துலாவிக் கொண்டிருந்தார், அது தான் அவரது இசை. அந்த கடலில் அவ்வளவு இருக்கு. விஞ்ஞானி ஆய்வு செய்வது போன்று, குழந்தை விளையாடுவது போன்று அவர் இசையை உருவாக்குவார்.


இளையராஜாவுக்கு அவரின் பெரும்பாலான பாடல்கள் நினைவில் இல்லை. பாடலை முடித்த உடனேயே அதிலிருந்து வெளியேறி விடுவார். கலைஞனை அருகிலிருந்து பார்ப்பது என்பது, பிரபஞ்சம் எப்படி உருவாகி வந்திருக்கிறது என்பதைப் பார்ப்பது போல. ’ஓம் சிவா ஹோம்' என்ற பாடல் முதலில் உடுக்கை சத்தம் இல்லை. அதில் ஏதோ ஒன்று இல்லை என்பதை உணர்ந்தவர், தொடக்கத்தில் உடுக்கை சத்தத்தை வைத்தார். ஏதோ ஓரிடத்தில் வெற்றிடம் இருக்கிறது என்பதை அவரால் எளிதாக உணர முடியும்.


இளையராஜா எனக்கு மிகப் பெரிய தெளிவை உருவாக்கியவர். அதனால், நானே சில விதிகளை எனக்கு உண்டாக்கிக் கொண்டேன். ’கலை உனதென்றால் மிச்சமின்றி உன்னைக் கொடு’ என்பது தான் அது. இளையராஜாவுக்கு பணம் கொடுக்காமல் நிறையப் பேர் ஏமாற்றியிருக்கிறார்கள். ஏனெனில், அவர் எதையும் ஞாபகம் வைத்துக் கொண்டதில்லை. இசைக்காக மட்டுமே தன்னை முழுமையாக அர்ப்பணித்தார். அவரிடம் கிசுகிசுவோ, அரசியலோ பேச முடியாது. அதை எதையும் கவனத்தில் கொள்ள மாட்டார். இப்படி ஒன்றிற்காக மிச்சமின்றி கொடுப்பதால் இழப்பது அதிகம். இளையராஜா ஒரு திரைப்படக்காரராக கூட இருந்தது கிடையாது. இசையை மழுங்கடிக்கும் எதற்குள்ளும் இளையராஜா போனதில்லை.


கலைக்கு ஒழுக்கங்கள் உண்டு. பொதுவாக சொல்லப்படும் ஒழுக்கங்களை சொல்லவில்லை. கலைக்கு விதிமுறைகள் உண்டு. அதை கறாராகப் பின்பற்ற வேண்டும். எந்த மனிதரிடமும் அவருக்கு ஊசியளவு கோபமோ, வருத்தமோ கூட கிடையாது. இங்கிருப்பவர்கள் யாருடனும் தொடர்பு கிடையாது. காலையில் பிரசாத் ஸ்டுடியோவிற்குள் போனால் அவருக்கு எல்லாம் இசை தான்.


அதேபோல், கருத்துகள் வழியாக கலையை அணுகக் கூடாது. அது தன்னிலையில் வரக்கூடியது. மகத்தான கலைஞர்களுக்கு கலைப் பற்றிய கருத்துகள் கூட முக்கியமில்லை. நான் இளையராஜாவின் மாணவன். இதை சொல்லுவதில் எனக்கு பெருமை உண்டு. இளையராஜாவை உங்களை நோக்கி இழுக்காதீர்கள். அது மலையை கட்டி இழுப்பது போன்றது. நீங்கள் அவரை நோக்கி நகருங்கள். உங்களுக்குத் தெரிந்ததை வைத்து அவரை மதிப்பிடாதீர்கள். ஆழத்திலிருப்பவன் தான், இன்னொரு ஆழத்திலிருப்பவனை புரிந்து கொள்ள முடியும். கலைஞனை மதிப்பிடுவதற்கான அளவு கோல் இல்லை. உங்களுடைய அரசியல், அசட்டுத்தனம், நிபந்தனைகள், போலியான சமூக அக்கறை என எதுவும் அவரிடம் செல்லுபடியாகாது.


என் வாழ்க்கையில் மிக பெரிய சாதனையாகக் கருதுவது ’வெண்முரசு’ எழுதியதுதான். அதை இளையராஜாவுக்கு சமர்ப்பணம் செய்துள்ளேன். நான் இளையராஜாவின் பக்தன். இளையராஜா இசைக்கலைஞர் மட்டுமில்லை அதற்கும் அப்பால். இதை அறியாதவர்களிடம் சொல்வதற்கு ஒன்றுமில்லை, புன்னகையைத் தவிர.” என பேசி முடித்தார்.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...