“தர்மதுரை -2 படத்தை நான் இயக்கப்போவதில்லை” - சீனு ராமசாமி
Posted : செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 19 , 2021 12:03:59 IST
தர்மதுரை 2 படத்தை நான் இயக்கப்போவதாக வரும் செய்திகள் உண்மையில்லை என இயக்குநர் சீனு ராமசாமி விளக்கமளித்துள்ளார்.
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஷ்ருஷ்டி டாங்கே உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான படம் தர்மதுரை. இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகவிருப்பதாக இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் சமீபத்தில் ட்விட்டரில் அறிவித்திருந்தார். இந்தத் தகவல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த நிலையில், இது குறித்து விளக்கம் அளித்துள்ள இயக்குநர் சீனு ராமசாமி, “தர்மதுரை பாகம் இரண்டு எடுக்கப் போவதாக செய்திகள் வருகின்றன. வாழத்துகள். ஆனால் அதை நான் இயக்குவதாக வரும் செய்திகள் உண்மையல்ல. ஆகவே அது சம்பந்தமான விசயத்தில் எனக்கு எவ்வித சம்பந்தம் இல்லை என்பதை தெரிவிக்க விரும்புகிறேன். விரைவில் எனது அடுத்த படம் குறித்து அறிவிப்பு வரும்” என்று தெரிவித்துள்ளார்.