125 பேர் மட்டுமே அனுமதிக்கப்படவேண்டிய பாலத்தில் 450 பேர் சென்றது எப்படி?
Posted : செவ்வாய்க்கிழமை, நவம்பர் 01 , 2022 12:37:11 IST
கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் நடந்திருக்கும் கோர விபத்துகளில் மோசமானது என்று குஜராத்தில் மோர்பி நகரில் நடந்த தொங்குபால விபத்தைச் சொல்லலாம்.
குஜராத்தின் சவுராஷ்டிரா பிராந்தியத்தில் உள்ள மோர்பி நகரை இரண்டாகப் பிரிக்கிறது 'மச்சு நதி'. நகரின் இரண்டு பகுதிகளையும் இணைக்க நதியின் குறுக்கே தொங்கு பாலம் ஒன்று 150 ஆண்டுகளுக்கு முன்பாக ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. இது நகரின் பிரபல சுற்றுலா மையமாகவும் உள்ளது.
மோர்பி நதியின் தொங்கு பாலத்தை, பதினைந்து ஆண்டுகளுக்குப் பராமரிக்கும் ஒப்பந்தத்தை மோர்பி மாநகராட்சி நிர்வாகம், ஒரிவா என்ற தனியார் நிறுவனத்துக்கு கடந்த மார்ச் மாதம் வழங்கியுள்ளது. அந்த நிறுவனம் ரூ. 2 கோடியில் புனரமைப்பு பணிகளை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆறு மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த புனரமைப்பு பணிகளுக்குப் பிறகு, அந்த பாலம் கடந்த மாதம் 26ஆம் தேதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் தான் பிரபலமான அஜந்தா சுவர் கடிகாரங்களைத் தயாரிக்கும் நிறுவனமாகும்.
கடந்த ஞாயிற்றுக் கிழமை (அக்டோபர் 30) ஏராளமான பொதுமக்கள், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் அந்த தொங்கு பாலத்தைக் காண திரண்டுள்ளனர். பாலத்தில் நடந்து செல்ல பெரியவர்களுக்கு ரூ.17, சிறியவர்களுக்கு ரூ.12 கட்டணமும் வசூலிக்கப்பட்டுள்ளது. பாலம் பராமரிப்பு ஒப்பந்தத்தைப் பெற்றுள்ள ஒரிவா நிறுவன ஊழியர்கள் ஏராளமான பார்வையாளர்களை அந்த பாலத்தில் அனுமதித்துள்ளனர். விபத்து நடந்த அன்று மாலை சுமார் 6:30 மணி அளவில் 500-க்கும் மேற்பட்டவர்கள் பாலத்தில் இருந்துள்ளனர். அப்போதுதான் பாரம் தாங்காமல் அந்த பாலம் உடைந்து விழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மீட்பு பணிகள் தீவிரமாக நடந்திருந்தாலும் முதல் நாளிலேயே 25 குழந்தைகள் உட்பட 60 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் 81 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. உயிரிழந்த 141 பேரில் 50க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள்.
ஒரே நேரத்தில் 125 பேர் மட்டுமே நின்றால் தாங்கக் கூடிய பாலத்தில் 450 பேர் எப்படி அனுமதிக்கப்பட்டார்கள்? டிக்கெட் வசூலித்த நிறுவனம் சீரியல் எண்களே இல்லாமல் டிக்கெட் கொடுத்தது எப்படி? மோர்பி நகராட்சி அதிகாரிகள் தங்களுக்குத் தெரியாமலே பாலம் மீண்டும் திறக்கப்பட்டதாகவும், பிட்னெஸ் சர்டிபிகேட் தரப்படவில்லை எனவும் கூறி கை கழுவி இருப்பது நியாயமா? இப்படிப் பலகேள்விகள் எழுப்பப்படுகின்றன.
புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள எட்டு முதல் பன்னிரண்டு மாதங்கள் கால அவகாசம் ஆகும் என ஒப்பந்தத்தில் குறிப்பிட்டிருந்தாலும் ஏழு மாதத்திலேயே மீண்டும் பாலத்தை திறந்துள்ளனர். அதேபோல், பாலத்தின் பழைய கேபிள்கள் பெரும்பாலும் மாற்றப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக ஒரிவா நிறுவனத்தின் இரண்டு மேலாளர்கள், பாலத்தை புனரமைத்த இரண்டு பொறியாளர்கள், மூன்று பாதுகாவலர்கள், 2 டிக்கெட் விநியோக ஊழியர்கள் என மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலம் உடைந்து விழுந்தது தொடர்பாக பொதுநல வழக்கு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எல்லாம் சரிதான். இந்திய மாடல் அரசியலில் மனித உயிர்களுக்கு மதிப்பில்லை என்பதை மீண்டும் இந்த விபத்து நிரூபித்துள்ளது.