![]() |
ஜிப்ஸி- திரை விமர்சனம்Posted : வெள்ளிக்கிழமை, மார்ச் 06 , 2020 05:58:05 IST
![]() மதக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வலியை மிகைப்படுத்தாமல் பதிவு செய்திருக்கிறது ஜிப்சி திரைப்படம். மதத்தை வைத்து அரசியல் செய்பவர்கள்தான் நம் எதிரிகள் என்றும் அவர்களை இனம் கண்டு மனிதத்தை மீட்க வேண்டும் என்ற கருத்தை இத்திரைப்படம் மூலம் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் ராஜு முருகன்.
பெயர், ஊர், மதம் , சாதி என்ற எந்த அடையாளமும் இல்லாத கதாபாத்திரம்தான் ஜிப்சி ( ஜீவா) . காஷ்மீரில் நடக்கும் எல்லை பிரச்சனையில் ஜிப்சியின் பெற்றோர் இறந்துவிட அவரை ஒரு நாடோடி வளர்க்கிறார். இசை, பயணம் இதுதான் ஜிப்சியின் வாழ்க்கையாக இருக்கிறது. அவனுடன் சேர்ந்து ’சே’ என்ற குதிரையும் வளர்கிறது. அவன் இஸ்லாமிய பெண்ணான நட்டாஷாவை சந்திக்கிறான். கட்டுப்பாடுகள் நிறைந்த இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்த நட்டாஷாவிற்கு ஜிப்சியும் அவனது குதிரை ’சே’வும் வியப்பை ஏற்படுத்துகிறார்கள். ஜிப்சி மீது ஏற்பட்ட காதலால் வீட்டை விட்டு வெளியேறி அவருடனே வாழத்தொடங்கிறார் நட்டாஷா. இவர்களின் வாழ்வை கலவரம் புரட்டி போடுகிறது என்பதுதான் கதை.
படத்தில் ஜிப்சி பேசும் வசனங்கள் பிரிவினை வாதிகளுக்கு பதிலடியாக அமைந்திருக்கிறது. இந்தியாவின் அரசியல் சூழலை ஒரு நாடோடியின் பார்வையில் இருந்து இயக்குநர் விமர்சிக்கிறார்.
அதுபோல் ஜீவா சொல்லும் ஒரு வசனம் உண்டு ‘ பைபி, குரான், பகவத் கீதை’ எல்லா புத்தகமும் என்னிடம் இருக்கிறது. எல்லாம் ஒன்றுதான் சொல்கிறது. அட்டை படம்தான் வேறு வேறாக இருக்கிறது’ என்பார்.
’மனித உறவுகளை சிதைத்துபோடுவதும் அரசியல்தான்’ என்ற வசனங்கள் நம்மை யோசிக்க வைக்கிறது. கோத்ரா ரயில் எரிப்பிற்கு பின் நடந்த கலவரத்தை மையமாக வைத்து ஜிப்சி படத்தின் கலவர காட்சிகளை எழுதியிருக்கிறார் இயக்குநர். அசோக் பர்மர் , குத்புதீன் அன்சாரியின் முகங்களை நம்மால் எளிதில் மறந்துவிட முடியாது. கையில் வாளுடன் ஒருவரும். தன்னை விட்டு விடுங்கள் என்று கைகூப்பி நிற்கும் மற்றொருவரின் புகைப்படங்கள் மதம் எப்படி மனிதர்களை மிருகங்கள் ஆக்கியது என்பதின் சான்றுகள்.
இதைத்தொடர்ந்து 2012-ம் ஆண்டு, கேரளாவில் அசோக் பர்மரும், குத்புதீன் அன்சாரியும் சந்தித்துகொண்டனர். இந்த சந்திப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சித்திக் என்பவரால் நடத்தப்பட்டது.
இந்த இரு நிகழ்வுகளையும் திரைக்கதையோடு இயக்குநர் அழகாக பொருத்தியிருக்கிறார். குதிரைக்கு சே என்ற பெயரும், படத்தின் இரண்டாம் பாதியில் இடதுசாரி அமைப்புகளுடன் ஜிப்சி கதாபாத்திரம் இணைந்து செயல்படுவதுபோல் காட்சிகள் அமைந்திருப்பதும் கொஞ்சம் பிரச்சார தொனியில் அமைந்திருக்கிறது.
காஷ்மீர், கங்கை, தமிழகம் என்று எல்லா இடங்களையும் படத்தில் காட்சிப்படுத்திய விதம் சிறப்பு. இந்திய நிலப்பரப்பின் அழகை அசலாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார் செல்வகுமார். தேசாந்திரி பாடலாகட்டும், பின்னணி இசையாகட்டும் சந்தோஷ் நாராயணன் இசை அசுரனாக மாறியிருக்கிறார்.
ஈ. கற்றது தமிழுக்கு பிறகு ஜீவா ஒரு தேர்ந்த நடிகனாக ஜிப்சியில் மிளிர்கிறார். உடை முதல் அவரது முக பாவனைகள் வரை ஜீவாவின் மெனக்கெடலும் உழைப்பும் வீண்போகவில்லை. நட்டாஷா சிங்கும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
படத்தின் முக்கிய காட்சிகளான கலவரக் காட்சிகள் கருப்பு வெள்ளையாக இருப்பது சென்சாரின் கட்டுபாட்டைக் காட்டுகிறது. சமூகப்பொறுப்புடன் படங்கள் வெளிவருவது அரிதாகிவிட்ட இக்காலத்தில் மனிதத்தை தாண்டிய புனிதம் ஒன்றும் இல்லை என்பதை ஜிப்சி படம் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது.
-வாசுகி
|
|