நடிகர் ரஜினிகாந்த் முதலமைச்சர் வேட்பாளராக தன்னை முன்னிறுத்திக் கொள்ளவேண்டும் என்ற நிலைப்பாட்டில் நான் உள்ளேன் என்று துக்ளக் இதழாசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஆடிட்டர் குருமூர்த்தி கூறுகையில், 25 வருடங்களாக தமிழகத்தில் ஒரு சாபம் உள்ளது. சமுதாயத்திற்கும் அரசியல் போக்கிற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் அறிவிப்பு முக்கியத்துவம் ஒன்றாக பார்க்கிறேன். ஆனால் இரண்டு பெரும் தலைவர்கள் இருந்ததால், அவர்கள் கட்சி செய்யும் தவறு தெரியாமல் போனது. இரண்டு கட்சித் தலைவர்களும் இல்லாததால் தற்போது கட்சிகளுக்கிடையே போட்டி உருவாகியுள்ளது. ஆனால் அதே நிலைதான் தற்போதும் உள்ளது.
ஆனால் நடிகர் ரஜினிகாந்தை சினிமா நடிகராக யாரும் பார்க்கவில்லை; அவர் ஒரு நல்லவர் என்று பார்க்கிறார்கள். ரஜினியும் மோடியும் சேர்ந்தால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உருவாகும் என்பது என்னுடைய நிலைப்பாடு. அதுதான் ரஜினி நிலைப்பாடா என்று எனக்குத் தெரியாது.
அதிமுக பாஜக கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில், பாஜக - ரஜினி என்ற கூட்டணி உருவாக வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த குருமூர்த்தி, தற்போது உள்ள சூழலில் தலைவர்கள் மட்டத்திலேயே நிறைய மாற்றங்கள் வரும். வரக்கூடிய தேர்தலில் எந்தெந்த கட்சிகள் மீது தாக்கம் அதிகமாக இருக்கிறதோ அந்தந்த கட்சிகள் தன் நிலையை மாற்றிக் கொள்ளும் நிலைமை வரும். அதை நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டும் அது கடைசி நாளில் கூட நடைபெற வாய்ப்பு உள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் முதலமைச்சர் வேட்பாளராக தன்னை முன்னிறுத்திக் கொள்ளவேண்டும் என்ற நிலைப்பாட்டில் நான் உள்ளேன். எல்லோரும் விரும்பினால் முதலமைச்சர் வேட்பாளர் என்ற நிலையை நடிகர் ரஜினிகாந்த் எடுப்பார் என்ற நிலை முதலமைச்சர் வேட்பாளராக தன்னை முன்னிறுத்தவில்லை என்றாலும் காந்தி பிரதமர் ஆகவில்லை என்பதைப் போல் மக்கள் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன்ரஜினியின் இந்த மாற்றம் வெற்றியை நோக்கித் தான் செல்லும். ஆனால் ரஜினி மட்டுமே அதைச் செய்யப் போகிறாரா அல்லது கூட்டணியோடு சேர்ந்து செய்யப் போகிறாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
நடிகர் ரஜினிகாந்த் குறித்து அமித்ஷா என்னிடம் கேட்டார், ரஜினி முடிவு செய்தால் மட்டுமே எதையும் சொல்ல முடியும் என்று தெரிவித்தேன். ஆனால் நடிகர் ரஜினிகாந்த் இதை செய்ய வேண்டும் அதை செய்ய வேண்டும் என்று நான் ஒருபோதும் அவரிடம் கூறியது இல்லை. அவர் கருத்து கேட்டால், அதை மட்டும் நான் சொல்வேன் முடிவு உங்களது என்று தெரிவிப்பேன். அதனால்தான் அவர் என்னை அழைத்துப் பேசுவார். நான் சொல்வதை நீங்கள் செய்தாக வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்திடம் நான் சொன்னால் அவர் என்னை அழைக்க மாட்டார், அதை செய்யவும் மாட்டார் என்று தெரிவித்தார்.