செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
பாலியல் குற்றச்சாட்டில் தந்தை கைது செய்யப்பட, அவரை மீட்க இளம் பெண் நடத்தும் பாசப்போராட்டமே கார்கி.
பாலியல் குற்றச்சாட்டில் தந்தை கைது செய்யப்பட, அவரை மீட்க இளம் பெண் நடத்தும் பாசப்போராட்டமே கார்கி. தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக வேலைப் பார்க்கும் கார்கிக்கு (சாய் பல்லவி) திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடக்க, அவருடைய அப்பா(ஆர்.எஸ். சிவாஜி) ஒரு நாள் வீட்டிற்கு வராமல் போகிறார். அவரைத் தேடத் தொடங்கும் கார்கிக்கு இடிமேல் இடி விழுகிறது. அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், சிறுமி ஒருவரைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக, நான்கு பேருடன் சேர்த்து ஐந்தாவது நபராக ஆர்.எஸ்.சிவாஜி கைது செய்யப்படுகிறார். ஊடகங்களில் இது தலைப்பு செய்தியாக வர, சாய் பல்லவியின் குடும்பம் ஆடிப்போகிறது. தன் அப்பாவின் நற்குணத்தை சிறுவயதிலேயே அறிந்த சாய் பல்லவி, அவர் இந்த கொடூரமான குற்றத்தை செய்திருக்கமாட்டார் என உறுதியாக நம்புகிறார். அவரைக் காப்பாற்றவும் போராடுகிறார். ஆனால், வழக்கை நடத்துவதற்கு ஒரு வழக்கறிஞரும் முன்வரவில்லை. இயல்பிலேயே திக்கிப் பேசும் வழக்கறிஞரான இந்திரன்ஸ் (காளி வெங்கட்) அந்த வழக்கை எடுத்து நடத்துகிறார். அவரின் புத்திக்கூர்மையால் வழக்கில் திருப்பம் ஏற்படுகிறது. இந்த திருப்பம் அடுத்தடுத்த உண்மைகளை வெளிக்கொண்டு வர, ஆர்.எஸ்.சிவாஜி குற்றவாளியா? இல்லையா என்பது தான் படத்தின் மீதிக் கதை. சிறுமிக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமையும், அதை சுற்றி அரங்கேறும் நிகழ்வுகள் தான் படத்தின் கதை என சுருக்கிவிட முடியாது. அழுக்குப் படிந்த ஆண் மனதின் அக உலகை நுட்பமாக சொல்லியிருக்கிறது படம். அடுத்த என்ன என்ற எதிர்பார்ப்புடன் படம் நகர்ந்தாலும், பொதுசமூகத்தின் மனசாட்சி, மீடியா, நீதிமன்றம் என அத்தனை விஷயங்களையும் கேள்விக்குட்படுத்துகிறார் இயக்குநர் கெளதம் ராமசந்திரன். தனி ஒரு ஆளாக நின்று அப்பாவை வழக்கிலிருந்து மீட்கப் போராடும் சாய் பல்லவியின் நடிப்பு அபாரம். சேலையும், ஹேண்ட் பேக்கும் ‘கார்கி’ கதாபாத்திரத்தை உறுதிமிக்கதாக காட்டியிருக்கிறது. அதேபோல், வழக்கறிஞராக வரும் காளி வெங்கட் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். வெகுளியான கதாபாத்திரத்தில் அழகாக நடித்திருக்கிறார். நீதிபதியாக வரும் சுதா மம்மி மிக இயல்பான நடிப்பை வழங்கியுள்ளார். “ஒரு பொண்ணுக்கு எங்கெங்க வலிக்கும்னு தெரியும். ஒரு ஆணுக்கு எங்கெங்க திமிர் இருக்கும்னு தெரியும்” என அவர் பேசும் வசனம் கவனிக்க வைக்கிறது. படத்தின் டைட்டில் தொடங்கும் போதே கோவிந்த் வசந்தாவின் வயலின் இசை மனதை உலுக்கிவிடுகிறது. காட்சியின் உணர்வுகளுக்கு ஏற்ப பின்னணி இசை கச்சிதமாகப் பொருந்தியிருப்பது படத்திற்கு பெரும் பலம். ஸ்ரீயந்தியின் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது. சென்னையை பருந்து பார்வையில் காட்டி பிரமிக்க வைத்துள்ளார். பார்த்துப் பழக்கப்பட்ட சென்னை படத்தில் பார்க்க பார்க்க அழகாக இருக்கிறது. பாதிக்கப்பட்டவர், குற்றம் செய்தவர் என்ற பார்வையில் படம் நகராமல், குற்றம் செய்தவரின் குடும்பத்தின் பார்வையிலிருந்து படம் நகர்வதால், பார்வையாளர்களுக்கு ‘கார்கி’ வித்தியாசமான திரை அனுபவத்தைக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை. -தா பிரகாஷ்