அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 என்னை அன்பால் மாற்றியவர் என் மனைவி: ரஜினி 0 பழனி முருகனுக்கு 16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம்! 0 சாதனையாளர்களுக்கு விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 தேசியக் கொடியை ஏற்றினார் ஆளுநர் ஆர். என்.ரவி! 0 கொடியேற்றிய முதலமைச்சர்; விழாவை புறக்கணித்த முதல்வர்: தெலங்கானாவில் பரபரப்பு! 0 கொலிஜியத்தில் ஒன்றிய அரசின் பிரதிநிதிகள் வேண்டும்: சட்ட அமைச்சர் கடிதம் 0 “ஒன்று கூடுவோம் ஸ்டாலின்.. தமிழ்நாடு வாழ்க”: ட்வீட் செய்த கமல்ஹாசன்! 0 குட்கா, பான் மசாலா புகையிலை பொருட்களுக்கு நிரந்தர தடை விதிக்க முடியாது: நீதிமன்றம் உத்தரவு! 0 இருளர் பழங்குடி செயல்பாட்டாளர்களுக்கு பத்ம விருதுகள்! 0 ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்கள் ஏலம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு! 0 நாஞ்சில் சம்பத் மருத்துவமனையில் அனுமதி 0 ஆளுநரின் தேநீர் விருந்து: ஒட்டுமொத்தமாக புறக்கணித்த திமுக கூட்டணி கட்சிகள் 0 தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு விவகாரம்: தீர்ப்பு தள்ளிவைப்பு 0 "வீட்டை முற்றுகையிடுவோம்": தாமரைக்கு எதிராக ஜல்லிக்கட்டு அமைப்பு 0 மருத்துவம் தொடர்பான சர்ச்சை கருத்துகள்: சித்த மருத்துவர் ஷர்மிகாவிடம் விசாரணை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 16: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்!

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜுன்   21 , 2022  16:58:03 IST


Andhimazhai Image

நாங்கள் ஆசையுடன் ரசித்துப் பார்த்த ஒரு நாய் வகை நாங்கள் எதிர்பார்க்காமலே கிடைத்தது. அது என்னவாக இருக்கும் என்று சென்ற வாரக் கட்டுரையின் இறுதியில் கேட்டிருந்தேன். லாசா ஆப்ஸோ (Lhasa apso), பக் (pug)  இவற்றில் ஒன்றாக இருக்கலாம் என்று ஒரு வாசகர் கூறியிருக்கிறார். லாசா ஆப்ஸோ  வேணும்னு நினைக்கல; பக் வேணும்னு நினைக்கல.. ஆனா இதெல்லாம் நடந்திருந்தா நல்லாத் தான் இருக்கும்னு இப்ப தோணுது! (அலைபாயுதே ஸ்டைலில் வாசிக்கவும்)

 வந்தது இவையிரண்டும் இல்லை. டேஷ்ஹவுண்ட் (Dachshund). ரமேஷ் அண்ணன் என்று நட்பில் ஒருவர் இருக்கிறார். சகலகலா வல்லவர். என்ன வேலை என்றாலும் முடித்துக் கொடுப்பார். யாருக்காவது உதவி தேவை என்றால் எள் எனும் முன் எண்ணையாக இருப்பவர். அவர் ஒரு நாள் ஒரு நாய்க் குட்டியின் புகைப்படத்தை வாட்ஸப்பில் அனுப்பியிருந்தார். நான் மருத்துவமனையில் மிகவும் பிஸியாக இருந்தேன். புகைப்படத்தைத் தரவிறக்கம் செய்வதற்கு முன்னாலேயே இது நாய்க்குட்டியின் படம்தான், அண்ணன் இந்த குட்டி வேண்டுமா என்று தான் கேட்கப் போகிறார் என்று தெரிந்துவிட்டது. ஒரு புன்னகையுடன் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று ஒத்திப் போட்டேன். வேலைகளை எல்லாம் முடித்து விட்டு இரவு பதினோரு மணிக்கு அதைத் திறந்து பார்த்தேன், அப்படியே அருகிலிருந்த என் மகள் அபர்ணாவும் எட்டிப் பார்த்தாள். "அப்பா இங்க பாருங்கப் பா!" என்றாள் அவள். அடுத்து என் கணவர் செல்ஃபோனைக் கைப்பற்றினார். மற்றதெல்லாம் வரலாறு.

 தூங்கிக்கொண்டிருந்த ரமேஷ் அண்ணனுக்கு ஃபோன் அடித்து அந்த நாயை பற்றி விசாரித்து அது ஃபீமேல் டாஷன்ட்.. கரூரிலோ நாமக்கல்லிலோ ஒரு நண்பர் வீட்டில் இருக்கிறது,  வேண்டுமா என்று கேட்கிறார்கள் எனவும் சரி கொண்டுவரச் சொல்லுங்கள் என்று விட்டனர். பெண் நாயா, வேண்டாம் என்று சொல்லிப் பார்த்தேன். "அதுக்கு நீ ஃபோட்டோவைக் காண்பிக்காமல் இருந்திருக்கணும்" என்று சொல்லிவிட்டாள் என் மகள். இப்போதெல்லாம் அப்பாவும் மகளும் ஒரு விலங்கை வாங்கலாமா வேண்டாமா என்ற விவாதத்தையே கொண்டு வருவதில்லை. தகவல் தான் சொல்கிறார்கள். நேற்றுக் கூட, "ஒரு பண்ணைக்குப் போனேன், அங்க அவர் குதிரை வச்சிருக்கார். குட்டி போட்டா நமக்குத் தரேன்னு சொல்லி இருக்கார்" என்றார் என் கணவர். நான் முறைக்கவும், "ஏன் குதிரை வந்தா வளர்க்க மாட்டோமா? நீ அதுல ஏறிப் போக மாட்டியா?" என்று ஆசை வேறு காட்டுகிறார். "நல்லா சமாளிக்கிறீங்க" என்பதைத் தவிர என்ன சொல்ல என்று எனக்கும் தெரியவில்லை.

 அதன்பின் பஸ்ஸில் குடுத்து விடச் சொல்கிறேன் என்று ரமேஷ் அண்ணன் சொல்லி இருப்பார் போல, மறுநாள் முழுவதும் அவரைத் தொந்தரவு செய்து மூன்றாம் நாள் அந்த பிரவுன் நிற டாஷன்ட் வந்து இறங்கியது. பரபரப்பாக அதைக் கொண்டு வந்தார் ரமேஷ் அண்ணன். வந்தவர் நாயின் பெயரைக் கூட சொல்லாமல் வைத்துவிட்டுப் போய்விட்டார். நாங்களும் இரண்டு மூன்று நாட்கள் பெயர் இல்லாமலேயே வளர்த்தோம். அதன்பின் சாக்கி என்று பெயர் வைத்தாள் அபர்ணா. அப்போதுதான் சார்லி எங்கள் வீட்டிலிருந்து போயிருந்ததால் அதை நினைவுகூரும் விதமாக சாக்கி என்ற பெயராம். அளவில் இதுக்கு எத்தனை வயசு என்று ரமேஷ் அண்ணனிடம் கேட்டதற்கு ஒரு ரெண்டு மாசம் இல்ல மூணு மாசம் இருக்கும்னு நினைக்கிறேன் என்றார் நாய் சின்ன சைஸில் இருந்ததால் எங்களுக்கு வயதைக் கண்டு பிடிக்க முடியவில்லை.

 ஃபீமேல் டாக்ஸ் ரொம்ப பாசமா இருக்கும் என்று ஆயிரமாவது முறையாக என் கணவர் சொன்னார். அது சரிதான் என்று தினம்தோறும் நிரூபித்தது சாக்கி. பாசம் என்றால் பாசம் வழுக்கி விழும் அளவிற்கு பாசம். அருகில் வந்து தடவிக் கொடுத்தோம் என்றால் மல்லாந்து படுத்துக்கொண்டு ஒரு முனகல் ஒலியை வெளிப்படுத்தும். அந்த ஒலியை எந்த இசைக்கருவியாலும் உருவாக்க முடியாது. இளகாத மனதையும் கூட இளக்கிவிடும். எங்கள் வீட்டு நாய்களிடம் இல்லாத வழக்கமாக சாக்கி ஒன்று செய்தது. யாரைப் பார்த்தாலும் குரைத்தது. நீளமான கயிறால் அதை கட்டுப் போட்டு வைத்திருந்தாலும் உள்ளே வருவோர் போவோரைத் துரத்தித் துரத்திக் குரைக்கும்.

 இரண்டு பெரிய நாய்களைப் பார்த்து பயப்படாத விருந்தினர்கள் குட்டி சாக்கியைப் பார்த்து பயந்தார்கள். எதிர்பாராதவிதமாக நிறைய கோழி குஞ்சுகளைப் பிடித்தது சாக்கி. அவற்றில் ஒன்றிரண்டு இறந்தும் போயின. சரி குட்டி நாய் தானே போனால் போகிறது என்று விட்டுவிட்டோம். நாய்கள் மேல் எவ்வளவு தான் பாசம் இருந்தாலும் வேறு விலங்கினங்களை அவை துன்புறுத்தும் போதும் கடிக்கும்போதும் மனதுக்கு மிகவும் கவலையாகவே இருக்கும்.

ப்ளூட்டோ ஒரு முறை ஒரு புறாக் குஞ்சைக் கடித்து விட்டது என்பதற்காக அதனுடன் ஒரு வாரம் பேசாமல் இருந்தவள் நான். என் கணவர், "அது நாய்களுடைய அடிப்படை குணம். கண்ணு முன்னாடி ஏதாவது மிருகங்கள் அசைஞ்சா, ஓடினா அதைப் பிடிக்கணும்னு தோணும். சின்ன வயசுல அது ரொம்ப இயல்பு. போகப்போக இதுவும் நம்ம வீட்டு விலங்கு தான், இதோட தான் நாம வாழனும் என்று தெரிந்தபிறகு கடிக்காது" என்று கூறுவதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. சாக்கியும் சிறுகுழந்தை தானே, சீக்கிரம் சரியாகி விடும் என்று நம்பியிருந்த நேரம் ஒரு ஆறாத வடுவை ஏற்படுத்தி விட்டான் சாக்கி.

 சிவகாசியில் இன்னொரு நண்பர் ஒரு ஜோடி பைனாப்பிள் கொனூர் (pineapple connure) என்ற பறவைகளை வைத்திருந்தார். Parakeet வகை பறவைகளான அவற்றில் ஒன்று இறந்து போய்விட மற்றொன்றை எங்களிடம் அனுப்பி வைத்திருந்தார். ஒரு வருட காலமாக அதைப் பராமரித்து வந்தோம். அபர்ணா அதனை 'கிளிப் பையூ' என்று அழைப்பாள். வீட்டிற்கு வெளியே நிற்கும் விலங்குகள் என் கணவரிடம் நெருக்கமாக இருப்பதும் வீட்டிற்குள் உள்ளே இருப்பவை எப்படியோ என்னிடம் நெருங்கி விடுவதும் இயல்பாக நடந்து விடுகிறது. காலையில் சீக்கிரம் விழித்துக் கொள்கிற ஆள் நான் மட்டும்தான். அதனால் காலையில் எழுந்தவுடன் அந்த  கிளிப் பையூ என்னை விடாமல் கூப்பிட்டுக் கொண்டே இருக்கும். அதன் சிறிய கூண்டைத் திறந்து வைத்தால் தத்தித்தத்தி நடந்து வந்து என் நைட்டியைப் பிடித்து மேலே ஏறி என் தோளில் அமர்ந்து கொள்ளும்.  காதைக் கடிப்பதும் மூக்கைக் கடிப்பதுமாக நான் வேலை செய்யும் பொழுது கூடவே இருக்கும். காலையில் நான் காப்பி அருந்துகையில் அதனுடைய ஃபார்முலா உணவைக் கரைத்து வைத்து விடுவேன். அருகில் அமர்ந்து சாப்பிட்டுவிட்டு என்னுடன் சேர்ந்து அதுவும் பேப்பர் படிக்கும். அந்த ஓரிரு மாதங்களில் நாங்கள் வாங்கியிருந்த அனைத்து செய்தித்தாள்களிலும் கிளிப் பையூவால் ஓரத்தில் ஓட்டை விழுந்திருந்தது.

 வெளியே இந்த இடத்திற்கு நான்தான் தலைவன் என்று நாய்கள் தங்களுக்குள் எல்லை வகுத்துக் கொள்வதைப் போல கிளிப் பையூவும் மெல்ல நடந்து வீடெங்கும் தன் அதிகாரத்தை நிலை நிறுத்தியிருந்தது. ஒரு நாள் நான் அவசர வேலையாக வெளியே கிளம்புவதாக இருக்க, காலையில் அதைத் திறந்து விடவில்லை. அடித் தொண்டையிலிருந்து கத்தி என்னைக் கூப்பிட்டது. அதன் கூண்டைத் திறந்து வைத்துவிட்டு அதற்கான மாவை எடுக்க சமையலறைக்குப் போனேன். மெல்ல மெல்ல நடந்து வாசலில் படுத்திருந்த சாக்கியின் அருகில் போயிருக்கிறது கிளிப் பையூ. இரண்டு நிமிடங்கள் கூட இருக்காது கிளியின் உணவினை எடுத்துக்கொண்டு நான் வர, சாக்கியின் வாயில் பச்சை நிறத்தில் ஏதோ இருந்ததுபோல் தோன்றியது. "என்ன லே.. இலை தளை எதையும் வாயிலே வச்சிருக்கியா?" என்று கேட்டுக்கொண்டே வெளியே வர, அது வாயில் வைத்திருந்தது எங்கள் அன்புக்குரிய கிளிப் பையூ. கிளி அதன் முன்பு போய் கத்தியதா, கொத்தியதா என்று தெரியவில்லை; சாக்கி ஒரே கவ்வாகக் கவ்வி விட்டது. நான் பார்க்கும் போது கழுத்து துண்டிக்கப்பட்டு மூச்சு இழுத்துக் கொண்டிருந்தது. ஏதேதோ செய்து பார்த்தோம், காப்பாற்ற முடியவில்லை. அடுத்த ஒரு மணி நேரத்தில் கிளிப்பையூ உயிரை விட்டு விட்டது. நீண்ட நாட்களுக்கு பின் நானும் என் குழந்தைகளும் ஏங்கி ஏங்கி அழுதோம். அதை சகல மரியாதைகளுடன் தோட்டத்தில் புதைத்தோம். RIP  KILI PAIYU என்று எழுதி அபர்ணா ஒரு tombstone கூட வைத்தாள்.

அதற்குப் பின் பல மாதங்கள் வரை எங்களால் கிளிப் பையூவை மறக்கவே முடியவில்லை. 'இந்த Parakeet வகை பேர்ட்ஸ் எல்லாம் ரொம்ப அட்டென்ஷன் ஸீக் பண்ணுது.. அதிகநேரம் அதோட செலவழிக்க வேண்டியதா இருக்கு.. இனிமே யார் கொடுத்தாலும் இந்த கிளி ஐட்டங்களை வாங்கக் கூடாது' என்று கூறுகிறார் என் கணவர். சாக்கியின் மேல் எனக்குக் கோபமான கோபம். இன்றும் கூட அது பாவமாக பார்த்து வைக்கையில், "நீதானே எங்கள் கிளிப்பையூவைக் கொன்றது?" என்று அதனிடம் கேட்கிறேன். அதுவும் வாலை வாலை ஆட்டிக்கொண்டு மன்னிப்புக் கேட்கும்.

 சாக்கியின் வயது விஷயத்தில் எங்கள் கணிப்பு தவறாகிப் போனது. எங்கள் வீட்டிற்கு வந்த மூன்றாம் மாதமே சாக்கிக்கு உதிரப்போக்கு ஏற்பட்டது. குட்டி நாய் தானே, இந்த தடவை மேட்டாகாது என்று என் கணவர் கூறினார். பூப்பியையும் டெடியையும் பின்னால் அடைத்துவிட்டு அடுத்த பதினைந்து நாட்களும் சாக்கியை மட்டும் front office duty பார்க்க வைக்க வேண்டும், எக்காரணத்தைக் கொண்டும் நான் இல்லாமல் ஆண் நாய்களைத் திறந்து விடக்கூடாது என்று பலமுறை கூறியிருந்தார். நாங்களும் முடிந்த அளவுக்கு கவனமாக இருந்தோம். எப்போது தவறினோம் என்று தெரியவில்லை. அடுத்த ஒரு மாதத்தில் சாக்கி கருவுற்றதற்கான அறிகுறிகள் தெரிந்தன.


(சாக்கி கையைப் பிடிச்சு இழுத்தவன் எவன்?... அடுத்த வாரம்)

முந்தைய பகுதிகள்:

ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை -01: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் புதிய தொடர்!

ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை -02: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் புதிய தொடர்!

 

ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை -03: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்!

ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை -04: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்!

ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை -05: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்!

ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை -06: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்!

ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை -07: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்!

ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை -08: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்!

ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை -09: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்!

ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 10: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்!

ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 11: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்!

 

ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 12: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்!

 

ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 13: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்!

 

ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 14: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்!


ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 15: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்!


  

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...