அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 என்னை அன்பால் மாற்றியவர் என் மனைவி: ரஜினி 0 பழனி முருகனுக்கு 16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம்! 0 சாதனையாளர்களுக்கு விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 தேசியக் கொடியை ஏற்றினார் ஆளுநர் ஆர். என்.ரவி! 0 கொடியேற்றிய முதலமைச்சர்; விழாவை புறக்கணித்த முதல்வர்: தெலங்கானாவில் பரபரப்பு! 0 கொலிஜியத்தில் ஒன்றிய அரசின் பிரதிநிதிகள் வேண்டும்: சட்ட அமைச்சர் கடிதம் 0 “ஒன்று கூடுவோம் ஸ்டாலின்.. தமிழ்நாடு வாழ்க”: ட்வீட் செய்த கமல்ஹாசன்! 0 குட்கா, பான் மசாலா புகையிலை பொருட்களுக்கு நிரந்தர தடை விதிக்க முடியாது: நீதிமன்றம் உத்தரவு! 0 இருளர் பழங்குடி செயல்பாட்டாளர்களுக்கு பத்ம விருதுகள்! 0 ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்கள் ஏலம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு! 0 நாஞ்சில் சம்பத் மருத்துவமனையில் அனுமதி 0 ஆளுநரின் தேநீர் விருந்து: ஒட்டுமொத்தமாக புறக்கணித்த திமுக கூட்டணி கட்சிகள் 0 தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு விவகாரம்: தீர்ப்பு தள்ளிவைப்பு 0 "வீட்டை முற்றுகையிடுவோம்": தாமரைக்கு எதிராக ஜல்லிக்கட்டு அமைப்பு 0 மருத்துவம் தொடர்பான சர்ச்சை கருத்துகள்: சித்த மருத்துவர் ஷர்மிகாவிடம் விசாரணை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 10: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்!

Posted : திங்கட்கிழமை,   மே   09 , 2022  12:32:37 IST


Andhimazhai Image

என் நாய்க் கதை பத்து அத்தியாயங்களைக் கடந்திருக்கும் இந்தக் கட்டத்தில் கொஞ்சம் சுய புராணம் பாடியே ஆக வேண்டும். இதுவரை நான் கூறிய சம்பவங்கள் அனைத்தும் நடந்த புண்ணிய பூமி என்ஜிஓ காலனி. அதற்கு 'கொசு காலனி' என்று பெயர் வைத்தால் இன்னும் பொருத்தமாக இருக்கும். அவ்வளவு கொசு. 'என்ஜிஓ காலனிக்குப் போகணும், ஒரு பத்து நிமிஷம் வெயிட்டிங் இருந்துட்டு திரும்பி வந்துடலாம்' என்று சொன்னால் எந்த ஆட்டோக்காரரும் வரமாட்டார். ரொம்பவும் வலியுறுத்திச் சொன்னால், 'ஆட்டோ ஓட்டத் தெரியுமா? அப்ப நீங்களே ஓட்டிட்டுப் போயிட்டு திருப்பிக் கொண்டுவந்து விட்டுருங்க. நான் இங்கே தான் நிப்பேன்' என்று கும்பிடு போட்டுக் கூறுவார். அவ்வளவு பிரபலம். அதுவும் காலை மாலை ஆறு மணி அளவில் ரொம்ப அதிகம்.

 ஏரியாக்காரர்கள் யாரும்  அந்த நேரத்தில் வெளியிலிருந்து உள்ளேயும் வர மாட்டார்கள்; உள்ளிருந்த வெளியேயும் போக மாட்டார்கள். பால்காரர், காய்க்காரர் ப்லாஸ்டிக் வண்டிக்காரர் யாராவது வேறு வழியின்றி வந்தால் கை கால்களை ஆட்டிக் கொண்டே இருப்பதைப் பார்க்கலாம். முதன் முதலில் இவர்களை நான் வீட்டுக்குள் இருந்து பார்த்தபோது, 'ஏன் பரதநாட்டியம் ஆடுறாங்க' என்று நினைத்ததுண்டு. அதன் பின் அவர்களது கைகால்கள் இயங்கும்  லாவகத்தையும், கொசு விரட்டும் வேகத்தையும் பார்த்து ஒரு கிராஷ் கோர்ஸில் சேர்ந்தால் ஆடல் கலை வல்லுனர்களாகும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று நினைப்பேன். அந்த அளவு கொசுக்கள் படையெடுக்கும்.

 கொசு அடிப்பதற்கே அவ்வளவு சக்தியும் போய்விடும். அதுவும் வீட்டு விலங்குகள் ரொம்பவும் பாவம். நான் முன்பு குறிப்பிட்ட தெருநாய்கள் அடங்கிய கொரில்லா படை அனேகமாக மாலை ஒரு மணி நேரமாவது ஏரியாவை காலி பண்ணிவிட்டு பக்கத்து ஏரியாவுக்கு சென்றுவிட்டிருக்கும் என்றே நினைக்கிறேன். ப்ளூட்டோ ஃபான் நிறம் என்பதால் அவன் மேல் கொசுக்கள் அப்பி இருப்பதைப் பார்த்தால் கருப்புப் போர்வை ஒன்றைப் போர்த்தி விட்டார்களோ என்பது போல் இருக்கும். கொசுவை விரட்டி விரட்டி சோர்வடைந்து எவ்வளவு வேணா கடிச்சுக்கோ என்பது போல் படுத்துக் கிடப்பான் ப்ளூட்டோ.

 இந்த கொசுத் தொல்லை, மற்றும்  தண்ணீர் பற்றாக்குறை என்ற இன்னொரு முக்கிய காரணத்தாலும் நாங்கள் வேறு ஏரியாவுக்கு மாறினோம். விலங்குகள் அனைத்தையும் அவற்றுக்கேற்ற தனித்தனி இடங்களில் வைக்க வேண்டும், மரங்கள், செடிகொடிகள் என்று நிறைய திட்டங்கள் வைத்திருக்கிறேன் என்று கணவர் கூற, அதற்கு ஏற்றாற் போல் ஒரு இடம் வாங்கி வீடு கட்டினோம். இதெல்லாம் நடந்து முடிந்து நாங்கள் குடிபோவதற்கு இரண்டரை ஆண்டு காலம் பிடித்திருக்கும். அதற்குள் வீட்டில் கோழி, வாத்து, புறாக்கள் என்று உயிரினங்கள் எண்ணிக்கை அதிகமானது. அதனால் புது வீட்டில் கட்டிடப் பணி நிறைவுறும் தருவாயில் நாய்களுக்கு என்று ஒரு அறை, புறாக்களுக்கு என்று ஒரு தனிப் பகுதி, முயல்களுக்காக ஒரு கூண்டு எல்லாம் தயாரானது. பழைய கால வீடுகளில் முற்றம் இருப்பது போல், வீட்டின் நடுவே வெளிச்சம் விழுவது போல் நான் ஒரு இடத்தை அமைத்திருந்தேன். அந்த இடத்தை மீன்தொட்டியாக்கி விட்டார் என் கணவர். அதில் எங்கள் வீட்டு கண்ணாடித் தொட்டியில் பெரிதாகி விட்ட மீன்கள் கட்டிட வேலையின் போதே குடிபெயர்ந்தன.

எங்களுக்கு முன் இந்த வீட்டில் குடி வந்த பெருமை அந்த மீன்கள் இன்றும் கெத்தாக சுற்றிக் கொண்டிருக்கின்றன. இப்படி ஒரு ஆறு பேர் கிட்டத்தட்ட முப்பது மிருகங்களுடன் வந்து இறங்கியதை அந்த ஏரியாவே வேடிக்கை பார்த்தது. இங்கு கொசுத்தொல்லை குறைவு என்பதால் தெருவில் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.

நாங்கள் வந்த ஓரிரு வாரங்களிலேயே ஒரு பெண்மணி கோழியைத் தூக்கி கொண்டு வந்தார், 'கோழிக்கு ஊசி போடுவீங்களா?' என்றபடி. 'இல்லங்க நாங்க மனுஷ டாக்டர். விலங்கு டாக்டர் இல்லை' என்றோம்.

'இல்ல.. நிறைய நாய் கோழி எல்லாம் வச்சிருக்கீங்களே அதனால ஒருவேளை நாய் டாக்டரோன்னு நினைச்சேன்' என்றபடி சென்றார். பழைய ஏரியாவில் நான் தெருவில் சின்ன பிள்ளைகளுடன் சுற்றித் திரிவதைப் பார்த்து பலரும் என்னை டாக்டர் என்று சொன்னால் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். சமீபத்தில் கூட என் க்ளினிக்கிற்கு வந்த ஒரு பெண்மணி, "என்ஜிஓ காலனியில் சின்னப்பிள்ளைகளை  சைக்கிள்ல வச்சு ரவுண்ட் அடிப்பாங்களே.. அது உங்க தங்கச்சியா?" என்று கேட்டார்.


 இல்லை அது நான் தான் என்று நான் சொல்ல, வினோதமாகப் பார்த்தார். நம்பினாரா நம்பவில்லையா என்று தெரியவில்லை.

அப்படித்தான் புது ஏரியா எங்களை விலங்கியல் நிபுணர்கள் என்று நினைத்துக் கொண்டது. இதெல்லாம் எங்களுக்கு ஒரு விதத்தில் பெருமையாகவே இருந்தது. எங்களுக்குள் பேசி சிரித்துக் கொள்வோம். நான் அப்போது கண் மருத்துவம் படித்து முடித்திருந்தேன். அதனால் நாய்களின் பார்வைத் திறனையும் என் மூளை என்னை அறியாமல் கணக்குப் போட்டது.

 நண்பர் ஒருவர் நிறைய விலை கொடுத்து வாங்கி வந்த நாய் ஒன்று  சரியாக சாப்பிட மாட்டேன் என்கிறது, யார் அருகில் போனாலும் குரைக்கிறது, வித்தியாசமாக நடந்து கொள்கிறது என்று கூற, எதேச்சையாக அதைப் பார்த்த நான் அதற்கு கண்களில் புரை வளர்ந்திருக்கிறது.. பிறவியிலேயே இருந்திருக்கக்கூடும்..  அறுவை சிகிச்சை செய்து பாருங்கள் என்று கூறினேன். விசாரித்துப் பார்த்துவிட்டு, எங்கள் பகுதியில் எங்கும் நாய்களுக்குக் கண் அறுவை சிகிச்சை செய்வதில்லை என்று அந்த நண்பர் விட்டுவிட்டார். இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நாளில் என் குழந்தைகள் 'ஓ மை டாக்' என்ற புதிய திரைப்படத்தை ப்ரைம் வீடியோவில் பார்க்கிறார்கள். அதிலும் ஒரு கண்பார்வையற்ற நாய் வருகிறது.  'அடடா! நாம ஒரு டால்மேஷன் பார்த்தோமே.. அதுக்கும் இதே மாதிரி தானே இருந்துச்சு.. பாவம் அதுக்கு ஆபரேஷன் பண்ண வாய்ப்பே கிடைக்கலையே' என்று வருத்தப் பட்டோம்.

புதிய ஏரியாவில் சைக்கிள் ஓட்டுவதற்கு வசதி இல்லை,  வாக்கிங் மட்டும் போகலாம்‌ என்பதால் நாய்களை  அழைத்துக் கொண்டு எப்போதாவது வாக்கிங் போவேன். டேனி இப்போது நன்றாக வளர்ந்து விட்டான். இடையில் என் கணவரின் பூர்வீக கிராமத்திலற்கு ஒருமுறை மேட்டிங்கிற்கு சென்று வந்தான், அதன் விளைவாக ராக்கி என்று ஒரு குட்டியும் எங்களுக்குக் கிடைத்தது. கிரேட் டேன் வகை நாய்கள் சாப்பிடுவதும் கிலோ கணக்கில்; மலம் கழிப்பதும் கிலோ கணக்கில்.. அதனால் என்ஜிஓ காலனியை விட நெருக்கடி மிகுந்த அந்தப் பகுதியில் நிறைய பேருக்கு அசூயையைத் தந்தது ராக்கி. டேனி அப்போது ப்ளூட்டோ தயவில் 'டாய்லெட் ட்ரெயினிங்' எடுத்து ஒதுக்குப்புறமாக மலம் கழிக்க பழகியிருந்தது. ராக்கி அந்தப் பழக்கத்திற்கு வந்திருக்கவில்லை. கூடவே எங்கள் பணியும், குழந்தைகளும் எங்கள் முழு நேரத்தையும் எடுத்துக் கொண்டதால் விலங்குகள் தொடர்பான பெரும்பாலான பராமரிப்புப் பணிகளை என் மாமியாரே செய்ய வேண்டியதாக இருந்தது. அதனால் ராக்கியைக் கொடுத்து விட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

 ஒருமுறை வேகமாக ஓடி வந்த ராக்கி கீழே விழுந்து அதற்கு எலும்பு முறிவு ஏற்பட்டு விட்டது. அதற்கு எக்ஸ்ரே எடுத்து மாவுக்கட்டு போட்டு, கால்சியம் மாத்திரைகளைக் கொடுத்து சரி செய்தோம். மணிகண்டன் என்ற ஒரு இளைஞன் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்து ஆர்வமுடன் விலங்குகளைப் பார்ப்பான். புறா வளர்ப்பில் அவனுக்கு பரிச்சயம் இருந்தது. அவனுக்கு ராக்கியைக் கொடுத்தோம். எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக ராக்கியை நல்லபடியாக வளத்தான் அவன்.

டேனிக்கு டிஸ்டம்பர் வைரஸால் வந்த நிரந்தர நடுக்கம் போக தரையில் படுத்த இடத்தில் காய்ப்பு, கால்களில் புண்  சிறிய சிறிய உபாதைகள் வந்து போயின. மத்தபடி நிரம்பவும் சுறுசுறுப்பாகவே இருந்தான். குழந்தைகளிடம் மீது பாசமாக பழகினான். என் இன்னொரு நாத்தனாரின் மகளான சொர்ணா டேனியைப் பார்ப்பதற்காகவே தினமும் வருவாள். அவனைக் கூட்டிக்கொண்டு வீட்டைச் சுற்றிச் சுற்றி நடப்பாள். அவள் என்ன சொன்னாலும் கேட்பான் டேனி. டேனிக்கு ஒன்று என்றால் சாப்பிடவே மாட்டாள். அவ்வளவு பெரிய உருவம் ஐந்து வயதே ஆன சிறுமியிடம் பணிந்து போவதைப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கும்.

ப்ளூட்டோவிற்கு எட்டு வயது ஆகியிருந்தது. தேவையான நேரத்தில் விழித்திருந்து பெரும்பாலான நேரங்களில் ஓய்வில் இருந்தான். சில சமயம் நான் சொல்வது காதில் விழுந்தாலும் விழாதது போல் படுத்துக் கொள்வான். காது, கண் பார்வை மங்கி விட்டதோ என்று எனக்குத் தோன்றும். ஆனால் அதையும் மீறி உற்சாகமாகவே இருந்தான்‌. நான் வாக்கிங் போகும்போது எனக்கு முன்னால் கிளம்பிவிடுவான். என்னை பாதுகாப்பதே அவனுடைய தலையாய பணி என்பதை அவன் மாற்றிக் கொள்ளவே இல்லை. புத்திசாலித் தனத்தில் அவனை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது. இந்தத் தருணத்தில் நான் ஒரு விஷயத்தை அவதானித்தேன். நாயின் ஒரு வயது மனிதர்கள் பத்து வயதிற்கு சமம் என்பதே அது. ஒரு வயது நிரம்பிய நாய் பத்து வயதுக் குழந்தையின் முதிர்ச்சியுடன் இருக்கிறது, எட்டு வயது நாய் எண்பது வயதுப் பெரியவரை ஒத்திருக்கிறது என்பது என்னுடைய தியரி. எவ்வளவுதான் சொன்னாலும் என்பது வயது பெரியவர்தான் நினைத்ததைத்தானே செய்வார்.. அதை போலத்தான் இருந்தது ப்ளூட்டோவின் செயல்பாடுகளும்.

ப்ளூட்டோவிற்கு வயதாகிறது. இன்னொரு லேப்ரடாரை வீட்டிற்குக் கொண்டுவர வேண்டிய தருணம் வந்து விட்டது என்று கூற ஆரம்பித்தார் என் கணவர்‌. அந்த வார்த்தைக்கே நான் அழுவேன். எங்கள் அனைவரையும் அழவைக்கும் விதமாக ப்ளூட்டோ ஒரு முறை காணாமல் போனான்.

(புதிதாக வாங்கிய கிரேட் டேனுக்கு என்ன பெயர் வைத்திருப்பேன் என்று வாசகர்களைக் கண்டுபிடிக்கச் சொல்லி கேட்டிருந்தோம். நிறைய பேர் உங்கள் எண்ணங்களைச் சொல்லியிருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி! ஹல்க் என்ற பெயரை கார்த்திக் என்ற வாசகர் கூறியிருக்கிறார். பெரிய உருவம் குழந்தை மனது.. அந்தப் பெயர் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. பின்னொரு நாளில் வேறு ஒரு நாய்க்கு வைக்கலாம் என்று நினைக்கிறேன். ப்ளூட்டி என்று அருணாதேவி என்கிற வாசகி கூறியிருந்தார். ப்ளூட்டி தான் கடைசியாக எங்கள் வீட்டிற்கு வந்த நாய்க்குட்டி (நாளது தேதி வரை!) அதற்குள் தொடரை முடிக்கப் போகிறேன் என்று நினைத்திருப்பீர்கள் போல.. வாய்ப்பில்ல ராஜா.. வாய்ப்பே இல்ல! இப்பத்தான் அரைக் கிணறு தாண்டி இருக்கேன்.. இன்னும் நிறைய நாய்களைப் பற்றிச் சொல்ல வேண்டி இருக்கிறது. இருந்தாலும் ப்ளூட்டி என்பது சாமர்த்தியமான guess! **அப்படியே நாய் வளர்ப்பு குறித்த உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள் (editorial@andhimazhai.com). நன்றி நன்றி!)

 
(மருத்துவர் அகிலாண்டபாரதி எழுதும் இந்த தொடர் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை வெளியாகும்)

முந்தைய  பகுதிகள்:

ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை -01: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் புதிய தொடர்!

ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை -02: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் புதிய தொடர்!

ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை -03: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்!

ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை -04: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்!

ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை -05: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்!

ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை -06: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்!

ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை -07: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்!

ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை -08: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்!

ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை -09: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்!  

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...