அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அ.தி.மு.க. வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு: தேர்தல் அதிகாரி 0 சென்னை ஐகோர்ட்டில் 5 புதிய நீதிபதிகள் பதவியேற்றனர் 0 விக்டோரியா கவுரி வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு 0 டெல்டா மாவட்டங்களில் மழையால் ஏற்பட்டுள்ள பயிர் பாதிப்புகளை ஆய்வு செய்கிறது மத்திய குழு 0 சென்னை உயர்நீதிமன்றம்: 5 நீதிபதிகள் பதவி ஏற்பு! 0 கர்நாடக சட்டசபை தேர்தல்: சூடுபிடிக்கும் களம்! 0 அதானி விவகாரத்தில் மத்திய அரசின் மவுனத்தை கண்டித்து காங்கிரஸ் போராட்டம் 0 பொதுக்குழு உறுப்பினர்கள் அளித்துள்ள கடிதத்துடன் டெல்லி புறப்பட்டார் அதிமுக அவைத்தலைவர்! 0 கி.வீரமணியுடன் மதிய உணவு அருந்த வேண்டும்: அண்ணாமலை விருப்பம் 0 சாதிகளை உருவாக்கியது கடவுள் இல்லை: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் 0 திமுகவையும் திராவிடத்தையும் எதிர்ப்பது தமிழ்தேசியம் அல்ல: திருமாவளவன் 0 மறைந்த இயக்குநர் டி.பி.கஜேந்திரன் உடலுக்கு முதலமைச்சர் அஞ்சலி 0 வாணியம்பாடி: இலவச புடவைகள் வழங்கும் நிகழ்ச்சியில் நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழப்பு 0 பாஜகவிற்கு அதிமுக ஒன்றுபட்டால்தான் கொண்டாட்டம்: பொன்.ராதாகிருஷ்ணன் 0 பிரபல பாடகி வாணி ஜெயராம் காலமானார்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை -03: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்!

Posted : வெள்ளிக்கிழமை,   மார்ச்   18 , 2022  11:21:32 IST


Andhimazhai Image

சைக்கிளின் முன் இருக்கும் கூடையில் ப்ளூட்டோவை வைத்துக்கொண்டு சுற்றத் துவங்கும் முன்னரே நானும் சசியும் மட்டும் பல நாட்கள் ரவுண்ட் அடித்திருக்கிறோம். அப்போது எந்த தொந்தரவும் எங்களுக்கு வந்ததில்லை. ஆனால் ப்ளூட்டோவை ஏற்றிக்கொண்டு அதே தெருக்களில் செல்கையில் அனேகமாக ஒவ்வொரு தெருவிலும் எதிர்ப்பு. எல்லாத் தெருக்களிலும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் கடக்கையில் திடுக் திடுக் என்று இதயம் துடிக்கும். அதற்குக் காரணம் அந்தத் தெருவின் அறிவிக்கப்படாத குறுநில மன்னர்களாக இருந்து வந்த நாய்கள்.


குப்பைகள் நிரம்பிய காலி மனைகள் தெருவுக்கு ஒன்று கட்டாயமாக இருந்தது. அந்த குப்பைகளுக்கு நடுவில் தனக்கு வசதியாக ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து, ராஜ தோரணையுடன் அமர்ந்த வாக்கில் ஒரு நாய் நிச்சயம் இருந்தது. பெரும்பான்மையான தெருக்களில் சற்று உயரமான, ஒல்லியான, வெள்ளை நிற நாயே ஆட்சிப் பொறுப்பில் இருந்து வந்தது.

அந்த நாய்கள், நாங்கள் மட்டும் ஊர்சுற்றிய நாட்களில் தேமே என்று தான் இருந்தன. ஒரு முறை கூட குரைக்கவே இல்லை. ஆனால் ப்ளூட்டோவைப் பார்க்கும் ஒவ்வொரு சமயமும் இடைவிடாது குரைத்துத் தள்ளின. சசி கூட கேட்டாள், "ஏன் அத்தை, திருடங்களைப் பார்த்துத் தானே நாய் குலைக்கணும்.. ஏன் இன்னொரு நாயைப் பார்த்து குலைக்குது.." என்று.

சரி தானே.. ஏன் சக நாயைப் பார்த்து இந்த நாய்கள் குரைக்க வேண்டும், அதுவும் பிறந்து சில மாதங்களே ஆன குட்டி நாயை, ஏன் எதிரியாக நினைக்கின்றன என்று எனக்கு நானே கேட்டுக் கொண்டேன். 'மாமா கிட்ட கேட்போம்' என்று சசிக்கு பதில் கூறினேன். என் கணவரைக் கேட்டபோது அவர், "அது அந்த நாயோட டெரிட்டரி (territory). நல்லா கவனிச்சு பாருங்க.. நீங்க கிராஸ் பண்ணின உடனே, அதோட ஏரியான்னு மார்க் பண்ற மாதிரி வந்து ஒன்னுக்கு அடிச்சுட்டுப் போகும்.. அதுக்கு அடுத்து வேற நாயோட ஏரியாவா இருக்கும்" என்றார். இந்த செய்கையை அதற்குப் பின்பும், வேறு நாய்களிடம் நான் பலமுறை கவனித்திருக்கிறேன்.

'லைப் ஆஃப் பை' (Life of Pi) என்ற ஒரு திரைப்படம் வந்தது. அதில் ஹீரோ ஒரு புலியுடன் ஒரு படகில் மாட்டிக் கொள்வான். அப்போது இப்படித்தான் மாறி மாறி புலியும் அவனும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சிறுநீர் கழித்து தங்கள் எல்லையை வகுத்துக் கொள்வார்கள். 'இந்த லைனைத் தாண்டி நானும் வரமாட்டேன்; நீயும் வரக்கூடாது' என்பதை போல். இது எல்லா விலங்கினங்களும் செய்யக்கூடிய ஒரு எல்லை வகுக்கும் செய்கை என்று தெரிந்து கொண்டேன். நன்கு வளர்ந்த பின், பின்னாட்களில் ப்ளூட்டோவும் அப்படி எங்கள் தெருவில் ஒரு நான்கைந்து வீடுகள் தள்ளிப் போய் சிறுநீர் கழிப்பதன் மூலம் தன் எல்லையை மார்க் செய்து விட்டு வருவான்.

 தெருநாய்கள் பயமுறுத்தும் சமயங்களில், ப்ளூட்டோ சைக்கிள் கூடையில் பவ்யமாக அமர்ந்துகொண்டு விடுவான். உடல் மொழியிலேயே ஒருவித பணிவு தெரியும். ப்ளூட்டோ பணிந்து போய் விட்டதைப் பார்த்து அந்த நாய்கள் குரைப்பதை நிறுத்தி விடும். அடுத்தடுத்த நாட்களில் நாங்கள் போகும் பொழுது, 'உள்ளேன் ஐயா!' என்று சொல்வதைப்போல் இலேசாக குரைப்பதோடு வாய்மூடிக் கொள்ளும். வாரங்கள் கழிய, 'ஓ நீயா, போ போ' என்பது போல் தலையைத் தூக்கிப் பார்ப்பதுடன் சரி. நாய்களின் இந்த உரிமைப் போராட்டத்தைப் பற்றி முழுவதுமாக அறிந்து கொள்வதற்கு முன்பாகவே அந்த ஒவ்வொரு நாய்க்கும் 'நாட்டாமை' என்று நாங்கள் பெயர் வைத்தோம். ஆரம்பத்தில் இந்த நாய்களின் தோற்ற ஒற்றுமையால் அவை அனைத்தையும் ஒன்றே என்று நினைத்திருக்கிறேன். 'தெருவுக்குத் தெரு வந்து துரத்துது பாரு' என்று சசியிடம் கூறியிருந்தேன். அவள், 'இது வேற நாய் அத்தை..' என்று கூற, பின் முதலில் சென்ற தெருவுக்கே மீண்டும் ஒரு சுற்று போய் இரண்டும் வேறுவேறு நாய்கள் தான் என்பதை உறுதி செய்து கொண்டோம். இந்த நாட்டாமை நாய்களிலேயே மிகவும் வயதானதாக இருந்தது ஒரு நாய். ஒருவேளை அந்த நாட்டாமை நாய் பிற நாய்களின் அப்பா நாயாக இருக்கலாமோ என்ற சந்தேகம் வந்தது. எங்கள் சந்தேகத்தை உறுதிப்படுத்திக் கொள்ள, எங்கள் கணவரையும் ஒருமுறை சுற்றுலா அழைத்துச் சென்று காட்டினோம். அவரும், "இருக்கலாம்.. இது ராஜபாளையம், சிப்பிப்பாறை அந்த மாதிரி ஒரு வேட்டை நாய் இனத்தோட க்ராஸ். ரொம்ப பவர்ஃபுல் ஜீன் மாதிரி இருக்கு" என்று ஒத்துக்கொண்டார். நாட்டாமை என்ற நாமகரணத்தையும் அங்கீகரித்தார். எங்களுக்கு ஏதோ சாதனை செய்தது போல் பெருமையாக இருந்தது.

 பல தெருக்கள் சுற்றி வந்தாலும் கூட, கிருமித்தொற்று ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக தரையில் விடாமலே ப்ளூட்டோவை வளர்த்து வந்தோம். வீட்டில் அவனுக்கான சிறப்பு பயிற்சிகள் துவங்கியிருந்தன. என் கணவர் தனக்குக் கிடைத்த கொஞ்ச நேரத்திலும், அதற்கு மோப்பம் பிடிக்க, குறிப்பிட்ட இடத்தில் போய் மலஜலம் கழிக்க, Sit என்றால் உட்கார வேண்டும், Laydown என்றால் படுக்க வேண்டும் என்பதுபோன்ற செயல்களைச் சொல்லித்தந்தார். மிகவும் ஆர்வமாகக் கற்றுக் கொண்டான் ப்ளூட்டோ. வீட்டின் பின்பகுதியில் தேங்காய்களை அடுக்கி வைக்கும் இடத்தினருகே தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டான். 'பெடிக்ரீ குடுங்க, பீஃப் போடுங்க' என்பது போன்று பல அறிவுரைகள் வந்தாலும், பெரும்பாலும் சாதமும் முட்டையும் தான் ப்ளூட்டோவுக்கு முக்கிய உணவாக இருந்தன. சில சமயங்களில் பால் மற்றும் தயிர்.

 சசிக்கு மூன்று வயது நிரம்பி, அதையொட்டி ஒரு சரஸ்வதி பூஜையும் வந்ததால் பள்ளியில் சேர்ந்து விட்டாள். எனக்கும் அருகிலிருந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை கிடைக்கவே, பகலில் ப்ளூட்டோவுடன் நாங்கள் நேரம் செலவழிப்பது குறைந்துவிட்டது. வேலை முடிந்து திரும்பி வரும்பொழுது 'ப்ளூட்டோ!' என்று அழைத்துக் கொண்டே நான் வர, தன் சிறிய வாலை ஆட்டிக்கொண்டு வாசல் கேட்டில் வந்து அவன் என்னை வரவேற்பதைப் பார்க்கையில் புளகாங்கிதம் அடைந்தேன்.

ப்ளூட்டோவால் சிலபல இடைஞ்சல்களும் வராமல் இல்லை. என் இன்னொரு நாத்தனாருக்குக் குழந்தை பிறந்திருந்த நேரம் அது, அவளுடைய விளையாட்டுப் பொருட்களை எடுத்துச்சென்று தன்னுடைய தங்குமிடத்தில் வைத்து விடுவான், தண்ணீர்க் குடங்களைப் பிடித்து வாசலில் வைத்து அதை மூடிபோட்டு மூடியிருந்தால் அந்த மூடியையும் கொண்டு போய் வைத்து விடுவான். செருப்பைக் கடிப்பது, கால் மிதியடியைக் கடிப்பது என்று அவன் பல்லுக்கும் சரியான வேலை கொடுத்து வந்தான். குழந்தைகளுக்குப் பல் முளைக்கும் நேரம் ஈறு நமநம என்றிருக்கும் என்பதற்காக இப்போதெல்லாம் டீதர் (Teether) கொடுக்கிறார்கள். நான் சிறுபிள்ளையாக இருந்தபோது மரச்செப்புச் சாமான் செட்டில் லாலிபாப் போன்ற ஒரு பொருள் இருக்கும், அதை நன்றாகக் கழுவி குழந்தை கையில் கொடுத்து விடுவார்கள். அதைக் குழந்தை கடித்துக்கொண்டிருக்கும். அதைப்போல புளூட்டோவுக்கு Dog chew வாங்கிக் கொடுத்தோம். அதனால் 'கடிப்பழக்கம்' குறைந்தது.

'இப்பல்லாம் செருப்பைக் கடிக்கிறது இல்ல' என்று நாங்கள் கொஞ்சம் அசால்ட்டாக இருந்த நேரம் ஒரு விலை உயர்ந்த செல்போனுக்கு வேட்டு வைத்து விட்டான் ப்ளூட்டோ. அப்போது நான் ஒரு நுழைவு தேர்வு எழுதுவதற்காக இரண்டு நாட்கள் வெளியூர் சென்றிருந்தேன். அங்கிருந்தபடியே நான் என் கணவரை அழைத்துப் பேச, அவர் லவுட் ஸ்பீக்கரில் போட்டு ப்ளூட்டோவிடம் ஃபோனைக் காட்டியிருக்கிறார். என் குரலைக் கேட்டு விட்டு நான் எங்கே இருக்கிறேன் என்று சுற்றும்முற்றும் ஓடி ஓடித் தேடினானாம் ப்ளூட்டோ. ஃபோனில் இருந்து தான் என் குரல் வருகிறது என்று தெரிந்து கொண்டபின் அதைப் பார்த்து மீண்டும் மீண்டும் குரைத்திருக்கிறான். அன்றைய தினத்தில் எப்போது என் வீட்டுக்காரருக்கு செல்போனில் அழைப்பு வந்தாலும் அருகில் வந்து குரைத்தானாம்.

அதை என்னிடம் சொல்லி என் கணவர் பெருமைப்பட, நானும் மகிழ்ச்சி அடைந்தேன். அடுத்த நாளில் வந்தது வினை. வெளியே செல்லக் கிளம்பிய என் கணவர்,  வெளிப்புற ஜன்னலில் செல்ஃபோனை வைத்துவிட்டு எதையோ எடுப்பதற்காக உள்ளே சென்று திரும்ப, செல்ஃபோனைக் காணவில்லை! வேறு ஃபோனில் இருந்து கூப்பிட்டுப் பார்த்தாலும் டெட்டாக இருந்திருக்கிறது. அனைவரும் கூடி வீடு முழுதும் தேடிப்பார்த்துவிட்டு, பின் ஏதோ தோன்ற, பின்னால் ப்ளூட்டோவின் இருப்பிடத்திற்கு சென்று பார்த்திருக்கிறார்கள். அங்கு ஃபோனைக் கீழே போட்டு அதன் மேல் ஒரு காலை வைத்தபடி அமர்ந்திருக்கிறான் ப்ளூட்டோ!

அதிர்ச்சியில் ஒரு கணம் ஸ்தம்பித்து நின்று விட்டார் என் கணவர். ஏனென்றால் அப்போதே அந்த செல்போன் 20,000 ரூபாய். ஊரில் யாரிடமும் கேமரா செல்போன் கிடையாது என்னிடம்தான் இருக்கிறது என்று பெருமை கொண்டிருந்த அவருக்கு அந்த கேமரா மேலே பல் பதிந்து டிஸ்ப்ளேயும் போய்விட்டது மிகுந்த அதிர்ச்சியைத் தந்ததிருக்கிறது. "சரியான கோபம் எனக்கு! நல்லா அடி வச்சுட்டேன்" என்றார். "அது என் கிட்ட ஃபோன் பேச முயற்சி பண்ணிருக்கும்.. அதைப் போயி ஏன் அடிச்சீங்க?" என்று நான் வருத்தப்பட்டேன். 'அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி உதவமாட்டான்' என்பார்கள்.  அதனாலோ என்னவோ அதற்குப் பின் வேறு ஏதும் பொருளை ப்ளூட்டோ துவம்சம் செய்யவே இல்லை.

நாட்கள் செல்லச் செல்ல கொஞ்சம் வாலும் காலும் நீளமாக, கேட்டைத் திறந்தவுடன் வெளியே சுற்ற புறப்பட்டான் ப்ளூட்டோ. என் மாமனாரையோ கணவரையோ கண்டுவிட்டால் உடனே உள்ளே ஓடி வருபவன், எனக்கு போக்குக் காட்டவே செய்தான். மேரி பிஸ்கட்டைப் பிய்த்து ப்ளூட்டோவின் முன் வீசி, வீட்டை நோக்கி அவனை ஈர்ப்பது தான், எனக்குத் தெரிந்த ஒரே உபாயம். அடிக்கடி வெளியே போய் வந்தாலும், எங்கள் தெருவைத் தாண்ட மாட்டான், மிஞ்சிப்போனால் அதே தெருவில் பத்து வீடுகள் தள்ளியிருந்த சசி வீட்டு வரை ஓடி விட்டு திரும்பி வந்து விடுவான். சரி இங்கேதானே போகிறான், போய்விட்டு வரட்டும் என்று நாங்களும் விட்டுவிட்டோம். அந்தச் சூழலில்தான் நாங்கள் பயந்து கொண்டே இருந்த பார்வோ வைரஸ் தொற்று ப்ளூட்டோவைத் தாக்கியே விட்டது.

 

 

(மருத்துவர் அகிலாண்டபாரதி எழுதும் இந்த தொடர் வெள்ளிக்கிழமை தோறும் வெளியாகும்)


முந்தைய  பகுதிகள்

 

ப்ளுட்டோ முதல் ப்ளூட்டி வரை -01
 

ப்ளுட்டோ முதல் ப்ளூட்டி வரை -02  

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...