செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
அரபு நாடுகளுக்கு உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்வதில் 15 ஆண்டுகளுக்கு பிறகு பிரேசிலை பின்னுக்குத்தள்ளி இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது.
அரபு நாடுகளுக்கு உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்வதில் 15 ஆண்டுகளுக்கு பிறகு பிரேசிலை பின்னுக்குத்தள்ளி இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. அரபு தேசங்கள் கூட்டமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும் 22 உறுப்பு நாடுகளுக்கு உணவுப் பொருள் ஏற்றுமதி செய்வதில் 15 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக அரபு நாடுகளுக்கு உணவுப் பொருள் சப்ளை செய்வதில் முதலிடம் பிடித்து வந்த பிரேசில், கொரோனாவுக்கு பிறகான உலக வர்த்தக சங்கிலித் தொடரில் ஏற்பட்ட மாற்றத்தினால் தனது நிலையை இழந்திருப்பதாக அரபு - பிரேசில் வர்த்தக சபை தெரிவித்துள்ளது. அரபு - பிரேசில் வர்த்தக சபை 2020ம் ஆண்டுக்கான வர்த்தக புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி 22 அரபு நாடுகளும் கடந்த 2020ம் ஆண்டு விவசாய வணிக / உணவுப் பொருள் இறக்குமதியில் பிரேசிலின் பங்கு 8.15% ஆக இருந்துள்ளது. அதே நேரத்தில் இந்தியாவின் பங்கு 8.25% ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் 15 ஆண்டுகளாக பிரேசில் வகித்து வந்த இடத்தை இந்தியா கைப்பற்றியிருக்கிறது. கொரோனா காரணமாக உலகளவில் கப்பல் போக்குவரத்து வழித்தடங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாகவும், பிற விவசாய வணிக பொருட்களின் ஏற்றுமதியாளர்களான இந்தியா, அமெரிக்கா, துருக்கி, பிரான்ஸ் மற்றும் அர்ஜெண்டினா போன்ற நாடுகளின் போட்டியை பிரேசில் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. உதாரணமாக பிரேசிலிலிருந்து சவுதி அரேபியாவுக்கு முன்னர் உணவுப் பொருட்கள் சப்ளை ஆவதற்கு 30 நாட்கள் எடுத்துக்கொண்ட நிலையில் அது தற்போது 60 நாட்களாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் புவியியல் ரீதியில் அரபு நாடுகளுக்கு இந்தியா அருகாமையில் இருப்பதால் இங்கிருந்து பழங்கள், காய்கறிகள், சர்க்கரை, தானியங்கள், இறைச்சி போன்றவை வெறும் ஒருவாரத்திற்குள்ளாகவே அங்கு சென்றுவிடும் சாதக நிலை நமக்கு உள்ளது. அரபு நாடுகளின் முக்கிய வர்த்தக கூட்டாளியாக உருவெடுத்திருக்கும் இந்தியாவுக்கு புதிய வர்த்தக வாசல்கள் இதன் மூலம் திறந்துவிடப்பட்டுள்ளன.