அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டெல்லி பயணம் மகிழ்ச்சியாக இருந்தது – ஓபிஎஸ் 0 இலங்கைக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய இந்திய மகளிர் அணி! 0 எகிறியடிக்கும் ஏக்நாத் ஷிண்டே.. ஆபத்தில் மகாராஷ்டிர ஆட்சி! 0 குஜராத் கலவர வழக்கு: பிரதமர் மோடிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்! 0 மெட்ரிக் பள்ளிகளில் கட்டாயம் இடஒதுக்கீடு! 0 தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு தாக்கல்! 0 பா.ஜ.கவையும் யாராவது உடைக்கலாம்: மம்தா பானர்ஜி எச்சரிக்கை 0 அக்னிபத் திட்டத்தின் கீழ், விமானப்படை, கடற்படையில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! 0 ஜனாதிபதி தேர்தல்: இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் திரவுபதி முர்மு 0 அ.தி.மு.க. உள்விவகாரங்களில் பா.ஜ.க. என்றுமே தலையிட முடியாது: ஜெயக்குமார் 0 திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்துபோயிருக்கிறார்கள்: மு.க. ஸ்டாலின் 0 ஜூலை 11-ல் அதிமுக பொதுக்குழு கூட்டம்: அவைத் தலைவர் அறிவிப்பு 0 சட்டத்துக்கு புறம்பான பொதுக்குழுவை நிராகரிப்பதாக கூறி மேடையில் கோஷமிட்ட ஓபிஎஸ் தரப்பு 0 அதிமுக பொதுக்குழு: சி.வி.சண்முகம் ஆவேசம் 0 அக்னிபத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் பொறுக்கிகள்: இயக்குநர் பேரரசு காட்டம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

விருதுபெற்ற கவிஞரிடம் விளையாட்டு காட்டிய பிரபல இயக்குநர்!

Posted : புதன்கிழமை,   செப்டம்பர்   01 , 2021  16:19:50 IST


Andhimazhai Image

கவிஞர் விக்கிரமாதித்தன் தன் கவிதைகளைப்போலவே இனிமையும் குளுமையுமான ஆளுமை. அவரிடம் விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்டிருப்பது பற்றிப் பேசினோம்:

 
இந்த ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது உங்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?


எந்த ஒரு விருதும் எந்த ஒரு படைப்பாளிக்கும் அங்கீகாரம் அளிப்பதனாலும், வாசகர்கள் அடையாளம் காணப்படுவதனாலும் அது மதிப்பிற்குரியதாகிறது. அப்படி ஒரு விருதை எழுத்தாளர் ஜெயமோகன் விஷ்ணுபுரம் அமைப்பின் மூலமாக எனக்கு வழங்கியிருப்பது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.

 
தமிழ் விருதுகளில் குறிப்பாக, அமெரிக்கா வாழ் தமிழர்களால் புதுமைப்பித்தன் நினைவாக கலை - இலக்கியத்தில் சிறப்பாகப் பங்காற்றுபவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் விளக்கு விருது வழங்கப்படுகிறது. அந்தவகையில் விளக்கு விருதும், விஷ்ணுபுரம் விருதும் மிக உயரிய விருதுகளாக விளங்கி வருகின்றன.

 
மூன்று பேர் கொண்ட தேர்வுக்குழுவின் மூலமாகவே விருதாளர்கள் தேர்வு செய்யப்பட்டு விளக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. அநேகமாக விஷ்ணுபுரம் விருதும் அதேபோல் தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

 
தமிழில் எல்லா விருதுகளுமே தேர்வுக்குழுவினரால் தான் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன. அந்த தேர்வுக் குழுவில் மூன்று பேர் அளவுக்கு இருக்கின்றனர். அவர்கள் தமிழ் அறிஞர்களாகவும், எழுத்தாளராகவும், கவிஞராகவும் இருப்பதுதான் வழமை. ஆகவே அந்த விருதுகள் மிகவும் உயரியவையாக விளங்கி வருகின்றன. அப்படி விருதுகளைப் பெற்றதனால் நான்  பெரும்பேறு பெற்றவனாகிறேன்.

 
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் செயல்பாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்?


அன்புக்குரிய ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவல் நான் உச்சி மேல் வைத்து மெச்சுகின்ற நாவல். ஒரு இதிகாசம் போல, கோவில் சார்ந்த விஷயங்களை உள்ளடக்கிய ஒரு மகத்தான நாவல் அது. இன்றைய நாவல் அளவிற்கு அது கொண்டாடப்பட வேண்டும்.

 
வாசகர்கள், நண்பர்கள் எல்லோருமாக சேர்ந்துதான் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஜெயமோகன் வெளியே தெரியாத அளவிற்கு பல்வேறு நற்செயல்களை செய்துவருகிறார். அதற்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்ல வேண்டும். குறிப்பாக புதுச்சேரி ரமேஷ் ஒரு கைவிடப்பட்ட எழுத்தாளுமையாக இருக்கின்ற காலகட்டத்தில் அவருக்கு வங்கியில் முதலீடு செய்து, ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, பராமரிப்பு செலவிற்கான பணத்தையும் வங்கியில் செலுத்தியுள்ளார். தமிழ் இலக்கிய சூழலைப் பொருத்தவரை இது மிகப் பெரிய காரியம். அதேபோல், கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பாக எழுத்தாளர் கீரனூர் ஜாகிர்ராஜா வந்திருந்தார். அப்போது ஜாகீர் ராஜாவின் உடல் நலம் குறித்து விசாரிக்கையில், “ஏன் உடல் இவ்வளவு குண்டாகிவிட்டது...? கொஞ்சம் உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள்” என்று சொன்னேன்.

“அண்ணாச்சி ஒரு விபத்து நடந்தது தெரியுமில்லையா?” என்றார்

“இல்லையே” என்றேன்

“உடல் குணமடையும் பொருட்டு கொடுத்த மாத்திரையால் உடம்பு பெருத்துவிட்டது. ஜெயமோகன் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து உதவினார்” என்றார்.  


முரண்பட்டவர்களுக்கும் உதவி செய்கின்ற நல்லுள்ளத்தைக் கொண்டவர் ஜெயமோகன். தமிழ் இலக்கிய உலகத்தை கவனித்து பார்த்தால் தெரியும். ரமேஷூக்கும் வலிந்து போய் உதவி செய்கிறார், கீரனூர் ஜாகிர்ராஜாவுக்கு தேடிப் போய் உதவி செய்கிறார். ரமேஷூக்கு ஜெயமோகன் உதவி செய்ததை நண்பர்கள் மூலமாகத்தான் அறிந்து கொண்டேன். அதேபோல், தனக்கு ஜெயமோகன் உதவியதை கீரனூர் ஜாகிர்ராஜா சொல்லித் தெரியும்.


தான் செய்யும் எந்த உதவியையும் ஜெயமோகன் விளம்பரப்படுத்திக் கொள்வதில்லை.  இது ஓர் அபூர்வமான பண்பாடு. ஜெயமோகனால், இன்னும் பயன்பட்டவர்கள் இருப்பார்கள். அந்தவகையில், தன்னுடைய பணத்தை சேர்த்து, நண்பர்களிடமிருந்து நிதி திரட்டி, ஒருவருக்குத் தேடிப்போய் உதவி செய்கிற குணம், பண்பு அவருக்கு இயல்பாகவே அமைந்திருக்கிறது. நானே பல்வேறு சமயங்களில் அவரிடம் பண உதவி பெற்றிருக்கிறேன்.

 

ஜெயமோகன், காசர்கோட்டில் தின சம்பளத்துக்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த போது, அவரிடம் சென்று மூன்று நாள் தங்கியிருந்தேன். மூன்று ஷிப்ட் வேலையையும் ஒரே நாளில் முடித்துவிட்டு, மற்ற இரண்டு நாட்களில் படிப்பதும் எழுதுவதுமாக இருப்பார். அவர் தினசரி சம்பளத்திற்கு தான் வேலைப் பார்க்கிறார் என்பது பிற்பாடு தான் தெரியும்.

 
காசர்கோட்டிற்கு பிறகு தருமபுரியில் கவிஞர் பிரம்மராஜன் நடத்திய இலக்கிய சந்திப்பிற்கு சென்றிருந்த போது, நானும் ஸ்ரீரங்கம் டி கண்ணனும், நண்பர் சாருநிவேதிதாவும் சேர்ந்து ஜெயமோகனை சந்திப்பதற்கு ஆட்டோவில் சென்றோம். அப்போது அவருடன் பேசிக்கொண்டிருந்ததில் நேரமாகிவிட்டதால் எங்களை திரும்பிச் செல்வதற்கு அவர் விடவில்லை. அன்று அவருடைய வீட்டிற்கு அவருடைய மாமனார் - மாமியார் வந்திருந்தார்கள். பெரிய வீடாக இல்லையென்றாலும் எங்களை தங்க வைத்து உபசரித்து காலையில் அனுப்பினார்.

 
ஜெயமோகன் எப்போது  என்னை சந்தித்தாலும், எனக்கு கடிதம் எழுதினாலும் சொல்வார், எனக்கு இரண்டு அண்ணாச்சிகள், ஒன்று நீங்கள் (விக்ரமாதித்யன்), இன்னொன்று ராஜமார்த்தாண்டன் என்பார். இரண்டு பேருமே இப்படி இருக்கிறீர்களே என்ற வருத்தம் எனக்குண்டு என்பார். எங்களுடைய குடிப்பழக்கத்தை மனதில் வைத்து அப்படி சொல்வார். இன்றும், அண்ணாச்சி என்று தான் அன்போடும் மரியாதையோடு அழைத்துவருகிறார்.

 

உங்களுக்கு சாகித்திய அகாதமி விருது எப்பொழுதோ வழங்கப்பட்டிருக்க வேண்டுமே? என்ன நினைக்கிறீர்கள் அதைப் பற்றி?

 என்னுடைய ‘கவிதை ரசனை’ நூலை இரண்டாயிரத்தில் மருதா பாலகுருசாமி, இயக்குநர் டி ராஜேஷ் உள்ளிட்டவர்களிடம் கொடுத்தேன். அடுத்த சந்திப்பின் போது ராஜேஷ் சொன்னார், “சாகித்திய அகாதமி நேர்மையாக நடக்கும் என்றால் இந்த நூலுக்கு விருது கிடைக்கும் கவிஞரே” என்றார்.

 
அதேபோல், இருபது ஆண்டுகளுக்கு முன்பாக எழுத்தாளர் கி.ராஜநாராயணன் சாகித்திய அகாதமி தேர்வுக்குழுவில் உறுப்பினராக இருந்தபோது என்னுடைய கவிதை ரசனை நூலை அனுப்பி வைக்கும்படி கடிதம் எழுதியிருந்தார். நான் தேர்வுக் குழுவில் பரிந்துரை செய்கிறேன் என சொல்லியிருந்தார். நானும் நூலை அனுப்பி வைத்திருந்தேன்.

 
அதற்கு அவர் எழுதிய பதிலில், “உங்களுக்குக் கவிதையை விடவும், உரைநடை நன்றாக வருகிறது. உரைநடையை வளர்த்து எடுத்துச் சென்றீர்கள் என்றால், உங்களுக்கு இன்னும் கூடுதலாகவே பேரும், புகழும், அங்கீகாரமும் கிடைக்கும்” என எழுதியிருந்தார்.

 
ஜோதிடத்திலும், கர்ம வினையிலும் நம்பிக்கையுள்ளவன் என்கிற அடிப்படையில், எனக்கு வரவேண்டியிருந்தால் அது வந்துசேரும். இல்லையென்றால் அதைப்பற்றிக் கவலைகொள்ள வேண்டியதில்லை, அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை. ஏனென்றால் சுந்தர ராமசாமிக்கு, நகுலனுக்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்படவில்லை. அதனால் விக்கிரமாதித்தனுக்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்படவில்லை என்பதால், விக்ரமாதித்தன் குறைந்துபோய்விடமாட்டான், கவலைகொள்ள மாட்டான்.

 
விக்ரமாதித்யனை எவ்வளவு பாராட்டினாலும் தகும் என உலக இலக்கியங்களில் ஆழங்கால் கண்ட க.நா.சுப்ரமண்யம் சொல்லியிருப்பதை விடவும் வேறு என்ன வேண்டும். அதேபோல், தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை வாய்ந்த நகுலன் என்னை உண்மைக் கவிஞர் என சொல்லியதைவிடவும் வேறு என்ன வேண்டும். இதைவிட விருது ஒன்றும் பெரியதில்லை.

 
என்னுடைய முதல் கவிதை தொகுப்பான ‘ஆகாசம் நீல நிறம்’ குறித்து நகுலன் கேரளாவில் செயல்படும் ஒரு இலக்கிய வட்டத்தில் கட்டுரை வாசித்திருக்கிறார். அதேபோல், என்னுடைய மூன்றாவது கவிதை தொகுப்பான ‘உள்வாங்கும் உலகம்’ குறித்து க.நா.சு தினமணியில் மதிப்புரை எழுதியிருக்கிறார்.

 

க.நா.சு-வும் நகுலனும் என்னுடைய கவிதைகளை கண்டுகொண்டார்கள் என்பதே எனக்கு மிகப்பெரிய பேர். கொடுக்கப்படும் விருதுகள் அதற்கு பின்னேதான் வருகிறது.

 

தமிழகத்தில் உள்ள கவிஞர்கள், சிறுகதை எழுத்தாளர்கள், நாவலாசிரியர்கள் என எல்லோரும் என்னைப் பாராட்டியிருக்கிறார்கள். என்னுடைய போதைப் பழக்கத்தையும் தாண்டி என்னை கௌரவித்திருக்கிறார்கள். அதனால் எனக்கு, அதுகிடைக்கவில்லை...இது கிடைக்கவில்லை என்றெல்லாம் நான் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கப்போவதில்லை. கிடைக்க வேண்டியது கிடைக்கும். கிடைக்காதது ஒருபோதும் கிடைக்காது. அதனால் கிடைத்ததை வைத்து கொண்டாடலாம். கிடைக்காததைப் பற்றி கவலைக் கொள்ள வேண்டியதில்லை.

 

கவிஞர் கண்ணதாசனுக்கே நீண்டநாட்களாக சாகித்திய அகாதமி விருது கொடுக்கப்படவேயில்லை. எல்லா மேடைகளிலும் சாகித்திய அகாதமியை கடுமையாக விமர்சித்ததாலேயே அவருக்கு சாகித்திய அகாதமி விருது கொடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. அதுகுறித்து அவரிடம் பேட்டி ஒன்றையும் நான் எடுத்திருக்கிறேன்.

 

நான் எந்த ஒரு விருதுக்கும் யாரிடமும் சென்று நின்றதில்லை. கவிஞர் வைரமுத்து கொடுக்கும் விருது தொடங்கி, விஷ்ணுபுரம் கொடுக்கும் விருது வரை என்னைத் தேடித்தான் வந்திருக்கின்றன. விருதிற்காக எந்த வேலையையும் செய்தது கிடையாது.

 
இலக்கிய உலகில் நீண்ட அனுபவம் கொண்டவர் நீங்கள். இந்த நீண்ட அனுபவத்தில் உங்களை நெகிழவைத்த நிகழ்வு பற்றி?

 
என்னை நெகிழவைத்த சம்பவம் என்றால் நிறைய இருக்கின்றது. நான்கு நாட்களுக்கு முன்பாக இயக்குநர் பாலா தொலைபேசியில் பேசியிருந்தார். தன்னை இயக்குநர் பாலா என்று சொல்லிக்கொள்ளவில்லை. நான் ஒரு வாசகரிடம் பேசுவது போல் தான் பேசினேன் (சிரிக்கிறார்). அந்த உரையாடல் ஒரு நாடகம் போல் இருந்தது. அரைமணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம். கடைசியில் தான் சொன்னார் நான் இயக்குநர் பாலா என்று. விருது அறிவிக்கப்பட்டதற்காக வாழ்த்து தெரிவித்தார்.

 

அதேபோல், நடிகர் சிவக்குமார் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். அவரை இதுவரை மூன்று முறை தான் சந்தித்திருப்பேன். இருப்பினும் என்னை மனதில் வைத்து வாழ்த்து சொல்வது மதிப்பிற்குரிய ஒன்று. நக்கீரன் கோபால், பத்திரிக்கையாளர் சமஸ் ஆகியோர் அழைத்து வாழ்த்து தெரிவித்திருந்தனர். இதை ஏன் குறிப்பிட்டு சொல்கிறேன் என்றால், எதிர்பார்த்திராத வெவ்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள், இலக்கியத்திற்கு அப்பாற்பட்டவர்கள் வாழ்த்து தெரிவிப்பது தான். இந்த வாழ்த்துகள் நான் நினைத்துப் பார்த்திராத ஒன்று. அதனால் இலக்கிய உலகை சார்ந்தவர்களைக் குறைத்து மதிப்பிடுகிறேன் என்றல்ல. அவர்கள் எப்போது என்னை அரவணைத்துக் கொண்டிருப்பார்கள், வாழ்த்து சொல்லிக்கொண்டிருப்பார்கள்.

 
புதிதாக எழுத வரும் இளம் படைப்பாளிகளின் படைப்புகள் குறித்து?


 
நான் தொடர்ந்து தமிழ் கவிதைகளில் லட்சுமி மணிவண்ணன், யவனிகா ஸ்ரீராம், ஸ்ரீநேசன், கண்டராதித்தன், பிரான்சிஸ் கிருபா, சபரிநாதன், வெயில் ஆகியோரது படைப்புகள் குறித்து எழுதியிருக்கிறேன். அவரது படைப்புகள் உலக தரத்திற்கானவை என நான் மதிப்பீடு செய்கிறேன்.

 
தமிழில் மொழிபெயர்ப்பாளர்கள் குறைவு. கேரளத்திலோ, வங்கத்திலோ அப்படி இல்லை. அவர்களது மொழியில் எழுதப்படும் படைப்புகள் உடனே ஆங்கிலத்தில் வந்துவிடுகின்றன. தமிழ் கவிஞனுக்கு அப்படியான பாக்கியம் இல்லை. அதனால் அவர்கள் தமிழ்நாட்டிற்குள்ளாகவே இருந்துவிடுகின்றனர்.

 
பெண் கவிஞர்கள் என்று வரும்போது பெருந்தேவி, மாலதி மைத்ரி, குட்டி ரேவதி, சுகிர்த ராணி போன்றவர்கள் பற்றி கட்டுரையாக எழுதவில்லை என்றாலும், என்னுடைய நேர்காணல்களில் முன்னுரைகளில் அவர்களின் பெயர்களைத் திரும்ப திரும்ப சொல்லிவந்திருக்கிறேன்.

 
சமகாலத்தில் தமிழில் பதினைந்துக்கும் மேற்பட்ட நல்ல கவிஞர்கள் உள்ளனர். கவிதைகள் ஆங்கிலத்திலும் மற்ற இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட வேண்டும். அப்போதுதான் தமிழ் கவிதையின் அருமை மற்ற மொழியினருக்கு தெரிய வரும்.  

 
சாகித்திய அகாதமி விருது பெற்ற மற்ற மொழிகளின் நாவல்களை படித்து வருகிறேன். மலையாள எழுத்தாளர்  எம்.கோவிலன் எழுதிய சட்டகம் நாவல் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் வாழ்வியலைக் காவியம் போல் பேசும் படைப்பது. அதில், நாராயண குரு போன்ற ஒரு கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருக்கும். அதேபோல், இந்தி நாவலான மாஹாபிரமணம் போன்று தமிழ் நாவல்கள் விளங்க வேண்டும். முகுந்தன், பால் சக்காரியாவின் சிறுகதைகள் போல் தமிழ் சிறுகதைகள் அமைய வேண்டும். புதிதாக எழுதுபவர்கள் தங்களை ஆயத்தப்படுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். கவிஞராக வேண்டும் என ஆசைப்படுகிறவர்கள் தமிழில் உள்ள எல்லா முக்கியமான கவிதைகளையும் வாசித்திருக்க வேண்டும்.

 

சிறுகதைகள் என்றால், புதுமைப்பித்தன் தொடங்கி ஸ்ரீராம் வரையிலான எழுத்தாளர்களின் கதைகளை வாசித்திருக்க வேண்டும். நாவல் என்றால் க.நா.சு-வின் பொய்த்தேவில் தொடங்கி பா.வெங்கடேசனின் நாவல் வரை படித்திருக்க வேண்டும். வாசிப்பு இல்லாமல் எழுதுவது ஒருபோதும் சாத்தியம் ஆகாது. புதிதாக எழுத வரும் கவிஞர்களோ, சிறுகதை எழுத்தாளர்களோ, நாவலாசிரியர்களோ அந்தந்த துறைகளில் எழுதப்பட்டிருப்பதை நிச்சயம் வாசித்திருக்க வேண்டும். புதியதாக எழுத வருபவர்களிடம் இது ஒன்றுதான் நான் வைக்கும் கோரிக்கை. படியுங்கள்...படியுங்கள்..படியுங்கள் என்பதைத் தவிர இளம் படைப்பாளிகளுக்கு சொல்வதற்கு வேறு எதுவும் இல்லை.

 

-தா.பிரகாஷ் 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...