???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 காந்தி பிறந்த நாள்: பாலிவுட் நட்சத்திரங்களுடன் கலந்துரையாடிய பிரதமர்! 0 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு! 0 பணப்புழக்கம் குறைந்ததே தீபாவளி விற்பனை குறையக் காரணம்: வணிகர் சங்கம் 0 பொறுப்பு அதிகமாகியுள்ளது: டாக்டர் பட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பேச்சு! 0 ராமதாஸின் கேள்விகளுக்கு விடையளிக்க மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன்? ஜி.கே.மணி கேள்வி 0 சென்னை: அதிகாலையில் கனமழை! 0 இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது! 0 மகாராஷ்டிரம், ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது! 0 தமிழக அமைச்சர்களை அவதூறு செய்ததாக சீமான் மீது வழக்கு! 0 பாகிஸ்தான் இராணுவம் தாக்கியதில் 2 இந்திய வீரர்கள் மரணம்! 0 இடைத்தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது: நாளை வாக்குப்பதிவு! 0 இன்னும் ஒரு மாதத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கவிழும்: மு.க.ஸ்டாலின் 0 அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்தால் அரசு நிர்வாகம் மேலும் வலுவூட்டும்: அதிமுக அறிக்கை 0 தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் 0 பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி ரூ.23 கோடி மோசடி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கருப்பட்டியின் கதை- நாஞ்சில் நாடன்

Posted : செவ்வாய்க்கிழமை,   செப்டம்பர்   25 , 2018  01:21:22 IST


Andhimazhai Image
புகழ்பெற்ற சினிமாப் பாடலொன்று, ‘வட்டுக் கருப்பட்டிய... வாசமுள்ள ரோசாவ; கட்டெறும்பு மொச்சதுண்ணு சொன்னாங்க’ என்று நீளப் போகும். இளையராஜாவின் இசையமைப்பில் ‘ரோசா ப்பூ ரவிக்கைக்காரி’ படத்தில் பாடப்பெற்றது. பாடலாசிரியர் புலமைப்பித்தன். இளையராஜாவுக்கு இந்த ஆண்டு 75-வது வயது. அவர் நீடுவாழ சகலகலாவல்லி அருளட்டும். கருப்பட்டி என்பது அத்தனை மதிப்பு வாய்ந்த பொருள். கட்டெறும்பு அதனைத் தேடி வந்து மொய்க்கும். 
‘சடை நாயும் சக்கரையும்’ என்பதைப்போல ‘கட்டெறும்பும் கருப்பட்டியும்’ என்பது சொலவம். இங்கு சர்க்கரை என்றால் வெல்லம், சீனி, அஸ்கா, பஞ்ச சாலை அல்ல. கருப்பட்டி இருக்கும் இடத்துக்கு எவரும் கட்டெறும்பை தேடிக்கொணர்ந்து விடுவதில்லை. காசு இருக்கும் இடத்தை அரசியல்வாதிக்கு எவரும் காட்டித் தருகிறார்களா என்ன?
 
கட்டெறும்பு மொய்க்கும் என்பதால்தான் கருப்பட்டிப் பானையை அடுப்புக்கு மேலேயோ, வேறு எங்காவது மூலையிலேயோ உறிகட்டித் தொங்கவிடுவார்கள். ஆனால் என்ன செய்தாலும் பண்பாட்டுக் கருப்பட்டியை கட்டெறும்புகளே மொய்த்துக்கிடக்கின்றன.
 
கிராமத்து வீடுகளில் யன்னல்களே இல்லாத, இருட்டான முறி ஒன்றினை அரங்கு என்பார்கள். இந்த அரங்கு, அரங்கின்றி வட்டாடலில் வரும் அரங்கு அல்ல. அரங்கில் பெரிய மண்பானைகளில் பச்சரிசி, புழுங்கலரிசி, குருணை, புளி, நாரத்தங்காய் ஊறுகாய் என அடைத்து வைத்து வைத்திருப்பார் தாயர். சில பெரிய பானைகளில் துவைத்த அல்லது வெளுத்த துணிகள் சுருட்டித் திணிக்கப்பட்டிருக்கும்.
 
கருப்பட்டி என்பது அன்று எமக்கு, உப்பு-புளி-மிளகாய் போல் அன்றாட பயன்பாட்டுப் பொருள். எங்கள் பகுதியில் கரும்புப் பயிரும் இல்லை. கரும்பு ஆலையும் இல்லை. ’நற்கருப்பஞ் சாற்றினிலே தேன் கலந்து பால் கலந்து தெவிட்டாமல் இனிப்பதுவே! நாங்கள் பருகியதும் இல்லை. இனிப்பு என்றால் அது கருப்பட்டியே. அன்றாடம் கேட்கும் உரையாடல், சீவன் என்ன கருப்பட்டியா? என்பது. இராம நாடகக் கீர்த்தனைகளில் ஒரு வரி ‘சீவன் கருப்பட்டியோ?’ என்று வரும்.
 
யானையை அடக்கினேன், புலியைத் துரத்தினேன் என வெற்றுச் சவடால் புள்ளிகள் எங்கும் இருப்பார்கள். அவர்களைப் பற்றிய பேச்சு வந்தால் மக்கள் குறிப்பிடுவது, ‘அவனா? எட்டுக் கருப்பட்டியை ஒண்ணா முழுங்கீடுவானே!’ என்று. அவரைவிட ஆயிரம் மடங்கு அதிகமாக நமது இனத்தலைவர், மொழித்தலைவர், பண்பாட்டுக் காவலர், நாட்டுத் தலைவர் என்போர் எட்டாயிரம் தங்கக் கருப்பட்டிகளை ஒன்றாக விழுங்க வல்லவர். ஊழி காலமாக பொன்னுருளியில் சங்கிலி கோர்த்து தங்கக் கருப்பட்டிகளை பௌர்ணமி இரவுகளில் இழுத்து நடக்கும் சங்கிலிப் பூதத்தான் போல தமது சந்ததியினருக்காக இழுத்து நடப்பார்கள். முப்பதாண்டுகள் வழக்கு நடத்தி, மயிர்முனை கூட மழுங்காமல், சிரித்த முகத்துடன் வெளியே வந்து வெற்றிவிழாவும் கொண்டாடுவார்கள்.
 
சின்னக் குழந்தைகள் எதிர்பாராமல் கீழே விழுந்து தலையில் அடிபட்டு வீங்கிப்போனால் தாயர் சொல்வது, ‘கருப்பட்டித் தண்டீல வீங்கிட்டே!’ என்று. திரைப்படங்கள் மூலம் பிரபலமான சொற்றொடர் ஒன்று, “அப்படிப் போடு அரிவாளை” என்றும். சாமர்த்தியமாக ஏதேனும் செய்தால், சாதுர்யமாக ஏதும் பேசினால் பெரியவர்கள் அன்று சொன்னது, ‘போடு கருப்பட்டி!’ என்று. ஒருவர் கருப்பாக இருந்தால் ஆணோ பெண்ணோ அவரைப் பரிகசிக்க, ‘நல்ல கருப்பட்டி நிறம்’ என்றனர். ‘நல்ல பையந்தான், நெறம்தான் வேங்கைச் சாந்து. தொட்டு பொட்டு வெச்சிக்கிடலாம்’ என்று புது மாப்பிள்ளையின் நிறம் பற்றிப் பெண்கள் இளக்காரம் பேசுவதைப் போல.
ஒரு காலத்தில் எமக்கு காப்பி என்றாவது கருப்பட்டிக்காப்பி. சுக்குக் காப்பி, சுக்கு வெள்ளம், சுக்கு நீர், கொத்தமல்லிக் காப்பி யாவற்றுக்கும் இனிப்பு ஆதர்சம் பனங்கருப்பட்டி. அதுவும் தினமும் காலையிலும் மாலையிலும் போட்டு ஆற்ற மாட்டார்கள். பண்டிகை அல்லது விரத நாட்கள், மழைக்காலங்கள், ஆனியாடிச் சாரல், கூதல் காற்று நாட்கள் கருப்பட்டிக்காப்பி. எங்காவது இழவு விழுந்துவிட்டால், சவம் எடுத்து வீடு கழுவும்வரை பானமும் ஆகாரமும் கருப்பட்டிக் காப்பியே. ஒப்பாரி வைத்து அழும் தொண்டைக்குப் பதம், சோர்வுக்கு இதம். காய்ச்சல்காரர்களுக்கு சுக்குக் காப்பி பானம், மருந்து உணவு.
 
இந்தச் சந்தர்ப்பத்தில் சிறுதெய்வ வழிபாடுகளை நினைத்துக் கொள்ளலாம். பல தெய்வங்களுக்குப் படையல் எள்ளுப் பிண்ணாக்கும் கருப்பட்டியும். அவர்கள் அப்பம், அதிரசம், மோதகம், கொழுக்கட்டை, அரவணை, புட்டமுது என்று ஆசைப்பட்டவர்கள் இல்லை. தென் மாவட்டங்களில் எண்ணிறந்த பேய்ப்படைகளில் கருப்பட்டி மாடனும் ஒருவர்.
உண்மையில் கல்லும் மண்ணும் கடிக்காத எள்ளுப் பிண்ணாக்கும் கருப்பட்டியும் சுவையானதோர் தின்பண்டம். பிறகுதான் கருப்பட்டிப் பாகில் செய்த எள்ளுமிட்டாய், கடலைமிட்டாய், பொரிகடலைமிட்டாய் வந்தன. வெல்லப்பாகில் செய்த மிட்டாய்கள், உருண்டைகளைவிட கருப்பட்டிப் பாகில் செய்தவை மணமும் சுவையும் சத்தும் இனிப்பும் கூடியவை.
நல்ல கருப்பட்டியும், கறுப்பு எள்ளும்  சேர்த்துக் கல்லுரலில் போட்டு உலக்கையில் இடித்து உருண்டை பிடித்துத் தருவார்கள் எண்ணெய் மினுங்க. இடித்த உரலையும் உலக்கையும் நக்கலாம் என்று தோன்றும் அளவுக்கு வாசமும் தெரியும். உரலுக்குள் தலைவிட்டு நக்கிய வீட்டு மருமகளின் தலை சிக்கிக்கொண்ட கதையும் உண்டு. வெறுமனே ஒரு குத்துக் காய்ந்த எள்ளும் கருப்பட்டித் துண்டும் வாயிலிட்டு சும்மா அரக்கித் தின்பதும் சுகம்தான். அவித்த நிலக்கடலை, காணம், சிறுபயிறு, பெரும்பயிறு என எதாவது ஒன்று சிறிய பனையோலைக் கொட்டானில் போட்டுத் தின்னும்போது அதில் கருப்பட்டித் துண்டும் ஒன்றும் கிடக்கும், அவ்வப்போது கடித்துக்கொள்ள. உண்ணிப்பழமும் காராம்பழமும், பூலாத்திப் பழமும், கள்ளிப் பழமும், மஞ்சணத்திப் பழமும் கோவைப் பழமும் வாயிலிட்டு அதக்கித் தின்னும் எமக்கு கருப்பட்டி வானவர் அமுது.
எண்ணற்ற பயன்பாடுகள் கருப்பட்டிக்கு. இனிப்பான எதுவும் கருப்பட்டியில்தான் செய்யப்பட்டன. முந்திரிகொத்து, அப்பம், பாயசம், கொழுக்கட்டை முதலிய யாவும். இலைப்பணியாரமும், சினை இட்லியும்கூட. தோசை மாவில் கருப்பட்டி சீவிப்போட்டு அரக்கு நிறத்தில் கருப்பட்டி தோசை சுட்டனர். உளுத்தங்கஞ்சிக்குத் தொடுகறியாக சிலருக்கு புளித்துவையல், எள்ளுத் துவையல் என்றால், சிலருக்கு கருப்பட்டி. வழிப்போக்கர் எவருக்கும் வீட்டு வாசலில் வந்து நின்று தண்ணீர் குடிக்கக் கேட்டால், பழஞ்சித் தண்ணீர்- நெல்லிக்காய் ஊறுகாயுடன், அல்லது பச்சைத் தண்ணீர் துண்டுக் கருப்பட்டியுடன். காலையில் வயிற்றுக்கும் போதாமல் ஏதாவது குடித்து விளையாடப் போனால் திரும்பி வீட்டுக்கு வந்ததும் கொதிக்கக் கொதிக்க சோறு வடித்த புழுங்கலரிசிக் கஞ்சியில் உப்புப் பரல் போட்டு தேங்காய் சிரட்டையில் ஊற்றித் தருவாள் தாய்; கடிக்கக் கருப்பட்டியுடன். கஞ்சித் தண்ணீரில் கொஞ்சம் தேங்காய்ப்பூவும் போட்டால் அதுவும் எம்மனோர் அமுதம்.
 
மரச்செக்கில் ஆட்டிவந்த நல்லெண்ணெயை அதன் கடுப்பு நீக்கவும், கெட்டுப் போகாமல் இருக்கவும் சேமித்து வைக்கும் மண்குடத்தில் பாதிக் கருப்பட்டியை உடைத்துப் போட்டு வைப்பார்கள். முருங்கைக் கீரை பறித்து ஆய்ந்து துவரன் வைக்கும் போது நிறைய தேங்காய்ப்ப்பூ போட்டாலும் சித்துக் கடுப்பு இருக்கும். அந்தக் கடுப்பை நீக்க கொஞ்சம் கருப்பட்டி சீவிப் போடுவார்கள். 
 
சாம்பாரின் மல்லி மிளகாயின் மூர்க்கம் குறைக்கவும் கொதித்துவரும்போது துண்டுக்கருப்பட்டி போடலாம். வெல்லமும் போடலாம்.   கருப்பட்டி என்பது வெல்லத்துக்கான மாற்று அல்ல. அதுவே இனிப்புக்கு மூலம். சித்தா, ஆயுர்வேத, வர்ம வைத்தியங்களை இன்று நாம் மாற்று மருத்துவம் என்று சொல்லிக் கேவலப்படுத்துவதைப் போல கருப்பட்டியும் எமக்கு மாற்று இனிப்பு அல்ல. இனிப்புக்கான முதல் தேர்வே அதுதான். கருப்பட்டி அல்லது கருப்புக்கட்டி என்னும் சொல்லுக்கு பேரகராதி, Jaggery made from Palmyra juice, பனைவெல்லம், பனங்கற்கண்டு, வெல்லம் எனப் பொருள் தருகின்றது. எனக்குத் தோன்றுகிறது, கரும்பு - கரும்பு சாறு - கருப்பஞ்
சாறு - கருப்புக்கட்டி எனும் சொல்தான் பிறகு பனைவெல்லத்தையும் சேர்த்துக் குறித்தது என்றும், அதுவே மருவிக் கருப்பட்டி ஆயிற்று என்றும். தொல் தமிழ் இலக்கியங்கள் பலவும் கரும்பு பற்றியும் கரும்பாலைகள் பேசுகின்றன. கரும்பை விடவும் பல் தமிழ்த் தொல் ஆண்டுகள் மூத்த மரம் பனை. தமிழ்நாட்டுக்கும் தமிழ் ஈழத்துக்கும் அதிகாரப்பூர்வமான மரம் பனை. மலர் செங்காந்தள்.
பனையைக் கற்பகத் தரு என்பார்கள். அஃதோர் ஆசியத் தாவரம். ஸ்ரீலங்கா, மலேசியா, இந்தோனேசியா, பர்மா, தாய்லாந்து, வியட்நாம், சீனா, மேற்கு ஆப்ரிக்க நாடான கங்கோ ஆகிய 
தேசங்களில் வளர்வது. இந்தியாவில் தமிழ்நாடு, கேரளம், கோவா, மராத்தியம், குஜராத் மாநிலங்களிலும். அதற்காக ஆந்திராவில், கர்நாடகாவில் பனையே இல்லை என்று 
சொல்லிவிட முடியாது.
 
பத்தாண்டுகளுக்கு முந்தையதோர் புள்ளிவிவரம் பேசுகிறது, இந்தியா எங்கும் 8.69 கோடி பனை மரங்கள் இருந்ததனவென்றும், தமிழ்நாட்டில் 5.10 கோடி என்றும். ஈழத்தில் கொத்துக் குண்டுகளிலும் இரசாயனக் குண்டுகளிலும் கருகியன, முறிந்தன, குண்டு பாய்ந்து வாடியன போக மீதம் எத்தனைப் பனை இன்று உண்டென அறியோம்! தமிழ்நாட்டில் கள் மறுப்பு இயக்கம் நடந்த போது, தனது முதல் மனைவி பெயரில் இருந்த நிலங்களில் நின்ற பத்தாயிரம் பனைகளை ஈ.வெ.ரா வெட்டி வீழ்த்தினார் என்பார்கள் பெருமையுடன் மேடைகளில். நல்ல காலம் அவர் திராவிட நாட்டின் 
சக்கரவர்த்தியாக இல்லை. கோடிக்கணக்கான மரங்கள் வெட்டுப்பட்டிருக்கும் தமிழ்நாடு தனது மாநில மரமாக ஏதும் பணம் காய்ச்சி மரத்தை அறிவித்திருக்கும். இன்றும் இங்கே பனங்கள், தென்னங்கள், ஈச்சங்கள்ளுக்குத்தான் தடை. IMFL கச்சவிடம் கொடிவீசிப் பறக்கிறது.
செந்தமிழ்நாட்டு மன்னர்களுக்குத் தத்தம் கொடிகள் இருந்தன.
 
சேர மன்னனுக்குப் பனம்பூ மாலை. பத்தாண்டுகளுக்கு முன்பு, தூர்தர்ஷனில் இரவு பதினோரு மணிக்குமேல் குறும்படம் ஒன்று காட்டினார்கள். மூன்று தமிழ் வேந்தர் மாலை, கொடி, இலச்சினைகள் குறித்து. ஆத்திமாலை, வேப்பம் பூ மாலை தரித்த வேந்தர் வேடமிட்டோர் வந்தனர். இறுதியாகச் சேர மன்னன் வந்தார். அவரைப் பார்க்க எனக்குப் பாவமாக இருந்தது. பனம்பூ மாலை சூடிவர வேண்டியவர் பனம் பிடுக்கு மாலை சூடிக் கழுத்து வளைய நின்றார். ஏதோ கெட்ட வார்த்தை என்று மிரள வேண்டாம். அகராதிகள் தொகுத்த சொல்தான். பனம் பிடுக்கு எனில் பனங்கதிர். ஓரங்குல விட்டமும் ஓரடி நீளமும் கொண்ட பாளைக் குலை. கதிரில் இருந்து வேப்பம்பூ அளவில் நூற்றுக்கணக்கில் முகைப்பது பூ. பனம்பூ, தென்னம்பூ, கமுகம்பூ, ஈச்சம் பூ என்பன கதிர்க்குலைகள் அல்ல. அவற்றில் இருந்து முகைக்கும் சிற்றளவிலான பூக்கள். இப்படி ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தால் நாடு என்னத்துக்கு ஆகும்? சேரனுக்கு பனைக்கொடியோன், பனத்தாரான் என்னும் பெயர்களைப் பகர்ந்தன சங்க இலக்கியங்கள்.
 
ஆண்பனை, பெண்பனை என இரண்டுண்டு. இரண்டின் பாளைகளில் இருந்தும் பதனீர், பனங்கள் இறக்குவார்கள். ஆண்பனையின் கதிரை அலகு என்றும் சொல்வார்கள். பெண்பனையில் தான் நுங்கு, பனங்காய், பனம்பழம். இறக்கும் பதனீரில் பனம் பூக்கள் உதிர்ந்து மிதக்கும். கட்டெறும்புகளும் நீந்திக்கொண்டிருக்கும். அவற்றைப் பன்னாடை அல்லது கோஞ்சாட்டை வைத்து இறுத்துக்கொள்வார்கள். பனம் பாளை சீவி, கிடுப்பு என்னும் கருவி கொண்டு அந்தக்காலத்தில் கடாக்கன்று, எருதுக்குட்டிகளின் விதைக்காயை நசுக்கிக் காயடிப்பதுபோல் கிட்டித்து அதில் இருந்து  சொட்டும் பனஞ்சாற்றைக் கலயம் கட்டி சேகரிப்பார்கள். ’பனை ஏறியும் பாளை தொடலை’ என்பது கி.ரா. பயன்படுத்திய சொற்றொடர். தெலுங்கில் தாடி என்றால் பனை என்று 
சொல்லக்கேள்வி. கள் குறித்த ஆங்கிலச் சொல் toddy. ஒருவேளை அச்சொல் தாடியின் பிறப்பாக இருக்கலாம்.
 
பனஞ்சாறுதான் பதனீர், பயினி, அக்கானி, தெளுவு, நீரா. அக்காரம் எனில் இனிப்பு. அதன் பிறப்பே அக்கானி. அதிலிருந்தே அக்கார அடிசில் என்ற அரங்கனுக்குப் பிடித்த ஆகாரம். பதனீரைக் குறிக்க கருப்பாணி என்னும் சொல்லும் இருக்கிறது. பதனீர் இயல்பில் துவர்ப்பும் இனிப்புமான சுவை கொண்டது. அப்படியே வைத்திருந்தால் புளித்துக் கள் ஆகும். பனங்கள், தென்னங்கள், ஈச்சங் -கள் யாவும் அத்தன்மைத்தே! பனங்கருப்பட்டி போல தென்னங்கருப்பட்டி, ஈச்சங்கருப்பட்டி உண்டு. மத்தியப் பிரதேசத்தில் ஈச்சங்கருப்பட்டி வாங்கியிருக்கிறேன். தென்னங்கருப்பட்டி கோவையிலே கிடைக்கும்.
 
பனைத் தொழிலாளி, பனை ஏறி, பாளை சீவி, கிடுப்பு வைத்து பாளையை நசுக்கிய பிறகு கலயம் கட்டுவர். நல்ல தரத்துப் பனையில் நான்கு அல்லது ஐந்து கலயங்கள் கட்டலாம். மறுநாள் காலை இடுப்பில் கட்டியிருக்கும் கமுகம்பாளைப் பெட்டியில் பதனீரை வடித்தபின், பாளை சீவி கலயத்தை தொங்க விடுவார்கள். பனஞ்சாறு புளித்துக் கள்ளாக மாறாமல் இருக்க பதனீர் 
சொட்டிச் சேகரமாகும் மண் கலயங்களின் உட்புறம் பனை மட்டையால் செய்த பிரஷ்ஷால் சுண்ணாம்புப் பொடியைத் தடவுவர். அதனாலேயே அதற்கு சுண்ணாம்பு பதனீர் என்று பெயர். சுண்ணாம்பும் பதனீரும் பொழுது சாய்ந்தால் புளிக்கும். சுண்ணாம்பு கலக்காத பதனீரை உடனே குடித்தால் அது தனிப் பதனீர். துவர்ப்பும் இனிப்பும் கொண்ட கள். தனிப்பதனீர் புளித்தாலும் கள். கள் என்பது போதை, பானம், உணவு, மருந்து. ஒரு மரத்துக் கள் என்றும் ஒரு மரத்துத் தனிப்பதனீர் என்றும் அதனை ஒரு மண்டலம் தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் என்றும் நாட்டு மருத்துவர்கள் சில நோய்களுக்கான பரிகாரமாகக் கூறுவதுண்டு. ‘தேள்கடுப்பன்ன நாள்படு தேறல்’ என்பார் சங்ககால ஔவை.  ‘பாம்பு வெகுண்டன்ன தேறல்’ என்பார் சிறுபாணாற்றுப்படை நூலாசிரியர் இடைக்கழி நாட்டு நத்தத்தனார். தேறல் எனில் கள் எனலாம், மது என்றும் சொல்லலாம்.
 
பதநீர் இறக்கியதும் பனை மரத்து மூட்டில் நின்றே, பனை இள ஓலையில் பட்டை பிடித்துக் குடிக்கலாம். பனை மரத்து மூட்டில் நின்று பால்  குடித்தாலும் நம்பமாட்டார்கள் என்பதுண்டு. அங்குபோய் நின்று எதற்குப் பசும்பால் குடிக்க வேண்டும். மேலும் பதனீரே பனையின் பால்தானே? கரும்புச் சாற்றைக் கரும்புப் பால் என்பதைப்போல. மேலும் பனை என்பது பத்ரகாளியின் அவதாரம். பதனீர் அவள் பால்தான். உமையவள் திருஞானசம்பந்தனுக்கு மட்டுமே முலைப்பால் ஊட்டினாள். பத்திரகாளி ஏழை எளியவர்க்கெல்லாம் பாலூட்டுகிறாள் இன்றும்.
பதனீர் இறக்கியதும் பெரிய மண்பானைகளில் தலைச்சுமடாக விற்பனைக்கு கொண்டுவந்தனர் அன்று. ஒன்றரை லிட்டர் அளவிலான கலயம்தான் முகத்தல் அளவு. அந்தக் கலயத்தை முட்டி என்றனர். தை ஆடி மாதங்கள் பதனீருக்குப் பருவகாலங்கள். இன்று சாலை சந்திப்புகளில் இருசக்கர வாகனங்களை நிறுத்தி விற்கிறார்கள். பனங்குருத்து ஓலையில் பட்டை பிடித்து அதை ஓடம் போல் இரு கையிலும் பிடித்துக் கொண்டு பதனீர் ஊற்ற ஊற்றக் குடிக்கலாம். பனம் பட்டையில் குடிப்பதே ஒரு வாசம்.
 
 
மாலைப் பதனீர் என்று கேள்விப்பட்டிருக் கிறீர்களா? அது மாலையில் இறக்கப்படும் பதனீர். அதற்கென்று தனி மனம், சுவை, விலை. பனைவிளைகள் தேடிப்போய் முன்பேறாகச் 
சொல்லிவைத்து இறக்கிக் குடிக்கலாம். மாலைப் பதனீர் நுங்கு சீவிப்போட்டு அல்லது விளைந்த கிளிமூக்கு மாங்காய் அரிந்து போட்டுப் பருகிப் பாருங்கள்.  
பள்ளிப்பருவத்தில் காலையோ, மாலையோ பனைவிளை தேடிப் பருகப் போவோம். ஈயம் பூசிய பித்தளை வாளிகளில் வீட்டுக்கு வாங்கிக்கொண்டு வருவோம். அன்று குடித்த பதனீர் வயிற்றுக்குள் குலுங்கிய ஓசை சிலசமயம் இன்றும் மனக்காதில் ஒலிக்கிறது. வழிப்போக்கர் கேட்டு வாங்கிக் குடிக்கும் பதனீருக்கு அன்று பனைத் தொழிலாளி காசு வாங்கியதில்லை.
 
 
விற்பனைக்குக் கொண்டு போகாத பதனீரைப் பெரிய பாண்டங்களில் வைத்துக் காய்ச்சுவார்கள். பனையோலை, பனை மட்டை, பிற சுள்ளிகள், சருகுகளே எரிபொருள். பதனீர் ஒன்றரை மணி நேரம் தீயில் காய்ந்து கொதிக்கும். கொதிவந்து பொங்கும்போது பொங்கி வழிவதைத் தடுக்க ஆமணக்கு விதைகளை நொய்ய நொறுங்கத் தட்டி வாரி கொதிக்கும் பதனீர் பாத்திரத்தில் தெளிப்பார்கள். கொதித்துப் பொங்குவது கட்டுப்படும். கருப்பட்டியின் ஆக்கத்துக்கும் உதவும். ஆமணக்கு கொட்டை அகப்படாத காலத்தில் நெற்றுத்தேங்காயை உடைத்து பருப்பெடுத்து 
சதைத்து இரண்டு கையளவுக்குத் தெளிப்பார்கள். இளந்தீயில் கொதித்துக் கூழ்ப் பதத்துக்கு வரும் பதனீருக்குக் கூழ்ப்பதனீர் என்று பெயர். அதனைப் பேச்சு வழக்கில் ‘கூப்பயினி’ என்பர்.
கூழ் இறுகத் தலைப்படும் போது மண்மேல் மலர்த்திப் பரப்பப்பட்டிருக்கும் தேங்காய்ச்cசிரட்டையில் ஊற்றி உலர வைப்பார்கள். உலர்ந்தபின் சிரட்டையைக் கவிழ்த்தால் கருப்பட்டி. சிரட்டைக்கு மாற்றாக, பனையோலையில் நெருக்கமாக முடையப்பெற்ற கொட்டான்களும் பயன்படும். அதற்குப் பனங்கட்டிக் குட்டான் என்று பெயர். மண்ணைக் குழித்து துணியாத்தி அதில் கூழ்ப்பதனீர் கெட்டியானதும் கோரிவிட்டுக் காயவைப்பது உண்டு.
 
 
பதனீர் காய்ச்சும் போது சில உணவுப் பக்குவங்கள் உண்டு. முழு மரச்சீனிக் கிழங்கை கரிய தோல், வெளுத்த தோல் இரண்டையும் உரித்த பின் கொதிக்கும் பதனீருக்குள் போட்டு வெந்தபின் முழுதாகவே வெளியே எடுத்து வாழை இலையில் கிழங்கை உதிர்த்தால் புட்டுப் போல உதிரும். காய்ச்சும் பதனீரில் நெடிய வாலாங்கொட்டைப் புளியைத் தோடு நீக்கி, முழுதாகப் போட்டு வைப்பார்கள் என்றும் புளிக்கு மேல் கற்கண்டு போலப் படிந்து தின்ன சுவையாக இருக்கும் என்றும் அதனை ’புளிப்பயினி’ என்பார்கள் என்றும் சொல்லக்கேள்வி. கூழ்ப்பதனீரில் பச்சரிசி போட்டு வேகவைத்து பாயசம் போல உண்பார்களாம். பனஞ்சோறினைக் குறிக்க பனஞ்சோற்றி என்றொரு சொல் ஆளப்பட்டிருக்கிறது.
 
 
பதனீர் காய்ச்சும் போது பாகுபோல் பதம் வரும். அதனைப் பனம்பாகு என்றனர். பனம் பாணி என்றும் சொன்னார்கள். கூழ்ப் பதனீரில் தொட்டுக்கொண்டு இட்லி, தோசை, கொழுக்கட்டை தின்பது ஒரு அனுபவம். உத்தேசமாக 45 லிட்டர் பதனீர் காய்ச்சினால் 10 அல்லது 12 கிலோ கருப்பட்டி தேறும். கருப்பட்டியில் விட்டமின்-பி,தாதுக்கள், 12 முதல் 13 சதவீதம் சர்க்கரைச்சத்து இருக்கிறது. கருப்பட்டி எனும் சொல்லுக்கு மாற்றாக பனங்கட்டி என்ற சொல்லை யாழ் அகராதி பயன்படுத்துகிறது. பனங்கருப்பட்டியில், சில்லுக் கருப்பட்டி, சுக்குக் கருப்பட்டி என்பன வகைகள்.
பனை வளரும் பிரதேசத்தின் வளர்ச்சி அல்லது நீர்வளம் சார்ந்து அமையும் கருப்பட்டியின் குணச் சிறப்புகள். உடங்குடி கருப்பட்டி, கருங்கல் கருப்பட்டி என்பதெல்லாம் அப்படித்தான். கருங்கல், உடன்குடி என்பன ஊர்கள். தரமான உடங்குடி கருப்பட்டியின் இன்றைய சந்தைவிலை கிலோவுக்கு 400 ரூபாய். கருங்கல் கருப்பட்டி என்றால் கிலோ 500 ரூபாய்.
 
 
பனையின் பயன் என்பது பதநீர், கள், கருப்பட்டி, நுங்கு, பனம்பழம், பனங்கொட்டைத் தவண், பனங்கிழங்கு மட்டுமே அல்ல. பனை தறித்தாலும் அதன் குருத்து உணவு. பனையோலை கூரைக்கு. பனங்கருக்கு மட்டை வேலிக்கு. பனை மட்டையை உரித்துதான் நார்ப்பெட்டி செய்வது. பனையோலையின் கடவம், அரிவட்டி, பாய், சுளவு, இறைவட்டி, சிப்பம், கொட்டான், பெட்டி, தண்ணீர் பட்டை, கஞ்சிப் பட்டை என முடைந்து கொண்டனர். யாவற்றுக்கும் மேலாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழின் இலக்கியங்கள் எழுதிப் பாதுகாக்கப்பட்டது பனையோலை ஏடுகளில்தான். எழுத்தாணியால் எழுதப்பட்ட ஏடுகள் 300 வருடங்கள் வாழ்ந்திருக்குமாம்.
 
வீட்டுக் கூரைக்கு பனங்கைகள், உத்தரம், தூண்கள் என பனையில் பயன்கள் அதிகம். பனையில் சிறு தும்புப் பனை, பெருந்தும்புப் பனை என இரண்டுண்டு. தும்பு என்றால் fibre. சிறு தும்புப் பனையில் வீட்டு உபயோகத் தளவாடங்கள் தூண்கள் செய்தனர்.
கருப்பட்டிக்கு மருத்துவப் பயன்களும் ஏராளம். சமைந்த குமருகளுக்கு கருப்பட்டி சேர்த்த உளுந்தங்களி. குழந்தை பெற்ற பெண்களுக்கு பால் சுரப்புக்கு கருப்பட்டி உதவும். இரத்த சுத்திக்கும் மேனிப் பளபளப்புக்கும் எலும்புகளின் உறுதிக்கும் கருப்பட்டி நல்லது. சீரகம் வறுத்து சுக்குக் கருப்பட்டி சேர்த்துத் தின்றால் பசி எடுக்கும். ஓமம் வறுத்துச் சேர்த்து தின்றால் வாயுத்தொல்லை நீங்கும். குப்பைக் கீரை வதக்கிக் கருப்பட்டி சேர்த்துத் தின்றால் நாட்பட்ட வறட்டு இருமல், சளி நீங்கும். கருப்பட்டி சேராத கஷாயம், லேகியம் இல்லை.
 
 
பனையின் மற்றுமொரு அற்புதம் நுங்கு. பெண்பனையில் பதனீருக்கு சீவப்படாத பாளையில் காய்ப்பது நுங்கு. நுங்கு காய்த்து கனிந்தால் பனம்பழம். நுங்குக் கண்களே பின்னால் கொட்டை ஆகிறது. பனங்கொட்டைகளை மண்ணில் ஊன்றி தண்ணீர் விட்டு அது குருத்துவிட்டு வளர்ந்தால் பனங்கிழங்கு. குருத்து வந்த கொட்டையைப் பிளந்தால் தவண்.
காய்த்துக் கனிந்தால் காக்கா உட்காராமலேயே பனம்பழம் விழும். பனம்பழத்தின் சதைப்பகுதியைப் பனங்களி என்பர். பனம்பழம் சீவி பெரிய மண் பானையில் போட்டு, தண்ணீர் ஊற்றி, கருப்பட்டி உடைத்துப் போட்டு கொதிக்கவைத்து உண்பார்கள். அது பனம்பழக் காடி. பனங்காடி என்றும் சொல்வார்கள். பனங்களி எடுத்து இலையில் வைத்து வட்டமாகத் தட்டிக் காயவைத்து எடுப்பார்கள். இலந்தை அடை போல. அதற்குப் பனாட்டு என்று பெயர். பனாட்டு குறித்து தொல்காப்பியம் பேசுகிறது.
‘பனையின் முன்னர் அட்டு வருங்காலை
நிலை இன்றாகும் ஐ என் உயிரே
ஆகாரம் வடுதல் ஆவயினான’
- என்பது எழுத்ததிகாரம், நூற்பா 284. பனை +அட்டு= பனாட்டு. பனை என்ற சொல்லின் முன்னால், அட்டு என்ற சொல் வருமானால், பனையிலுள்ள ஐகாரம் கெட்டு ஆகாரம் வரும். 
சங்க இலக்கியங்கள் பலவும் பனைக்கொடியேற்கு, பனையத்து, பனையின், பனை எனும் சொற்களை ஆண்டுள்ளன. தொல்காப்பியத்துக்கும் பாயிரம் எழுதியவர் பெயர் பனம்பாரனார். அவர் எழுதிய இலக்கண நூல் பனம்பாரம்.
 
உடலுழைப்பு என்பது இழிவாகக் கருதப்பட்ட காலம் வந்து உற்றபோது, பனைத் தொழிலும் வீழ்ச்சி கண்டது. பனையின் பயனை முழுவதும் பெறமுடியாமல் நிற்கிறோம் நாம்.
ஒரு கிலோ நெய், ஒரு கிலோ முந்திரிப் பருப்பு விலை கேட்டு வாய் பிளக்காத நாம் ஒரு கிலோ பனங்கருப்பட்டி விலை கேட்டு வாய்பிளக்கிறோம். பனங்கற்கண்டு பற்றி நாம் இன்னும் பேசவே இல்லை! 
 
( நாஞ்சில் நாடன் எழுதிய இக்கட்டுரை அந்திமழை ஆகஸ்ட் 2018 இதழில் வெளியானது)

English Summary
The Story of Karuppatti by NanjilNadan

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...