![]() |
‘மனிதனாக இருந்தால் போதும்; வள்ளல் பட்டம் தேவையில்லை’: கமல் பேச்சுPosted : செவ்வாய்க்கிழமை, ஜுன் 14 , 2022 08:02:56 IST
மனிதனாக இருந்தால் போதும் என்றும், வள்ளல் பட்டத்தில் தனக்கு நம்பிக்கையில்லை என்றும் நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் உலகளவில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நீண்ட நாட்களுக்கு பின்னர் தரமான சினிமா வெளிவந்துள்ளதால் ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர்.
ரிப்பீட் ஆடியன்ஸ் காரணமாக விக்ரம் திரைப்படம் வார நாட்களில் கூட ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதையொட்டி வெற்றி விழாவை நடிகரும் படத்தின் தயாரிப்பாளருமான கமல்ஹாசன் சமீபத்தில் நடத்தினார்.
விக்ரம் வெற்றியைத் தொடர்ந்து இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டார் சல்மான்கான், தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஆகியோர் நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தனர். இதனால் இந்தி மற்றும் தெலுங்கில் விக்ரம் ரீமேக் செய்யப்படலாம் என்று பரவலாக பேசப்படுகிறது.
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகரும், கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கூறியதாவது-
உங்களுக்கு பணத்தைப் பற்றி கவலைப் படாத தலைவன் வேண்டும். இதை நான் சொல்லியபோது யாருக்கும் புரியவில்லை. என்னை நடிக்க விட்டீங்கன்னா 300 கோடி ரூபாய் சம்பாதிப்பேன் என்று சொன்னேன். இதைக் கேட்டவர்கள் கமல் பெருமை பேசுகிறார் என்றார்கள். இதோ 300 கோடி ரூபாய் வந்து கொண்டிருக்கிறது.
இதைவைத்து எனது கடனை எல்லாம் அடைப்பேன். எனது சாப்பாட்டிற்கு எடுத்துக் கொள்வேன். என்னுடைய உறவுகளுக்கு, நண்பர்களுக்கு கொடுக்க முடிந்ததை கொடுப்பேன்.
அதற்கு பிறகு பணம் இல்லையென்றால் இல்லை என தைரியமாக சொல்வேன். எனக்கு இந்த வள்ளல் பட்டத்தில் நம்பிக்கை இல்லை. மனிதனாக இருப்பது போதுமானது.
இவ்வாறு கமல் பேசினார். விக்ரம் படத்தின் வசூலை மறைமுகமாக குறிப்பிட்டு தனக்கு ரூ. 300 கோடி வந்து கொண்டிருப்பதாக கமல் பேசியுள்ளார்.
|
|