கருத்துச் சுதந்திரத்தைத் தடைசெய்யும் வகையிலான சுற்றறிக்கையை மதுரை காமராசர் பல்கலைக்கழகம் உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் இராமதாசு கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில்,
”மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களும், மாணவர்களும் தங்களின் குறைகளையும், கருத்துகளையும் ஊடகங்களிடம் தெரிவிக்கக்கூடாது; ஏதேனும் அறிக்கை வெளியிடுவதாக இருந்தால் அதை பதிவாளரிடம் காட்டி ஒப்புதல் பெற்று தான் வெளியிட வேண்டும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்தக் கட்டுப்பாடுகளை பார்க்கும் போது மதுரை காமராசர் பல்கலைக்கழக வளாகத்தில் மட்டும் நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்டிருக்கிறதோ என்ற எண்ணம் ஏற்படுகிறது; இது கண்டிக்கத்தக்கது.” என்று கூறியுள்ளார்.
” கருத்துச் சுதந்திரத்திற்குத் தடை விதித்து பல்கலைக்கழகங்களை பள்ளிக்கூடங்களாக மாற்ற முயல்வது நியாயமற்றது.” எனக் குறிப்பிட்டுள்ள இராமதாசு,
“ மாறாக, பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்தவும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றவும் காமராசர் பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.” என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் முனைவர் சிவக்குமார் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையானது, பல்கலைக்கழக சட்டத்தின் எட்டாவது அத்தியாயத்தின் 29-ஆவது பிரிவின்படி விதிக்கப்பட்டுள்ள இந்த கட்டுப்பாடுகள் பல்கலைக்கழக பேராசிரியர்கள் - மாணவர்களின் கருத்து சுதந்திரத்தின் கழுத்தை நெறிக்கும் செயல் ஆகும். இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
”மடியில் கனமில்லை என்றால் வழியில் பயம் தேவையில்லை. ஆனால், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஏராளமான குறைகள் தலைவிரித்தாடுகின்றன; எண்ணற்ற முறைகேடுகள் நடக்கின்றன. அவை குறித்த உண்மைகளை பேராசிரியர்களும், மாணவர்களும் அம்பலப்படுத்தி விடுவார்களோ? என்ற அச்சம் காரணமாகத் தான் இத்தகைய கட்டுப்பாடுகளை நிர்வாகம் விதித்துள்ளது.” என்றும்,
”அண்மையில் சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் உள்ளிட்ட நிர்வாகத்திற்கு எதிராக அங்கு மாணவர்கள் போராடிய போது, இதே போன்ற தடை பிறப்பிக்கப்பட்டது. இப்போது அதே நடைமுறையை காமராசர் பல்கலைக்கழகமும் மேற்கொண்டிருக்கிறது. பல்கலைக்கழக துணைவேந்தர்களும் அண்மைக்காலமாக இத்தகைய அடக்குமுறைகளை கையாளத் தொடங்கியுள்ளனர். கல்வி நிலையச் சூழலுக்கு இது அழகு சேர்க்காது.” என்றும் இராமதாசு கூறியுள்ளார்.