அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் 25ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! 0 இந்துத்துவா பற்றி சர்ச்சை பதிவு; கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது 0 விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு! 0 ரேஷன் கடைகளில் இனி கம்பு, கேழ்வரகு: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு 0 பட்ஜெட் உதயசூரியனைப் போன்று ஒளியூட்டக்கூடியதே தவிர மின்மினிப்பூச்சி அல்ல: முதல்வர் ஸ்டாலின் 0 குடும்பத்தலைவிக்கு ரூ.1000 அல்ல; ரூ.29,000 வழங்கவேண்டும்: அண்ணாமலை 0 தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளா? எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 0 தமிழ்நாட்டு வரும் வருமானம் செலவு: முழு விவரம் 0 மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு விரிவாக்கத் திட்டம்: பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? 0 பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிவருகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 0 லண்டன் இந்திய தூதரகத்தில் காலிஸ்தான் கொடி ஏற்றம்! 0 தலைமறைவாக இருந்த கன்னியாகுமரி பாதிரியார் பெனடிக் ஆன்டோ கைது 0 ரஜினிகாந்த் மகள் வீட்டில் பல லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை 0 அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிடக்கூடாது: உயர்நீதிமன்றம் 0 ராகுல்காந்தி வீட்டில் குவிந்த டெல்லி போலீஸ்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

“இந்தியாவில் இதை விற்க முடியாதுங்க!”- கோழி உணவியல் நிபுணர் மருத்துவர் சந்திரசேகர்

Posted : வியாழக்கிழமை,   ஏப்ரல்   08 , 2021  14:52:49 IST

 

 

கால்நடைஉணவியல் துறையில் முதுநிலைப் படிப்பை நான் விரும்பித் தேர்ந்தெடுத்தேன் என்று சொல்ல முடியாது. நான் அரசுப் பணியில் இருந்து வந்திருந்தமையால் எனக்கு அதுதான் ஒதுக்கப்பட்டது. எனக்கு வேறு வழி இருக்கவில்லை. ஆனால் படிக்க  ஆரம்பித்த ஒரு மாதத்திலேயே எனக்கு அந்த துறை மிகவும் பிடித்துப்போனது. அதில் கால்நடைகளுக்குத் தேவையான உணவின் கூறுகளைக் கண்டறியும் சூத்திரத்தில் சில மாறுதல்களைச் செய்யும் அளவுக்கு ஈடுபாடு கொண்டேன். கல்லூரியில் உதவிப்பேராசிரியராகச் சேர்ந்த நிலையில் நாமக்கல்லுக்கு மாறுதல் ஆகி வந்தபிறகுதான் கோழிகளின் உணவியல் குறித்து கவனம் செலுத்தினேன். அதற்கு முன்னதாக எனக்கு மாடுகளின்  உணவுக்கூறுகள் மீதுதான் கவனம் இருந்தது.

 

நாமக்கல்லில் இருந்த கோழிப்பண்ணையாளர்களின் நலனுக்காக கோழித் தீவனம் குறித்த ஆய்வகம் ஒன்றை அமைக்கும் பணியும் என்னிடமே தரப்பட்டது. பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் கைவிடப்பட்டு கிடந்த தேவையற்றுக் கிடந்த கருவிகளைத் திரட்டிக்க்கொண்டுவந்துதான் இந்த ஆய்வகத்தை இயக்கத் தொடங்கினோம். ஆரம்பித்த சில மாதங்கள் வரை எனக்கே இந்த நிறுவனம் வெற்றிகரமாக நடக்குமா என்ற நம்பிக்கை இல்லாமல் இருந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் 25 பேருக்கு மேல் ஆட்களை சேர்த்து அவர்களுக்கு சம்பளம் வழங்க 75 சதவீதம் வருவாயை வைத்துக்கொண்டதுபோக, மீதி 25 சதவீதம்  பல்கலைக்கழகத்துக்கே நிதி அளிக்கும் அளவுக்கு இந்த ஆய்வகம் வளர்ந்தது.

 

கோழிப்பண்ணை வைத்திருப்பவர்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் பிற மாநிலங்களில் இருந்தும் எங்களை அணுகும் அளவுக்கு ஆய்வகத்தின் சேவை இருந்தது. தீவனத்தில் பூஞ்சைகள் உருவாக்கும் 300க்கும் மேற்பட்ட நச்சுகள் உள்ளன. நாங்கள் சுமார் எட்டு முக்கியமான நச்சுகளைக் கண்டறியும் விதத்தில் ஆய்வகத்தை உருவாக்கி இ ருந்தோம். பூஞ்சை நச்சுகள் உள்ள தீவனம் கொடுக்கும்போது கோழிகள் நோயுற்று முட்டை உற்பத்தி குறைந்து பெரும் இழப்பு ஏற்படும்.

இந்த ஆய்வகம் ஆரம்பித்த 1994 காலகட்டத்தில் பார்த்தால் மைசூரில் 75 லட்சம் முட்டைக்கோழிகள் வரை வளர்த்துக்கொண்டிருந்தார்கள். நாமக்கல்லில் 75 லட்சம் கோழிகள் வரைதான் இருந்தன. இதற்குக் காரணம் மைசூரில் தீவனத்துக்கான கச்சாபொருள்கள் நாமக்கல்லை விட 2 ரூ குறைவாகக் கிடைத்தன. எனவே நம்மால் அவர்களுடன் போட்டியிட முடியவில்லை. நமது கோழிகளும் 55 கிராம் முட்டை உற்பத்தி செய்ய சராசரியாக 140 கிராம் உணவை உட்கொண்டுகொண்டிருந்தன. இதில்தான் நமது பண்ணையாளர்கள் கடந்த இருபது ஆண்டுகளில் கவனம் செலுத்தினர். நமது ஆய்வகத்தில் தீவனத்தின் கூறுகளைக் கண்டறிந்து நல்ல மூலப் பொருட்களை உபயோகித்து தீவனம் தயாரித்து உற்பத்தியைப் பெருக்குவதற்கான ஆலோசனைகளை வழங்கினோம். இதற்காக பிரத்யேக மென்பொருள் ஒன்றை உருவாக்கி பண்ணையாளர்களுக்கு இலவசமாகவே வழங்கினேன். இதன் மூலம் எவ்வளவு பொருட்களை என்னவிகிதத்தில் விலைக்கு ஏற்ப கலந்து தீவனம் உருவாக்கலாம் என அறிந்துகொள்ள முடியும். இந்த அணுகுமுறையால் கோழிகள் உட்கொள்ளும் தீவனம் ஒரு முட்டைக்கு சராசரியாக 118-125 கிராம் என்ற அளவுக்குக் குறைந்தது. இதனால் பெரும் அளவுக்கு உற்பத்திச் செலவு மிச்சமாகி கோழித் தொழில் வளர்ந்தது. மைசூரில் இப்போது 25 லட்சம் முட்டைக் கோழிகள் என்று இருக்கும் நிலையில் நாமக்கல்லில் ஐந்தரை கோடி  முட்டைக் கோழிகள் என்ற அளவுக்கு வளர்ந்துவிட்டனர். இதில் சிறப்பான மேலாண்மைக்கு முக்கியப் பங்குண்டு.

 

ஒரு பண்ணையில் இருந்து கோழித் தீவன மாதிரிகள் அனுப்பி இருந்தனர். அவற்றை பரிசோதித்தபோது அவற்றில் தீங்கு விளைவிக்கும் நச்சு எதையும் காணமுடியவில்லை. அவர்களோ தொடர்ந்து எங்கள் பண்ன்ணையில் முட்டை உற்பத்தி குறைந்துகொண்டே செல்கிறது என்று வருத்தம் தெரிவித்துக்கொண்டே இருந்தனர். இது என்னடா வம்பா போச்சு என்று நேரடியாக பண்ணைக்கே சென்று ஆராய்ந்தேன். கோழிகளுக்கு Ochratoxin எனப்படும் நச்சு தாக்குதலுக்கான அறிகுறி இருப்பதாகப் பட்டது. ஆனால் அது எங்கிருந்து செல்கிறது என்றுதான் பண்ணையை பல முறை சுற்றியும் புரியவில்லை. கடைசியாக கோழிகளுக்கு தண்ணீர் அளிக்கும் தண்ணீர் தொட்டியை காண்பிக்குமாறு கேட்டேன். திறந்துபார்த்தால் உள்ளே அளவுக்கு அதிகமாக பாசிகளும் காளான்களும் இருந்தன. எங்கிருந்து பிரச்னை ஆரம்பிக்கிறது என புரிந்துவிட்டது. என்னவென்று விசாரித்தால் கோழிகளுக்குக் கொடுக்க வெல்லப்பாகுவை நீரில் கலக்கும்போது நேரடியாக தண்ணீர்தொட்டியில் கலந்துவிட்டிருக்கிறார்கள். இதனால் நச்சை உருவாக்கும் பூஞ்சைகள் இதில் உற்பத்தி ஆகிவிட்டிருக்கின்றன. தொட்டியை சுத்தம் செய்தபின்னர் பிரச்னை தீர்ந்துவிட்டது. தொடர்ந்து இந்த  வெல்லப்பாகு பிரச்னை தொடர்பாக சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரைக்கு விருதுகளும் பாராட்டும் கிடைத்தது இனிப்பான விஷயம்.

 

 ஹிமாசல பிரதேச பண்ணை ஒன்றில் இருந்து மாதிரிகள் அனுப்பி இருந்தனர்.  கோழிகள் அதிகம் இறக்கின்றன என்று கூறி இருந்தனர். அதை பரிசோதித்தபோது நச்சுகள் எதுவும் இல்லை. ஆனால் உப்புக்கள் அதிகம் இருந்தன. உடனே இந்த முடிவுகளை அனுப்பவேண்டும். ஆனால் அப்போது எங்கள் ஆய்வகத்தில் எஸ்டிடி வசதி இல்லை. இருந்தாலும் அஞ்சல் நிலையத்துக்கு ஆள் அனுப்பி அவர்களை ட்ரங்கால் மூலம் தொடர்புகொண்டு, எங்கள் ஆய்வக எண்ணுக்கு அழைக்கச் செய்து முடிவுகளை அளித்தேன். இந்த அணுகுமுறை அவர்களுக்குப் பிடித்துப்போக, பிற பண்ணைகளுக்கும் எங்களைப் பற்றி நல்லமாதிரி சொல்லி, தகவல் பரவி விட்டது. வட இந்தியாவில் இருந்து ஏராளமான பண்ணைகள் எங்களுக்கு மாதிரிகள் அனுப்பி பரிசோதனை செய்துகொள்ள ஆரம்பித்தார்கள்.  ஏதாவது பிரச்னை என்றால் உடனே தொடர்பு கொண்டு மாற்று தீவன பார்முலா அளித்துவிடுவோம்.

 

ஒரு பண்ணையில் இருந்து தீவனமாதிரி அனுப்பி இருந்தார்கள். அதில் என்ன நச்சு என்று சோதனை செய்தோம். எங்களிடம் இருந்த பரிசோதனை முறைகள்படி எந்த நச்சும் இல்லை என்று சொல்லிவிட்டோம். ஆனால் சில நாட்கள் கழித்து சார், இல்லை ஏதோ பிரச்னை இருக்கிறது.. தொடர்ந்து உற்பத்தி குறைந்துகொண்டே போகிறது என்று மீண்டும் அந்த பண்னையில் இருந்து தொடர்பு கொண்டார்கள். மீண்டும் பரிசோதனை செய்தபோது அடையாளம் தெரியாத ஒரு நச்சு இருப்பதற்கான அறிகுறி தெரிந்தது. உடனே தீவனத்தில் கலக்கும் பொருட்களை பரிசோதனை செய்தபோது சோயாவில் அது இருப்பது தெரிந்தது. உடனே  அவர்களை அழைத்து ஏதோ ஒரு அடையாளம் தெரியாத நச்சு இருக்கிறது என விவரத்தைச் சொன்னேன். பிறகு நானே நேரடியாக சென்றேன். ஒரே இடத்தில் எண்பது டன் சோயாவை இறக்கி வைத்திருந்தார்கள். இதை நான்காகப் பிரியுங்கள் என்றேன். நான்கில் ஒரு பிரிவில் மட்டும் அதிக நச்சு இருப்பதை பரிசோதனை முடிவுகள் காட்டின. மற்றவற்றில் இல்லை. எனவே நச்சு கண்டறியப்பட்ட சோயாவைமட்டும் குறைந்த அளவில் அதாவது டன்னுக்கு 20 கிலோ போட்டு காலி செய்துவிடுங்கள். மற்றவற்றை வழ்ககம்போல் பயன்படுத்டுங்கள் என்று ஆலோசனை கூறினேன். இதன்மூலம் பொருளாதார நஷ்டமும் குறைக்கப்பட்டது. முட்டை உற்பத்தியும் அதிகரித்தது.

 

 

 

இன்னொரு பண்ணையில் தீவனம் கொடுத்த பத்து பதினைந்து நிமிடங்களில் கோழிகள் கடுமையாக நடுங்க ஆரம்பித்தன. ஒரு மணி நேரத்துக்குள்ளாக 50-60 சதவீத கோழிகள் இறந்துவிட்டன. என்ன செய்வதென்று தெரியாமல் தீவன மாதிரிகளை கொண்டுவந்தார்கள். பரிசோதனையில் எந்த நச்சும் இருப்பதாகத் தெரியவில்லை.  ஆனால் நீலநிறப்புள்ளி ஒன்றுமட்டும் இருந்தது. நான் உடனடியாக அவர்களை அழைத்து உணவு கொடுத்தவுடன் கருப்பட்டி நீரும் கொடுக்குமாறு கூறினேன். கருப்பட்டி கொடுத்தவுடன் நடுக்கம் நின்று கோழிகள் பழையமாதிரி நன்றாக ஆகிவிட்டதாக தகவல் வந்தது. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. உடனே குளுக்கோமீட்டருடன் பண்ணைக்குச் சென்றோம். கோழிகளின் ரத்தத்தில் சர்க்கரை அளவைப் பரிசோதிக்க உடனே பார்க்கவேண்டும். ஆய்வகத்துக்கு எடுத்துவருவதற்குள் குறைந்துவிடும். தீவனம் போட்ட உடன் நடுங்க ஆரம்பித்த கோழிகளைப் பிடித்து அங்கேயே பரிசோதித்தால் சாதாரணமாக 250  இருக்கவேண்டிய இடத்தில் 50க்கு கீழ் என்று காட்டியது. கருப்பட்டி கொடுத்தவுடன் கிடுகிடுவென சர்க்கரை அளவு ஏறி, பழைய அளவை எட்டியதும் கோழிகள் ஆரோக்கியமாகி விட்டன. இப்படி சர்க்கரை அளவைக் குறைத்த கச்சாப்பொருள் என்ன என்று கண்டுபிடிக்க தீவனத்தின் மூலப்பொருட்களைக் கொண்டுவாருங்கள் என்று கேட்டேன். எல்லாம் தீர்ந்துபோய்விட்டன என்று கூறிவிட்டனர். இதே போல் மூன்று ஆண்டுகள் கழித்து ஹைதராபாத்திலும் ஒரு பண்ணையில் இப்படி ஏற்பட்டது. கருப்பட்டித் தண்ணீர் கொடுக்குமாறு ஆலோசனை கொடுத்தேன். உடனே சரியாகிவிட்டது. இப்படிஉடனடியாக சர்க்கரை அளவைக் குறைத்த பொருள் என்ன என்று தேடிக்கொண்டிருக்கிறேன். அந்த தீவனத்தில் பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்கள் இங்கும் கிடைக்காததால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுவரை கிடைக்கவில்லை. துரதிருஷ்டவசமாக (!) அதன்பிறகு எந்த சம்பவமும் நடக்கவில்லை! உணவின் மூலம் ரத்ததில் சர்க்கரையை குறைக்கும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் மனிதர்களுக்கும் பயனுள்ளதாக இருக்குமே? இதுவரை நாம் இன்சுலின் உற்பத்தியை அதிகப்படுத்திதான் சர்க்கரையைக் குறைக்கிறோம்?

 

சுற்றுச்சூழல் கட்டுப்படுத்தப்பட்ட கோழிவளர்ப்புக் கூடங்களை இங்கே ஒருவர் நிறுவினார். ஆனால் மூன்று ஆண்டுகளுக்கு மேல் அதை வெற்றிகரமாக நடத்தமுடியவில்லை. நானும் ஆலோசனை சொல்லிப்பார்த்தேன்.  வழக்கமான திறந்தவெளிக் கூடங்களில் வரும் அளவுக்கு முட்டை உற்பத்தி இவற்றில் வரவில்லை. இன்னொரு பண்ணையாளர் இந்தமாதிரி சுற்றுசூழல் கட்டுப்படுத்தப்பட்ட கூடங்களை அமைக்க உள்ளதாகவும் எனது தொடர் ஆலோசனை வேண்டும் என்றும் கூறினார். நான் முன்பு நடந்த சம்பவத்தைச் சொன்னேன். ஆனாலும் உரிமையாளர் உறுதியாக இருந்தார். முதல் பேட்ச் போடப்பட்டதில் மிகமோசமான உற்பத்தியே இருந்தது. 85 சதவீதம் கூட முட்டை உற்பத்தி எட்டவில்லை. போய் ஆராய்ந்தேன். பண்ணைக்குள் வெளிச்சம் போதவில்லை என்றனர். அதையும் பார்த்தோம். மேலே 60 லக்ஸ், கீழே 20 லக்ஸ் அளவுக்கு வெளிச்சம் இருந்தது.  ஆனால் மேலே இருந்ததை விட கீழேதான் முட்டை அதிகம் இருந்தது. நாங்கள் குழம்பிப்போனோம். கோழிகளை எடைபோடச் சொன்னேன். எல்லாம் சராசரியாக 1.75 கிலோ இருந்தன. கூடுதல் எடை! நன்றாக சாப்பிட்டு எடை ஏறியதே தவிர முட்டைகள் போடவில்லை. ஆனால் நான் கொடுத்த பார்முலா படிதான் தீவனம் கொடுத்திருந்தனர். இதை சாப்பிட்டுவிட்டு உடலை ஏற்றிகொண்ட கோழிகள் முட்டையைக் குறைத்துவிட்டன. கூடத்தில் குளிர் அதிகமாக இருப்பதால் எடை கூடி, முட்டை குறைகிறது என கண்டுபிடித்து, இந்த கூடங்களுக்குள் வெப்பநிலையை உயர்த்தச் சொன்னேன். இதற்காக அங்கே இரவில் 14 மின்விசிறிகள் ஓடிக்கொண்டிருந்தன. அவற்றை இரண்டாகக் குறைத்தால் வெப்பநிலை போதுமான அளவு இருக்கும் என கண்டறிந்தேன். இதற்கான கணக்குகளைச் செய்யவே எனக்கு மூன்று மாதங்கள் ஆகின. இதைச் சொன்னால் அந்த கூடங்களை அமைத்துக்கொடுத்த நிறுவனத்தினர் கோழிகள் எல்லாம்  செத்துப்போய்விடும் என்று மறுத்தனர். அப்போது முட்டை உற்பத்தி 70 சதவீதமாக குறைந்துபோய், பண்ணையாளர் நஷ்டம் அடைந்துகொண்டிருந்தார். அவர், ‘‘டாக்டர் என்ன ஆனாலும் பார்த்திடுவோம். நீங்க சொன்னபடியே செய்வோம்,’’ என்றார். எனவே  ஒரு நாள் இரவு அங்கேயே தங்கி, இதை அமல்படுத்தினோம்.  நான்கு மின்விசிறிகளை மட்டும் இரவில் ஓடவிட்டு, அவ்வப்போது போய்ப் பார்த்துக்கொண்டிருந்தேன். கோழிகள் எல்லாம் வசதியாக இருந்தன. ஒன்றும் ஆகவில்லை. இரண்டு வாரத்தில் முட்டை  உற்பத்தில் 82 சதவீதத்தைக் கடந்து உயர்ந்தது. அதற்கு அடுத்த அடுத்த கோழி பேட்சுகளில் இந்த பிரச்னை தீர்க்கப்பட்டு, 95 சதவீதம் முட்டை உற்பத்தி நடந்தது! அதன் பின்னர் பலரும் இந்த மாதிரி கூடங்களை அமைக்க முன்வந்து வெற்றிகரமாக நடத்த ஆரம்பித்தனர்.

 

தீவன நச்சுக்களைத் தொடர்ந்து என்னுடைய பங்களிப்பு அடுத்ததாக என்சைம்களை அறிமுகப்படுத்தி அவற்றை வெற்றிகரமாக பண்ணைகளில் பயன்படுத்த வழிசெய்ததில் அமைந்தது. நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி உணவியில் துறையில் மத்திய அரசின் நிதியுதவியுடன் தீவன ஆலை அமைத்து அதையும் வெற்றிகரமாக செயல்படுத்தி வந்தோம். அதில் என்சைம்கள் பயன்படுத்துவதால் தீவனப் பயன்பாட்டில் ஒரு டன்னுக்கு 500-600 ரூபாய்வரை குறைக்க முடிந்தது. இதில் ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்தது. ஒரு பன்னாட்டு நிறுவனம் கோழிப்பண்ணைத் தீவனத்தில் சந்தையைப் பிடிக்க, தீவன விலையை குறைத்துப் போட்டியில் இறங்கியது. அவர்கள் டன்னுக்கு 200 ரூபாய் வரை குறைத்தார்கள். இங்கே சந்தையில் முன்னணியில் இருந்தது இன்னொரு உள்நாட்டு நிறுவனம். அவர்களும் இந்த விலைப்போட்டியை தாங்க முடியாமல் தடுமாறினார்கள். ஆனால் நாமக்கல்லில் எங்களிடம் ஆலோசனை பெற்று தீவனம் உற்பத்தி செய்யும் சின்ன நிறுவனங்கள் என்சைம்களைப் பயன்படுத்தி சிக்கனமான முறையில் தயாரித்துக் கொண்டிருந்ததால் பன்னாட்டு நிறுவனத்துக்கு ஏற்ப தங்கள் விலையையும் குறைத்துக் கொண்டார்கள். ஏனெனில் நாங்கள்தான் ஏற்கெனவே 600 ரூபாய் வரைக்கும் மிச்சம் பிடிக்கும் அளவுக்கு என்சைம் தொழில்நுட்பத்தால் பலன் அடைந்திருந்தோமே... மூன்று நான்குமாதமாக அந்த பன்னாட்டு நிறுவனம் சந்தையைப் பிடிக்க தலைகீழாக நின்றது; எந்த மாறுதலும் ஏற்படவில்லை. உள்நாட்டு முன்னணி நிறுவனம் தாக்குப் பிடிக்கும். மற்ற நிறுவனங்களால் முடியாது என்று அந்த பன்னாட்டு நிறுவனம் நினைத்திருக்கிறது. ஆனால் நிலைமை தலைகீழ். மற்ற நிறுவனங்கள்( எங்கள் உதவி பெற்றவை) தாக்குப் பிடித்தன.  உள்நாட்டு முன்னணி நிறுவனம் இந்த விலைப் போட்டியில் சற்று தள்ளாடியது. பிறகு அவர்கள் என்னிடம் வந்து சார் நீங்க எப்படி பண்றீங்க என்றபோது அவர்களுக்கு விவரத்தைக் கூறியதும் அவர்கள் ஆச்சரியப்பட்டுப் போனார்கள். அவர்களுக்கு இந்த தொழில்நுட்பத்தை அளித்தோம். ஆனால் பன்னாட்டு நிறுவனத்தார் வந்து அணுகியபோது, எங்களால் இயலாது என்று மறுத்துவிட்டோம்.

 

2000வது ஆண்டுக்குப் பின்னர் எல்லாரும் பெருமளவில் கோழிகளின் எண்ணிக்கையை அதிகரித்துவிட்டனர். ஆனால் அதற்கேற்ப நிர்வாகத்திறனை முன்னேற்றவில்லை. பிறகு பெரிய பண்ணைகளில் சொந்தமாக நோய் ஆய்வுக்கூடங்கள் வைக்க ஏற்பாடு செய்தேன். அதை வைத்து பரிசோதனை செய்யவேண்டும் என்று பண்ணையாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு, உற்பத்தியில் மீண்டும் வளர்ச்சி ஏற்பட்டது. பத்தாயிரம் கோழிகளில் ஒரு கோழி சாகலாம். அதற்கு மேல் செத்தால் உங்கள் நிர்வாகம் சரியில்லை என்று ஒரு நிர்வாக அளவுகோலை அறிமுகப்படுத்தினேன்.

 

1999-இல் போஸ்ட் டாக்டரேட் பண்ண ஸ்காட்லாந்து போனபோது அங்கே புதிதாக ஏதாவது ப்ரென்செண்டேஷன் கொடுங்கள் என்றார்கள். நம்முடைய நாட்டுக்கோழிகள் பற்றி கொடுத்தேன். அதுபற்றி பின்னர் ஆய்வு செய்தோம்.  நாமக்கல் அருகே சில கிராமங்களில் நாட்டுக்கோழி வளர்ப்பையே முழுநேர தொழிலாகச் செய்கிறார்கள். அவை பவுத்திரம் கோழிகள் என்று அழைக்கப்படுகின்றன. பவுத்திரம் கோழிகளுக்கு நல்ல மவுசு. ஏனென்றால் இந்த பகுதியில் கோழிகளுக்கு சிவப்புச் சோளம் போடுகிறார்கள். வெறும் நெல்லைப் போடும் பகுதியில் உள்ள கோழிகளுக்கு அவ்வளவு மவுசு இல்லை. ஒரு கோழி வளர்த்தால் அது ஆண்டுக்கு சராசரியாக 60  முட்டைகள் போடும். சுமார் 48 குஞ்சுகள் பொறிக்கும். ஒரு கோழியின் மூலமாக ஆண்டுக்கு பத்தாயிரம் ரூபாய் கிடைக்கும் என்று 99-2000 வது ஆண்டில் நாங்கள் கணக்கிட்டோம். ஐந்தாறு தாய்க்கோழிகள் வளர்த்தாலே போதுமானது. கிராமப்புற விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். பொதுவாக இவற்றை முட்டைக்காக வளர்ப்பதை விட கறிக்காக வளர்ப்பதில்தான் நல்ல பொருளாதார முன்னேற்றம் கிடைக்கும்.

 

ஒரு மிக முக்கியமான கோழிப்பண்ணை உரிமையாளர் அவர். அவரது பண்ணைகளில் என்சைம் கலந்த தீவனத்தைப் போட்டு உற்பத்தி எப்படி இருக்கிறது என பரிசோதனை நடந்துகொண்டிருந்தது. நானும் அழைக்கப்பட்டு இருந்தேன். முடிவுகளை அவர்களின் மென்பொருளில் போட்டுப் பார்த்துவிட்டு, இந்த வகை என்சைம் தொழில்நுட்பத்தால் எந்த பொருட்படுத்தக்கூடிய விளைவும் இல்லை என்று முடிவுசெய்தார்கள். பிறகு அந்த உரிமையாளருடன் மதிய உணவுக்குச் சென்றேன். ‘டாக்டர் நீங்க என்ன சொல்றீங்க?” என்றார். நான் ஒரு கணக்கைச் சொன்னேன்.  ”என்சைம் போட்ட கோழிகள் பிரிவில் 40  கிராம் குறைவாகச் சாப்பிட்டு 40கிராம் அதிகமாக வந்துள்ளது. ஆனால் கணக்கியல் முறையில் இது அதிகப்பட்ச வித்தியாசம் இல்லை என்பதால் என்சைம் உபயோகிப்பதால் லாபம் இல்லை என்கிறார்கள்.

அப்போதைய விலை ஒரு கிலோ 25 ரூபாய். 40 கிராம் அதிக எடை கிடைப்பதால் கிலோவுக்கு ஒரு ரூபாய் அதிகம் கிடைக்கும். கோழி 40கிராம் தீவனம் குறைத்து உண்பதால் 40 பைசா கோழிக்கு லாபமாக மிஞ்சுகிறது. ஆகமொத்தம்  ஒரு கோழிக்கு 1 ரூ 40 பைசா லாபம்,” இதைக் கேட்டுக்கொண்டிருந்த பண்ணை அதிபரிடம் நீங்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு கோழிகள் உற்பத்தி செய்கிறீர்கள் என்றேன். ” ஒரு லட்சம் கோழிகள்” என்று பதிலளித்தார். ஆக ஒரு நாளைக்கு ஒரு லட்சத்து நாற்பதாயிரம் ரூபாய் லாபம் என்றதும் உடனே என்சைம்  உபயோகிக்க ஆரம்பித்துவிட்டார்!

 

அவர் என்னுடைய மென்பொருளை உபயோகித்து தீவனம் உற்பத்தி செய்துகொண்டிருந்தார். பின்னர் ஒரு பன்னாட்டு நிறுவனம் தங்களுடைய மென்பொருளை அவருக்கு விற்க வந்தது. அது என்னுடைய மென்பொருளை விட அதிகம் செயல்பாடுகளைக் கொண்டிருந்ததால் நானும் அதையே சிபாரிசு செய்தேன். ஆனால் தீவன பார்முலாவில் என்னுடைய மென்பொருளில் ஒரு கிலோவுக்கு 0.1 பைசா குறைவாக வந்ததால் அது எப்படி என்று கேட்டார். நான் 0.1 பைசாதானே என்றேன்.

”இதன்மூலம் ஒரு டன்னுக்கு 1 ரூபாய் இழப்பு. ஒரு  மாதத்துக்கு 1.25,000 ரூபாய் இழப்பு ஏற்படும் என்றார்.

ஏனெனில் அவருடைய கோழி உற்பத்தி அவ்வளவு பிரம்மாண்டமானது. உங்கள் மென்பொருளில் இது எப்படி சாத்தியமானது என்றார். என்னுடைய மென்பொருளை ஏழு டிஜிட்கள் வரை முடிவுகளைக் காண்பிக்கக்கூடியதாக செய்துவைத்துள்ளேன். மற்றவை அப்படி இருக்க வாய்ப்பில்லை என்றேன்.

 

கோழிப்பண்ணைகளில் தீவன கணக்கெடுப்பாக சர்வதேச நிறுவனம் ஒன்று மென்பொருள் விற்பனை செய்கிறது. ஆனால் அவர்களின் மென்பொருள் நம் பகுதியில் அவ்வளவாக க்ளிக் ஆகவில்லை. பாங்காக்கில் ஒரு கோழித்துறை கண்காட்சிக்குப் போயிருந்தேன். அந்த மென்பொருள்காரர்களும் ஸ்டால் போட்டிருந்தார்கள். அந்த ஸ்டாலுக்கு வெளியே நின்றபோது உள்ளே நடந்த பேச்சுவார்த்தை காதில் விழுந்தது.

 

“ஏன் உங்க மென்பொருள் இந்தியாவில் பெருமளவுக்குப் பயன்படுத்தப்படவில்லை” என யாரோ கேட்கிறார்கள்.

 

“இந்தியாவில் இதை விற்க முடியாதுங்க. சந்திரசேகர்னு ஒரு டாக்டர் இலவசமாகவே இதுபோன்ற மென்பொருட்களைக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்” 

 

எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது என்று சொல்லவும் வேண்டுமா?.

 

( அந்திமழை டிசம்பர் 2020 இதழில் வெளியான கட்டுரை)

 



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...