அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கட்டா குஸ்தி: திரைவிமர்சனம்! 0 இந்தியா முழுமைக்கும் ஒரே மொழி அமல்படுத்துவதை நான் எதிர்க்கிறேன்: கிரண் ரிஜிஜு 0 தமிழகத்தில் அனைத்து கோவில்களில் செல்போன் பயன்படுத்த தடை! 0 தமிழகத்தில் 5 நாட்கள் மிதமான மழையே பெய்யும்! 0 அறப்போர் இயக்கத்துக்கு எதிராக நீதிமன்ற படியேறிய எடப்பாடி பழனிசாமி 0 பிரதமர் பாதுகாப்பில் குளறுபடி: ஆளுநர் விளக்கம் கேட்டு கடிதம் 0 வங்கிக் கணக்கு இல்லாத ரேசன் அட்டைதாரர்களுக்கு புதிய வங்கிக் கணக்கு தொடக்கம்: தமிழக அரசு 0 மும்பையில் தென்கொரிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை! 0 குஜராத் முதற்கட்ட தேர்தலில் 60.20% வாக்குப்பதிவு! 0 ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் 21 மசோதாக்கள்: அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு 0 கீர்த்தி சுரேஷ் புகைப்படத்தை டிபியாக வைத்து 40 லட்சம் ஏமாற்றிய பெண்! 0 பாகிஸ்தானை பதம்பார்த்த இங்கிலாந்து! ஒரே நாளில் 506 ரன்கள் குவித்து உலகசாதனை! 0 தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை! 0 'கடைமையை செய்யாமல் தேவையில்லாதவற்றை ஆளுநர் பேசுகிறார்' – கி.வீரமணி 0 ஆன்லைன் ரம்மி தடை விவகாரம்: கவர்னருடன் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சந்திப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

Does not arise - பவா செல்லதுரை

Posted : வியாழக்கிழமை,   ஜுலை   04 , 2013  17:02:03 IST


Andhimazhai Image

அப்போது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த காலம். திருவண்ணாமலையில் சாரோன் போர்டிங் ஸ்கூல் மைதானத்தில் மூன்று நாட்கள் கலை இலக்கிய மாநாடு நடத்தினோம். இப்போது நவீன இலக்கியத்தில் முக்கிய ஆளுமைகளாக இருக்கும் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், கோணங்கி உட்பட பலரும் குழு அரசியலின்றி சங்கமித்த நிகழ்வு அது. அந்த நிகழ்ச்சிக்காக ஒரு மாதத்துக்கு மேல் அலைந்து திரிந்து உழைத்த களைப்பு முகத்தில் தெரிய சுற்றிக் கொண்டிருந்தேன். அம்மாநாட்டு நிகழ்ச்சிநிரலுக்கு அப்பால் பார்வையாளராய் வந்திருந்த ஷைலஜாவை முதல்முறையாகச் சந்தித்தேன். முற்றிலும் மனம் சோர்வுற்ற நிலையில் அவளைப் பார்த்து பேசியது புது உற்சாகத்தைத் தந்தது. நெகிழ்ச்சியின் இடையே எதிரில் இருந்த என் வீட்டுக்கு அழைத்துப் போய் அப்பா அம்மாவை  அறிமுகப் படுத்தினேன். சில நாட்களில் இருவருமே காதல் வயப்பட்டிருந்தோம்.

 

அப்போது வீட்டுக்கு வந்திருந்த ஜெயமோகனை எதுவுமே சொல்லாமல் ஷைலஜா வீட்டுக்கு அழைத்துப் போனேன். சந்திப்பு முடிந்து வெளியே வந்தபோது இந்த இரு பெண்களில் நீங்கள் யாரைக் காதலிக்கிறீர்கள் எனப் புன்னகை ததும்பக் கேட்டார். அப்போதுதான் அருண்மொழியைக் காதலித்து திருமணம் முடித்திருந்த அனுபவம் அவர் வார்த்தைகளில் கூடிநின்றது.

 

“ஷைலஜாவை”.  நான் பிரகாசப்படுத்தினேன். அவர் ஒரு அழுந்திய கைகுலுக்கலோடு,  வாழ்த்துக்கள்..  சொல்லி விடைபெற்றார். இரண்டாவது நாள் சுமார் 20  பக்கங்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். வெவ்வேறு சமூகத்தை, மதத்தை சேர்ந்த இருவர் காதல் திருமணம் செய்யும்போது அவர்கள் எதிர்கொள்ளப்போகும் குடும்ப சமூக எதிர்ப்புகள் சிக்கல்கள் அதை எப்படி வெல்லவேண்டும் என்ற எங்கள் மீதான அக்கறை ததும்பும் எழுத்துக்கள் அவை.

 

நான் பயந்துபோனேன். அந்த வயதில் எல்லா இளைஞர்களுக்கும் இருக்கும் ரொமாண்டிசிஸம் மட்டுமே எனக்கு இருந்தது அப்போது. வாழ்வின் நெரிசலிலோ பற்சக்கரத்திலோ மாட்டிக்கொள்ளாமல் கையில் ஈரரோஜாக்களை வைத்துக்கொண்டு அவளுக்காகக் காத்திருந்த சாயங்காலங்களில் வாழ்வின் எதார்த்தத்தை முகத்தில் அறைகிறமாதிரி சொன்ன கடிதம் அது. அதன் பிறகான ஒவ்வொரு அடியையும் மிகக் கவனத்துடன் எடுத்து வைத்தேன். இரு வீட்டிலும் பெரிய எதிர்ப்பு எதுவுமின்றி சம்மதம் பெற்றோம். இருவருக்கும் பொதுவான ஒரு ஞாயிறுமாலை ஆறு மணிக்கு அப்பிரம்மாண்ட மண்டபம் நிரம்பி வழிய தமிழ்ப்படைப்பாளிகள், மார்க்சிய தலைவர்கள் நண்பர்கள் முன்னிலையில் நாங்கள் மணம் செய்துகொண்டோம். அப்போதும் அக்கடித வரிகளின் கனம் என்னை அழுத்திக் கொண்டே இருந்தது. வெவ்வேறு சூழல்களில் கலாச்சார பின்னணியில் இருந்துவரும்  இரண்டு பேருக்குமான சவால்கள் அவை.

 

ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. மிக இயல்பாக எங்கள் குடும்ப தலைமைப் பொறுப்பை ஷைலஜா ஏற்றுக் கொண்டாள். எதிர்நின்ற சிறு பிரச்னைகளை தன்  லாவகமான இயல்பால் சுலபமாக துடைத்தெறிந்தாள்.

 

நல்ல அஸ்திவாரமின்றி, புரிதல் இன்றி, எதிர்காலத் திட்டமின்றி செய்துகொள்ளப்படுகிற காதல் திருமணங்கள் தவிர மற்றவை எல்லாமே வெற்றிகரமானவைதான். என் வீடு இருக்கும் பகுதியில் பெரும்பாலானவர்கள் பிராட்டஸ்டண்ட் கிறிஸ்துவர்கள். இக்கட்டுரையின் நிமித்தம் இத் தெரு வீடுகளை நினைவில் இருத்தினேன். கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலும் இளைஞர்கள் கலப்புத் திருமணங்கள் செய்திருக்கிறார்கள். பிராமணப் பெண்கள் முதல் முஸ்லிம் பெண்கள் வரை இத்தெருவின் பரப்பில் தங்கள் கிறிஸ்துவக் கணவர்களோடு ஞாயிற்றுக் கிழமைகளில் தேவாலயங்களுக்குப் போவதையும் பல மாலைகளில் இவர்கள் அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு பயபக்தியோடு சாமி கும்பிடப் போவதையும் கவனித்திருக்கிறேன்.

 

 வாழ்வின் சிடுக்குகளை தங்கள் வாலிபத்தின் வலிமையில் மிகச் சுலபமாக இவர்கள் விடுவிக்கிறார்கள். சாதி மதம் இவைகளின் கோரப்பற்கள் இவர்களின் உக்கிரமான உறுதியின்முன் உதிர்ந்துபோகின்றன.

 

நகரின் புறநகர் பகுதி இது. ஐந்து கிலோ மீட்டர்களுக்கு அப்பால் கிராமங்களில் சாதி அடர்த்தியாக வேலியிடப் பட்டிருப்பதையும் ஆனாலும் தினம் தினம் அவை அனாவசியமாக உடைபடுவதையும் பார்க்க முடிகிறது. பள்ளிகள், கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள்- இவை இக்காதல்களை சுலபமாக உள்வாங்கிக் கொள்கின்றன. இங்கு எடுக்கப் படும் சில உறுதியான முடிவுகள் கிராமங்களின் சாதியக் கட்டமைப்புகளை சுலபமாக மீறுகின்றன. நல்ல பொருளாதார வசதியின் அடித்தளம் சாதியை சுலபமாக பின்னுக்குத் தள்ளுகிறது. கட்டுப்பாடான பழைமைவாதிகளைக் கூட ஏதேனும் ஒருகாரணம் சொல்லி நல்ல வளமையான வாழ்விலிருக்கும் தன் மகளின் அல்லது மகனின் நிழலில் இளைப்பாற உந்துகிறது.

 

அப்படியென்றால் தருமபுரிக் கலவரம்?

 

எல்லா கிராமங்களிலும் பிரதிபலிக்கும் வறட்டு கவுரவங்கள், சாதியைக் காப்பாற்றத் துடிக்கும் பழைமைவாதிகள்... இவர்கள் பரவியே கிடக்கிறார்கள். ஆனால் இதை தங்கள் இடதுகாலால் பின்னுக்குத் தள்ளும் இளைஞர்கள் வெகு நுட்பமாக யோசிக்கிறார்கள். அவர்களின் திட்டமிடுதலில் இதைக் காப்பாற்ற நினைப்பவர்களின் எண்ணங்கள் கருக்கப் படுகின்றன. ஒன்றிரண்டு உதிர்ந்துபோகும்.

 

என் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கிறபோது சாதி மதம் என்ற இரு பிரிவின் கோட்டில் எதை நிரப்புவது என்ற வழமையான கேள்வியே எங்களுக்குள் எழவில்லை. நாங்கள் இருவரும் பேசிக்கொள்ளாமலே அதில் உறுதிப் பட்டிருந்தோம். Does not arise  என்று எழுதினோம். மகனும் மகளும் தாங்கள் சாதியற்றவர்கள் என்ற மனநிலையிலேயே வளர்கிறார்கள். ஒருவேளை இதற்கான எதிர்கால இழப்புகள், பிரச்னைகள் இவற்றை எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிறோம்.

 

ஷைலஜாவின் உறவுக்கார பெண்ணொருத்தி சென்னை ஐடி துறையில் பணியாற்றியபோது அவளுடன் சேர்ந்து பணியாற்றிய ஒரு பையனைக் காதலித்தாள். அவள் காதலை எங்கள் இருவரிடம் பகிர்ந்துகொண்டாள். அப்போது அவள் வீட்டில் சொந்த சாதிப்பையனைத் தேடி அலைந்துகொண்டிருந்தார்கள். ஒரு மழை பெய்து முடிந்த பின்னிரவில் வீட்டின் மொட்டை மாடியில் அவளின் அப்பா அம்மாவை உட்கார வைத்து நானும் ஷைலஜாவும் பேசினோம். எங்கள் வாழ்வை அவர்கள் முன் எடுத்து வைத்தோம். அம்மா பெருகி வந்த கண்ணீராலும் அப்பா  அவள் எனக்குப் பிறக்கலை, அவளை வெட்டிடுவேன் என்ற கூச்சலாலும் அவள் காதலை அவமதித்தார்கள். நான் எதிர்பார்த்ததுதான். அக்கணத்தை மௌனத்தால் நீட்டித்தோம். பிரார்த்தனை மூலம் இதை முறிக்க அம்மாவும், கத்திவாங்க அப்பாவுமாக பிரிந்துபோனார்கள்.

 

நாட்கள் நீட்டிக்க அனுமதித்தோம்.

 

எல்லாம் சமநிலைக்கு வந்த ஒரு நாளில், தான் காதலித்த பையன் தனக்குத் தேவையில்லை எனவும் நீங்கள் பார்க்கும் சொந்த சாதிப் பையனைக் கட்டிக் கொள்கிறேன் எனவும் எங்கள் நாடக வசனத்தை அவளை ஒப்பிக்க வைத்தோம். எதிர்பார்த்ததுதான் நடந்தது.

 

அடுத்த நாள் காலை அப்பெண்ணின் அப்பா அம்மா இருவரும்  எங்கள் வீட்டுக்கு வந்தனர். மகள் பேசிய வசனம்  அவர்கள் உடலில் ஏறி இருந்தது தெரிந்தது. எங்க பொண்ணு கண்ணுல தண்ணியைப் பார்க்க சகிக்கல. எப்படியெல்லாம் வளர்த்து படிக்க வெச்சோம். அவ விருப்பப்படியே அந்த பையனையே பேசி முடிச்சிடலாம் என்றார்கள். இதுவும் நாங்கள் எதிர்பார்த்ததுதான். சொந்த சாதிப்பையன் நூறு பவுனும் ஒரு காரும் கையில் ரொக்கமும் எதிர்பார்க்கிறான். தொழில் முற்றிலும் நலிவடைந்து சொந்த சாதியின் கௌரவத்தால் இதைப் புரட்ட முடியாது என்று இருவருக்கும் தெரிந்திருந்தது. கனி காம்பில் இருந்து நழுவியது. இப்போது புது மருமகனின் காரில், கணவன் மனைவி குதூகலத்துடன் போவது வேடிக்கையாக உள்ளது.

 

வாழ்வு வேடிக்கையானதுதான். அதன் குரூரம் சிலசமயம் தாங்க முடியாததுதான். ஆனாலும் நாம் மரபுகள், கட்டுமானங்கள், சடங்குகள் என்ற பல பெயர்களில் நாமே நாசமாக்கிக் கொள்கிறோம். கதவை, ஜன்னல்களைத் திறந்துவைத்துப் பாருங்கள். புது காற்று முற்றத்தை நிறைக்கும். நவீன வாழ்வு பல்வேறு பலவீனங்களுடன் தெரிந்தாலும் இவைகளைத் தகர்த்து விண்ணப்பங்களில் Does not arise  என்ற கோடுகள் நிறைகிற காலங்கள் நம் கைகளில்தான். அதுதான் வாழ்வை வசப்படுத்தும்.

 

(அந்திமழை ஜூலை 2013-ல் வெளியான கட்டுரை) 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...