???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 விவசாயக் கடன்கள் தள்ளுபடி: முதல்வராக பதவியேற்றவுடன் முதல் கையெழுத்திட்ட கமல்நாத் 0 500, 2000 ரூபாய் அச்சடித்ததில் செலவு எவ்வளவு? ரிசர்வ் வங்கிக்கு உத்தரவு! 0 சீக்கிய கலவர வழக்கு: காங்கிரசை சேர்ந்த சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை 0 ஆசிரியர் பற்றாக்குறை: வெள்ளை அறிக்கை அளிக்க அரசு தயாரா? ராமதாஸ் கேள்வி 0 ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடினால் நடவடிக்கை! தூத்துக்குடி ஆட்சியர் 0 குட்கா ஊழல்: சென்னையில் 3 இடங்களில் சிபிஐ சோதனை 0 முக்கொம்பில் புதிய அணை கட்ட ரூ.387.60 கோடி ஒதுக்கீடு 0 தேர்தலுக்குப் பிறகே பிரதமரை முடிவு செய்வோம்: மம்தா, சித்தாராம் யெச்சூரி கருத்து 0 60 ஆண்டு கால தமிழக அரசியலை தீர்மானித்தவர் கருணாநிதி: சோனியா காந்தி புகழாரம் 0 தமிழகத்தின் கலாசாரத்தை சீர்குலைக்க மத்திய அரசு முயற்சி: ராகுல் காந்தி 0 குட்கா முறைகேடு: முன்னாள் அமைச்சரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை 0 சசிகலா, தினகரன் இல்லாமல் அதிமுகவில் இணைய முடியாது: தங்க தமிழ்ச்செல்வன் 0 கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்காதது ஏன்?: கமல்ஹாசன் விளக்கம் 0 திமுகவில் இணைந்தது ஏன்? செந்தில் பாலாஜி விளக்கம்! 0 ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட்: துணை முதல்வர் சச்சின் பைலட்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஆவணப்படங்கள்தான் ஒரு படைப்பாளிக்கான சுதந்திரத்தை வழங்க முடியும்: ஆவணப்பட இயக்குநர் சொர்ணவேல் நேர்காணல்!

Posted : செவ்வாய்க்கிழமை,   நவம்பர்   21 , 2017  23:45:59 IST


Andhimazhai Image

பேராசிரியர் ஸ்வர்ணவேல் ஈஸ்வரன் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பக்கத்திலுள்ள வழுதூரைச் சேர்ந்தவர். பூனே திரைப்படக் கல்லூரியில் பயின்றவர். அமெரிக்காவின் மிக்சிகன் மாநிலப் பல்கலைக்கழகத்தில் திரைக்கல்வியைப் பயிற்றுவிக்கும் இணைப்பேராசிரியராகத் தற்போது பணியாற்றிவருகிறார். ஆவணப் படங்களின்பால் தனது கவனத்தைச் செலுத்திய சொர்ணவேல், தங்கம் (1995), ஐ.என்.ஏ. (1997), வில்லு (1997), போன்ற முக்கியமான ஆவணப் படங்களின் இயக்குனர். அவரது சமீபத்திய படங்களில் முக்கியமானது அன்பினிஷ்ட் ஜர்னி: எ சிடி இன் ட்ரான்ஷிஸன் (2012) மற்றும் மைக்ரேஷன்ஸ் ஆப் இஸ்லாம் (2014). அன்பினிஷ்ட ஜர்னி, சொர்ண்வேல் தனது நண்பர் பேராசிரியர் மார்க் ஹூல்ஸ்பெக்குடன் இணையாக தயாரித்து இயக்கிய படம். ப்ளோரிடா மாகாணத்திலுள்ள அமெரிக்காவின் முதல் நகரமென கருதப்படும் செயிண்ட் ஆகஸ்டினில் 1960களில் நடந்த இதுவரை அதிகம் அறியப்படாத இன/நிற வெறுப்புச் சம்பவங்களில் ஆப்ரிக்க அமெரிக்கர்கள் எதிர்கொண்ட கஷ்டங்களை ஆவணப்படுத்தியிருக்கும் படம் இது.

 

புனே திரைப்படக் கல்லூரியில் படித்த உங்களுக்கு டாகுமெண்டரி திரைப்படங்கள் தேர்வாக இருந்தது ஏன்?

 

டாகுமெண்டரி திரைப்படங்கள்தான் ஒரு படைப்பாளிக்கான சுதந்திரத்தை எனக்கு ஓரளவாவது வழங்கின. மேலும் டாகுமெண்டரி படங்கள் என்பது ஒரு சிவில் சமூகத்தின் கட்டாயத் தேவை என்பது என் தரப்பு. உலகின் முக்கியமான வரலாற்று, சமூக நிகழ்வுகள் டாகுமெண்டரிகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. டாகுமெண்டரி திரைப்படங்கள் என்பது ஒரு சமூகத்தின் கண்ணாடி மாதிரி. நாம் நம் கடந்த காலத்தை, வரலாற்றின் அழுக்குகளை, மனிதர்களின் வெறி பிடித்த சுயநலங்களை டாகுமெண்டரிகள்தான் நேர்மையாகப் பதிவு செய்துள்ளன. நல்ல டாகுமெண்டரி படங்கள் நிறைய வரவேண்டும். தற்போது தமிழ்நாட்டை மிரட்டிக்கொண்டிருக்கும் டெங்குவைப் பற்றிக்கூட நல்ல விழிப்புணர்வு டாகுமெண்டரியை நாம் எடுத்துவிட முடியும். டாகுமெண்டரியில் பன்மைத்துவக் குரலை நாம் பிரதிநிதித்துவம் செய்ய முடியும்.

 

உலக அளவில் ஆவணப்படங்களின் இடம் என்ன?

 

சினிமா தோன்றியதே ஆவணப்படங்களில் இருந்துதான் என நாம் சொல்லமுடியும். ஆகவே இப்போதைய புனைவு சினிமாக்கள் ( கதைப் படங்கள்) ஆவணப்படங்களில் இருந்து மெல்ல இருவாகி வந்த ஒரு கலை வடிவம். ஏனெனில் சினிமா கருவிகளை வைத்து அதிகமும் காட்சிகளின் நகர்வுகளை லூமியர் சகோதரர்கள் பட்ம் பிடித்தார்கள். தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் தொழிலாளர்கள், ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ம் ரயில் என லூமியர் சகோதரர்கள் அதிகமும் படம் பிடித்தது நகரும் காட்சிகளையும் அதன் மூலம் சமூக அமைப்பு ஆவணப்படுத்தலும்தான். லூமியர் சகோதரர்களுக்கு முன்பே வோர்ட்ஸ்வொர்த் டேனிஷ்த்ரோப்,  எடிசன் ஆகியோர் சினிமா காமெரா கண்டுபிடிப்பில் பங்காற்றியிருந்தாலும், லூமியர் சகோதரர்கள்தான் காட்சியைப் பதிவு செய்தல், டெவலப் மற்றும் திரையிடுதல் ஆகியவற்றை ஒன்றிணைத்தவர்கள் ஆவார். எனவே லூமியர் சகோதரர்கள் பங்கு முக்கியமான ஒன்று. ஜார்ஜ் மெலியஸ் எடுத்த Trip to a moon என்னும் படம், லூமியர் சகோதரர்களின் ஆரம்பகால ஆவணப்படங்கள்,[ The Sprinkler Sprinkled, the exit from the Lumière factory in Lyon ], ராபர்ட் ப்ளஹர்டி எடுத்த Nanook of the North, ரஷ்ய இயக்குநர் ஷிகா வெர்தோவ் எடுத்த Man with a Movie Camera ஆகிய ஆவணப்படங்கள் வரலாற்று ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் முக்கியமான ஆவணப்படங்கள். சினிமாவின் இன்றைய கலை அழகியலை செழுமைப்படுத்தியதில் மேலே குறிப்பிட்ட ஆவணப்படங்களுக்கும், இயக்குநர்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.

 

ஆவணப்படங்களுக்கான சந்தை எப்படி இருக்கிறது?

 

இணையம் முன்னெபோதுமில்லாத அளவுக்கு தற்போது பயன்பாட்டில் இருக்கிறது. இந்த இணையப் பயன்பாடு ஆவணப்படங்கள் மற்றும் சுயாதீனப் படங்களுக்கு ஒரு பெரிய சந்தையாக உள்ளது. இருபதிற்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் உங்களின் ஆவணப்படத்தை நீங்கள் திரையிடலாம். ரோட்டர்டாம் போன்ற திரைப்பட விழாக்களில்  திரைப்பட விநியோகிப்பாளர்களுக்கு நீங்கள் திரையிட்டுக்காட்டி உங்கள் திரைப்படத்தை விற்கலாம். அல்லது அமெஸான் மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் போன்ற இணையதளங்களில் உங்கள் படங்களை கட்டணம் செலுத்திப் பார்க்கும்விதமாகச் சந்தைபடுத்தலாம். மேலும் யூடூப் போன்ற வீடீயோ தளங்களில் நேரிடையாகவே ரிலீஸ் செய்யலாம். ஒரு படத்தை பார்க்கப் பார்க்கத்தான் அதன் மீதான ரசனை வளரும். அந்த வகையில் ஒரு காகிகத்தில் எழுதுவதைப்போல சுலபமான ஒன்றாக திரைப்பட ஆவணப்பட உருவாக்கமும் இருக்க வேண்டும் என்பது சினிமாவில் இயங்கிய பெரிய படைப்பாளிகளின் விருப்பம். டிஜிடல் யுகம் அதை ஓரளவு சாத்தியமாக்கியுள்ளது. இணையம் திரைப்பட வினியோகத்தை சுலபமாக்கியுள்ளது எனலாம்.

 

படங்களின் ஆவணக்காப்பகம் பற்றி..

 

அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளில் திரைப்படங்கள் மற்றும் ஆவணப்படங்கள் முறையாக பாதுகாக்கப்படுகின்றன. அமெரிகாவில் 1920 களில் இருந்தே அவர்கள் ஒரு கார்ப்பரேட் போலத்தான் இயங்கிவருகிரார்கள். நீங்கள் வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் அல்லது 20 ஃபாக்ஸ் சென்சுரி நிறுவனத்தைப்பற்றியோ நீங்கள் விரும்பும் தகவல்களை பெற முடியும். தேதி வாரியாக, மாத, வருட வாரியாக அவர்கள் திரைப்படங்கள் ஆவணப்படங்கள் மற்றும் படங்கள் பற்றிய தகவல்களைச் சேமித்து வைத்துள்ளார்கள். இந்தியாவில் தேசிய ஆவணக் காபகம் உள்ளது என்றாலும் மிக முக்கியமான படங்களை நாம் இழந்துள்ளோம் என்பது உண்மையே. தமிழக அரசியலையே அதிகமாகப் பாதித்த திராவிட இயக்கக் கருத்தியல் பற்றியோ அதன் வளர்ச்சிக்கு உதவிய கலைஞர்களைப் பற்றியோ ஒரு நல்ல டாகுமெண்டரிப் படங்கள் நம்மிடம் இல்லை. தமிழின் மௌனப்படங்களோ, அல்லது முப்பதுகளின் பேசும் படங்களோ இபோது நமக்கு காணக்கிடைப்பது இல்லை. அப்படியே இருந்தாலும் நான்கைந்து படங்கள்தான் கிடைக்கின்றன. இது நமக்கு மிகப்பெரிய இழப்புதான். நானூறு வருட வரலாறுதான் அமெரிக்காவுக்கு. ஆனால் அவர்கள் ஆவணப்படுத்தலில் பல மடங்கு முன்னேறியிருக்கிறார்கள். பல ஆயிரப் பழமை கொண்ட இந்திய/தமிழ்ச் சமூகத்தில் ஆவணப்படுத்துதல் சார்ந்த சுரணையுணர்வு கொஞ்சம்தான். ஆனால் இப்போது ஆவணப்படுத்துதல் பற்றிய விழிப்புணர்வு நம்மிடையே உருவாகி வருவது நம்பிக்கை அளிக்கக்கூடியதாக உள்ளது.

 

அமெரிக்க அரசியலில் ஆவணப்படங்களின் பங்கு..

 

அமெரிக்காவில் முதல் உலகப் போரைப்பற்றிய ஆவணப்படங்கள் அவர்களிடம் சேமிப்பில் உண்டு. இரண்டாம் உலகப் போர் சமயத்தில் ஹிட்லர் நேரடியாக அமெரிக்காவைத் தாக்கவில்லை எனினும் அவர்களின் பங்கு அந்த உலகளாவிய இரண்டாம் உலகப்போரில் இருக்க வேண்டுமென்று அமெரிக்க அரசாங்கம் நினைத்தது. அதை மக்களுக்கு புரியவைக்க அவர்கள் ஆவணப்படங்களின் வாயிலாகத்தான் சொன்னார்கள். இதற்காக அமெரிக்க அரசுக்கு இரண்டாம் உலகப் போர் பற்றிய ஆவணப்படங்களை எடுத்தவர் ஃப்ராங்க் காப்ரா. ஃப்ராங்க் காப்ரா இயக்கிய நாம் ஏன் போரிடுகிறோம் என்ற ஆவணப்படங்கள் இரண்டாம் உலகப்போர் சமயங்களில் அமெரிக்காவிலும், மொழி மாற்றம் செய்யப்பட்டு பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்க ஒன்று. அமெரிக்க இயக்குநர்களில் சாப்ளினுக்கு அடுத்து அதிகம் இந்திய இயக்குநர்களைப் பாதித்தது ஃப்ராங்க் காப்ராதான். தமிழ்நாட்டிலும் என்.எஸ்.கிருஷ்ணன், அறிஞர் அண்ணா, இந்தியில் ராஜ் கபூர், ஜாவேத் அக்தர் என பாதிப்புகள் அதிகம் உண்டு. ஃப்ராங்க் காப்ராவின் பாதிப்பு அதிகம் உள்ள படம் என்று பராசக்தியைச் சொல்ல முடியும். ஃப்ராங்க் காப்ராவின் கதாபாத்திரங்களும்,கிளைமாக்ஸில் நேரிடையாக பார்வையாளர்களை நோக்கிப் பேசுவார்கள். பராசக்தியின் கிளைமாக்ஸில் படத்தின் முதன்மைக் கதாபாத்திரம் காமெராவை நோக்கி பேசுவது என்பது ஃப்ராங்க் காப்ராவின் பாதிப்புதான்.

 

ஹிட்லர் பற்றிய முக்கியமான படங்களை எடுத்த லெனி ரெஃபின்ஸ்தால் பற்றி..

 

ஆம், ஒரு நடிகையாக அறிமுகமாகி பின்னர் இரண்டாம் உலகப்போர் சமயத்தில் குறிப்பிடத்தக்க படங்களை எடுத்த லெனி ரெஃபின்ஸ்தால் ஒரு முக்கியமான ஜெர்மானியப் பெண் இயக்குநர். இரண்டாம் உலகப் போர் சமயத்தில் ஜெர்மனியில் நடைபெற்ற ந்யூரம்பர்க் பேரணியை கிட்டத்தட்ட முப்பத்தைந்து கேமராக்கள் வைத்து அவர் படமாக்கியுள்ளார். ஒரு கிளாசிக்கல் ஹாலிவுட் அழகியல் லெனி ரெஃபின்ஸ்தால் படங்களில் இருந்தது. ஹிட்லரின் பிம்பம் ஒரு கடவுள் அளவுக்கு பன்மடங்கு ஊதிப்பெருசாகக் காண்பிக்கப்பட்டதற்கு லெனி ரெஃபின்ஸ்தால் படங்களும் ஒரு முதன்மையான காரணம் என்பது சரியே. சூசன் சொண்டாக் ஹிட்லரின் பராக்கிரமங்களைப் பேசும் லெனி ரெஃபின்ஸ்தால் படங்களைப் புறக்கணித்தாலும் படங்களின் அழகியல் தன்மை பற்றி கவனத்தில் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். ஒரு பெண் இயக்குநர் எடுத்த படங்கள் என்கிற அளவில் லெனி ரெஃபின்ஸ்தால்-ன் பங்களிப்பைப் பற்றி வியப்பு அவரது கூற்றில் வெளிப்படுகிறது எனலாம்.

 

அறுபதுகளில் ஆவணப்படங்கள் சார்ந்து ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து..

 

நாகரா என்னும் கருவி 1958 ல் கண்டுபிடிக்கப்பட்டது டாகுமெண்டரி படங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்தது. நாகரா பயன்பாட்டுக்கு வருவதற்கு முன் காமெராவின் பிம்பமும், ஒலியும் [பேச்சு] ஒன்றிணைவதில் நிறைய சிக்கல்கள் இருந்தது. அதன் பிறகு ஒலியை சரியான அளவில் பிம்பங்களோடு சேர்ப்பதில் உள்ள சிரமங்கள் குறைந்தன. பிரான்ஸில் எளிமையான பயன்படும் அளவில் காமெராக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அமெரிக்காவில் நேரடி சினிமா (Direct cinema) என்கிற ஒரு கருத்தாக்கம் அமெரிக்காவிலும், நேர்மையான சினிமா(Candid) என்கிற கருத்தாக்கம் கனடாவிலும், அடிமைத்தனமற்ற சினிமா( Free Cinema) கருத்தாக்கம் பிரிட்டனிலும் ஓர் இயக்கமாகவே தோன்றின. ஜான் ரூஷ் இந்தக் காலகட்டத்தில்தான் ஸிகா வெர்தோவின் உண்மை சினிமா என்னும் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு ஆவணப்படங்கள் எடுக்க வருகிறார். யதார்த்ததிற்கு உள்ளே இருக்கும் உண்மையை ஆவணப்படங்கள் மூலம் வெளிக்கொண்டுவருவது இவரது பாணி என்று சொல்லலாம். The Human Pyramid, Chronicle of a Summer, The Lion Hunters, The 15-Year-Old Widows போன்ற முக்கியமான ஆவணப்படங்கள் உலகலாவிய பாராட்டும் அங்கீகாரங்களும் பெற்றவை. அதே போல ஜெர்மானிய இயக்குநர் வெர்னர் ஹெர்ஸாக்கின் ஆவணப்படங்களும் மிக முக்கியமானவை. ஈராக் போர் பற்றிய ஹெர்ஸாக்கின் ஆவணப்படம் குறிப்பிடத்தக்க ஒன்று. டாகுமெண்டரி படங்களை எடுத்து டாகெமெண்டரி என்னும் கருத்தாகத்தை உடைத்தவர் வெர்னர் ஹெர்ஸாக்.

 

இந்திய அளவில் டாக்குமெண்டரி படங்கள் மற்றும் இயக்குநர்கள் குறித்து..

 

ஆனந்த் பட்வர்த்தன் குறித்து இங்கு நாம் பேச வேண்டும். நம் சமகாலத்தின் மிக முக்கியமான ஆவணப்பட இயக்குநர் அவர். In the Name of God, A Narmada Diary, War and Peace, Jai Bhim Comrade போன்ற ஆவணப்படங்களின் வழியே  இந்தியர்களின் கூட்டு மனசாட்சியை நோக்கி கேள்விகள் எழுப்பியவர் ஆனந்த் பட்வர்த்தன். அரசின் ஒடுக்குமுறையை மீறி தளராமல் ஆவணப்படங்களை ஒரு இயக்கமாக மாற்றியவர் ஆனந்த் பட்வர்த்தன். அடுத்த அழகியல் நோக்கில் மணி கௌலை நாம் முக்கியமானவராகச் சொல்ல முடியும். தீபா தன்ராஜ், ரஞ்சன் பலித், ரீனா மோஹன், சமீரா ஜெயின்  ஆகியோர் தற்போது இயங்கிவரும் ஆவணப்பட இயக்குநர்களில் முக்கியமானவர்கள். அரசியலும் அதே அளவில் அழகியலும் சேர்ந்த கலவை மணி கௌலின் ஆவணப் படங்கள். தமிழக அளவில் அருண்மொழி, ஆர்.ஆர்.சீனிவாசன், ஆர்.பி.அமுதன், சஷிகாந்த், அம்ஷன் குமார், கே.ஹரிஹரன், ரவி சுப்பிரமணியன், லீணா மணிமேகலை ஆகியோரைச் சொல்லலாம். இவர்கள் மட்டுமில்லாமல் இளைய தலைமுறையில் நிறைய பேர் குறிப்பிட்டுச் சொல்லும்படி ஆவணப்படத்துறையில் இயங்கி வருகிறார்கள். டிஜிடல் யுகம் ஆவணப்படத்துறையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றங்களை உண்டாக்கியுள்ளதை இந்த நல்ல மாற்றத்திற்கான காரணங்களில் ஒன்றாகச் சொல்லலாம்.     

 

 

[நவம்பர் 2017 அந்திமழை இதழில் வெளியான நேர்காணலின் விரிவான வடிவம்.   எழுத்தாக்கம் : சரோ லாமா.] click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...