???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி 0 வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது: குடியரசு தலைவருக்கு 18 கட்சிகள் கோரிக்கை 0 2018-2019 ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் 30-ந் தேதியுடன் நிறைவு 0 தமிழகத்தில் இதுவரை 5 லட்சத்து 58 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்பு 0 போதைப்பொருள் வழக்கில் ரகுல் பிரீத்சிங், தீபிகா படுகோனே விசாரணைக்கு ஆஜராக உத்தரவு 0 கட்டணம் வசூலித்த 9 பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு 0 இந்திய கலாசார ஆய்வுக்குழுவில் தமிழர் வேண்டும்: முதலமைச்சர் கடிதம் 0 தனியார் பள்ளிகளிலிருந்து அரசு பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களை கணக்கெடுப்பு 0 மத்திய ரயில்வே இணையமைச்சர் கொரானாவால் உயிரிழப்பு 0 குட்கா விவகார திமுக மனு மீது இன்று இடைக்கால உத்தரவு! 0 மொழித்திமிர் காட்டிய அதிகாரி இந்தி பூமிக்கு மாற்றப்பட வேண்டும்: ராமதாஸ் 0 மக்களைக் காக்க வேண்டிய அரசு கொல்லும் அரசாக மாறிவிட்டது: மு.க.ஸ்டாலின் 0 இடைநீக்கத்தை ரத்து செய்யும் வரை நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு 0 நவம்பர் முதல் வாரம் கல்லூரிகள் திறப்பு 0 மாணவர் சேர்க்கை தகவல்களை அக்டோபர் 7-ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும்: பள்ளிக்கல்வித்துறை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

’ஈழத்தமிழர் நலன் பற்றி திமுக பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதற்கு சமமானது’: ராமதாஸ்

Posted : புதன்கிழமை,   டிசம்பர்   18 , 2019  02:20:11 IST


Andhimazhai Image

ஈழத்தமிழர் நலன் பற்றி திமுக பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதற்கு சமமாகும் என்று பாமக நிறுவனர்  மருத்துவர் ராமதாஸ்  விமர்சித்துள்ளார்.

 

அவர் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு:

 

”காஞ்சிபுரத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றுப் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஈழத்தமிழர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி துரோகமிழைத்து  விட்டதாக குற்றஞ்சாட்டியிருக்கிறார். இலங்கையில் ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு துணை நின்றதுடன், அதற்கு கூலியாக புதிய அமைச்சரவையில் கூடுதல் துறைகளை  பெற்றுக் கொண்ட திமுக, ஈழத்தமிழர் நலன் குறித்து பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதற்கு சமமானது.

 

குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு அளித்ததன் மூலம் ஈழத்தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை கிடைப்பதை பாட்டாளி மக்கள் கட்சி தடுத்து விட்டது என்பது தான் மு.க.ஸ்டாலினின் குற்றச்சாட்டு ஆகும். ஈழத் தமிழர்களின் கோரிக்கைகள் குறித்து அவருக்கு சரியான புரிதல் இருந்திருந்தாலோ, ஈழத்தமிழர்களின் நலனில் அக்கறை இருந்திருந்தாலோ இப்படி ஒரு கருத்தை அவர் கூறியிருந்திருக்க மாட்டார். ஈழத் தமிழர்களின் தேவை இந்தியக் குடியுரிமை அல்ல. அவர்களின் கோரிக்கை இந்தியாவில்  கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை மற்றும் கண்ணியமான வாழ்க்கைக்கான உத்தரவாதம் அல்லது  இந்தியா அல்லது இலங்கை ஆகிய இரு நாடுகளிலும் வாழ்வதற்கான இரட்டைக் குடியுரிமை தான்.

 

2009-ஆம் ஆண்டு இலங்கைப் போரில் ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்களை படுகொலை செய்ய துணை நின்றதால் ஏற்பட்ட அவப்பெயரில் இருந்து வெளிவர வேண்டும் என்று நினைத்த அப்போதைய முதலமைச்சரும், திமுக தலைவருமான கலைஞர், அந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில், ஈழத்தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும்  என்று தீர்மானம் இயற்றச் செய்தார். அதனடிப்படையில் அப்போதைய பிரதமருக்கு கடிதம் ஒன்றையும்  கலைஞர் எழுதினார். ஆனால், அதற்கு உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு  எழுந்தது. இதையடுத்து ஈழத்தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை என்ற முழக்கத்தை திமுக கைவிட்டது.

 

ஈழத்தமிழர்களைப் பொருத்தவரை இந்தியாவில் குடியுரிமை பெற்று விட்டால், அதன்பின்னர் ஈழத்திற்கு திரும்ப முடியாது; தங்களின் தாயகமான ஈழத்தை நிரந்தரமான இழந்து விடுவோம் என அஞ்சுகின்றனர். அதனால் தான் ஐரோப்பா, கனடா போன்ற நாடுகளுக்கு சென்றவர்களில் பெரும்பான்மையானோர் இன்னும் குடியுரிமை பெறாமல் வசிக்கின்றனர். அதேநேரத்தில் என்றாவது ஒரு நாள் தாயகம் திரும்ப இயலும் என்று நினைக்கும் ஈழத்தமிழர்கள், அதுவரை தமிழகத்தில் தாங்கள் கண்ணியமாக வாழ்வதற்கு ஏற்ற வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்று கோருகின்றனர். அதனால் தான் ஈழத்தமிழர்களை பொறுத்தவரை அவர்களுக்கு எத்தகைய குடியுரிமை வேண்டும் என்பதை, அவர்களின் விருப்பம் அறிந்து அதற்கேற்றவாறு தீர்மானிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது.

 

ஆனால், தமிழக அரசியல் வரலாற்றையே அறியாத மு.க.ஸ்டாலின், ஈழத்தமிழர்களின் எதிர்பார்ப்பை அறியாமல், ஏதோ அவர்களைக் காக்க வந்த தேவதூதனே தாம் தான் என்பதைப் போல பேசுகிறார்.  ஒருவேளை மு.க.ஸ்டாலின் மூச்சு முட்ட பேசுவதைப் போல ஈழத்தமிழர்களின் தேவை இந்தியக் குடியுரிமை என்றாலும் கூட,  அதற்காக இலங்கைப் பிரச்சினை தீவிரமடைந்த 1983-ஆம் ஆண்டுக்கு பிறகு திமுக தமிழகத்தை ஆட்சி செய்த 12 ஆண்டுகளிலும், மத்திய அரசில் அங்கம் வகித்த 18 ஆண்டுகளிலும் சிறு துரும்பைக் கூட அசைக்கவில்லை என்பது தான் உண்மை. இதை திமுகவால் மறுக்க முடியுமா?

 

2009-ஆம் ஆண்டில் ஈழத்தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று முப்பெரும் விழாவில் தீர்மானம் நிறைவேற்றிய திமுக, அதன்பின்னர் 2012-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12-ஆம்  தேதி சென்னையில் நடைபெற்ற ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாட்டிலும் அதேபோன்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. இத்தகைய தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இரு தருணங்களிலும், மத்திய அமைச்சரவையில் திமுக அங்கம் வகித்தது. இப்போது குடியுரிமைச் சட்டத்தில் எத்தகைய திருத்தங்களை செய்ய வேண்டும் என்று திமுக கூறுகிறதோ, அத்தகைய திருத்தங்களை அப்போதே காங்கிரஸ் கட்சிக்கு அழுத்தம் கொடுத்து நிறைவேற்றச் செய்திருக்கலாம். அதை செய்யாதது ஏன் என்பதை ஸ்டாலின் விளக்குவாரா?

 

ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று இப்போது முழங்கும் திமுக, தங்கள் ஆட்சியின் போது தமிழகத்திற்கு அகதிகளாக வந்த ஈழத்தமிழர்களை மரியாதையுடனாவது நடத்தியதா? திமுக ஆட்சியில் அகதிகளாக வந்த ஈழத்தமிழர்கள் அனைவரும் சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்படும் வகையில் தான் நடத்தப்பட்டனர். அவர்கள் அனைவரும் முகாம்களின் அடைத்து வைக்கப்பட்டனர்.

 

ஈழத்தமிழர்களை கொடுமைப்படுத்துவதற்கான சிறப்பு முகாம் முதன்முதலில் கலைஞர் ஆட்சியில் தான் 1990-ஆம் ஆண்டு வேலூர் கோட்டையில் உள்ள திப்பு மகாலில் தொடங்கப்பட்டது. விடுதலைப்புலிகளை அடைத்து வைக்க இந்த முகாம் அமைக்கப்பட்டதாக அறிவித்த திமுக அரசு, அப்பாவி ஈழத்தமிழ் இளைஞர்களுக்கு கல்வியும், வேலைவாய்ப்பும் வழங்குவதாக பொய்யான வாக்குறுதிகளை வழங்கி, அழைத்து வந்து வேலூர் முகாமில் அடைத்தது. அதை எதிர்த்து போராட்டம் நடத்திய ஈழத்தமிழ் இளைஞர்கள் மீது தேவாரம் தலைமையிலான தனிப்படையை அனுப்பி துப்பாக்கிச்சூடு நடத்தி இரு இளைஞர்களை சுட்டுக் கொன்றது திமுக அரசு தான். அதுமட்டுமின்றி, 130 இளைஞர்களை தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்ததும் திமுக அரசு தான்.

 

ஈழத்தமிழ் அகதிகளுக்கு திமுக ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட கொடுமைகள் இத்துடன் நின்றுவிடவில்லை. 2009-ஆம் ஆண்டில் இலங்கைப் போர் முடிவடைந்த நிலையில், செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அகதிகள் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று உண்ணாநிலை இருந்தனர். இந்த விஷயத்தில் நீதிமன்றம் தலையிட்ட பிறகு ஒரு சில அகதிகள் மட்டும் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ளவர்களும் தங்களை விடுதலை செய்யக்கோரி 2010-ஆம் ஆண்டு ஜனவரி இறுதியில், சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கினர். அப்போது 2010-ஆம் ஆண்டு பிப்ரவரி 2-ஆம்  தேதி செங்கல்பட்டு சிறப்பு முகாம்களுக்குள் 150 காவலர்களை அனுப்பிய திமுக அரசு, அவர்கள் மீது கொலைவெறித் தாக்குதலை நடத்தியது. இந்தத் தாக்குதலில் பலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.

 

இந்தத் தாக்குதலில் காயமடைந்த 15 பேர் மீது காவலரை கடத்தி சிறைவைத்ததாக பொய்வழக்கு பதிவு செய்து வேலூர் சிறையில் அடைத்த கொடுமையை செய்தது திமுக அரசு தான். உலகிலேயே   அனைத்தையும் இழந்த அகதிகள் மீது துப்பாக்கிச் சூடும், கொலைவெறித் தாக்குதலில் நடத்திய பெருமை திமுக அரசுக்கு தான் உண்டு. இவர்கள் தான் ஈழத்தமிழர்களுக்காக இரக்கப்படுகிறார்களாம்.

 

ஈழத்தமிழர்களுக்காக இப்போது நீலிக்கண்ணீர் வடிக்கும் திமுக, ஈழத்தில் போர் நடந்த போது நடத்திய நாடகங்களும், அடித்த பல்டிகளும் மறக்கவோ, மன்னிக்கவோ முடியாதவை. இலங்கையில் கொத்துக் கொத்தாக தமிழர்கள் கொல்லப்பட்ட போது கலைஞர் நடத்திய 3 மணி நேர உண்ணாவிரத நாடகத்தை மறக்க முடியுமா?

 

இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்படும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டதால் தான் சாகும்வரை உண்ணாவிரதத்தை கைவிட்டேன் என்று கூறிய அப்போதைய முதலமைச்சர் கலைஞரிடம், ‘‘இலங்கையில்  தமிழர்கள் தொடர்ந்து கொல்லப்படுகிறார்களே?’’ எனக் கேட்ட போது, ‘‘மழை விட்டு விட்டது.... தூவானம் விடவில்லை’’ என்று நக்கல் செய்ததை மன்னிக்க முடியுமா?

 

இலங்கையில் போரை நிறுத்த வேண்டும் என்பதற்காக முத்துக்குமார் என்ற இளைஞர் சென்னையில் தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்தார். தனது உடலையே ஆயுதமாக்கி, ஈழப்போருக்கு எதிராக போராட வேண்டும் என்று அவர் கடிதம் எழுதியிருந்தார். அதன்படி போராட தமிழக இளைஞர்கள் ஆயத்தமான போது,  முத்துக்குமாருக்கு தமிழக மக்கள் அஞ்சலி செலுத்த விடாமல் திமுக அரசு தடுத்ததையும், இறுதி ஊர்வலத்தில் கூட தடியடி நடத்தியதையும் மறக்க முடியுமா... மன்னிக்க முடியுமா?

 

இலங்கைப் போரை தடுத்து நிறுத்தக் கோரி தமிழகத்தில் 18 பேர் உயிர்த்தியாகம் செய்ததை திமுக அரசு கொச்சைப்படுத்தியதை மறக்க முடியுமா?

 

இலங்கைப் போரில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்காக உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வேதனைப்பட்டுக் கொண்டிருந்த போது, தில்லியில் முகாமிட்டு, திமுகவுக்கு கூடுதல் அமைச்சர் பதவிகள் வேண்டும் என்று காங்கிரஸ் தலைமையிடம் கலைஞர் பேரம் நடத்தியதை மன்னிக்க தமிழக மக்கள் ஒருபோதும் தயாராக இல்லை.

 

இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதன் துயரம் கூட மறையாத நிலையில், திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழியும், டி.ஆர். பாலுவும் இராஜபக்சேவின் விருந்தினர்களாக அவரது மாளிகைக்கு சென்று விருந்து உண்டதுடன், கொலைகாரனின் கைகளில் இருந்து பரிசுப்பெட்டிகளையும் வாங்கி வந்தார்களே.... அதை தமிழர்கள் மன்னிப்பார்களா?

 

இலங்கை அரசால் பல ஆண்டுகள் சிறைக் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு, அதனால் பக்கவாதம்  உள்ளிட்ட உடல்நல பாதிப்புகளுக்கும், மன அழுத்தத்துக்கும் ஆளாக விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் சிகிச்சைக்காக 2010&ஆம் ஆண்டு ஏப்ரல் 16&ஆம்  தேதி இரவு சென்னைக்கு வந்த போது, 80 வயது மூதாட்டி என்றும் பாராமல் விமானத்தை விட்டு, இறங்குவதற்கு கூட அனுமதிக்காமல் திருப்பி அனுப்பி, அவரது மறைவுக்கு வழிவகுத்தது கலைஞர் தலைமையிலான திமுக அரசு தானே? இதைவிட மாபாதகச் செயல் வேறு ஏதேனும் இருக்க முடியுமா?

 

ஈழத்தமிழர் விவகாரத்தில் ஏற்பட்ட அவப்பெயரை துடைக்கும் நோக்கத்துடன் 2012&ஆம் ஆண்டில் டெசோ அமைப்பை மீண்டும் ஏற்படுத்தினார் அப்போதைய திமுக தலைவர் கலைஞர். அந்த அமைப்பின் சார்பில் 2012 ஆகஸ்ட் 12-ஆம் தேதி சென்னை இராயப்பேட்டையில் தமிழீழ ஆதரவு மாநாடு நடத்தப் படும் என்று ஜூலை மாதத்தில் திமுக அறிவித்தது. அடுத்த சில நாட்களில், அதாவது ஜூலை 15-ஆம் தேதி திமுக தலைவர் கலைஞரை, அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் சந்தித்து பேசினார். அதுவரை தமிழீழ கோரிக்கையை வலியுறுத்துவதற்காகத் தான் தமிழீழ ஆதரவு மாநாடு நடத்தப் போவதாக கூறி வந்த கலைஞர், இந்த சந்திப்புக்குப் பிறகு மாநாட்டின் தலைப்பில் கூட தமிழீழம் இருக்கக்கூடாது என்று கருதி மாநாட்டின் பெயரையே ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாடு என்று மாற்றினார். அதுமட்டுமின்றி மாநாட்டில் தமிழீழம் என்ற வார்த்தையே உச்சரிக்கப்படவில்லை; தமிழீழத்தை வலியுறுத்தி தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. இதை விட மோசமானதொரு கொத்தடிமைத்தனம் இருக்க முடியுமா? இதைவிட பெரிய துரோகத்தை ஈழத்தமிழருக்கு செய்ய முடியுமா?

 

அவ்வளவு ஏன்? விடுதலைப் புலிகள் இயக்கமே இல்லாமல் போய்விட்ட நிலையில், அந்த இயக்கத்தால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கடந்த சில வாரங்களுக்கு முன் நாடாளுமன்ற மக்களவையில் திமுகவின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு பேசினாரே? ஈழத்தமிழர் விடுதலைக்காக போராடிய அமைப்பை இதைவிட மோசமாக கொச்சைப்படுத்த முடியுமா?

 

1992-ஆம் ஆண்டில் தமிழகத்தில் வாழும் ஈழத்தமிழர்களை கட்டாயப்படுத்தி இலங்கைக்கு அனுப்ப  முயற்சிகள் நடந்ததன. அதை திமுகவும், அதன் தலைமையும் வேடிக்கை தான் பார்த்துக் கொண்டிருந்தன. மத்திய, மாநில அரசுகளின் இந்த நடவடிக்கைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து ஈழத்தமிழர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவதை தடுத்து நிறுத்தியது நானும், தமிழ் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் அவர்களும் தான். அதே ஆண்டில் தமிழர் வாழ்வுரிமை மாநாடு நடத்தி ஈழத்தமிழர் நலனுக்காக குரல் கொடுத்ததும் பாட்டாளி மக்கள் கட்சி தான்.

 

திமுகவைப் பொருத்தவரை ஈழத்தமிழர் நலனுக்காக எதையும் செய்ததும் இல்லை.... செய்யப் போவதும் இல்லை. உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க அஞ்சி, தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்திற்கு கஜினி முகமதுவைப் போன்று படையெடுத்த திமுக, இப்போது ஒரு சில இடங்களிலாவது வெல்ல வேண்டும் என்பதற்காக இப்போது ஈழத்தமிழர்கள் மீது அக்கறை கொண்டவர்களைப் போல நடிக்கிறார்கள். திமுகவின் இந்த புதிய நாடகம் தமிழக மக்களிடம் எடுபடாது; தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள்.

 

ஈழத்தமிழர் நலன்களுக்காக கடந்த 36 ஆண்டுகளாக மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியிலிருந்த  போதெல்லாம் துரும்பைக் கூட அசைக்காதது தான் திமுக. பல நேரங்களில் தமிழீழம் என்ற வார்த்தையை உச்சரிக்கக்கூட அஞ்சிய இயக்கம் தான் அது. இப்படியாக ஈழத்தமிழர் நலனில் ராஜபக்சேக்களாகவும்,  ஜெயவர்தனேவாகவும் இருந்த இப்போது பிரபாரகரன் வேடம் போட்டு மக்களை ஏமாற்றத் துடிக்கிறது. ஈழத்தமிழர்களுக்கு திமுக இழைத்த துரோகங்கள் குறித்து பொது இடத்தில் விவாதம் நடத்துவதற்கு நான் தயார்.... மு.க.ஸ்டாலின் தயாரா?”

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...