![]() |
டிசம்பர் 2-இல் தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் சங்கம் மறியல் போராட்டம்Posted : சனிக்கிழமை, நவம்பர் 28 , 2020 03:04:47 IST
![]() மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற டிசம்பர் 2-ஆம் தேதி தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள் முன் மறியல் போராட்டம் நடத்தவுள்ளதாக தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:
“2016 மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டப் பிரிவு-35ன்படி தனியார்துறை பணிகளில் குறைந்தபட்சம் 5% இடங்களை வழங்க உத்தரவாதப்படுத்த வேண்டும். இதற்காக, அரசு தனியார் துறையினருக்கு ஊக்கத்தொகை வழங்கலாம் என விதி உள்ளது. ஆனால், தமிழக அரசு இதனை செய்ய மறுக்கிறது. ஊக்கத்தொகை வழங்காமல், தனியார் துறைகளில் பணிகள் வழங்க, சிறப்பு சட்டம் இயற்ற வேண்டுமென்ற கோரிக்கையையும் தமிழக அரசு பரிசீலிப்பதாக தெரியவில்லை.
அரசுத்துறைகளில் பின்னடைவு காலிப்பணி!
அரசுத்துறைகளில் பின்னடைவு காலிப்பணியிடங்களை 3 மாத காலத்திற்குள் நிரப்ப 08/10/2013 அன்று உச்சநீதிமன்ற முதன்மை அமர்வு தீர்ப்பளித்தது. தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் உள்ள பின்னடைவு காலிப்பணியிடங்களை முழுமையாக அறிவித்து இதுவரை நிரப்பப்படவில்லை. எனவே, இதுகுறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டு, உடனடியாக தமிழக அரசு நிரப்ப வேண்டும்.
உதவித்தொகை குறைந்தபட்சம் ரூ.3000!
அருகாமை தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களில்கூட ரூ.3,000/-க்கும் மேல் மாத உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படுகிற நிலையில், நலத்திட்டங்களில் முன்னோடி மாநிலமென பெருமை பேசும் அதிமுக அரசு கண்டுகொள்ள மறுக்கிறது. கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காரணமாக குறைந்தபட்சம் செய்து வந்த அத்துக்கூலி தொழில்களையும்கூட இழந்து தவிக்கிற நிலையில், மாத உதவித்தொகையை குறைந்தபட்சம் ரூ.3,000/-ஆகவும், கடும் ஊனமுற்றவர்களுக்கு ரூ.5,000/- ஆகவும் தமிழக அரசு உயர்த்தி வழங்க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
டிச-2 மாநிலம் முழுவதும் மறியல்!
சட்டபூர்வ இந்த 3 முக்கிய கோரிக்கைளை தமிழக அரசு கண்டுகொள்ளாமல் புறக்கணித்து வருகிறது. எனவே, கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி டிச-2 புதன் கிழமை தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள் முன் மறியல் போராட்டம் நடத்திட தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் முடிவு செய்துள்ளது. இப்போராட்டத்திற்கு அனைத்து ஜனநாயக சக்திகளும் ஆதரவளிக்க எமது சங்கம் கேட்டுக்கொள்கிறது.” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
|