???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா வைரஸ் தாக்குதல்: பலி உயர்வு 100ஐக் கடந்தது! 0 ஆந்திராவில் மேல்சபை கலைப்பு: அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் 0 உமர் அப்துல்லாவின் படம் வேதனையளிக்கிறது: மு.க.ஸ்டாலின் 0 கருணை மனு நிராகரிப்புக்கு எதிரான முகேஷின் மனு இன்று விசாரணை 0 கேரளாவில் CAA-க்கு எதிராக 620 கி.மீ மனிதச் சங்கிலி! 0 திருச்சி: பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை 0 துக்ளக் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி: த.பெ.தி.க.வினர் கைது 0 ஏர் இந்தியா விற்பனை: சுப்பிரமணியன் சுவாமி எதிர்ப்பு 0 'அடிக்க வேண்டும்': ஸ்டாலின் பேச்சால் கிளம்பிய சர்ச்சை! 0 பிரதமருக்கு அரசியல் சாசன பிரதியை அனுப்பியது காங்கிரஸ்! 0 எந்த பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகாது: பிரதமர் மோடி கருத்து 0 சீனாவில் கொரோனா நோய்க்கு 56 பேர் பலி! 0 தமிழகம் பட்டினி பிரதேசமாக மாறும்: வைகோ 0 பெரியார் சிலை உடைப்பு: ஒருவர் கைது 0 ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

"மக்களிடம் வரவேற்பு கிடைத்த பிறகு படத்துக்கு எதிராக மீடியாவால் எழுத முடியாது" - இயக்குநர் ராம்

Posted : திங்கட்கிழமை,   நவம்பர்   11 , 2019  06:33:34 IST


Andhimazhai Image
நான் லோ பட்ஜெட் படம் எடுக்கவில்லை. என் கதைக்கு எந்த பட்ஜெட் தேவையோ அதைச் செய்தேன். ஒரு படத்தின் கதை சுருக்கத்தை வைத்தே அது என்ன பட்ஜெட்டில் எடுக்கப்படும், அதன் பார்வையாளர்கள் யார்? எந்த வயதினருக்கானது இது? எந்த ஊர்களில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதை எல்லாம் முடிவு செய்து விடலாம்.
 
தங்க மீன்கள் கதையை எடுத்துக் கொண்டால் - தனியார் கல்வி ஒரு சிறு குடும்பத்தை எப்படிப் படுத்தி எடுக்கிறது என்பதுதான் கரு. அதைச் சொல்ல ஒரு அப்பா அவருக்கு ஒரு மகள், இருவரிடையே இருக்கும் பாசம், அதைச் சொல்ல ஒரு சிறு வீடு, வெட்டவெளி, ஒரு பாட்டு என அது ஒரு அவுட்லைனைத் தருகிறது. அப்படியானால் இதன் பார்வையாளர்கள்? இருபத்தெட்டு வயதுக்கு மேற்பட்ட, குழந்தைகள் வைத்திருக்கும் இளம் பெற்றோர்.
 
இதை எப்படி புரோமோ செய்வது?  மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும்தான் தெரியும் – முத்தம் காமத்தில் சேராதது என்று..இந்த வரிதான் பார்வையாளர்களை அரங்குக்கு வர வைத்தது. வேலைக்கு போய்விட்டு வரும் அப்பா – அவரின் மழலை மகள் இவர்களுக்கிடையே உள்ள மெலோ டிராமாவை சொல்லும் படத்துக்கு ஆடியன்ஸ் யார்? நகரங்களில் வேலைக்கு செல்லும் நடுத்தரவர்க்கக் குடும்பங்கள். இக்கதையை லோ பட்ஜெட்டில் பண்ண வேண்டும். ஆர்ட்டிஸ்ட் போட்டால் செலவு அதிகமாகும் என்றெல்லாம் திட்டம் போட்டு சென்னை, செங்கல்பட்டு, கோவை, மதுரை, திருநெல்வேலியில் ரிலீஸ் செய்யலாம் என அதற்கு ஏற்ற பட்ஜெட் போட்டோம்.
 
இந்தப் படம் எடுத்து விட்டு இரண்டு வருடங்களாக ரிலீஸ் செய்யக் கஷ்டப்பட்டோம். ஒரு டைரக்டராக இருந்தாலும் இந்தப் படத்தை ரிலீஸ் செய்வதற்குப் பலரையும் போய்ப் பார்த்து சதிஷ்குமாரை வாங்க வைத்து ரிலீஸ் செய்தோம்.
 
இதற்கு பேப்பர் விளம்பரம் மூலமாக புரோமோ செய்தோம். ஆன்லைனில் பேஸ்புக்கில் விளம்பரம் செய்தோம். புரோமோ கூட எந்த மாதிரி பட்ஜெட்டுக்கு எந்த வகையில் விளம்பரம் என்று இருக்கிறது. அதுவும் கூட நமது நண்பர்கள் வட்டம் மூலம் டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பரப்புவதுதான். எல்லாப் படங்களுக்கும் டிவி விளம்பரம் எல்லாம் பண்ண முடியாது.
 
ஒரு படத்தை 2.5 கோடிக்குள் முடித்தால்  25 லட்சம் செலவில் புரோமோட் செய்துவிட முடியும். கமர்சியல் படத்தின் விசயத்தையே எடுத்து சின்ன பட்ஜெட்டில் பண்ணினால் தியேட்டருக்கு யாரையும் வரவைக்க முடியாது. கில்லி, பேட்ட படங்களை இரண்டு கோடி பட்ஜெட்டில் புது ஆட்களை வைத்து எடுத்தால் பார்க்கவே மாட்டார்கள். இதுவரை பார்க்காத unique experience இருந்தால்தான் சின்ன பட்ஜெட் படத்துக்கு ரசிகர்கள் வருவார்கள்.
 
ஆக பட்ஜெட் பிரச்சினை இல்லை. என்ன கண்டென்ட் தரப் போகிறோம் என்பதுதான் முக்கியம். கோலி சோடா என்றொரு படம். ரசிகர்கள் தங்கள் இருபத்தைந்து ஆண்டு அனுபவத்தில் சின்னப் படத்தில் இப்படி ஒரு புதுமையான கதையைப் பார்த்திருக்க மாட்டார்கள். காக்கா முட்டை – காசில்லாத ஒரு பையனின் ஏக்கம் எப்போதும் சொல்லப்பட்ட விசயம்தான் என்றாலும் சொன்ன விதமும் பின்னணியும் முற்றிலும் புதியது. அந்த ஏக்க உணர்வை எமோசனலாக மக்களை ஒன்ற வைத்ததில் அந்தப் படம் வெற்றிபெற்றது.
 
பீட்சா படம் முற்றிலும் வித்தியாசமானது. ஒரு திரில்லர் கதைதான் என்றாலும், பீட்சா டெலிவரி பண்ணும் இளைஞர் புதிய விஷயம். அதற்கு போஸ்டர் டிசைன் பண்ணியது, டைட்டில் வைத்தது எல்லாமே அதை வெற்றிபெற வைத்தது. படத்துக்கு வைக்கும் டைட்டிலும் முக்கியமானது.
 
பெரிய மாஸ் படங்களுக்கு ஹீரோவின் பெயரைப் போட்டு அவரின் முகத்தைப் போட்டாலே போதும். ஆனால் கண்டென்ட் மூலம் படத்தினை உருவாக்கும் நாம் அந்த கண்டென்ட்டை மக்களுக்குக் கொண்டு சேர்க்க டைட்டில் உதவ வேண்டும்.
 
கற்றது தமிழ் என்ற டைட்டில் வைக்கும்போது தவறு செய்தேன் – அது கண்டெண்டை சொல்லாமல் ஏதோ தமிழ் படித்த ஒருவனின் கதை எனத் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது. அதன் பின் சுதாரித்துக் கொண்டு டைட்டில் வைக்கும்போது கவனமாயுள்ளேன்.
 
டீசர் வெட்டும்போது படத்தின் உள்ளடக்கத்தை சொல்வதாக இருக்கும்படி தயாரிக்க வேண்டும். தங்க மீன்கள் படத்தை ஆக்சன் படம் போல் டீசர் வெட்டி ஏமாற்ற முடியாது.
 
முதலில் குறைந்த எண்ணிக்கையில் ரிலீஸ் பண்ணி விட்டு, அது ஓடுவதை வைத்து அடுத்த வாரத்தில் தியேட்டர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இருநூறு தியேட்டரில் ரிலீஸ் பண்ணி விட்டு நூறு தியேட்டரில் அடுத்த வாரம் காலியாக இருந்தால் படம் பிளாப் என்ற பெயர் கிடைக்கும். எனவே அப்படி செய்யாமல் குறைவான எண்ணிக்கையில் ரிலீஸ் பண்ணிவிட்டு அடுத்தடுத்து அதிகரிப்பது புத்திசாலித்தனம். தரமணிக்கு மிகக் குறைந்த தியேட்டரில் வெளியிட்டு, டிக்கெட் கிடைக்கவில்லை என்ற பேச்சு வரவேண்டும் என  செய்தோம். வெள்ளிக்கிழமையிலிருந்து அடுத்தடுத்த இரண்டு விடுமுறை நாள்களிலும் படிப்படியாக தியேட்டரை அதிகரித்து அடுத்த வெள்ளி அன்று இரு மடங்காக்கி படத்தின் வெற்றியை உறுதிப்படுத்தினோம்.
 
தங்கமீன்கள் படத்தை கமலாவில் ஒரு ஷோ போட்டோம். அது நிரம்பியதால் அடுத்து இரண்டு ஷோ தந்தார்கள். அதுவும் நிரம்பவே நான்கு காட்சிகள் ஓட்டி படம் பிக்கப் ஆனது. எங்கிருந்துதான் மக்கள் வந்தார்கள் என்றே தெரியவில்லை என்றார்கள். ஆனந்த யாழை என்ற பாட்டும் தங்கமீன்கள் என்ற டைட்டிலும் எல்லோரையும் வரவைத்தன. படத்தில் என்ன இருந்ததோ அதைத்தான் பேப்பரில் விளம்பரமாகத் தந்தோம் – அப்பா-மகள் பள்ளி – இவைதான் தொடர்ந்து வந்தது. 
 
தரமணி படத்தின் ஆடியன்ஸ் யார் என்று தெரிந்தது. பத்தாவது முடித்த இளைஞர்கள் முதல் யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். அழியாத கோலங்கள் பார்த்த தலைமுறையையும், காதலில் இருப்பவர்களையும், கல்யாணம் ஆனவர்களையும் ஈர்க்கும். அதனால் அதன் மார்க்கெட் அதிகம். அதைத் தவிர ஆன்டிரியா என்றொரு நடிகை. அந்த நடிகைக்கு படத்துக்கு வரவைக்கும் ஆற்றல் உண்டு. அவங்களை வைத்து வெளியிட்ட டீசர், டிரைலர் இவை இரண்டும் ஓர் ஆண்டு இடைவெளியில் வெளிவந்தன. ஆனாலும் மக்கள் மறந்து விடாமல் இருந்தனர். சென்சாரில் ஏ தந்தனர். அதனால் பிரச்சினை இல்லை என்று தைரியம் தந்தார் தயாரிப்பாளர். ஏ என்பதன் அருகில் ஆண்ட்ரியா படத்தை வைத்து என்னுடைய பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட டீசர் படத்தை எதிர்பார்க்க வைத்துவிட்டது.
 
ஏ போட்டு ஆண்டிரியாவை காட்டியதால் படம் ஆண் பெண் உறவைக் குறித்தது என்பதை சொல்லிவிட்டது. அடல்ட்ரியும் இருந்தது. அதை வேறு மாதிரி சொல்லியிருந்தோம். வயது வந்தவர்கள் அதனை அரங்குக்கு வந்து பார்க்கட்டும் என்ற எதிர்பார்ப்பை ஒரு டீசரில் செய்துவிட்டோம். ஏ பெரியதாக போட்டு ஆண்ட்ரியாவை போஸ்டரில் வைத்தால்  நாகர்கோவிலிலும் ரசிகர்களை தியேட்டருக்கு வரவைக்க முடியும். முப்பதாண்டுகளுக்கு முன் வைசாலி படம் இப்படித்தான் இளைஞர்களை தியேட்டருக்கு வரவைத்தது. பேப்பர் விளம்பரங்களில் அரசியல் செய்திகளை மீம்ஸ் மாதிரி தந்து கொண்டே இருந்தோம். அப்போது பரபரப்பாக இருந்த கீழடி ஆய்வு, மோடி கல்விக் கொள்கை பற்றிய பேச்சு, போராடினாலே கைது இவற்றை எல்லாம் பேப்பரில் போட்டு அதன் பின்னணியில் உறவுகளைப் பற்றிய கதை என்று விளம்பரம் செய்தோம். அந்த அரசியல் கருத்துக்களோடு ஒன்றுபட்டவர்கள் இதை சமூக ஊடகங்களில் ஷேர் செய்தார்கள்.
 
காசு கொடுத்தெல்லாம் டிவிட்டரில் ஒரு படத்தை புரோமோ செய்துவிட முடியாது. ஆனால் நல்ல கண்டென்ட்டை நீங்கள் தந்தால் அவர்களே இவற்றைப் பற்றிப் பதிவு போடுவார்கள்.
 
பேரன்பு படத்துக்கு ஆரம்பத்தில் விளம்பரமே தரவில்லை. 2017 இல் படத்தை ஆரம்பித்து 2019 இல்தான் ரிலீஸ் செய்தோம். முதலில் சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்பினோம். இதைச் செய்வதன் மூலம் டிஜிட்டலில் அதற்கு பெரிய எதிர்பார்ப்பை உருவாக்க முடியும். தமிழ்நாட்டில் கடைசியாக ரிலீஸ் செய்யலாம். அதோடு சேர்த்து கேரளாவில்-மிகப்பெரிய ஸ்டார் நடித்தது-ரிலீஸ் செய்தால் படம் நன்கு போகும் என்ற திட்டமிடலோடுதான் இவற்றை செய்தோம். மம்மூட்டி படம் ஷாங்காய், ஆம்ஸ்டர்டாம் விழாக்களுக்கு போய் ஆண்டு பலவாகி  விட்டன. இப்போது அவர் படம் போவது அங்கே பெரும் எதிர்பார்ப்பை பேரன்புவிற்கு உருவாக்கி விட்டது. நாங்கள் இங்கே எதிர்பார்த்தது சிட்டி,செங்கல்பட்டு, கோவை. அடுத்து கேரளா, ஓவர்சீஸ். ஓவர்சீஸில் மம்மூட்டிக்கு – குறிப்பாக வளைகுடாவில்-நல்ல மார்க்கெட் இருக்கிறது. 25 லட்சமும் கேரளா சேட்டிலைட் உரிமமும் மம்மூட்டியின் சம்பளமாகத் தரப்பட்டது. இந்தப் படம் சேட்லைட்டில் விலை போகுமா எனத் தெரியாது. மம்மூட்டி எல்லாவித பாத்திரங்களிலும் நடித்துவிட்டவர். அவர் ஒரு சின்ன படத்தில் நடிக்க வேண்டுமானால் இதுவரை அவர் ஏற்காத பாத்திரமாகச் சொல்ல வேண்டும். தமிழில் ஒரு நடிகரிடம் கதையினை விவரித்தபோது, ‘அய்யய்யோ..குழந்தைக்கு சுய இன்பம் செய்து விட வேண்டும், பேட் மாற்றவேண்டும்...என் இமேஜ் என்னாவது” எனப் பின்வாங்கினார். மம்மூட்டி இந்த மாதிரி பாத்திரத்தில் இதுவரை நடிக்காததால் ஒத்துக் கொண்டார். அங்குள்ள மீடியாக்கள் மம்மூட்டி நடிப்பதைப் பற்றி ஒரு வருடமாக எழுதின. அமேசான் போன்றவை அவர்களாக முயற்சி செய்து விலை பேசினார்.
 
இந்தப் படத்தில் நாங்கள் எதிர்பார்த்த வருமானம் ஏழு கோடி. அதில் தமிழ்நாட்டில் எதிர்பார்த்தது அதிகபட்சம் ஒரு கோடிதான். தொண்ணூற்று ஐந்து லட்சம் தமிழ்நாடு தியேட்டர்சில் கிடைத்து விட்டது. ஒரு படத்தை எப்படி மார்க்கெட் செய்வது என்பதை பக்காவாக பிளான் பண்ணினோம்.
 
பிற மார்க்கெட்டுகளில் நம் படத்தை எப்படிக் கொண்டு செல்வது என்பதை கண்டறிய வேண்டும்.
 
தரமணி படத்தை சக்சஸாகப் பண்ணியதற்கு தயாரிப்பாளரின் ஒத்துழைப்பும ஆண்ட்ரியாவின் பங்கேற்பும் முக்கியமானது. புதுமுக நடிகரை வைத்து ஆனால் கன்டன்ட்டை நம்பிப் படம் எடுப்பதை ஆதரித்தார் தயாரிப்பாளர். ஆண்ட்ரியா அப்போது வாங்கிய சம்பளம் முப்பத்தைந்து லட்சம். ஆனால் நான் கதை சொன்னபிறகு கொடுப்பதாக சொன்ன சம்பளம் எட்டு லட்சம். ஆனால் கொடுத்தது ஐந்து லட்சம் மட்டும். நீங்கள் படத்திற்காக கஷ்டப்படுவது தெரிந்தால், சரியான படத்துக்காகப் போராடுவது தெரிந்தால் பணத்தைப் பற்றி எந்த ஆர்ட்டிஸ்டும் டெக்னீசியனும் கவலைப்படுவதில்லை.
 
உள்ளடக்கம் சிறப்பானதென்றால் ஆர்ட்டிஸ்ட்டும் இம்மாதிரி படங்களில் தங்கள் பங்களிப்பு இருக்கவேண்டும் என்று சம்பளத்தைக் குறைத்துக் கொள்வார். தயாரிப்பாளரும் ஒத்துழைப்பார். பேரன்பு படம் தேனப்பன் சார் இல்லாமல் நடந்திருக்காது. எப்படி கதையை சொன்னதும் மம்முட்டி ஒத்துக் கொண்டாரோ அதே போல் கதையைக் கேட்ட தேனப்பன் சார், நிச்சயமாக இதை நாம் எடுக்கவேண்டும் என்றார். இம்மாதிரி கண்டென்ட் படம் எடுக்கும் டைரக்டருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையில் பரஸ்பரம் நல்ல புரிதல் இருக்க வேண்டும்.  இரண்டு ஆண்டுகளாக அவரிடம் ஏன் இந்த மாதிரியான படத்தைப் போய் எடுக்கிறீர்கள்? எனப் பலரும் கேட்டபோதும், இதை ஒரு நோக்கத்தோடுதான் எடுக்கிறோம் என்ற புரிதல் அவருக்கு இருந்தது.
 
உங்கள் படத்தின் பட்ஜெட் 2.5 கோடி என்றால் அதில் 1.5 கோடியாவது உங்கள் சொந்தப்பணமாக இருக்க வேண்டும். படத்தை முடிக்கும்போது ஐம்பது லட்சமும் ரிலீசையொட்டி ரொட்டேசனில் ஓர் ஐம்பதும் வட்டிக்கு வாங்கி சமாளிக்கலாம். அதற்கும் மேல் வட்டிக்கு வாங்கினால் உங்கள் படம் சம்பாதிக்கும் பணம் வட்டிக்குத்தான் போகும். உங்கள் கைக்கு வராது.
 
தரமணி படத்துக்கு நாங்கள் எடுத்த எடுப்பிலேயே பத்திரிகையாளர் காட்சியை நடத்தவில்லை.. நான்கு நாள் கழித்துதான் வைத்தோம். மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்த பிறகு அதற்கு எதிராக மீடியாவால் எழுத முடியாது என்பதுதான் இதற்குக் காரணம்.
 
படங்களை சர்வதேச பட விழாக்களுக்கு அனுப்புவதால் விருதுகள் மட்டும் கிடைப்பதில்லை. அதுவே நமது படங்கள் அனைத்துக்கும் விளம்பரமாகின்றது. ரோட்டர்டாம் விழாவில் யாரோ ஒருவர் மூலம் ராம் பெயரைத் தெரிந்து கொண்டு தரமணி படம் கிடைக்குமா? என்கிறார், ஐரோப்பிய டைரக்டர். அப்படம் வெளியான செய்தி தெரிந்த பின் தொடர்பு கொண்டு பேரன்பு படத்தை திரையிடக் கோருகிறார். இந்த வாய்ப்புகள் உங்கள் படங்களை சர்வதேச அளவில் விற்க உறுதுணை புரிகின்றன. இங்கே தியேட்டரில் ரிலீஸ் செய்யும்போதும் எத்தனை மெடல்களை வென்றது இப்படம் என்பதைப் போஸ்டரில் போடுவதன் மூலம் நமது வணிகத்துக்கும் அது உதவுகிறது. டிஜிட்டலில் பேரம் பேச இந்தப் பங்கேற்புகள் உதவுகின்றன. விருது பெறும் சில படங்களுக்கு பணமாகவும் பரிசு கிடைப்பதுண்டு. ஆனால் அது லாட்டரி விழுவது போன்றதுதான். இருநூறு படங்களில் ஒரு படத்துக்குக் கிடைக்கும்.
 
 -கற்பகவிநாயகம்
 
(BOFTA  திரைப்படக் கல்லூரி நடத்திய திரைப்படப் பயிற்சிப் பட்டறையில் இயக்குநர் ராம் நிகழ்த்திய உரையிலிருந்து)


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...