செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
எவிடென்ஸ் இல்லாமல் கிடப்பில் போடப்பட்ட வழக்கின் மர்மங்களை அவிழ்க்கும் கதையே டைரி திரைப்படம்.
எவிடென்ஸ் இல்லாமல் கிடப்பில் போடப்பட்ட வழக்கின் மர்மங்களை அவிழ்க்கும் கதையே டைரி திரைப்படம். காவல் உதவி ஆய்வாளர் பயிற்சியை நிறைவு செய்ய இருக்கும் அருள்நிதிக்கு (வரதன் அண்ணாதுரை), எவிடென்ஸ் இல்லாமல் கிடப்பில் போடப்பட்ட வழக்கு ஒன்றை எடுத்து விசாரிக்கச் சொல்வார் உயர் அதிகாரி. கண்ணை மூடிக் கொண்டு ஒரு வழக்கைத் தேர்வு செய்கிறார் அருள்நிதி. ஊட்டியில், பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இளம் தம்பதிகள் கொலை வழக்கு அது. சம்பவம் நடந்த இடத்திற்கே சென்று விசாரணையை ஆரம்பிப்பவருக்கு, ஒரு சில மர்மங்களுக்கான விடை தெரிகிறது. அவை என்ன என்பதுதான் 'டைரி' படத்தின் மீதிக் கதை. படம் வழக்கமான த்ரில்லர் படங்களுக்கான பாணியில் தொடங்கினாலும், உடனே வரும் காதல் காட்சி படத்தின் சுவாரஸ்யத்தைக் குறைத்துவிடுகிறது. ஊட்டியிலிருந்து கோயம்புத்தூருக்கு இரவில் செல்லும் பேருந்திலேயே ஏறக்குறைய முழுக்கதையும் நடக்கிறது. பேருந்தில் பயணிக்கும் பலதரப்பட்ட மனிதர்களின் வாழ்க்கை கதையை சொன்னாலும், அது எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அருள்நிதி சரியான கதையை தேர்வு செய்திருந்தாலும், திரைக்கதை சரியாக உருவாக்கப்படவில்லை. அறிமுக இயக்குநர் இன்னாசி பாண்டியன் கூடுதல் உழைப்பை வழங்கியிருக்கலாம். அருள்நிதி வழக்கம் போல், தனது மௌனமான நடிப்பால் அசத்தியிருக்கிறார். நாயகி பவித்ரா மாரிமுத்துக்கு பெரிய ரோல் இல்லை என்றாலும், அறிமுக காட்சியில் கவனிக்க வைக்கிறார். ஷாரா படம் முழுக்க பேசிக் கொண்டே இருந்தாலும், ஓரிரு இடங்களில் மட்டுமே சிரிக்க வைக்கிறார். சாம்ஸ், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளனர். டைரி த்ரில்லர் படம் என்பதை ரான் ஈத்தான் யோஹானின் பின்னணி இசையே தாங்கிப்பிடிக்கிறது. அதேபோல், பனிப்பொழிந்து கொண்டிருக்கும் உதகையின் அழகை அப்படியே ஒளிப்பதிவு செய்துள்ளார் அரவிந்த் சிங். எந்த கதாபாத்திரத்தையும் வலுவாக உருவாக்காமல் விட்டது, பதற்றத்தையும் ஏற்படுத்தாத கதை நகர்வு, பதினாறு வருடத்திற்கு ஒருமுறை வரும் பேருந்து பற்றிய தெளிவின்மை போன்றவை படத்தின் மிகப் பெரிய குறை. தூசி தட்டி எடுக்கப்பட்ட வழக்கு, ரசிகர்களை திக்குமுக்காட வைத்திருந்தால், டைரி சிறந்த த்ரில்லர் படமாக வந்திருக்கும்.