அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்வு! 0 கண்ணியம் குறையாமல் செயலாற்ற வேண்டும்: திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் 0 இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த அரசு கர்நாடக அரசுதான்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு 0 ஆன்லைன் ரம்மியை தடை செய்தால் அதில் நடிக்க மாட்டேன்: நடிகர் சரத்குமார் பேச்சு! 0 'பொன்னியின் செல்வன்' 3 நாட்களில் ரூ.200 கோடி வசூல்! 0 அக்டோபர் 20ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு 0 மகாத்மா காந்தியின் 154-வது பிறந்தநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை 0 அக்டோபர் 11-ல் விசிக நடத்தும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி: திருமாவளவன் அறிவிப்பு 0 புதிய காங்கிரஸ் தலைவர் 'ரப்பர் ஸ்டாம்பாக' இருக்க மாட்டார்: சசி தரூர் 0 இந்தியாவை நாம் அனைவரும் ஒன்றுபட்டு காக்க வேண்டும்: கேரளா சிபிஎம் மாநாட்டில் முதலமைச்சர் 0 முன்னாள் சிபிஎம் மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் காலமானார் 0 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் பங்கேற்க கேரள சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்! 0 பாகிஸ்தான் அரசின் ட்விட்டர் பக்கம் இந்தியாவில் முடக்கம்! 0 தேசிய விருது பெற்ற தமிழ் நடிகர்கள்: மனைவி ஜோதிகா குறித்து சூர்யா நெகிழ்ச்சி! 0 காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி: மல்லிக்கார்ஜுன கார்கே வேட்புமனு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

படம் எடுக்கப்போகிறீர்களா? முதலில் இதைக் கவனியுங்கள்!- தயாரிப்பாளர் தனஞ்ஜெயன்

Posted : வியாழக்கிழமை,   அக்டோபர்   31 , 2019  16:09:03 IST


Andhimazhai Image
உங்களில் பலரும் சினிமா தயாரிக்க விரும்புகிறீர்கள். உங்களிடம் ஒரு கேள்வி. எதற்காக சினிமா தயாரிப்பாளராக வரவேண்டும் என விரும்புகிறீர்கள்?
 
அதற்கு விடை தேடும் முன்பாக ஒரு விஷயம்.
 
சினிமாவில் முழுமையாகக் கற்றுக்கொண்டவர் என யாரும் கிடையாது. அதனால்தான் தொடர்ந்து வெற்றியை எல்லாத் தயாரிப்பாளர்களும் தருவதில்லை. ஒவ்வொன்றில் இருந்தும் தொடர்ந்து கற்றுக்கொண்டு வருகின்றோம். ஒவ்வொரு படமும் புதுப்புதுப் படிப்பினைகளைத் தரும். ஒவ்வொன்றும் புதுப்புதுப் பிரச்சினைகளை சந்திக்கும். ‘போன படத்தில் கற்றுக்கொண்டேன். இனி அடுத்து எல்லாம் சக்சஸ்தான்’ என யாரும் சொல்ல முடியாது. ஏனெனில் அடுத்த படத்தில் புதியதோர் பிரச்சினை உருவாகியிருக்கும்.
 
No one knows anything. இங்கே சினிமாவில் யாருக்கும் எதுவும் தெரியாது. எல்லோருமே கற்றுக் கொள்ள முயற்சிக்கிறோம். இரண்டு வெவ்வேறு படங்களின் அனுபவங்கள் நிச்சயமாக வெவ்வேறுதான். திரைக்கதையிலிருந்து சினிமாவாக மாறுவது இரண்டுக்கும் வெவ்வேறு பிராசஸ்தான். இது தொழிற்சாலை கிடையாது - ஒரே மாதிரி உற்பத்தி செய்ய.
 
சினிமாவைப் பொருத்தமட்டில் மேலிருந்து விழும்போதும் மீசையில் மண் ஒட்டாதது போல்  எழுந்திருப்பதுதான் சக்சஸ். இங்கே தோற்றாலும் தோல்வி என யாரும் சொல்வது கிடையாது. அப்படி சொல்லிவிட்டால் நீங்கள் துடைத்தெறியப்படுவீர்கள்.
 
அண்மையில் வந்த அந்திமழை இதழில் சினிமா பற்றி பல கட்டுரைகள் வந்துள்ளன. அதில் டி.சிவா சொல்லியிருக்கிறார் – ஒவ்வொரு முறையும் மேலே போகிறார். கீழே விழுகிறார். மறுபடியும் எழுந்திரித்துப் போராடுகிறார். சினிமாவில் அதுதான் வாழ்க்கை. சினிமாவை சூதாட்டமல்ல என்று சொன்னாலும் அது சூதாட்டம்தான். சூதாட்டத்தில் நமக்குத் தெரியாமலே தவறு நடந்து கொண்டிருக்கும். ஆனால் இங்கே தெரிந்தே தவறு நடந்து கொண்டிருக்கும். ஆனால் அதைக் கட்டுப்படுத்த முடியாதபடி போய்க் கொண்டிருப்போம். ஸ்கிரிப்டாக இருப்பது ஒரு படமாகவும், அதுவே படமாக்கும்போது வேறாகவும் இருக்கும். ஸ்கிரிப்ட் எப்படி படமாக டிரான்ஸ்லேட் ஆகிறது என்பது முக்கியம். சில ஸ்கிரிப்ட் சிறப்பாக வரலாம். சில சொதப்பி விடலாம். நிறைய விமர்சனங்களில் நீங்கள் பார்த்திருக்கலாம் – ‘கதையாக இருக்கையில் நல்லா இருந்தது; படமாக வருகையில் மோசமாக இருந்தது’ என எழுதுகிறார்கள். இந்த டிரான்ஸ்லேசனுக்கு இயக்குனரை நம்பித்தான் உள்ளீர்கள். கதையை சொல்லும்போதோ, எழுதிய திரைக்கதையிலோ சிறப்பாக வந்திருக்கலாம். ஆனால் படமாக்கப்படும்போது மோசமாக வந்திருக்கும். இதெல்லாம் உங்கள் கையில் இல்லை.  ஒரு தொழிற்சாலையில் இதெல்லாம் நடப்பதில்லை. அங்கே ஒரு பொருள் எப்படி டிசைன் செய்யப்பட்டுள்ளதோ அதே வடிவில்தான் உற்பத்தி செய்யப்படும். ஆனால் சினிமா அப்படி அல்ல. அது மேஜிக். இதில் நீங்க ஒரு இயக்குனரையும் ஒரு யூனிட்டையும் சார்ந்து இருக்கிறீர்கள். இதனால்தான் நிச்சயமின்மை சினிமாவில் மிக அதிகம். இன்றைக்கு 80 சதவீதம் முதல் 85 சதவீத படங்கள் ஏன் தோல்வி அடைகின்றன? தயாரிப்பாளர்கள் நம்பி இருப்பது இயக்குனர்களை. அவர்கள் நல்லபடியாக பண்ணித் தந்துவிட்டால் ஒருவழியாகத் தயாரிப்பாளர்கள் தப்பித்து விடலாம்.
 
சினிமா எடுக்க நீங்கள் வரும் முன்பாக,என்ன மாதிரியான சினிமாக்கள்  உள்ளன? அவற்றில் எந்த மாதிரியான சினிமாவுக்கு வரப் போகிறீர்கள்?என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அது பற்றித் தெளிவான பார்வை இருக்க வேண்டும்.
 
சினிமாக்களை பின்வரும் வகைகளாகப் பிரிக்கலாம்.
 
1.    Mainstream Commercial – பிகில், பேட்ட, விஸ்வாசம்  போன்ற படங்கள் (கமர்சியல் ஐட்டங்கள் கொண்ட பெரிய பட்ஜெட் படங்கள் – ஏ,பி,சி சென்டர் வரை ஓடுபவை)
 
2.   Middle cinema– நேர் கொண்ட பார்வை, தரமணி, பரியேறும் பெருமாள்.  போன்றவை – சீரியசான சப்ஜெக்ட்டில் ஆக்சன், கொஞ்சம் கமர்சியல் ஐட்டங்களைக் கொண்டிருக்கும். ஏ,பி சென்டர்களில் போகும் படங்கள்)
 
3.   Parallel / Art film – கமர்சியலாக எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் எடுக்கப்படுபவை – விருதுக்காகவும், புகழுக்காகவும் எடுக்கப்படும் படங்கள் - தேர்ந்தெடுக்கப்பட்ட பார்வையாளர்களை மட்டும் இலக்காகக் கொண்டவை – ஹவுஸ் ஓனர் போன்ற படங்கள்)
 
4.   Neo-noir – புதுவகையான சினிமாக்கள். இவை காமர்சியலாகவும் போய்விடலாம். உதாரணம் விக்ரம் வேதா, மூடர் கூடம், இறைவி , சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்கள்.  நிறைய உலக சினிமா பார்த்திருந்தால் இதைப் புரிந்து கொள்ளலாம். இதில் ரிஸ்க்கும் இருக்கிறது. சக்ஸஸ் ஆனால் நன்றாகப் போகவும் கூடும்.
 
சினிமா எடுக்க விரும்பும் நீங்கள் எந்த வகையான சினிமா எடுக்கப் போகிறீர்கள் என்ற தெளிவான முடிவை எடுத்து விடுங்கள். பேட்ட மாதிரி பாட்டு, சண்டை, காமெடி கலந்த கமர்சியல் படமா? இல்லை உங்க ஊரில் நடக்கும் ஒரு விஷயத்தை யதார்த்தமாக எடுக்கப் போகிறீர்களா? இரண்டாம் வகையில் கொஞ்சம் கமர்சியல் கலந்து தரலாம். இது மிடில் சினிமா.
 
உங்கள் தேர்வு என்ன? கமர்சியலா? மிடிலா? அல்லது, ஆர்ட் படமா?
 
உங்களிடம் பணம் எக்கச்சக்கமாக உள்ளது. ஆனால் ஒரு அங்கீகாரம், விருது, புகழ் வேண்டும் என முடிவெடுத்தால் நீங்கள் ஆர்ட் படத்துக்கு போகவும். இதில் பாடல், காமெடி போன்ற கமர்சியல் ஐட்டம் இருக்காது. புகழ் கிடைக்கும். பணம் கிடைக்க வாய்ப்புண்டு. ஆனால் உறுதி சொல்ல முடியாது. பணம் போனாலும் பரவாயில்லை, புகழ் பெற வேண்டும் என்று நினைத்தால் ஆர்ட் படம் தயாரிக்க முடிவெடுங்கள். இதைச் செய்யும் இயக்குனர்கள் பலர் உள்ளனர்.
 
Neo-noir எடுக்க முடிவு செய்தீர்கள் என்றால் அதற்கு உலக சினிமா பற்றிய புரிதல் இருக்க வேண்டும்.
 
நான் ஏன் சினிமாவுக்கு வர வேண்டும்? பேருக்கும் புகழுக்குமா? பணத்துக்கும், வணிகத்துக்குமா?
 
பல இளைஞர்கள் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற பேரார்வம் காரணமாகத் தங்கள் இளமை, வேலை வாய்ப்பு, சந்தோசம் அனைத்தையும் இழந்து வந்திருக்கிறார்கள். பத்தாண்டுகள் கழித்தாவது சாதிப்பார்கள். அவர்களைப் போல் இழப்பதற்குத் தயாராக இருக்க வேண்டும். நான் இந்தத் துறைக்கு வந்ததன் காரணம் பேரார்வம்தான் (passion) கார்ப்பரேட் கம்பனியின் மிகப் பெரிய பதவியை விட்டு விட்டு ஆண்டுக்கு 1.54 கோடி சம்பளத்தை விட்டுவிட்டு இங்கு வந்ததன் காரணம் passion தான். நான் வோடபோனில் சி.இ.ஓ ஆக வேலை பார்த்துக் கொண்டு இருக்கும்போது சினிமாவைப் பற்றிதான் எப்போதும் பேசிக்கொண்டு இருப்பேன். சினிமா என்றால் அவ்வளவு மோகம். எதைப் பற்றிப் பேசினாலும் சினிமாவை உதாரணம் காட்டிதான் பேசுவேன். இருபதாண்டுகள் கார்ப்பரேட்டில் சாதித்த பின் சினிமாவில் ஏதாவது பண்ண வேண்டும் என்று முடிவெடுத்து இதில் குதித்தேன். என் நிரந்தமான மிகப்பெரும் சம்பளத்தை விட்டுவிடலாம் என்று முடிவு செய்தேன். மாதம் பத்து லட்சம் சம்பளம், சனி, ஞாயிறு விடுமுறை எல்லாவற்றையும் விட்டு வந்தேன். இந்த மாதிரி பல இழப்புகளை சந்திக்க தயாராக இருக்க வேண்டும். கார்ப்பரேட்டை விட்டதால் இழந்தது நிறைய என்றாலும் இங்கே கிடைத்தது பேரும் புகழும்.
 
சினிமாவில் ஏதாவது இழக்க ரெடியாக இருந்தால்தான் ஏதாவது கிடைக்கும்.
 
பெரும் புகழை ஈட்ட வேண்டுமானால் ஆர்ட் பிலிமுக்கு போகவும். ஹவுஸ் ஓனர் என்ற படம், லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் கணவரே தயாரித்தார். இழக்க ரெடியாக இருந்தார்கள். நல்ல பெயர் கிடைத்து விட்டது. இதற்காக இழந்தது 1.5 கோடி. அதிலும் சேட்டிலைட் உரிமை விற்றதில் ஒரு கோடி எடுத்து விட்டனர். மகிழ்ச்சியாக  உள்ளனர்.  ஏனென்றால் புகழ் கிடைத்துள்ளது. நீங்களும் பெயர் வாங்க வேண்டும் என்றால் ஆர்ட் அல்லது மிடில் சினிமாவுக்கு செல்லுங்கள். பணம் மட்டும்தான் என்றால் கமர்சியல் சினிமா என முடிவெடுங்கள். பேரன்பு, தரமணி, மேற்குத் தொடர்ச்சி மலை, பரியேறும் பெருமாள் போன்ற மிடில் சினிமாக்களில் பேரும் கிடைத்தது. பணமும் கிடைத்தது. இது அபூர்வம்தான். எல்லாப் படங்களுக்கும் இது நிச்சயம் எனச் சொல்ல முடியாது.
 
அதே நேரத்தில் விக்ரம் வேதா மாதிரி neo noir படத்தால் பேரும் கிடைத்து லாபமும் கிடைக்கவே செய்தது. அந்த மாதிரிக் கதை கிடைத்தால் அது உங்கள் அதிர்ஷ்டம்தான்.
 
ஆக, எதற்காக சினிமா? எந்த மாதிரியான சினிமா? என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்.
 
படம் எடுக்க வேண்டுமானால் நமக்குத் தெரிந்திருக்க வேண்டிய சில அடிப்படைகள் – முதலில் இந்த திரைப்படத் துறை எப்படி இருக்கிறது என்ற அறிவு அவசியம். எந்த மாதிரிப் படங்களை வரவேற்கின்றனர் என்ற அறிவு தேவை. இது அவ்வப்போது மாறிக்கொண்டிருக்கும்.
 
கதை பற்றிய புரிதல் தேவை. வெகுஜனங்கள் எதை ரசிக்கிறார்கள் என்பதை மக்களோடு உட்கார்ந்து படம் பார்த்துப் புரிந்து கொள்ள வேண்டும். பலாஸோ அரங்கில் பார்த்தாலும் சரி, அதன் ஆடியன்ஸ் வேறு; உதயம் தியேட்டரில் பார்த்தாலும் சரிதான். ஆனால் டிவிடியில் படம் பார்த்து வெகுஜனத்தின் ரசனையைப் புரிந்து கொள்ள முடியாது. ஏதாவது ஒரு பி செண்டரில போய் படம் பார்த்தால் அதில் கிடைக்கும் அனுபவம் வேறாக இருக்கும். சினிமாவை யார் ரசிக்கிறார்கள்? எதனால் வரவேற்புக் கிடைக்கிறது என்பதைக் கற்றுக்கொள்ள இதுதான் வழி. ஆர்ட்டிஸ்ட் படங்களுக்கு முதல் நாள் போகாதீர்கள். அவர்களின் ரசிகர்கள் மட்டும்தான் இருப்பார்கள். கைதட்டிக்கொண்டே இருப்பார்கள். இரண்டாவது அல்லது மூன்றாவது நாள் போய்ப் பாருங்கள். அதுவும் பி சென்டரில் போய்ப் பாருங்கள். இதுதான் தயாரிப்பாளராக வேண்டுமானால் செய்ய வேண்டிய முதல் வேலையாகும்.
 
அங்கேதான் என்ன மாதிரி படங்களை ஜனங்கள் ரசிக்கிறார்கள்? என்ன விசயங்களை ரசிக்கிறார்கள் என்பதைக் கண்டுணர முடியும். இடையில் கைதட்டி விட்டனர் என்றால் ஓகே. படம் முழுக்க சைலண்டாக இருந்தார்கள் என்றால் பிரச்சினை. படம் அவர்களை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை என்று அர்த்தம்.. படம் முழுக்க சிரித்தனர் என்றால் படம் ஓகோ. அவர்களைப் பொறுத்தமட்டில் அவர்கள் எதிர்பார்த்து வந்தது இந்தப் படத்தில் இருந்தது. வரவேற்றுள்ளனர்.
 
கதை பற்றிய அறிவு வளர நீங்கள் நிறையப் படிக்கவேண்டும் என்பதில்லை. மக்களோடு மக்களாகப் படம் பார்த்தால்தான் என்ன மாதிரியான கதை போகும் என்ற அறிவு வரும்.  வாரத்துக்கு இரண்டு படமாவது பார்க்க வேண்டும். மொக்கைப் படத்தையும் போய்ப் பாருங்கள். இதுதான், எது ஒர்க் ஆகும், எது ஒர்க் ஆகவில்லை. ஏன் ஒர்க் ஆகவில்லை என்பதைப் பற்றி நான்கு பேரிடம் கேட்டறிதல் வேண்டும். இதிலிருந்துதான் கதை எந்த சென்டர் வரை போகும் என்ற புரிதல் பிடிபடும். அதன் மூலமே கதைக்கு என்ன பட்ஜெட் என்பதைப் பற்றி நமக்கு ஞானம் பிறக்கும்.
 
அடுத்து நமக்குத் தேவை - படத்தின் பட்ஜெட் பற்றிய அறிவு. என் கதை எந்த சென்டர் வரை போகும் என்ற பிடிபடலில் இருந்து பட்ஜெட்டைத் தீர்மானிக்க வேண்டும். நான் போடும் பட்ஜெட் குறைந்தது எழுபது முதல் எண்பது சதவீதம் முதலீட்டை எடுத்து விடும் என்றால் அது நல்ல பட்ஜெட். நூறு சதம் எடுத்துவிட்டால் அது சக்சஸ். அதையும் தாண்டி லாபம் எடுத்து விட்டீர்கள் என்றால் நீங்கள்தான் சூப்பர் டூப்பர் புரடியூசர். சினிமாவில் ஒரு தயாரிப்பாளர் தொடர்ந்து இருக்க வேண்டுமானால் தொடர்ந்து படம் தந்துகொண்டே இருக்க வேண்டும். அதற்கு கையில் இருக்கும் முதலை விட்டுவிடக் கூடாது. அப்படி விடாமல் இருந்தால்தான் அடுத்த படம் எடுக்கப் பணம் கையில் இருக்கும். எனவேதான் எண்பது சதவீத முதலை எடுத்து விட்டாலும் சமாளித்து விடலாம். ஆக நமது பட்ஜெட் அறிவு, விட்டாலும் இருபது சதவீதத்துக்கு மேல் விடக் கூடாது. எப்படியாவது போட்ட பணத்தை எடுத்து விடவேண்டும். எப்படி பட்ஜெட் போட்டால் எஸ்கேப் ஆகமுடியும் என்பவற்றை உள்ளடக்கி இருக்க வேண்டும்.
 
இந்த பட்ஜெட்டுக்குள் படத்தை எடுக்க முடியாது எனத்தெரிந்து விட்டால் நாம் செய்ய வேண்டியது என்ன? அந்தப் படத்தை எடுக்கக் கூடாது!!
 
இது தெரிந்தும் பலர் காலை விடுவர். எப்படியாவது முடித்து விடலாம் என்று கருதுவர். ‘எப்படியாவது’ எல்லாம் சினிமாவில் நடக்கவே நடக்காது.
 
அண்மையில் ஒரு தயாரிப்பாளர் என்னிடம் வந்து ஆலோசனை கேட்டார். எஞ்சினியரிங் கல்லூரி எல்லாம் நடத்தி வருபவர். அறிவியல் கதை ஒன்றைப் படமாக்கி வருகிறார். நாயகனோ மார்க்கெட் இழந்துவிட்ட நடிகர். 4 கோடியில் முடிக்கலாம் என்று ஆரம்பித்த படம் இன்னும் பட்ஜெட் அதிகமாகி அது ஆறு கோடியில் நிற்கிறது. அப்போதும் முடியுமா என்று தெரியவில்லை. என்ன செய்யலாம் என்று கேட்டார். இந்த நாயகனுக்கு வியாபாரமே இல்லை. பட்ஜெட்டும் எகிறிக் கொண்டே போகிறது. எனவே நான் கேட்டேன் “இதுவரை எவ்வளவு செலவானது?” கல்லூரி முதலாளி சொன்னார் ‘மூணு சி”. அவருக்கு நான் சொன்ன ஆலோசனை இதுதான். “இதோடு நிறுத்திக் கொண்டால் மூன்று கோடிதான் நட்டம். இன்னும் வளர்த்தீர்கள் என்றால் ஆறு கோடி நட்டம்”.
 
பட்ஜெட் நம்மிடம் குறைவாக இருக்கிறதா? ஒரே வீட்டில் நடப்பது மாதிரி கதையை தேர்ந்தெடுத்து எடுத்து விடுங்கள். இந்தத் தெளிவு நம்மிடம் இருக்க வேண்டும், கே13 படம் இப்படித்தான் ஒரே வீட்டில் நடப்பது மாதிரி பட்ஜெட்டில் முடிக்கப்பட்டது.
 
என் அனுபவம் ஒன்று. மகளிர் சம்பந்தப்பட்ட கதை என்றால் சிட்டி,செங்கல்பட்டு தாண்டி போவதில்லை. கோவையில் கொஞ்சம் போகும்.. இந்தியில் ஒரு படம் வந்தது. அதைத் தமிழில் பண்ணலாம். ஏனெனில் இரண்டே இரண்டு செட்தான் அதில் பயன்பட்டிருந்தது. ஒரு வீடு, ஒரு ரேடியோ ஸ்டேசன் ஜாக்கி செட். எனவே இதை பட்ஜெட்டுக்குள் பண்ணலாம் என முடிவு செய்து ராதா மோகனிடமும் ஜோதிகாவிடமும் கேட்டேன். அவர்களுக்குக் கதை பிடித்திருந்தது. இரண்டே இடத்தில்தான் ஷூட்டிங். தினமும் செலவு ரூ இரண்டு லட்சம் மட்டும்தான். மொத்தமே 38 நாட்களில் படத்தை முடித்தோம். படம் ஹிட்டானது. லாபம் தந்தது. காரணம் குறைந்த பட்ஜெட். அடுத்து லோ பட்ஜெட்டில் பண்ணிய ஜாக்பாட்டும் வெற்றி. இப்போது ஜோதிகா மேடம் சொல்லுகிறார் “இப்போ எனக்கு பிடிபட்டிருச்சு. 5 அல்லது 6 கோடி பட்ஜெட்டில் பண்ணினால் ஹிட் கொடுத்திடலாம்”.
 
இந்த அறிவுதான் முக்கியம். எந்த மாதிரிக் கதைக்கு எந்த மாதிரி பட்ஜெட் பண்ண வேண்டும் என்ற திட்டமிடல் மூலம் கமர்சியலாக வெற்றிப் படம் தந்து விட முடியும்.
 
ஒரு இயக்குனர், நல்ல பாண்டஸி சப்ஜெக்ட், சயன்ஸ் ஃபிக்சன் பண்ண வேண்டும் என்கிறார். ஹீரோ யாரென்றால், சரியாக போணியாகாத ஹீரோ. இதை சொல்லும்போதே நீங்க எஸ்கேப் ஆகி விட வேண்டும். சயன்ஸ் ஃபிக்சனா? பெரிய ஹீரோ சொல்லு, கொண்டு வா, பண்ணலாம். பெரிய ஹீரோ என்றால் வணிக ரீதியாக வெற்றி பெறும், சாட்டிலைட் உரிமை அந்த நபருக்காக போகும். அப்படி ஆட்களின் பட்டியல் உங்களிடம் இருக்க வேண்டும்.
 
இந்தத் தெளிவான புரிதல் இருந்தால் தவறுகளைத் தவிர்க்கலாம். நிச்சயமாகத் தடுக்க முடியும் என்று சொல்ல முடியாது.
 
படத்துக்கு நிதி பற்றிய புரிதல். – தமிழில் மட்டுமல்ல மலையாளம், தெலுங்கு படவுலகிலும் மிகப் பெரும் வெற்றி பெற்றவர்கள், பைனான்சியர்களே. கடந்த பத்து ஆண்டுகளில் அவர்கள் பத்து மடங்கு பணத்தைப் பெருக்கியுள்ளனர். ஆனால் பத்தாண்டுகளுக்கு முன் இருந்த தயாரிப்பாளர்களின் பணம் பெருகவில்லை. ஆனால் பைனான்சியர் எப்படி என்றால் மிகச் சரியாக பிளான் பண்ணி நிதி தந்து, டைட்டாக வசூல் பண்ணி, வட்டிக் காசை வாங்கி, வட்டிக்கு வட்டி வாங்கி 10 கோடியில் ஆரம்பித்தவர் 100 கோடியில் வந்து நிற்கிறார். ஆனால் அவ்வாறு தயாரிப்பாளரால் வரமுடியவில்லை. காரணம், ஒரு விஷயம் தயாரிப்பாளருக்குத் தெரியவில்லை – அது- வட்டிக்குப் பணம் வாங்கி படம் பண்ணினால் சம்பாதிப்பது வட்டிதானே தவிர தயாரிப்பாளர் அல்ல. இன்று மிகப்பெரிய படக் கம்பெனிகளான சன் பிக்சர்ஸ், ஏ ஜி எஸ், ரெட் ஜெயன்ட்  போன்றவை சக்சஸ் ஆகப் போவதன் காரணம் என்னவென்றால் யாரிடமும் அவர்கள் வட்டிக்குப் பணம் வாங்குவதில்லை. எல்லாம் சொந்தப் பணம். சிலர் கார்ப்பரேட் ஃபண்டிங்குக்குப் போகிறார்கள். அதில் 18% மட்டுமே வட்டி. ஆனால் சினிமா பைனான்சியர்கள் தரும் கடனுக்கு வட்டியோ மாதத்துக்கு நான்கு சதவீதம். அதாவது 48% வட்டி. அதுவும் கடன் தரும்போதே வட்டியைப் பிடித்து விட்டுத்தான் கடனே தருவார்கள். வெற்றுக் காகிதத்தில் கையெழுத்து வாங்கிக் கொள்வார்கள். படத்தின் எல்லா உரிமைகளையும் அவர்கள் வாங்கிக் கொள்வார்கள். பைனான்சியரின் கடன், வட்டி எல்லாவற்றையும் செட்டில் செய்தால்தான் அவர்கள் லேப் / பட வெளியீடு செய்யும். கியூப்புக்கு, தடையில்லா சான்று தருவார்கள். இந்த சான்றிதழ் இல்லாமல் உங்கள் படம் ரிலீசே ஆகாது. (வங்கியில் வீட்டை அடமானம் வைத்து கடன் வாங்குவது போல்தான் ஒரு படத்தை அடமானம் வைத்து கடன் வாங்குகிறீர்கள் இங்கே. கடன் தீர்க்கப்படாமல் வங்கியில் அடமானம் வைத்த வீட்டை விற்க முடியாது; அதே போல் உரிமைகளை அடகு வைத்த படத்தை விற்கவோ/ரிலீஸ் செய்யவோ முடியாது)
 
ஆக, நீங்கள் வெற்றிகரமான தயாரிப்பாளராக வேண்டுமானால், படத்துக்கு நிதி ஆதாரம் பற்றிய அறிவும் அவசியம். தயாரிப்பு நுட்பமும் அவசியம்.
 
இங்கு பல தயாரிப்பாளர்கள் நிதி ஆதாரம் பற்றிப் பல தப்பபிப்பிராயங்களை வைத்துள்ளனர். எப்படியாவது பணத்தை ரெடி பண்ணி விடலாம் என்பது அந்த அபிப்பிராயம். அது எப்போதுமே பலிக்காது.
 
சினிமாவில் ஒன்று புரிந்து கொள்ளுங்கள். தயவு தாட்சண்யம் எல்லாம் எதிர்பார்க்கக் கூடாது. கடன் கொடுத்தவனுக்குத் தேவை வட்டி. ஈவு இரக்கம் எல்லாம் அவன் பார்ப்பதில்லை.
 
எல்லோரும் நன்கு பழகுவார்கள். அன்பாக இருப்பார்கள். இது சினிமாவின் ஒரு பக்கம். அதே நேரத்தில் இந்த சினிமா இரக்கமற்றது. கருணையற்றது.
 
சினிமாவின் இந்த மறுபக்கத்தை எதிர்பார்த்திராத தயாரிப்பாளர்கள் பலர் வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றனர்.
 
இங்கு ஒன்றே ஒன்றுக்குத்தான் மதிப்பு. அது பணம். வாங்கினால் அதைத் திருப்பிக் கொடு. இதில் தயவு தாட்சண்யம் எல்லாம் கிடையாது.
 
அடுத்து நமக்குத் தேவை தயாரிப்பு பற்றிய அறிவு. நீங்க தயாரிப்பாளராக வர வேண்டும் என்றால் ஓரளவுக்காவது புரொடக்சன் அறிவு இருந்தாக வேண்டும். ஒரு படத்தைத் தயாரிக்க full scheduling பண்ணத் தெரிய வேண்டும். படத்தை முடிக்க எத்தனை ஷெட்யூல் தேவைப்படும்? எத்தனை லொக்கேஷன் உள்ளது? எத்தனை சீன் எடுக்க வேண்டும்? ஒரு நாளில் எத்தனை சீன்கள் எடுக்க முடியும் என எல்லாவற்றையும் முன் கூட்டியே திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். டைரக்டரிடம் எத்தனை நாளில் முடிப்பீர்கள் என்று குத்துமதிப்பாகக் கேட்டு முடிவுக்கு வரக் கூடாது. நிறைய தயாரிப்பாளர்கள், முப்பது நாளில் முடிக்க முடியுமா என டைரக்டரிடம் கேட்கின்றனர். அவரிடம் என்ன மந்திரக் கோலா உள்ளது? அவர் ஷூட் பண்ணியாக வேண்டும். அதற்கு டைம் வேண்டும். ஆர்ட்டிஸ்ட் வர வேண்டும். தாமதம் செய்யாமல் வர வேண்டும். எல்லாமே ஏழு மணிக்கு ஆரம்பிக்க வேண்டும். எல்லா வசதிகளையும் நீங்கள் செய்து தந்திருக்க வேண்டும். இவை எவற்றையும் செய்யாமல் முப்பது நாளில் முடித்துக் கொடுங்கள் எனக் கேட்க முடியாது. சில படங்கள் 50 நாள் எடுக்கும். சில படங்கள் 100 நாள் எடுக்கும். ஏனெனில் அதுதான் அந்த படத்தின் தேவையாக இருக்கும். ஒரே ஒரு செட்டுக்குள் பதினெட்டு நாளிலும் சில படங்களை எடுக்க முடியும். அது அந்தப் படத்தின் தேவை. இந்தப் புரிதலில் இருந்து தயாரிப்பாளர் திட்டமிட வேண்டும்.
 
ஒரு தயாரிப்பாளராக நீங்கள் டைரக்டரிடம் கேட்க வேண்டியது, முதலில் கதையைக் கொடு. எத்தனை ஷெட்யூல், எத்தனை லொக்கேசன், எத்தனை சீன் என்பவற்றை சொல்லு எனக் கேட்டு வாங்க வேண்டும். இவை பற்றி எதுவும் தெரியாமல் எத்தனை நாளில் முடிக்கலாம் என்ற ஒற்றைத் தகவலை வைத்து முடிவெடுக்கின்றனர் பலர். இது மிகவும் தவறு. இதனை பல டைரக்டர்கள் பயன்படுத்திக் கொள்வர். ‘முப்பது நாளில் முடிக்க முடியும் சார்’ என்ற ஒரு விசயத்தை மட்டும் நம்பி இறங்கினால், உங்களின் அறிவு அவ்வளவுதான் என முடிவு செய்யும் இயக்குனர் வசதிக்கேற்றபடி இழுப்பார். இன்னும் பத்து நாளில் முடித்து விடலாம் என்பார். படத்தின் பட்ஜெட் உங்கள் கட்டுப்பாட்டில் இராது.
 
அடுத்து தெரிந்து கொள்ள வேண்டியது, படத்தை எப்படி மார்க்கெட்டிங், பப்ளிசிட்டி பண்ணப் போகிறீர்கள்?
 
நான் என் பொருளை எப்படி வியாபாரமாக்கப் போகிறேன்? என்ற புரிதல் மிக முக்கியம். ஒரு படத்தில் என்னென்ன வகையான உரிமைகள் உள்ளன என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். படத்தை வாங்குபவர் எல்லா உரிமைகளையும் எழுதி வைத்திருப்பார். சில தயாரிப்பாளர்கள் அவற்றை முழுமையாக வாசிக்காமல் கையெழுத்துப் போட்டு விடுவார்கள். இதனால் வருவாய் இழப்பு ஏற்படும். அப்படி என்றால் ஒரு படத்தில் நமக்கு இருக்கும் உரிமைகள் என்னென்ன? (சேட்லைட், ஆடியோ, டப்பிங், ரீமேக், ஓவர்சீஸ்) என்பவற்றைத் தெரிந்து கொண்டு அதைப் புத்திசாலித்தனமாக வியாபாரம் செய்ய வேண்டும்.
 
இன்னொரு புரிதல் என்னவென்றால், பட விநியோகம். படத்தை எடுத்து முடித்து எந்த வகையில் தியேட்டருக்குக் கொண்டு செல்வது என்பதைப் பற்றிய புரிதல் மிக அவசியம். என்னமாதிரி தியேட்டரில், என்ன மாதிரி சென்டரில் என்ன மாதிரி படம் போகும், எந்த முறையில் விநியோகம் செய்வது என்பதைப் பற்றி முழுமையான அறிவும் அவசியம். படத்தை வாங்குபவர்கள் தரும் ஒப்பந்தத்தை கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்ளாமல், தனக்கு வசதியான, இழப்பு வராமல் நுட்பமான ஒப்பந்தத்தினைத் தயாரித்துக் கொள்ள வேண்டும். இவற்றோடு படத்திற்கு விருதுகளை எப்படி வாங்குவது, அதற்கான வழிமுறைகள் என்ன என்பவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும். திரைப்பட விழாக்களுக்கு படத்தை அனுப்புவது எப்படி என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
 
தயாரிப்பாளர் வகைகள்
 
தயாரிப்பாளர்களில் பல ரகமானவர்கள் உள்ளனர். அவற்றில் நீங்கள் எந்த மாதிரி எனத் தெரிந்து கொள்ளுங்கள்.
 
1.   சுதந்திரத் தயாரிப்பாளர்கள் – இண்டிபெண்டன்ட் புரோடியுசர்.- இண்டி புரோடியுசர் என்பார்கள். யாருடைய தயவும் இல்லாமல், ஸ்டுடியோ இல்லாமல், பேக் அப் இல்லாமல் சுயமாக இயங்கக் கூடிய தயாரிப்பாளர்கள் இவர்கள். மேற்குத் தொடர்ச்சி மலை, குற்றம் கடிதல் போன்ற படங்களைத் தயாரித்தவர்கள் இவர்களே. சொந்தப் பணம் இரண்டு கோடிக்குள் வைத்துக் கொண்டு படம் தயாரித்தார்கள். ஒரே ஒரு கேமிரா யூனிட், கேரவான் கிடையாது. சின்னக் குடிசையில் தங்கிக் கொண்டு படம் எடுப்பார்கள். மைனா படம் இப்படி எடுக்கப்பட்டதுதான். ஒளிப்பதிவாளர் செழியன் துணைவியார் தனது சொந்தப்பணம் 42 லட்சத்தைப் போட்டு இப்படித் தயாரித்த படம்தான் டூ லெட். இது திரைப்பட விழாக்களில் மட்டும் அறுபது லட்சத்தைத் தந்தது. திரையரங்குகளில் 50 நாட்கள் ஓடியது. ஒரு கோடி லாபத்தைத் தந்தது. இந்த மாதிரி சுதந்திர தயாரிப்பாளராக ஆக வேண்டும் என்றால் உங்கள் கஷ்டங்களைத் தெரிந்த ஒரு டீம் அமைய வேண்டும். வசதிகளை எதிர்பார்க்காத, எளிமையில் இருக்கப் பழகும் கலைஞர்கள் தேவை.
 
2.   பாரம்பரிய ஸ்டுடியோ உரிமையாளர்கள் – வேல்ஸ் இன்டர்நேஷனல், ஏவிஎம், விஜய வாகினி போன்ற வகையினர் இவர்கள். இவர்களுக்கு மிகப்பெரிய பேக் அப் இருக்கிறது. ஆர்ட்டிஸ்ட் இருக்கிறார்கள்.
 
3.   தொழில்முறைத் தயாரிப்பாளர்கள். – நிறைய பேர் முதல் போட்டு பங்குதாரர்களாக இருப்பார்கள். உதாரணம், பாஃப்டா. இதில் 50 லட்சம்  70 லட்சம் பங்கு போட்டு படம் செய்வார்கள். ஒய் நாட் இதே மாதிரிதான். இந்த வகைமாதிரியில் நீங்கள் சொந்தமாக முடிவெடுக்க முடியாது. பங்குதாரர்களின் விருப்பம் முக்கியம். ஒத்த சிந்தனை கொண்ட பத்து பேர் ஒன்றாக சேர்ந்து நீங்களும் ஒரு நிறுவனத்தைத் தொடங்க முடியும். ஆளுக்கு ஐம்பது லட்சம் போட்டால் ஒரு பட்ஜெட் படம் பண்ண முடியும்.
 
4.   கார்ப்பரேட் தயாரிப்பாளர்கள் – லைக்கா, ஃபாக்ஸ் ஸ்டார், ஈரோஸ், ரிலையன்ஸ் போன்றவர்கள். இவர்களுடன் சேர்ந்து நீங்கள் வேலை செய்ய முடியும்.
 
சுதந்திரத் தயாரிப்பாளர்கள்தான் யாருக்கும் பதில்சொல்லக் கடமைப்பட்டவர்கள் அல்ல. என் பணம். என் உரிமை. என்பதால் இவர்களால்தான் breakthrough படங்களைத் தர முடியும். இவர்களுக்குக் குறைந்த சம்பளத்தில் வேலை செய்ய பல ஆர்டிஸ்ட் தயாராக இருப்பர். சொந்தப் பணம் போட்டுப் படம் பண்ணுகிறேன் என்று சொன்னால் மற்றவர்களிடம் ஐந்து லட்சம் வாங்கும் டெக்னிசியன் உங்களிடம் ஒரு லட்சம் வாங்குவார். புதுமையைத் தர வேண்டும் என்றும் அற்புதமான படம் எடுக்க வேண்டும் என்றும் தாகத்தோடு வருபவர்கள் இந்த வகைத் தயாரிப்பாளராக வரலாம். வரவேண்டும்.
 
கார்ப்பரேட்டில் சுயமாக முடிவெடுக்க முடியாது. எல்லாமே பிராசஸ்தான். பக்காவான டாக்குமெண்டேசன். எல்லாமே ஒழுங்கு விதிகள்தான். ஸ்கிரிப்ட் 150 பக்கத்தில் இருக்க வேண்டும். அதைப் பத்து பேர் படிப்பார்கள். அவர்களுக்குப் பிடித்தால் மட்டும் ஒத்துக்கொள்வர்.  தோல்வியையும் கண்டு கொள்ள மாட்டார்கள். அவர்களைப் பொருத்தமட்டில் இந்த ஆண்டு 12 படம். இதில் 2 போனாலும் பிரச்சினை இல்லை அவர்களுக்கு. சேட்டிலைட் விற்கும்போதோ டிஜிடல் விற்கும்போதோ 12 படங்களாகத்தான் விற்பார்கள். அதனால் சின்னச் சின்ன படங்களும் வியாபாரமாகி விடும். அதே சின்னப்படங்களை சுதந்திரத் தயாரிப்பாளரால் விற்க முடியாது. ஆனால் அவர்களிடம் வணிக நடைமுறைகள் எழுத்தில் உள்ளது போல் நேர்மையாக இருக்கும். என்ன ஒப்பந்தத்தில் எழுதினார்களோ அதை அப்படியே பின்பற்றுவார்கள். உதாரணம் சொல்லவேண்டுமென்றால் சசிகாந்த் – (ஒய் நாட்) அவர் தொடர்ந்து சில படங்கள் ஹிட் கொடுத்தவுடன் நான்கு படங்களுக்கு ரிலையன்ஸ் அவரோடு ஒப்பந்தம் போட்டிருக்கிறது. விக்ரம் வேதாவை அவர்கள்தான் இந்தியில் பண்ணுகிறார்கள். சசிகாந்த் ஆரம்பத்தில் ஒரு சுதந்திர தயாரிப்பாளராக ஆரம்பித்து இன்றைக்கு மிகப்பெரிய தயாரிப்பாளராக வருவதற்கு ரிலையன்ஸ் கம்பனியின் பேக் அப் முக்கியக் காரணமாய் அமைந்திருக்கிறது. கார்ப்பரேட் கம்பெனிக்கு நம்பிக்கை தந்துவிட்டீர்கள் என்றால் அவர்கள் சரியாக பேக் அப் தருவார்கள்.
 
தொழில்முறை தயாரிப்பாளர்கள் – கலை, அறிவியல், வணிகம் இவற்றின் கலவைதான் சினிமாத் தயாரிப்பு என நம்புபவர்கள். இவர்கள் systematic process -ஐப் பின்பற்றுவார்கள். படம் குறித்த தாகம் மட்டுமல்லாமல்  அவர்களிடம் வணிகம் குறித்த உணர்வும் இருக்கும். கதையைத் தேர்ந்தெடுக்கும் நேர்த்தி, நிதியைத் திரட்டும் தன்மை, சரியான நேரத்தில் படத்தை முடிப்பது என எல்லாவற்றிலும் தொழில்முறை நேர்த்தியை இவர்கள் பின்பற்றுவர். இவர்களிடம் கதையை எடுத்துச் செல்லும்போதே கதைச்சுருக்கத்தை (synopsis) கொண்டு செல்ல வேண்டும். அதை அவர்கள் தேர்வு செய்த பிறகுதான் ஸ்கிரிப்ட் ஆவணத்தை பரிசீலிக்க எடுத்துக் கொள்வார்கள். கதையை விவரித்தல் என்பதே கிடையாது. இவைதான் தொழில்முறை தயாரிப்பாளர்கள் பின்பற்றும் விஷயங்கள்.
 
-கற்பகவிநாயகம்
 
(BOFTA  திரைப்படக் கல்லூரி நடத்திய திரைப்படப் பயிற்சிப் பட்டறையில் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் நிகழ்த்திய உரையிலிருந்து)


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...