???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா வைரஸ் தாக்குதல்: பலி உயர்வு 100ஐக் கடந்தது! 0 ஆந்திராவில் மேல்சபை கலைப்பு: அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் 0 உமர் அப்துல்லாவின் படம் வேதனையளிக்கிறது: மு.க.ஸ்டாலின் 0 கருணை மனு நிராகரிப்புக்கு எதிரான முகேஷின் மனு இன்று விசாரணை 0 கேரளாவில் CAA-க்கு எதிராக 620 கி.மீ மனிதச் சங்கிலி! 0 திருச்சி: பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை 0 துக்ளக் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி: த.பெ.தி.க.வினர் கைது 0 ஏர் இந்தியா விற்பனை: சுப்பிரமணியன் சுவாமி எதிர்ப்பு 0 'அடிக்க வேண்டும்': ஸ்டாலின் பேச்சால் கிளம்பிய சர்ச்சை! 0 பிரதமருக்கு அரசியல் சாசன பிரதியை அனுப்பியது காங்கிரஸ்! 0 எந்த பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகாது: பிரதமர் மோடி கருத்து 0 சீனாவில் கொரோனா நோய்க்கு 56 பேர் பலி! 0 தமிழகம் பட்டினி பிரதேசமாக மாறும்: வைகோ 0 பெரியார் சிலை உடைப்பு: ஒருவர் கைது 0 ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

’’ஒரு டிஜிபி ஏசிக்கு நடுங்கலாமா?’’- கலைஞர் விழாவில் கலகலப்பு!

Posted : வியாழக்கிழமை,   ஆகஸ்ட்   08 , 2019  03:36:49 IST


Andhimazhai Image

 “யானைகள் இறந்தாலும் தந்தத்தை விட்டுச் செல்வதைப் போல், புலிகள் நகங்களையும் பற்களையும் விட்டுச் செல்வதைப் போல், அவர் தளபதியை விட்டுச் சென்றுள்ளார்,” என்று சொல்லி கூட்டத்தில் கரவொலியை வைரமுத்து பரிசாகப் பெற்றபோது வங்கக் கடலோரம் உறங்கிக் கொண்டிருக்கும் கலைஞர் புன்னகைத்திருப்பார்.

 

கலைஞர் மு.கருணாநிதியின் நினைவு   தினமான ஆகஸ்ட் 7 அன்று கலைஞரின் சிலையை மே.வங்க முதல்வர்  மம்தா பானர்ஜி திறந்து வைத்தார். சிலை திறப்பையொட்டி மாலையில் ராயப்பேட்டை ஒய் எம் சி ஏ மைதானத்தில் திக தலைவர் கி.வீரமணி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டதில்தான் வைரமுத்து இப்படிப் பேசினார். ”ஆகஸ்ட் 15 அன்று மாநில முதல்வர்கள் கொடியேற்றும் உரிமையை பெற்றுத் தந்தவர் என்பதால் அனைத்து முதல்வர்களும் தேசியக் கொடிக்கு வணக்கம் வைப்பதோடு கலைஞருக்கும் வணக்கம் வைக்க வேண்டும்,” என்றவர், ‘தளபதி நிச்சயம் வெல்வார். அவரே முதல்வராகி கலைஞருக்கு நினைவிடமும் கட்டுவார்’ என்று முடித்தார்.

 

கவிஞரின் கருத்தில் ஒரு திருத்தம் செய்ய இந்த ஆசிரியருக்கு (ஆசிரியர் கி.வீரமணி) உரிமை உண்டு, என்று பீடிகை போட்ட கி.வீரமணி, “வெல்வார் என்று சொன்னது தவறு. வென்றார் எனச் சொல்லுங்கள். நாடாளுமன்றத் தேர்தலில் வென்றார். 37 பெருசா? 13 பெருசா?” எனக் கேட்டு சபையில் கலகலப்பூட்டினார்.  மாநிலங்களே இருக்கக் கூடாது என செயல்படும் மத்திய அரசின் போக்கை ஒரு பிடிபிடித்த வீரமணி, ‘ஒரே மதம், ஒரே மொழி, ஒரே ரேசன் கார்டு என்றெல்லாம் செயல்படுத்துகிறீர்களே நாடெங்கும் ஒரே ஜாதி என அறிவிக்கத் தயாரா?” என்று கேட்ட கேள்விக்கு மக்களிடமிருந்து பலத்த கரவொலி எழும்பியது.

 

நாராயணசாமி, கலைஞரின் சாதனைகளாக தாலிக்கு தங்கம் முதல் சமத்துவபுரம் வரை பட்டியலிட்டு, அவர் வாழ்நாளெல்லாம் மாநில சுயாட்சிக்காகப் போராடியவர் என்பதை சுட்டிக் காட்டினார். மொழித் திணிப்பு, ஹைட்ரோகார்பன் திட்டம், நீட் என ஒவ்வொன்றாக மாநில அரசுகளின் உரிமைகளை மத்திய அரசு பறித்து வருவதையும் அதை புதுவை மாநிலம் எதிர்த்து நிற்பதையும் விளக்கினார். 2022 இல் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைக்க மக்கள் ஒத்துழைப்புத் தரவேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.

 

மம்தா, தனது மழலைத் தமிழில் சில நிமிடங்கள் பேசிவிட்டு ஆங்கிலத்துக்குத் தாவினார். ”மேடையில் அமர்ந்திருக்க வேண்டிய காஷ்மீர முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா வரமுடியவில்லை. அவரின் மகன் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தீ  போன்ற தலைவர்களையும் இப்போது வீட்டுச் சிறையில் அடைத்த கொடுமையைக் குறிப்பிட்ட மம்தா, கருணாநிதி மாநில உரிமைக்காக கடும் போராட்டம் நடத்தியவர்; அவருக்கு தீர்க்கமான பார்வை, தொலைநோக்கு இருந்தது; அவர் மாநில உரிமைக்கு குரல் கொடுத்தார்; அதேபோது தாய் நாட்டுக்கும் போராடினார்,” என்று புகழ்ந்தார்.

 

‘இது பரந்து விரிந்த நாடு. ஒவ்வொரு பகுதிக்கும் மக்களுக்கும் அடையாளம் உண்டு. அவற்றை அழிக்க விடக் கூடாது. பிராந்திய மொழி, குறிப்பாக தாய்மொழி இவற்றைக் காப்பாற்ற உறுதியாகப் போராட வேண்டும். தமிழ் மக்கள் துணிச்சல் மிக்கவர்கள். புலிகளைப் போன்றவர்கள். உங்கள் பக்கம் நான் நிற்பேன்’. என்று பேசிய மம்தா அடுத்தமுறை தமிழகம் வரும்போது இன்னும் சிறப்பாக தமிழைப் பேசுமளவுக்கு வருவேன்,’’ என்று சொல்லி முடித்தார்.

 

இறுதியாக நன்றியுரையாற்றிய மு.க.ஸ்டாலின் “கலைஞரின் அடையாளம் சமூக நீதி, மாநில சுயாட்சி. இவை இரண்டையும் ஒழிக்கும் வேலையில் மத்திய அரசு இறங்கியுள்ளது. மாநில உரிமைக்காக திமுக அரசு ராஜமன்னார் கமிசன் அமைத்தது,” என்கிற வரலாற்றையெல்லாம் கூறினார். அத்துடன், “காஷ்மீர் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புரிமையை திமுக என்றும் ஆதரித்தே வந்துள்ளது. அதே நேரத்தில் திமுகவின் தேசப்பற்றை யாரும் சந்தேகிக்க முடியாது என்றும் சீன, பாகிஸ்தான் போர்களின்போது இந்திய நாட்டின் பக்கம் நின்றோம்,” என்றார்.

 

கூட்டத்தின் ஆரம்பத்தில், மறைந்த பாஜக தலைவர் சுஸ்மா ஸ்வராஜ் மற்றும் திமுக முன்னாள் எம் எல் ஏ ஆயிரம் விளக்கு உசேன் ஆகியோரின் மறைவுக்கும் அஞ்சலி செலுத்தினர். பத்தாயிரம் பேர் திரண்டிருக்க வேண்டிய மைதானத்தில் பந்தலுக்கு உள்ளே பல வரிசைகள் காலியாகக் கிடந்தன. *ஸ்டாலின் – துர்கா தம்பதி சமேதராக உள்ள போட்டோ பிரேம் அமோகமாக விற்பனையானதைக் கவனிக்கமுடிந்தது. முரசொலி அலுவலகம் போன்று செட் போடப்பட்ட மேடையில் தலைவர்கள் அமர்ந்திருந்தனர். கருணாநிதி பயன்படுத்திய அம்பாசடர் கார் மேடையின் மேல் நிறுத்தப்பட்டு இருந்தது. கூட்டம் முடிந்த பின் பல தொண்டர்கள் அந்த காரின் முன் நின்று செல்பி எடுத்துக் கொண்டனர்.

 

கலைஞரைப் பற்றிக் குறிப்பிடுகையில் வைரமுத்து அவரது நகைச்சுவை பற்றிக் குறிப்பிட்டது தொண்டர்களைக் கவர்ந்தது. அதில் சில:

 

முதல்வராக கலைஞர் இருந்தபோது காவல்துறை அதிகாரிகள் கூட்டம் நடந்தது. அதில் டி.ஜி.பி. ராஜ்மோகன் பேச இருந்தார். அவருக்கு கலைஞரிடம் பேச கொஞ்சம் நடுக்கம் இருந்தது. கூர்மையாக கேள்விகள் வரும் என்பதால் வந்த நடுக்கம் அது.

 

அதை சமாளிக்க டிஜிபி சொன்னாராம் “ஐயா என் பேச்சை தொடங்கும் முன் நடுங்குவதற்கு தவறாக நினைக்கக் கூடாது. ஏசி நடுக்கத்தை உருவாக்குகிறது” என்றதும் உடனடியாக முதல்வரிடமிருந்து வந்த பதில் “ஒரு டிஜிபி, ஏசி க்கு நடுங்கலாமா?”

 

தென்காசி எம்.எல்.ஏ ஈஸ்வரன்: “விபூதிக்கு வரி விலக்கு உண்டா?”

கலைஞர்: “ஈஸ்வரனே வந்து வரி விலக்கு கேட்கின்றபோது இல்லாமலா?”

 

   3 சேலம் உருக்காலை திட்டத்தை மத்தியில் போராடி திமுக அரசு பெற்றிருந்த நேரத்தில் அதற்கு காங்கிரசும் உரிமை கொண்டாடி சட்டசபையில் பேசியது. பல ஆண்டுகளாக தாங்கள் ஆளும் கட்சியாக இருந்தபோது வாதிட்ட நிகழ்வுகளை எல்லாம் காங்கிரஸ் உறுப்பினர்கள் சுட்டிக் காட்டி சட்டமன்றத்தில் பேசினார்கள். முதல்வர் கருணாநிதி அடக்கமாக பதிலளித்தார் “வயதுக்கு வந்த பெண்ணை பெண் பார்க்க எத்தனையோ ஆண்கள் வந்து பார்த்து விட்டு செல்லலாம். ஆனால் தாலி கட்டியவன் மட்டும்தான் மாப்பிள்ளையாக முடியும்!”

 

 -கற்பகவிநாயகம்

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...