அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கேப்டன் பதவியிலிருந்து விலகும் விராட் கோலி! 0 கோயில்களில் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! 0 ‘அரண்மனை 3’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! 0 ஸ்விக்கி, சோமேட்டோ நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி! 0 கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை 0 நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை மையம்! 0 எல்லோர்க்கும் எல்லாம் என்ற திசை நோக்கி நடக்கட்டும் இந்த வையம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 சுதாகரனின் ரூ.30 கோடி சொத்துகள் முடக்கம்! 0 ஊரக உள்ளாட்சி தேர்தல் : முதல் நாளில் 378 பேர் வேட்புமனு தாக்கல் 0 திருவண்ணாமலையில் கோலகலமாக நடைபெறும் டிடிவி தினகரன் மகள் திருமண விழா! 0 திமுக அரசு பழிவாங்குகிறது - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 0 உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டி! 0 தமிழ் கைதிகளை மிரட்டிய அமைச்சர் ராஜினாமா! 0 ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு எப்போது?: அமைச்சர் விளக்கம் 0 நீட் ஒழிப்பு: அதிமுகவால் முடியாதது, திமுகவால் முடியுமா?
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

சிறப்புக் கட்டுரை: தலித் மக்களின் அச்சுப்பண்பாடு-2- பேராசிரியர் வீ. அரசு

Posted : வெள்ளிக்கிழமை,   செப்டம்பர்   20 , 2019  13:34:31 IST


Andhimazhai Image
சங்க இலக்கியங்கள் என சொல்லக்கூடிய தொல் பழங்கால இலக்கியங்களிலும் குடிகள் என்றொரு மக்கள் கூட்டத்தை பற்றி விரிவான பகுதி இருக்கிறது. ஏறக்குறைய எழுபதிலிருந்து தொண்ணூறு வரையிலான குடிகள் வாழ்ந்ததற்கான சான்றுகளை சங்க இலக்கிய பதிவுகளில் பார்க்க முடிகிறது. குடிகள் என்பது என்னவென்று சொன்னால் ஒரு குறிப்பிட்ட வேலையை செய்கிற மக்கள் கூட்டம். அந்த மக்கள் கூட்டம் காலப்போக்கில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தங்குகிறார்கள் ஆங்கிலத்தில் இதனை settlement என்று சொல்வார்கள். அவர்கள் நாடோடிகளாக வாழ்ந்த முறையிலிருந்து, வேட்டையாடி வாழ்ந்த முறையிலிருந்து, இரைதேடி வாழ்ந்த முறையிலிருந்து ஒரு இடத்தில் நிலையாக தங்கி பயிர் உற்பத்தி செய்யக்கூடிய வடிவமாக மாறும்போது அவர்கள் குடிகள் என்றும், தங்கும் இடத்தை ஊர் என்றும், அப்படி உருவான அந்த ஊர்கள் பல சேர்ந்துதான் சிறிய சிறிய அரசுகள் உருவானது என்றும், அதுவே பெரிய அரசுகளாக மாறியது என்பதும் வரலாறு. அப்படி உருவான இந்த அரசுருவாக்கத்தின் மூல வடிவில் சாதிகள் என்று பார்க்கபடவில்லை. அவர்கள் ஒரு தொழில் பிரிவினர் என்று தான் பார்க்கப்பட்டனர். ஆனால் நம்முடைய சமூக வரலாற்றில் இரண்டாம் நூற்றாண்டு தொடங்கி இயற்கையை வழிப்பட்ட மக்கள் கூட்டத்துக்குள் புராணிய கருத்து மரபுகளையும், வேதம் போன்றவற்றில் சொல்லக்கூடிய கருத்துகளையும், மனுநீதி என்ற கருத்தாக்கத்தை அடிப்படையாக கொண்டு உருவான வைதீக மரபு செல்வாக்கு பெறத்தொடங்கியது. 
 
அவைதீக மரபாக இருந்த நம்முடைய சமண, பௌத்தம் போன்ற கடவுள் இல்லாத மரபுகளுக்கு நேரெதிரான கடவுளை முதன்மைப்படுத்தக்கூடிய வைதீக மரபு நம்முடைய சமூகத்துக்கு வந்து சேர்ந்தது. இப்படி வந்து சேர்ந்த கருத்தமைப்புகளின் வடிவங்களாகத்தான் நமக்கு சைவம் என்றும், வைணவம் என்றும், அதனுடைய பல்வேறு வடிவங்களாகவும் நமது சமூகத்தில் உருவாகி, அந்த கருத்தாக்கங்களை முதன்மைப்படுத்தக் கூடிய காப்பியங்களை உருவாக்கி, பக்தி இலக்கியப் பாடல்களையும் அது சார்ந்த சொல்லாடல்களும் நமக்கு உருவாகிவிட்டன. இவை உருவான காலத்தில் நம்முடைய இயற்கை மரபு அழிக்கப்பட்டு, மனுநீதியில் சொல்லப்பட்டிருக்கக்குடிய மனித ஏற்றத்தாழ்வுகள் என்பவை பிறப்பு சார்ந்ததாகவும், அதாவது தலையில் இருந்து பிறப்பவன் ஒருவன், கழுத்திலிருந்து பிறப்பவன் ஒருவன், காலிலிருந்து பிறப்பவன் ஒருவன் என்று இப்படியான பல்வேறு விதமான புராணிய மரபுகளை நால்வருணங்கள் என்ற பெயரில் அதாவது பிரம்மம், அதை சார்ந்து உருவான பிராமணர்கள் அதைபோல அரசர்களை சார்ந்து உருவானவர்கள், வணிகத்தை சார்ந்து வைசியர்கள் உருவானது, இவர்கள் எல்லாவற்றுக்கும் அடியில் இருக்கக்கூடிய சூத்திரர்கள் என சொல்லக்கூடிய பிற எல்லா பிரிவினர்களுக்கும் ஊழியம் செய்யக்கூடியவர்கள் எனும் ஒரு சமூக கருத்துநிலை மரபு என்பது நமக்கு இரண்டாம் நூற்றாண்டில் தமிழ் சமூகத்தில் இடம்பெற்றது. 
 
இதில் கீழ்மட்டத்தில் மிகக்கொடுமையாக உருவாக்கப்பட்ட தலித்துக்கள் அல்லது பஞ்சமர்கள் அல்லது ஆதி திராவிடர்கள் இப்படி பல்வேறு பெயர்களில் பேசக்கூடிய மக்கள், நம்முடைய சமூகத்தில் மிகப்பெரிய அவலத்தை சந்தித்த மக்களாவர்கள். இவர்கள் கிபி இரண்டாம் நூற்றாண்டு முதல் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை சாதிய ரீதியாக மிகக்கொடுமையாக ஒடுக்கப்பட்ட மக்களாகவே வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் ஊர்களின் புறப்பகுதியில் குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் முழு உழைப்பாளிகளாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் பிற கூட்டத்தோடு சேரக்கூடாது என கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் கட்டிய பெரும்பெரும் கோயில்களுக்கெல்லாம் போகக்கூடாது என்ற மரபை உருவாக்கியிருக்கிறார்கள். இப்படி உருவாக்கப்பட்ட இந்த மக்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையில் ஒடுக்கப்பட்டவர்களாக இருந்தாலும்கூட காலனிய வருகை நிகழ்ந்தவுடன் அவர்கள் விழிப்படைகிறார்கள். 
 
இந்த சமூகத்தில் இருக்ககூடிய சில அறிவாளிகள், புலமைத்துவம் சார்ந்த பெரியவர்கள் இந்த மரபுக்கு எதிரான போராட்டத்தை மேற்கொண்டார்கள். இந்த வரலாறு பத்தொன்பதாம் நூற்றாண்டு முதல் இன்றுவரை தொடர்கிறது. எப்படி தேசிய அல்லது பார்ப்பனிய கருத்து நிலைகளை முதன்மையானதாககொண்ட வரலாறு இருக்கிறதோ அதைப்போலவே அதற்கு எதிராக, தங்களை ஒடுக்கியவர்களுக்கு எதிராக, காலனியக் காலத்தில் பெற்ற விழிப்புணர்வு உருவானது. அதைப்பற்றிப் பேசுவது அவசியம். இந்த வரலாற்றில் அச்சு என்கிற மரபு, அச்சு பண்பாடாக எப்படி வடிவம் பெற்று உருவானது என்பதைத்தான் நாம் இப்போது பேசப்போகிறோம் 
 
ஐரோப்பா மரபில் உருவான புத்தொளி மரபு. அதாவது  ஐரோப்பாவில் முழுக்க முழுக்க ஏசு சபை சார்ந்த மரபுகளே உருபெற்று, கிரிஸ்தவ மதமே செல்வாக்குள்ள மதமாக வளர்ந்தக் கட்டத்தில் பதினேழாம் நூற்றாண்டில் புரூணோ, பூமி தட்டையல்ல ஆரஞ்சுபழ வடிவமானது என்றும், சூரியன் பூமியை சுற்றுகிறது என்றும் பேசத்தொடங்கினார். நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளையெல்லாம் வெளியுலகத்துக்கு சொல்லத் தொடங்கியதை அடிப்படையாகக் கொண்டு கத்தோலிக்க மதத்தினர் அவரை தெருவில் உள்ள ஒரு தூணில் கட்டி தீ வைத்து கொளுத்தினார்கள். இது 1600 ஜனவரி மாதத்தில் நடந்தது. பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நடந்த இந்த கொடுமை உலகம் முழுதும் கிறிஸ்தவ சமய மரபுக்கு எதிராக ஒரு புத்தொளி இயக்க மரபாக உருவானது. இந்த புத்தொளி இயக்க மரபு உருவானதுக்கு அறிவியல் கண்டுபிடிப்புகள் முக்கியமான காரணம். இதுவரை அவர்களால் நம்பப்பட்டு வந்த கடவுள் என்கிற பொருளை முற்றுமுழுதாக கேள்விக்குட்படுத்துகிறார்கள். கடவுளை அடிப்படையாககொண்டு செயல்படும் சமய இயக்கங்களையும் சமய மரபுகளையும் மறுக்கத் தொடங்குகிறார்கள். இப்படி உருவான புத்தொளி இயக்க மரபுகளில் இருந்துதான் தத்துவ மேதைகளும் அறிவாளிகளும் உருவாகிறார்கள். 
 
அப்படி உருவாகிற புதுதளத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் குறிப்பாக மனிதனுடைய உழைப்பு, அந்த உழைப்பை நாம் எப்படி மதிப்பீடு செய்வது மனிதன் எப்படி ஒரு புதிய சக்தியாக இருக்கிறான் என்பவற்றையெல்லம் அடிப்படையாகக்கொண்டு 1843 வாக்கில் மார்க்ஸும் எங்கெல்ஸும் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை என்கிற பிரகடனத்தை, உலகத்துக்கு ஒரு அறிக்கையாக வழங்கினார்கள். அந்த சிந்தனை மரபின் தாக்கம் என்பது பல வடிவங்களில் உருப்பெற்றது. இந்த புத்தொளி மரபு சார்ந்த கருத்தாக்கம் கொண்டவர்களும் இதில் இருந்தனர். இவ்வாறான நவீன பொருளாதார மரபுகளை கொண்டவர்களும் இருந்தார்கள். இந்த மரபு உலகம் முழுவதும் செல்வாக்குடையதாக வளரத் தொடங்கியது.
 
தமிழகத்தை பொருத்தவரை அந்த மரபு எப்படியான செல்வாக்குடைய மரபாக உருவாகிறது எனச் சொன்னால், பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்கட்டத்தில் குறிப்பாகச் சென்னை லௌகீக சங்கம் (Madras secular society) என்ற பெயரில் புரூணோவை தங்களது ஆதர்ச புருசனாக கொண்டு அவருடைய கருத்து மரபு சார்ந்த புத்தொளி கருத்தை பரப்புவதற்கான ஒரு அமைப்பாக செயல்பட்டனர். அவர்கள் தத்துவ விவேசினி என்ற பத்திரிகையையும், ஆங்கிலத்தில் Thinker எனும் பத்திரிகையையும் 1882 முதல் 1888 வரை கொண்டுவந்தனர். அதற்குமுன்பே அவர்கள் ‘தத்துவவிசாரினி’ என்ற பத்திரிக்கையையும், ‘The philosiphical enquire’ என்ற பத்திரிக்கையையும் நடத்தியிருக்கிறார்கள். இந்த அமைப்பின்மீது மரியாதைவுடையவராகவும் பிரம்மசமாஜத்தின் மீது மிகுந்த ஈடுபாடுடையவராக இருந்த பெரியவர் அத்திப்பாக்கம் வெங்கடாசலனார் என்பவர் 1878-யில் ‘இந்துமத ஆபாச தரிசினி’ என்ற எண்ணூறு பாடல்களைகொண்ட புத்தகத்தை எழுதியிருக்கிறார். அதில் இந்துமதம் மிகக்கொடுமையாக எப்படி மக்களை ஒடுக்குகிறது எனபதைப் பற்றி அவர் பேசியிருக்கிறார். அந்நூலை மறுப்பதிப்பு செய்திருக்கிறார்கள். நானும் அண்மையில் நியு செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் மூலமாக அ. வெங்கடேசனார் ஆக்கங்கள் என்ற பெயரில் ஒரு நூலாக வெளியிட்டிருக்கிறேன். அதை நீங்கள் பார்க்கும்வாய்ப்பு கிடைத்தால், நான் பேசக்கூடிய விடயம் உங்களுக்குத் தெளிவாகலாம். 
 
இப்படி உருவான இந்த மரபில் அதாவது புத்தொளி மரபு சார்ந்த, கடவுள் மறுப்பு சார்ந்த, சுயமரியாதையை முன்னிலைப்படுத்தக்கூடிய மரபு என இதன் வழியில் உருவானதுதான் பிற்காலத்தில் திராவிடக் இயக்கம், சுயமரியாதை இயக்கம். இதன் முக்கிய சக்தியாக, பெரும் ஆளுமையாக உருவானவர்தான் பெரியார். அந்த பெரியார் சார்ந்து தமிழ்ச் சமூகத்தில் உருவான வரலாறு என்பது ஒன்று. ஆக இப்போது மூன்று இயக்கங்களை நான் உங்களுக்கு அடையாளப்படுத்தியிருக்கிறேன்.  ஒன்று மத மரபு சார்ந்த சீர்திருத்த மரபுகளை முன்னெடுத்த மரபு. அதையொரு தேசிய மரபாக நாம் சொல்லிக்கொள்ளலாம். இன்னொன்று ஒடுக்கப்பட்ட மக்களை முதன்மைப்படுத்தி அவர்களது விடுதலைக்காக செயல்படக்கூடிய மரபு. மூன்றாவதாக உலகத்தில் உருவான புத்தொளி இயக்க மரபுகளை கையிலெடுத்த இடதுசாரி இயக்க மரபு என மூன்று நிலைகளில் நாம் தமிழ் சமூகத்தை அடையாளப்படுத்தலாம். இந்த புரிதல் நமக்கு முக்கியம். இந்த புரிதலிலிருந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இதழியல் சார்ந்த, அச்சு பண்பாடு சார்ந்த, அச்சு பண்பாடு எவ்வாறு உருப்பெற்றிருக்கிறது என்பதை மட்டும் நான் பகிர்ந்துக்கொள்கிறேன். 
 
ஒடுக்கப்பட்ட சமூகத்தை சார்ந்தவர்களின் அச்சு பண்பாடு எப்படி நிகழ்ந்தது என்று சொன்னால். ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக உருவாக்கப்பட்ட இயக்கங்களின் கருத்துக்களை வெளிபடுத்தும் இதழ்கள் என்ற வகையில் தான் உருவாகியிருக்கின்றன. அதனை நான் மூன்று பிரிவுகளாக பார்க்கலாமென நினைக்கிறேன். அவற்றில் முதல் பிரிவு ‘பறையன்’ இதழை வெளிக்கொண்டுவந்து, அதையொரு முக்கிய சக்தியாக உருவாக்கி,  குறிப்பிட்ட மக்களுக்கு அரசியல்பூர்வமான விடுதலையை முன்னெடுத்த பெரியவர் இரட்டைமலை சீனிவாசன் மரபு என்கிற மரபை நான் இங்கு முக்கியமாகப் பேச விரும்புகிறேன். இரண்டாவதாக திராவிடர் மகாசபை என்ற அமைப்புகளை உருவாக்கி அதில் ஜான் ரத்தினம் அவர்களோடு இணைந்து தொடக்கத்தில் செயல்பட்ட அயோத்திதாசர். அவர் பிற்காலத்தில் நடத்திய ஒருபைசா தமிழன், தமிழன் ஆகிய இதழ்கள் அதன் தொடர்ச்சி சார்ந்த மரபு என்பதை இரண்டாவது மரபாக நான் அடையாளப்படுத்த விரும்புகிறேன்.
 
இவைகளோடு மூன்றாவது மரபாக இரட்டைமலை சீனிவாசன் மரபு, அயோத்திதாசர் மரபு ஆகியவை எல்லாம் இணைந்த நவீன அரசியல் விடுதலைகளை முன்னெடுக்கக்கூடிய, அம்பேத்கர் பேசக்கூடிய கருத்துநிலைகளை வலியுறுத்தி பேசக்கூடிய, கருத்தியலையும் இணைத்து 1980-களுக்கு பிறகு உருவான தலித் விடுதலை இயக்க அமைப்புகள் என்று மூன்று வகையில் ஒடுக்கப்பட்ட மக்களுடைய விடுதலைக்கான அமைப்புகளை பற்றி நாம் புரிந்துக்கொள்ள வேண்டுமென நினைக்கிறேன்.
 
இந்த மூன்று அமைப்புகளும் அச்சு பண்பாட்டில் என்ன சாதனைகளை நிகழ்த்தின அல்லது என்னென்ன செய்தன என்பதை நாம் பார்க்க வேண்டியிருக்கிறது. இதில் முதற்கட்டமாக, இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் 1893 வாக்கில் பறையன் என்கிற இதழை தொடங்குகிறார். இதனை 1900 வரை அவர் நடத்துகிறார். அவர் தன்னுடைய 22-வது வயதிலேயே ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலைக்காக உலகம் முழுவதும் பயணம் செய்து அதற்கான ஆதரவை திரட்ட வேண்டுமென திட்டமிடுகிறார். அதன் விளைவாக லண்டன் செல்லவேண்டுமென தீர்மானித்து ஆப்ரிக்கா வழியாகச் செல்கிறார். செலவுக்கு வேண்டிய பணத்துக்காக, ஆப்ரிக்காவில் சில ஆண்டுகள் வேலை செய்து திரட்டுகிறார். இந்த பயணத்தின்போது ஒரு தீவில் அவருக்கு மலேரியா காய்ச்சல் வருகிறது. குளிர் பிரதேசமான லண்டன் சென்றால் நீங்கள் உயிருடன் திரும்பமுடியாது என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். இதனால் லண்டன் செல்லமுடியாமல் மீண்டும் திரும்பிவிடுகிறார். நாடு திரும்பியப்பிறகு ஒடுக்கபட்ட மக்களின் விடுதலைக்காக அவர் உருவாக்கிய அமைப்பின் பெயர் ‘பறையர் மகாஜன சபை’. 1892-இல் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. ஐந்தாம் ஜார்ஜ் மன்னரிடம் தம்முடைய கோரிக்கைகளெல்லாம் சொல்லி, ஒடுக்கப்பட்ட மக்கள் எப்படியான துன்பங்களெல்லாம் அனுபவிக்கிறார்கள், தண்ணீர் எடுத்து குடிப்பதற்கான உரிமை இல்லை, ஒரு இடத்தில் வீடுகட்டி வாழ்வதற்கான உரிமையில்லை, கல்வி கற்பதற்கான உரிமையில்லை, அவர்களுக்கு மரியாதை கொடுக்கப்படுவதில்லை, சுகாதாரமான இடத்தில் வாழ்வதற்கு வழியில்லை என இப்படியான எல்லாவகை ஒடுக்குமுறைகளையும் மையப்படுத்தி காலனிய அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து அவற்றை போராடிப் பெறலாமென்கிற போராட்டத்தோடு, தனது வாழ்கையை நடத்தி 1945-இல் மறைந்தார். 
 
1923 வாக்கில் பிரித்தானிய அரசால் உருவாக்கப்பட்ட சென்னை மாகாண சபையில் உறுப்பினராகவும் செயல்பட்டார். பிரித்தானிய அரசாங்கம் அவருக்கு ராவ் சாகிப், ராவ் பகதூர் போன்ற பட்டங்களையெல்லாம் கொடுத்துக் கௌரவப்படுத்தியது. 
 
– பேரா.வீ. அரசு அவர்களிடம் அந்திமழை இதழுக்காக நிகழ்த்திய உரையாடலின் எழுத்து வடிவம்
 
(இதன் தொடர்ச்சி அடுத்த வெள்ளிக்கிழமை வெளியாகும்)

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...