???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 CAA குறித்து இந்தியாவே சரியான முடிவு எடுக்கும்: டிரம்ப் 0 டெல்லி வன்முறைக்கு காவல்துறையின் மெத்தனமே காரணம்: உச்சநீதிமன்றம் 0 டெல்லி வன்முறைகளில் 20 பேர் பலி! 0  "பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே படப்பிடிப்பை தொடங்க வேண்டும்": கமல் 0 தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: ரஜினிக்கு மீண்டும் சம்மன் 0 டெல்லியில் நடைபெற்ற வன்முறைக்கு தலைவர்கள் கண்டனம் 0 இந்தியர்களை மீட்க சீனா செல்கிறது ராணுவ விமானம் 0 தி.மு.க ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டதுதான் என்.பி.ஆர்: முதலமைச்சர் 0 டிரம்ப் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் எடியூரப்பா 0 டெல்லி வன்முறைக்கு 4 பேர் பலி! 0 தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி 0 அம்மா திரையரங்கத் திட்டம் அவசியமில்லை: அமைச்சர் கடம்பூர் ராஜு 0 சபர்மதி நினைவிடத்தில் காந்தி குறித்து எழுதாத ட்ரம்ப்! 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 32- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 0 'தலைவி'யாக நடிப்பது சவாலாக உள்ளது: கங்கணா
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சிறப்புக் கட்டுரை: தலித் மக்களின் அச்சுப்பண்பாடு -3 பேராசிரியர் வீ. அரசு

Posted : வெள்ளிக்கிழமை,   செப்டம்பர்   27 , 2019  05:01:35 IST


Andhimazhai Image

1931-இல் லண்டனில் நடைபெற்ற ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்கான வட்டமேசை மாநாட்டில் அம்பேத்கரோடு இரட்டைமலை சீனிவாசனும் கலந்துக்கொண்டு ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலைக்காக போராடுகிறார். இவர் தான் முதன்முதலில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கோரிக்கைகளை அச்சு ஊடகத்தின் வழியாக வெளிப்படுத்த முடியும் எனபதை நடைமுறைப்படுத்தி, பறையன் இதழ் வழியாக எழுதத் தொடங்கினார். ஆனால், இவருக்கு முன்னரும்கூட சிலர் செயல்பட்டிருக்கிறார்கள் என்ற குறிப்புகளை அண்மையில் நண்பர் ஜெ. பாலசுப்பிரமணியம் தனது ஆய்வின் மூலமாக வெளிப்படுத்தியிருக்கிறார். அப்படி பார்க்கும்பொழுது இரட்டைமலை சீனிவாசனின் மரபை பிற்காலத்தில் முன்னெடுத்தவர்களில் மிக முக்கியமானவராக பண்டிதர் தசாவதானம் பூஞ்சோலை முத்துவீரன் பிள்ளை என்பவரை குறிப்பிடுகின்றனர். இந்த மனிதர் பூலோகவியாஸன் என்றொரு இதழை நடத்தியிருக்கிறார். பூலோகவியாஸன் மிக நீண்ட நாட்கள் வெளிவந்திருக்கிறது. இந்த பூலோகவியாஸன் இதழில் பார்க்கும்பொழுது இரட்டைமலை சீனிவாசன் பறையர் இதழில் என்னமாதிரியான கோரிக்கை வைத்தாரோ, குறிப்பாக பறையன் மகாசன சபை கோரிக்கைகளை இவரும் முன்னெடுத்து அவற்றினுடைய தொடர்ச்சியாக இந்த இதழை நடத்தியிருக்கிறார். நீண்ட நெடுங்காலம் இந்த இதழ் வெளிவந்திருக்கிறது. இந்த இதழுனுடைய பிரதிகள், அதனுடைய வடிவங்கள் உள்ளிட்டவற்றையெல்லாம் இன்றைக்கு பார்க்க முடியவில்லை. ஆனால், நண்பர் ஜெ. பாலசுப்பிரமணியம் ஆவணக் காப்பகத்தில் உள்ள பதிவுகளைத் தொகுத்து வெளியிட்டுள்ளார்.

 

காலனிய ஆதிக்கத்தில் அரசின் உளவுத்துறை நம்முடைய இதழ்களை சேகரித்து அதன் பொருளடக்கத்தை பதிவு செய்தது தான் Native newspaper reports. அது இப்போது ஆவணக் காப்பகத்தில் உள்ளது. அவற்றிலிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த செய்திகளை பதிவுசெய்திருக்கிறார். அதன்படி பார்த்தால் இந்த பூலோகவியாஸன் முக்கியமானப் பத்திரிகையாக வெளிவந்திருக்கிறது.

 

இரட்டைமலை சீனிவாசனின் தொடர்ச்சியாக அவரது கருத்துக்களை பேசிய மரபை சார்ந்தவர்கள் என சொல்லக்கூடிய எம்.சி. ராஜா, அதற்குபிறகு இருந்த பெரியவர் சகஜானந்தர் இவர்களுடைய பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக இந்த மரபை நான் பார்க்கிறேன். அதாவது இரட்டைமலை சீனிவாசன் என்பவரும் முத்துவீரன் பிள்ளை என்பவரும்,  எம்.சி. ராஜா போன்றவர்களும், பிறகு சகஜானந்தர் போன்றவர்களும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலையைக் கோரிய பல்வேறு விதமான போராட்டங்களை தாங்கள் நடத்திய பத்திரிகைகளின் ஊடாக வெளிப்படுத்தி வந்தார்கள். அவர்கள் தாங்கள் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றும் தங்களை ஒடுக்குகிறார்கள் என்றும், இந்த ஒடுக்குதலிலிருந்து தங்களுக்கு விடுதலை வேண்டுமென்றும், இதுசார்ந்த பல்வேறுவிதமான கோரிக்கைகளை, அமைப்புகளை உருவாக்கி அதன் மூலம் வெளிப்படுத்தினார்கள். அந்த அமைப்புகளின் வடிவமாகப் பத்திரிகைகளை நடத்திவந்தார்கள். இவ்வாறான பெயர்களை ஜெ. பாலசுப்பிரமணியம் பதிவு செய்திருக்கிறார். இதுவொரு முக்கியமான விடயம்.

 

ஜான்ரத்தினம் அயோத்திதாசரோடு இணைந்து 1896 வாக்கில் திராவிட பாண்டியன் என்ற அமைப்பை உருவாக்கி அந்த அமைப்பின் மூலமாக அப்போதே அத்வைதீக சங்கம் என்கிற அமைப்பையும் உருவாக்கியிருக்கிறார். பிறகு இந்த அமைப்பை காலப்போக்கில் வளர்ச்சியின் ஊடாக மாற்றி,  திராவிட மகாசனசபை என்கிற பெயரோடுகூடிய ஒரு அமைப்பை 1891-யில் உருவாக்குகிறார்கள். இந்த திராவிட மகாசனசபையை உருவாக்கிய காலகட்டத்தில், தென்னிந்திய சாக்கிய பௌத்தவ சங்கம் என்கிற சங்கத்தை உருவாக்குகிறார் அயோத்திதாசர். இவர் இலங்கை சென்று 1898-இல் பௌத்த தீட்சை பெற்றுத் திரும்புகிறார். சாக்கிய பௌத்த சங்கத்தின் முக்கிய செயற்பாட்டாளராக அவர் தன்னை நிலைநிறுத்திக்கொள்கிறார். தொடக்கத்தில் அவர் உருவாக்கிய திராவிட மகாசனசபை என்ற அமைப்பினுடைய தொடர் வளர்ச்சியாக இந்த சாக்கிய பௌத்தவ சங்கம் அமைக்கிறது. இந்த சங்கம், ஒடுக்கப்பட்ட மக்கள் பூர்வீகத்தில் பௌத்தர்கள். பௌத்தவ பண்பாட்டை பின்பற்றி வந்தவர்கள். இவ்வாறு பௌத்த மரபில் இருந்தவர்களை, வைதீக மரபைச் சார்ந்தவர்கள் வரணாசிரம மரபைச் சார்ந்தவர்களாக மாற்றி, அவர்களை ஒடுக்கப்பட்டவர்களாக்கிவிட்டார்கள். அறிவில்லாதவர்கள் போலவும், சமூகத்தில் வளர்ச்சியடையாதவர்கள் போலவும் தலித்துக்களை இவர்கள் கட்டமைத்துவிட்டார்கள்.

 

ஆனால், உண்மை அதுவல்ல. தலித்துகள் மிகப்பெரிய அறிவு பாரம்பரியத்துக்கு சொந்தக்காரர்கள். எடுத்துக்காட்டாக திருக்குறளை எழுதிய திருவள்ளுவரும்கூட இந்த மரபை சார்ந்தவர்தான் என்றும், ஔவையாரும் இந்த மரபை சார்ந்தவர்தான் என்றும் அயோத்திதாசர் கூறுகிறார். திருத்தக்க தேவர் எழுதியிருக்கிற சீவகசிந்தாமணி காப்பியமாக இருக்கட்டும், சூடாமணி போன்ற காப்பியமாக இருக்கட்டும்; மணிமேகலை போன்ற காப்பியமாக இருக்கட்டும். இந்த காப்பிய மரபுகள், இவற்றில் உருவாகக்கூடிய பல்வேறு தன்மைகள் பௌத்தவ அறிவு மரபையும், அவைதீக அறிவு மரபையும் உருவாக்கிய மரபாகும். இந்த மரபுக்கு சொந்தக்காரர்கள், ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள். அவர்களுடைய இலக்கியங்களெல்லாம் திரித்து எழுதப்பட்டுவிட்டன. அவர்களுடைய வரலாறும் பொய்யாக எழுதப்பட்டுவிட்டன. இவற்றையெல்லாம் திருத்தி மறுவரலாறாக எழுதவேண்டும். அவர்களை பூர்வ பௌத்தர்கள் என நாம் அடையாளப்படுத்த வேண்டும். அதற்கான போராட்டத்தை நாம் கட்டமைக்க வேண்டும் என்பதற்காகத்தான் 1907-இல் ஒரு பைசா தமிழன் என்ற பத்திரிகையை அயோத்திதாசர் தொடங்குகிறார். இந்த ஒரு பைசா தமிழன் 1908-இல் தமிழன் என்ற பெயரில் மாற்றி நடத்தினார். 1914-இல் அவர் இறக்கும் வரை அந்த பத்திரிகை வெளிவந்தது.

 

இரட்டைமலை சீனிவாசனும், அவரது வழிவந்தவர்களும் பௌத்த மரபை முதன்மைப்படுத்தி பேசியவர்கள் இல்லை. ஆனால் அயோத்திதாசர், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடயங்களை பேசும்போது பௌத்த மரபை முன்னிலைப்படுத்தி, அதனுடைய அடிப்படையில் கருத்தாக்கங்களை அவர் வாழ்ந்த காலம்வரை தமிழன் பத்திரிக்கையில் அயோத்திதாசர் விரிவாக எழுதியிருக்கிறார். இப்போது நண்பர் அலாய்சியஸ் மூன்று தொகுதிகளாக அந்த கட்டுரைகளையெல்லாம் தொகுத்து நமக்கு கொடுத்திருக்கிறார். அவற்றை வாசிப்பதன் மூலமாக, தமிழ் சமூகத்தில் பௌத்த மரபை அயோத்திதாசர் முன்னெடுத்ததன் வழியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கான மாற்று மரபை, அவர்களுடைய பூர்வீக மரபை, அவர்களுக்கான சுயமரியாதை, அவர்களுக்கான உண்மையான பண்பாடு, அவர்களுடைய இலக்கியம் இவற்றையெல்லாம் வெளிப்படுத்தும் ஒரு பத்திரிகையாக தமிழன் பத்திரிக்கை செயல்பட்டதை காணமுடிகிறது. அச்சு ஊடகத்தின் மூலமாக, அயோத்திதாசர் முன்னிறுத்திய அந்த போராட்டம், முக்கியமான போராட்டமாகவே நான் கருதுகிறேன். பின்னர் பெரியசாமிபிள்ளை போன்றவர்கள் கோலார் தங்கவயலில் உருவான பௌத்த சங்கங்களின் மூலமாக அயோத்திதாசரின் இந்த மரபை பெரிதாக முன்னெடுத்தார்கள். இதில் முக்கியமாக, நான் ஆய்வுசெய்து கண்டெடுத்த விடயத்தைக்கூட இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். பௌத்தம் சார்ந்த பல்வேறுவிதமான நூல்களை கோலார் தங்கவயலில் இருந்து வெளியிட்டபோது ஒரு சிறிய நூலையும் அவர்கள் வெளியிட்டார்கள். அந்த சிறிய நூலின் பெயர் ’வருணபேதவிளக்கம்’. இந்த வருணபேதவிளக்கம் என்கிற மிகச்சிறிய நூலை 1884 வாக்கில் சென்னை லௌகீக சங்கம் வெளியிட்டது. இதை எழுதியவர் மாசிலாமணி என்பவர். இவர் சென்னை லௌகீக சங்கத்தை சேர்ந்தவர். இதனுடைய அடுத்த பதிப்பு 1903-இல் வெளிவந்திருக்கிறது. 1903-இல் வெளிவந்த வருணபேதவிளக்கம் நூலை அயோத்திதாசர் மரபை பின்பற்றிச் செயல்படக்கூடிய கோலார் தங்கவயல் பௌத்த சங்கத்தை சார்ந்தவர்கள் 1926-இல் ஒரு வெளியீடாக கொண்டுவருகிறார்கள். இதுவொரு மிக முக்கியமான விடயம். சென்னை லௌகீக சங்கத்தை சேர்ந்தவர்கள் வெளியிட்ட வருணபேதவிளக்கம் என்றவொரு நூலை, தமிழ் பௌத்த மரபை முன்னெடுக்கக்கூடிய அயோத்திதாசர் சமய மரபைச் சேர்ந்த குழுவினர் ஏன் அச்சிடுகிறார்கள் என்பது முக்கியமானது.

 

தமிழ் சமூகத்தில் உருவான புத்தொளி இயக்க மரபுக்கும்,  பௌத்தத்தை நவீன காலத்துக்கான வடிவமைப்பாக கட்டமைத்த அயோத்திதாசருடைய மரபிற்கும் இருக்கக்கூடிய உறவை இங்கு கண்டுகொள்ள முடியும். அப்படி கோலார் தங்கவயல் மரபை உருவாக்கி திருப்பத்தூர், குடியாத்தம் போன்ற வட ஆற்காடு பகுதிகளில் உள்ள பல்வேறு ஊர்களில் செயல்பட்ட பௌத்த சங்கத்தினுடைய மூலவராக அயோத்திதாசருடைய மரபை வேறொரு வடிவத்தில் பிற்காலத்தில் பின்பற்றக்கூடியவர்களாக இருந்தனர். அவர்களில் பலபேர் பல பத்திரிகைகள் நடத்தியிருக்கிறார்கள்.

 

அயோத்திதாசரின் மரபிலும் சரி, இரட்டைமலை சீனிவாசனின் மரபிலும் சரி மிக முக்கியமாக நாம் பார்க்கவேண்டியது, ஒடுக்கப்பட்ட மக்களின் கல்விக்கான உரிமை ஆகும். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சிறப்பு பள்ளிக்கூடங்களை உருவாக்க வேண்டுமென்பது, அவர்களுக்கான கல்வி மேம்பாட்டை எப்படி வளர்த்தெடுக்க வேண்டுமென்பது, அதற்கு இவர்களே உருவாக்கிய பள்ளிக்கூடங்கள். இப்படி பல்வேறு விதமான வடிவங்களை நாம் பார்க்கிறோம். இப்படியான மரபுகள் 1930-க்கு பிறகு பூலேவிலிருந்து உருவாகி வரக்கூடிய, இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான வளர்ச்சி என்பது, அம்பேத்கரின் வழியாகத் தமிழ் சூழலிலும் மிக விரிவாக பேசப்படுகிறது.   அம்பேத்கருடைய கருத்தியல் தமிழ் சமூகத்தில் பரவாலாக பேசப்பட்டதற்கு பெரியாரின் பங்கு இருக்கிறது. அம்பேத்கருடைய நண்பராக பெரியார் அறியப்பட்டார். இவர்கள் எல்லோரும் பேசக்கூடிய இந்த மரபிலிருந்து தமிழ் தலித்துகளுடைய அச்சு மரபு எப்படி இருந்தது? இரட்டைமலை சீனிவாசனின் மரபு தொடர்ந்ததா? அல்லது அயோத்திதாசரின் மரபு தொடர்ந்ததா? அல்லது இவைகளின் இணைவாக ஒரு புதிய மரபு உருவானதா? இப்படி பல்வேறுவிதமான கேள்விகளை நாம் எழுப்பலாம். ஆனால், குறிப்பாக இரட்டை வாக்குரிமை, தனித் தொகுதிகளை உருவாக்குதல், பூனா ஒப்பந்தம் என சொல்லக்கூடிய அம்பேத்கரோடு காந்திக்கு ஏற்பட்ட முரண்பாடுகள், 1930, 1940-களில் இந்திய அரசியலில் உருவான புதிய அமைப்புகள், சமூக இயக்கங்கள், இவற்றையெல்லாம் எப்படி அயோத்திதாசர் தலித்திய அடையாளத்தோடு ஒரு கட்டமைப்பை உருவாக்கினாரோ, இரட்டைமலை சீனிவாசன் தலித் விடுதலைக்காக அமைப்பை உருவாக்க வேண்டுமென முன்னெடுத்தாரோ, அதை எப்படி எம்.சி. ராஜா போன்றவர்களும், சகஜானந்தர் போன்றவர்களும் மேலும் மேலும் வளர்த்தெடுத்து பாடுபட்டார்களோ, அதைப்போல அயோத்திதாசர் கட்டமைத்த அமைப்புகளில் பின்வந்தவர்கள், அதைத்தொடர்ந்து கோலார் தங்கவயல் சார்ந்த பல்வேறு மனிதர்கள் அதை வளர்த்தெடுதக்க விருப்பினார்களோ, இந்த மரபினர்களுடைய தொடர்ச்சி அல்லது இணைவு இவை எல்லாவற்றையும் உள்வாங்கிய ஒரு தன்மை, குறிப்பாக அம்பேத்கர் முன்னெடுத்த பௌத்த மரபு, இவற்றின் ஒரு இணைவாக உருபெற்றுவிட்டதாகக் கருதுகிறேன்.

 

ஆனால் இங்கு இன்னொரு சிக்கலும் உருவாகிவிட்டது, குறிப்பாக காந்தி இவர்களுக்கு கொடுத்த ஒரு புதிய பெயர். ஹரிஜன் (கடவுளின் குழந்தைகள்) என்றவொரு புதிய பெயரை காந்தி தலித் மக்களுக்கு கொடுக்கிறார். அதை சார்ந்து இந்த மக்களில் பலர் காங்கிரஸ் கட்சியிலும் சேர்ந்தனர். குறிப்பாக தமிழ்நாட்டில் காந்தியின் செல்வாக்கு உருவாகிறது. கக்கன் போன்றவர்கள், அதைத்தொடர்ந்து வந்த பல்வேறு அரசியல் தலைவர்கள் எல்லாம் காங்கிரஸ் கட்சியினராகவும் மாறுகிறார்கள். தனித்தொகுதியில் அவர்களுக்கு கிடைக்கக்கூடிய உரிமையை, தனி தலித் அடையாளமாக அவர்கள் நிலைநாட்டினார்களா? என்று நாம் தேடினோமானால், அது அவர்கள் சார்ந்திருக்கும் கட்சியின்  அடையாளமாக உருவாகிவிட்டதாகவே நான் கருதுகிறேன். எனவே 1950-களிலிருந்து 80-கள் வரையான முப்பது ஆண்டுகள் தமிழ் சமூகத்தில் தலித் மக்களினுடைய அடையாளம் என்பது பெரியாரால் பேசப்பட்டது. அம்பேத்கரால் பேசப்பட்டது. ஆனால் இங்கு இருக்கக்கூடிய வேறு பல தலித் சமூகத்தை சேர்ந்தவர்களால் பேசப்பட்ட அந்த குரல் தனித்த அடையாளம்கொண்ட குரலாக எனக்குப்படவில்லை. காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களாகத்தான் பெரும்பாலும் அவர்கள் அறியப்பட்டனர். ஆனால் 1980-களுக்கு இறுதியில், 1990-களில் அம்பேத்கர் நூற்றாண்டுனுடைய தாக்கமாக தமிழ் சமூகத்தில் அயோத்திதாசரும், இரட்டைமலை சீனிவாசனும் மீள் கண்டுபிடிப்பு செய்யப்படுகிறார்கள். இரட்டைமலை சீனிவாசனுடைய மரபுகள், அயோத்திதாசரின் மரபுகள் இவற்றையெல்லாம் இணைத்த தோழர் திருமாவளவனுடைய விடுதலை சிறுத்தைகள் அமைப்பு, பழைய தலித் அமைப்புகளில் இருந்த பல்வேறு கருத்தாக்கங்களுடைய இணைப்பாக, அந்த கருத்தாக்கங்களை தற்போதைய சமூக நடைமுறையில் எப்படி கொண்டுவர வேண்டும் என்பதில் அவர்கள் அக்கறையோடு செயல்படுவதாகக் கருதுகிறேன்.

 

அறிவுப்புலமைத் துறை சார்ந்து நண்பர்கள் ராஜ்கௌதமன், ரவிக்குமார், ஸ்டாலின் ராஜாங்கம், ஜெ. பாலசுப்பிரமணியம், கோ. இரகுபதி, அழகிய பெரியவன் போன்றவர்களெல்லாம் மேலே கூறிய பழைய வரலாற்று கருத்தாக்கங்களை மீள்பதிப்பு செய்தும், மீள் வடிவமைப்பு செய்தும் புதிய கண்ணோட்டங்களோடு அவற்றை எழுதி வருகிறார்கள். ராஜ்கௌதமன், ரவிக்குமார் போன்றவர்கள் எழுதியிருக்ககூடிய வரலாறுகள் என்பவை தமிழ் சமூகத்தில் எப்படிவொரு தேசிய வரலாற்று பின்புலம் இருந்ததோ, எப்படிவொரு புத்தொளி சுயமரியாதை இடதுசாரி மரபு இருந்ததோ அதைப்போலவே ஒடுக்கப்பட்டவர்களுக்கான பௌத்த மரபு சார்ந்த ஒரு மரபு உருவாகியிருக்கிறது. அந்த பௌத்த மரபை தனித்த மரபாக நாம் அடையாளம் காணவேண்டும் என்ற குரலை அவர்கள் முன்வைக்கிறார்கள். அந்தக் குரல் சார்ந்து உருவான அச்சு பண்பாட்டு மரபு என்பது மிக வளமையானது. மிக செழுமையானது. தலித் ஆளுமைகள் மிகப்பெரிய புத்தகங்களை வெளியிட்டு, மிகப்பெரிய அச்சகங்களை நடத்தினார்கள் என்று நான் சொல்லமாட்டேன். மாறாக அவர்கள் வீரியமிக்க எழுத்துக்களை உள்ளடக்கிய இதழ்களை நடத்தியிருக்கிறார்கள். அந்த இதழ்களில் தங்களுடைய அடையாளத்தைப் பேசியிருக்கிறார்கள். எல்லாவிதமான தன்மைகளையும் உள்ளடக்கிய போராட்ட வடிவமாக விடுதலை சிறுத்தைகள் அமைப்பில், குறிப்பாக தோழர் திருமா அவர்களுடைய தலைமையில் செயல்படக்கூடிய பின்புலத்தில் இவற்றுக்கான புரிதல் உள்ளதாக உணர்கிறேன். எனவே தமிழ் சமூகத்தில் தலித் மக்களுக்கான அச்சு பண்பாட்டு மரபு என்பது, ஒரு மிக வளமையான தனித்த மரபாகவே செயல்பட்டிருப்பதாக நான் கருதுகிறேன்.

 

– பேரா.வீ. அரசு அவர்களிடம் அந்திமழை இதழுக்காக நிகழ்த்திய உரையாடலின் எழுத்து வடிவம்
 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...