அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஆட்சி செய்பவர்கள் ஏன் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை? காங். எம்.பி கேள்வி 0 சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை: அமைச்சர் தகவல் 0 தடுப்பூசி போட்டுக் கொண்ட 2783 பேருக்கும் எந்த பாதிப்பும் இல்லை : அமைச்சர் விஜயபாஸ்கர் 0 “கொரோனா தடுப்பூசியை நானும் போட்டுக்கொள்வேன்” - முதலமைச்சர் பழனிசாமி “கொரோனா 0 கொரோனா தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி 0 தமிழகத்தில் 166 மையங்களில் கொரோனா தடுப்பூசி 0 மத்திய அரசு - விவசாயிகள் இடையேயான பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி 0 பொங்கல்: உச்சம் தொட்ட டாஸ்மாக் மது விற்பனை! 0 அயோத்தியில் ராமர் கோயில் கட்ட குடியரசுத் தலைவர் ரூ.5 லட்சம் நன்கொடை 0 கமலுக்கு மீண்டும் டார்ச் லைட்! 0 த.மா.கா. நிர்வாகி ஞானதேசிகன் காலமானார்! 0 அனைவரும் திருக்குறளைப் படியுங்கள்: பிரதமர் மோடி பரிந்துரை 0 விவசாயிகள் மத்திய அரசுடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை 0 திமுகவை எதிர்க்க சசிகலாவையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்! குருமூர்த்தி பரபரப்பு பேச்சு! 0 ஜல்லிக்கட்டு கண்டு ரசித்த ராகுல்காந்தி!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

சிறப்புக் கட்டுரை: தலித் மக்களின் அச்சுப்பண்பாடு-1- பேராசிரியர் வீ. அரசு

Posted : வெள்ளிக்கிழமை,   செப்டம்பர்   13 , 2019  05:37:04 IST


Andhimazhai Image
பொதுவாக பதிப்புத்துறை என சொல்லப்படுவதை நான் எனது மொழியில் தமிழ் அச்சு பண்பாடு என குறிப்பிட விரும்புகிறேன். ஏனெனில் அச்சு வடிவில் உருவான இந்த பண்பாட்டை ஆங்கிலத்தில்கூட 'Printing Culture' என்ற கண்ணோட்டத்தில் அணுகப்படுவதை நாம் பார்க்கிறோம். அதைப்போலவே தமிழிலும் அச்சு கருவியின் வழியாக உருவாகிய பல்வேறு விதமான மாற்றங்களை அச்சு பண்பாடு என்கிற கலைச்சொல்லின் வழியாக உரையாடுவது அவசியம் என்று கருதுகிறேன். அந்த வகையில் கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக சென்னைப் பல்கலைக்கழக தமிழ் இலக்கியத் துறை மாணவர்களோடு அச்சு பண்பாடு தொடர்பாக பல்வேறு ஆய்வுகளை நிகழ்த்தி இருக்கிறோம். முதுகலைத் தமிழ் படிக்கும் மாணவர்களுக்கு வெகுசன ஊடகம் என்ற பாடத்தைப் பயிற்றுவித்து அதில் அச்சு பண்பாடு என்ற ஒரு பகுதியை விரிவாக சொல்லிக் கொடுத்தோம். எனவே பதிப்புத்துறை, நூலகத்துறை, இதழியல்துறை என அச்சு கருவியை அடிப்படையாக கொண்டு செயல்படும் துறைகளை அச்சு பண்பாடு என்ற ஒரு தொடரில் பேசலாமென்று நினைக்கிறேன்.
 
அதற்கு முன்னோட்டமாகச் சில செய்திகளை நாம் புரிந்துகொள்ள வேண்டும். சமூக வளர்ச்சியில் பல்வேறு வகையான புதிய புதிய கருவிகள் நம் வாழ்க்கையோடு வந்து இணைகிறபோது, கருவிகளின் மூலமாக உற்பத்தி செய்யப்படுபவை நம் வாழ்க்கையில் எவ்விதமான மாற்றங்களை உருவாக்குகின்றன, அல்லது நம்முடைய அன்றாட வாழ்க்கையில் அவற்றின் பங்களிப்பு எவ்வளவுதூரம் முக்கியமானதாக மாறுகிறது, இன்னும் சொல்லப்போனால் நம்முடைய அன்றாட வாழ்க்கை என்பது புதிய கண்டுபிடிப்புகளால் கட்டமைக்கப்படுகிறது என்று கூட சொல்லலாம். உலகத்தில் தோன்றிய தொழில்புரட்சி, தொழில்புரட்சியின் புதிய கண்டுபிடிப்புகளால் தோன்றிய புதிய முறையிலான உற்பத்திகள், உற்பத்திகளை மனிதர்கள் நுகர்வதற்கு கிடைத்த சந்தை, சந்தைப்படுத்துவதில் முதலாளிகளுக்கிடையான முரண்பாடு, இந்த முரண்பாடுகள் சார்ந்து உலகில் நிகழ்ந்த போர்கள், அதைப்போல இந்த உலகில் நவீன கருத்து நிலைகள் உருப்பெற்றதன் வழியாக, புதிதாக கண்டறியப்பட்ட பல்வேறு விதமான தன்மைகளை உள்ளடக்கிய உலகப் புரட்சிகளான, சோவியத் புரட்சி, சீன புரட்சி போன்ற புரட்சிகள், இவைகளெல்லாம் நம்முடைய சமூகத்துக்கு கடந்த ஐந்நூறு ஆண்டுகளில் புதியவை. இதற்குமுன் இதுமாதிரியான தன்மைகள் இல்லை. ஐந்நூறு ஆண்டுகள் நடந்த இந்த புதிய தன்மைகள் என்பவை பத்தொன்பதாம் நூற்றாண்டில் மக்களுடைய நேரடி வாழ்க்கை வடிவங்களாக உருபெற்றுவிட்டன. அது உலகில் உள்ள எல்லா பகுதிகளிலும் குறிப்பாக, முதல் கட்டத்தில் அமெரிக்கா, பிரிட்டன், கிழக்கு ஐரோப்பா போன்ற முதலாம் உலக நாடுகளில் உருவான அந்த அறிவியல் கருவி சார்ந்த பண்பாட்டு வளர்ச்சியானது, காலனிய நாடுகள் என சொல்லக்கூடிய ஆசியா, ஆப்ரிக்கா இவற்றினூடே உருவான தாக்கம் என்பதும் இந்த தாக்கம் சார்ந்து உருவான பண்பாட்டு மாற்றங்கள் என்பதும் மிக விரிவாக வரலாற்றில் பேசக்கூடிய பேசுபொருளாகும்.
 
ஆனால், இந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில், அதிலும் குறிப்பாக தலித் மக்களுக்கான அச்சு பண்பாட்டு வரலாற்றை எப்படி நாம் பார்ப்பது, அல்லது அவற்றை எப்படி புரிந்துகொள்வது என்பது மிக முக்கியமான பேசுபொருள் என்றே நினைக்கிறேன். இந்த பேசுபொருளை பேசுவதற்கு முன்பு நம்முடைய தமிழ்ச் சமூகம் பற்றிய சில புரிதல்கள் வேண்டும். குறிப்பாக பத்தொன்பதாம் நூற்றாண்டில் நமக்குக் கிடைத்த புதிய வகையான மேலைக் கல்விமுறை, அதன்மூலம் கிடைத்த புதிய வாசிப்புப்பழக்கம், இதனோடு உருவாகிவந்த அச்சு கருவியினுடைய புழக்கம், அச்சு கருவியின் வழியாக நமக்கு உருவான இதழியல் துறை சார்ந்து உருவான வாசிப்பு பழக்கம், அச்சு கருவியின் மூலமாக உருவான புத்தக உருவாக்கம் ஆகியவை குறித்தப் புரிதல் தேவை. புத்தக உருவாக்கம் சார்ந்த துறையைப் பதிப்புத் துறை என்றோம். ஏனென்று சொன்னால் இதற்கு முன்பு அச்சு ஊடகத்தில் இல்லாமல் ஓலை, கல் ஆகிய பிற ஊடகங்களில் இருந்த எழுத்துக்கள் அச்சு ஊடகத்துக்கு மாற்றும்போது இந்த ஊடகத்துக்கான தன்மைகளை உள்வாங்கி மறுவெளியீடு செய்கிறோம், அல்லது மறு உருவாக்கம் செய்கிறோம். அப்படி செய்கிற அந்த துறையைத் தான் பதிப்புத்துறை என்கிற சொல்லில் அடையாளப்படுத்துகிறோம். அதில் ஆறுமுக நாவலர், சி.வை. தாமோதரன் பிள்ளை, உ.வே. சாமிநாத அய்யர், பேராசிரியர் வையாபுரி பிள்ளை போன்றவர்கள் சாதனைகளை நிகழ்த்தியிருக்கின்றனர். எனவே அவை ஒரு புத்தக உருவாக்கம் சார்ந்த பதிப்பகத் துறை என்று சொல்லலாம். ஆனால், தலித் சார்ந்த அச்சு ஊடகத்துறை வரலாற்றை பற்றிப் பேசும்போது இப்படியான புத்தகங்களை பதிப்பிப்பது அல்லது இப்படியான தன்மைகளில் தங்களை ஐக்கியப்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கவில்லை. மாறாக அந்த குறிப்பிட்ட மக்களிடம் எப்படி இந்த அச்சு துறை சார்ந்த செயல்பாடுகள் இருந்தன என்பது முக்கியமானது. இதைப் புரிந்துகொள்வதற்கு தமிழ்நாட்டில் உருவான இயக்க வரலாற்றை மூன்று வகையில் பார்க்கலாம். ஒன்று, காலங்காலமாக தொடர்ச்சியாக உருவாகிவந்த சமய கருத்துநிலை சார்ந்த மரபுகளின் ஊடாக உருவான ஒரு மரபு. அதாவது ஐரோப்பியர்களின் வருகையின்போது அவர்கள் குறிப்பாக சமய தொண்டர்களாக ஒருபக்கமும் இன்னொரு பக்கம் வணிகர்களாக இங்கு குடியேறினாலும் பதினெட்டாம் நூறாண்டின் இறுதிக்காலத்தில் அவர்கள் ஆட்சி அதிகார சக்தியாக ஒருபுறமும், சமய பரப்புரைகளை மேற்கொள்பவர்களாகவும் நம் சமூகத்தில் இரண்டறக் கலந்திருந்தார்கள்.
 
 
அவர்கள் அதிகார சக்தியாக உருவானதின் மூலமாக ஏற்பட்ட பல்வேறு விதமான மாற்றங்களையும் காலனிய பண்பாடு அல்லது காலனியத்தின் மூலமாக நமக்கு உருவான மாற்றங்கள் எனக் கருதுகிறோம். காலனியம் என்ற சொல் குடியேறியவர்கள் உருவாக்கிய பண்பாட்டு கூறுகளைப் பற்றியான உரையாடல் என்ற பொருளை நமக்குத் தருகிறது. காலனியம் இங்கு வந்தபோது நமக்கு சமூக தளத்தில் ஒரு வகையான இயக்க மரபுகள் உருவாயின. பாரம்பரிய சமய மரபுகளை, ஐரோப்பிய சமயமான கிறிஸ்தவ சமயம் வருகிறபோது அதிலிருந்து தங்களது சமயங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக, தங்களது சமயங்களில் பல்வேறுவிதமான சீர்திருத்தங்களையும் , மாற்றங்களையும் உள்வாங்கி  உருவான ஒரு சீர்திருத்த மரபு சார்ந்த சமயப் பிரிவினர் உருவாயினர். அவர்களை பழமைப் பாரம்பரிய மாற்றத்தை பெரிதும் விரும்பாத ஆரிய சமாஜம் குழுவினர் என்றும், நவீன தன்மைகளை உள்வாங்கி இந்து சமய பண்புகளை வளர்த்தெடுத்த பிரம்ம சமாஜ குழுவினர் என்றும் குறிக்கிறோம். அவர்களுடைய தாக்கம் தமிழகத்திலும் உண்டு.
 
பிரம்ம சமாஜ மரபில் உருவான சமய கருத்து மரபை சார்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் அச்சு ஊடகத் துறையிலும் தங்களை ஐக்கியப்படுத்திக்கொண்டார்கள். எடுத்துக்காட்டாக 1864-இல் முதன்முதலில் தத்துவபோதினி என்ற ஒரு பத்திரிகையை மயிலாப்பூரில் இருந்த பிரம்மசமாஜத்தினர்தான் தொடங்குகிறார்கள். தத்துவபோதினியை அவர்கள் கிறிஸ்தவ சமய மரபுக்கு எதிராகவும், வேத மரபை முதன்மைப்படுத்தி, அதனை நவீனத்துவமான பிரம்ம சமாஜ மரபாக கட்டமைத்து வளர்த்தெடுக்க வேண்டும் என்ற அறிவுத்துறை சார்ந்த பாரம்பரியம் நமக்கு உருவாகிறது. இதை வங்காளத்தில் ராஜாராம் மோகன்ராய் உள்ளிட்டவர்கள் வலிமையாக முன்னெடுத்தனர். 
 
பிரம்ம சமாஜ மரபுக்கு உட்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் பத்தொன்பதாம்  நூற்றாண்டின் இறுதி காலங்களில் பல்வேறு விதமான சமய சீர்திருத்த அமைப்புகளையெல்லாம் உருவாக்குகிறார்கள். அந்த குழுவிலிருந்த பெரும்பகுதியானவர்கள்தான் காங்கிரஸ் என்கிற ஐரோப்பியர்கள் உருவாக்கிய அமைப்பிலும் தங்களை அடையாளப்படுத்திக்கொண்டு காங்கிரஸ் கட்சியை உருவாக்குகிறார்கள். காங்கிரஸ் கட்சியில் இருந்தவர்கள் தங்களுடைய கருத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அச்சு ஊடகத் துறையில் ஈடுபட தொடங்குகிறார்கள். அவ்வகையில் அச்சு ஊடகம் இதழியல் துறையாக உருவானது. 1878 வாக்கில் இந்து பத்திரிக்கையை உருவாக்கிய தமிழ்நாட்டை சேர்ந்த பார்ப்பன சமூகத்தினர், ஐரோப்பியர்கள் தங்களுக்கு உரிய மதிப்பையும் மரியாதையையும் வழங்கவில்லை என்பதற்கான மனரீதியான போராட்டத்தில் ஈடுபட்டு காங்கிரஸ் அமைப்பை உருவாக்கி அதன் வழியாக பத்திரிகைளைத் தொடங்குகிறார்கள். அதுதான் ஆங்கிலத்தில் வந்த இந்து பத்திரிகை. தமிழில் சுதேசமித்ரன். இதில் ஜி. சுப்பிரமணிய அய்யர் என்ற மனிதர் முக்கியமானவர்.  ஜி. சுப்பிரமணிய அய்யர் வழியில் தமிழில் அச்சு பண்பாட்டு மரபு உருவானது. அவரது வாரிசாக நாம் பாரதியை பார்க்கலாம். மேலும், டி.எஸ் சொக்கலிங்கம், எ.என். சிவராமன் போன்றவர்கள் அவரது வழியில் வந்தவர்கள் தான். இந்த மாதிரியான மரபில் தினமணி பத்திரிகை வரையிலான ஒரு இதழியல் துறை சார்ந்த அச்சு பண்பாட்டை கட்டமைத்தனர். அடுத்த மரபினர் சமய சீர்திருத்த மரபினை உள்வாங்கி, அதேநேரத்தில் சாதிய சீர்திருத்த மரபுகளையும் பேசினர். ஆனால் சமயத்தையோ சாதியத்தையோ முற்றுமுழுதாக மறுக்காத ஒரு குழுவினராக அவர்களை நாம் பார்க்கலாம். அவர்களை நவீன சீர்திருத்த மரபினர் என்றோ, இந்திய தேசியம் என்கிற கருத்தாக்கத்தை கட்டமைத்தவர்கள் என்றோ அழைக்கலாம். அவர்களுடைய தொடர்ச்சி இன்று பல்வேறு வடிவங்களாக வளர்ந்து இந்துத்துவ பாசிசமாக உருபெற்று, அந்த சமய மரபை பாசிச மரபாக மாற்றிய பிரிவினரும் அந்த குழுவிலிருந்து உருவாகியிருக்கிறார்கள் என்பது வரலாறு. இருநூறு ஆண்டுகளில் இந்த வரலாறு உருபெற்றதில் இவர்கள் உருவாக்கிய அச்சு பண்பாட்டுக்கு முக்கியமான இடம் உண்டு. 
 
– பேரா.வீ. அரசு அவர்களிடம் அந்திமழை இதழுக்காக நிகழ்த்திய உரையாடலின் எழுத்து வடிவம்
 
(இதன் தொடர்ச்சி அடுத்த வெள்ளிக்கிழமை வெளியாகும்)
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...