அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கேப்டன் பதவியிலிருந்து விலகும் விராட் கோலி! 0 கோயில்களில் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! 0 ‘அரண்மனை 3’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! 0 ஸ்விக்கி, சோமேட்டோ நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி! 0 கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை 0 நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை மையம்! 0 எல்லோர்க்கும் எல்லாம் என்ற திசை நோக்கி நடக்கட்டும் இந்த வையம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 சுதாகரனின் ரூ.30 கோடி சொத்துகள் முடக்கம்! 0 ஊரக உள்ளாட்சி தேர்தல் : முதல் நாளில் 378 பேர் வேட்புமனு தாக்கல் 0 திருவண்ணாமலையில் கோலகலமாக நடைபெறும் டிடிவி தினகரன் மகள் திருமண விழா! 0 திமுக அரசு பழிவாங்குகிறது - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 0 உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டி! 0 தமிழ் கைதிகளை மிரட்டிய அமைச்சர் ராஜினாமா! 0 ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு எப்போது?: அமைச்சர் விளக்கம் 0 நீட் ஒழிப்பு: அதிமுகவால் முடியாதது, திமுகவால் முடியுமா?
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

“உங்களுக்கென்று ஓர் அடையாளத்தை உருவாக்குங்கள்!” - சி.வி. குமார் 1

Posted : புதன்கிழமை,   நவம்பர்   06 , 2019  18:51:44 IST


Andhimazhai Image
சி.வி. குமார் மிகவும் இளமையான தயாரிப்பாளர். கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி, ரவிக்குமார் எனப் பல புது இயக்குநர்களைக் கொண்டுவந்தவர். குமாரே டைரக்டராகவும் இருக்கிறார். மாயவன், கேங்க்ஸ்டர் ஆஃப் மெட்ராஸ் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். திரைப்பட தயாரிப்பு பற்றி இவர் சொன்ன அனுபவக்கருத்துகள்:
 
சினிமா தயாரிப்பு என்பதும் ஒரு கலைதான். இதில் இரண்டு வகை உண்டு. ஒன்று பேங்கர். இன்னொன்று புரொடியூசர். படத்துக்கு நிதி முதலீடு செய்வதற்கும் படத்தைத் தயாரிப்பதற்கும் ஏகப்பட்ட வேறுபாடுகள் உள்ளன.
 
டைரக்டர், ஆர்ட்டிஸ்ட்டிடம் போய் ஒரு கதையைச் சொல்கிறார். அவருக்குப் பிடித்திருந்தால் உடனே செய்யலாம் என முடிவெடுத்து அவர்களே டெக்னீசியன்கள் யாரை எல்லாம் அமர்த்தலாம் என்பதை முடிவு செய்கிறார்கள். அதன் பின்னர் இந்தப் புராஜக்டை யாரிடம் தரலாம் என்று தேர்வு செய்து தயாரிப்பாளரிடம் ஒப்படைகிறார்கள். இதில் தயாரிப்பாளருக்கு எந்த ரோலும் இல்லை. ஒரு பேங்கராக மட்டுமே அவர் செயல்படுகிறார்.
 
புரொடியூசர் என்பவரின் வேலையே வேறு. புரொடியூசர் என்பவர் கட்டாயம் கதையைக் கேட்க வேண்டும். அவருக்குக் கதை பிடித்திருக்க வேண்டும். ரசனைக்கு ஒத்து வந்தால் மட்டுமே அதை அவர் தேர்வு செய்ய வேண்டும். அதன் பின் இந்தக் கதையைத் தன்னால் படமாக்க முடியுமா என்பதைப் பரிசீலிக்க வேண்டும். நூறு மீட்டர் ஓடுபவன் ஆயிரம் மீட்டர் ரேசில் ஓட முடியாது. இரண்டும் வேறு வேறு. தன்னால் முடியும் எனத் தெரிந்தால் அதை எந்த எந்த ஆர்ட்டிஸ்டை வைத்துப் பண்ணுவது, எந்த எந்த டெக்னீஷியன்கள் இதற்குப் பொருத்தமாக இருப்பார்கள் என்பதை எல்லாம் முடிவு செய்ய வேண்டும். இப்படிச் செய்தால்தான், மேலிருந்து கீழே வரை அனைத்தும் உங்கள் கையில் இருக்கும். இதுதான் புரொடியூசர்.
 
என்னை எடுத்துக் கொண்டால் நான் சின்னப் படங்கள்தான் நிறையப் பண்ணியிருக்கேன். முதலில் சின்னப்படம் என்றால் என்ன என்பதை நாம் வரையறுத்துக் கொள்ள வேண்டும். சின்னப்படம் என்பது பட்ஜெட்டின் அளவைப் பொறுத்ததல்ல. படத்தின் குவாலிட்டியைப் பொறுத்துதான் ஒரு படம் சின்னப்படமா பெரிய படமா என்பது தீர்மானிக்கப்படுகிறது. எந்திரன் படத்தை 5 கோடியில் எடுத்து விடமுடியுமா? முடியவே முடியாது. இருநூறு கோடி செலவு பண்ணினால் மட்டுமே அதை எடுக்க முடியும். உள்ளடக்கம் பெரியது. உள்ளடக்கத்துக்குத் தக்க செலவு செய்கின்றனர். சின்னப் படம் என்றால் உள்ளடக்கம் சின்னது. அதற்கு ஏற்ற செலவை செய்கிறோம்.
 
ஒரு கதை கேட்கிறேன். அந்தக் கதைக்கு பட்ஜெட் எவ்வளவு தேவை என்பதை வைத்துதான் எல்லாமே முடிவாகிறது. கார்த்திக் சுப்பராஜ் முதலில் என்னிடம் ஜிகர்தண்டா கதையைத்தான் கொண்டு வந்தார். அப்போது நான் அட்டக்கத்தி தயாரித்துக் கொண்டிருந்தேன். அவரிடம் ஜிகர்தண்டா கதைக்கு எப்படியும் நாலரை அல்லது ஐந்து கோடி பட்ஜெட் வரும். இப்போது என்னால் முடியாது. வேறு ஏதாவது ஸ்கிரிப்ட் இருந்தால் சொல்லுங்கள் என்றேன். ஆறு மாதம் கழித்து அவர் இன்னொரு ஸ்கிரிப்டோடு வந்தார். அது பீட்சா ஸ்கிரிப்ட். அக்கதைக்கு எழுபது லட்சம் பட்ஜெட் என அவர் சொன்னார். கதை எனக்குப் பிடித்திருந்தது. அந்தக் கதையைக் குவாலிட்டியாகத் தரவேண்டும் என்றால் எழுபது லட்சம் போதாது என்று மாற்றி 1.75 கோடியில் பட்ஜெட் போட்டு எடுத்தோம். இதுதான் பட்ஜெட்டிங். உள்ளடக்கத்துக்கு என்ன பட்ஜெட் தேவை என்பதை சரியாகத் திட்டமிடுதல்.
 
படத்தில் ஒரு பயங்கரமான ஃபைட் சீன் இருந்தால்தான் படம் ஹிட் ஆகும் என்றால் அதற்கு ஒரு கோடி செலவாகும் என்றால் செய்துதான் ஆக வேண்டும். ஆனால் அதை கட் பண்ணினால் என்டர்டெயின்மென்ட் போய்விடும். கதைக்கேற்ற பட்ஜெட்டை கண்டிப்பாக செய்தாக வேண்டும். உங்களிடம் உள்ள பணத்துக்குத் தக்கபடிதான் கதையைத் தேர்வு செய்ய வேண்டும்.
 
ஏன் படம் தயாரிக்க வருகிறீர்கள்? பணம் சம்பாதிக்க மட்டுமா? பணம் சம்பாதிப்பதோடு கொஞ்சம் புகழையும் சம்பாதிக்கலாம் என்பதாலா? அல்லது தேவையான பணம் என்னிடமுள்ளது ஆனால் இதைச் செய்தால் புகழ், பிரபல்யம் அடையலாம் என்றா? என்பதையும் முடிவு செய்து கொள்ளுங்கள்.
 
பணம் சம்பாதிக்க மட்டும்தான் என்றால் அதற்கு ஏற்ற படங்களை நீங்கள் தயாரிக்க வேண்டும். தேசிய விருது வாங்க ஆசை என்று இருந்தால் அதற்கேற்ற மாதிரியான படத்தைத் தயாரிக்க வேண்டும்.
 
அந்தத் தெளிவு இல்லாமல் ஏதோ ஒரு படத்தை எடுத்து விட்டு ஏன் ஓடவில்லை எனத் தெரியவில்லை எனச் சொல்ல முடியாது. உலகத்தில் ஒவ்வொன்றும் ஒரு பேட்டர்னில் உள்ளது. பேட்டர்னைப் பின்பற்றாதவர்கள் அதைத் தாண்ட மாட்டார்கள்.
 
ஆண்டுக்கு இருநூறு படங்கள் தமிழில் வெளிவந்தாலும் அதில் பத்து சதவீத படங்கள்தான் மக்களை ஈர்க்கின்றன. ஆர்ட்டிஸ்ட்டை மையமாகக் கொண்ட படங்களை- கமல் சார் ரஜினி சார் படங்களை- அவை நன்றாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரு முறை பார்ப்போமே என்று மக்கள் வருகிறார்கள். மோசமான விமர்சனம் வந்தால் கூட ஒரு தடவையாவது பார்க்க விரும்புகிறார்கள். அந்த இருபத்தைந்து படங்களைத் தாண்டி மற்ற 175 படங்கள் யாரையும் ஈர்பபதில்லை. ஏன்? தயாரிப்பாளர்கள் செய்யும் தவறுதான் காரணம். ஒரு பெரிய ஆர்ட்டிஸ்டை வைத்துப் பண்ண வேண்டிய படத்தையே பட்ஜெட்டில் பண்ணுகிறோம் என்று புது ஆர்ட்டிஸ்டை வைத்துப் பண்ணுகிறார்கள். பெரிய ஸ்டார் செய்யும் விஷயத்தை முகம் தெரியாத நடிகர் பண்ணுவதை ஏன் மக்கள் பார்க்க வரவேண்டும்? அப்படியானால் மெயின்ஸ்ட்ரீம் படத்திலிருந்து ஏதாவது வித்தியாசமாகச் செய்தாக வேண்டும். அப்போதுதான் மக்கள் உங்களைத் திரும்பிப் பார்ப்பார்கள்.
 
மீடியம் பட்ஜெட்டில் படம் பண்ணுவோர் குத்துப்பாட்டு ஒன்றை வைத்தால் ஜனங்கள் வருவார்கள் என்றோ, திருவிழா சாங் வைத்தால் வருவார்கள் என்றோ படத்துக்குத் தேவையே இல்லாத இடத்தில் வைக்கிறார்கள். இதெல்லாம் myth.
 
சினிமாவில் பிராண்டிங் என்பது ரொம்ப ரொம்ப முக்கியம். இந்தத் துறையில் தொடர்ந்து இயங்க வேண்டுமென்றால், நீங்கள் கவனிக்கப்படும் நபராக இருக்க வேண்டும். அதற்கு ஒரு படத்தின் தொடக்க நாள் முதல் பிராண்டிங்க்கில் கவனம் தேவை. உங்கள் கம்பெனியையும் அதன் லோகோவையும் அதில் பிராண்ட் பண்ணுவதில் மிகவும் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். எங்களின் திருக்குமரன் எண்டர்டெயின்மென்ட் சினிமா கம்பெனியின் பெயரை டீசர், டிரைலர், டைட்டில் கார்டு என எல்லா இடத்திலும் மக்கள் மனத்தில் பதியும்படி வைத்தோம். மக்கள் கண்ணில் படுவது போல் கவனம் எடுத்து செய்தோம். ஆர்ட்டிஸ்ட்டை சார்ந்திருக்காமல் புதுப்புது ஆட்களை வைத்து எடுக்கிறார்கள், இந்தக் கம்பெனி படத்தில் என்ற கருத்து பதியும்படி கம்பெனியின் பெயரை பிராண்டிங் செய்தோம். இதெல்லாம் கலை. எந்த இடத்தில் கம்பெனிப் பெயர் வர வேண்டும், எந்த இடத்தில் தயாரிப்பாளர் பெயர் வரவேண்டும். என்று மக்கள் மனதில் நிற்கும் வண்ணம் திட்டமிட்டு செய்தோம். தொடர்ந்து புது டைரக்டர்களை வைத்து செய்யும்போது எனக்கு ஒரு பிளாட்பாரம் தேவைப்பட்டது. அதை கம்பெனியாகவே உருவாக்கிக் கொண்டோம்.
 
நான் இந்தத் துறைக்கு வந்தது ‘லம்ப்’பாக சம்பாதிக்க வேண்டும் என்று அல்ல. இரண்டு கோடியோடுதான் வந்தேன். கடைசி வரை துறையில் நீடித்து நிற்க வேண்டும். அதற்கு கம்பெனி பெயர் நிலைநாட்டப்படுவது அவசியம். இந்த இரண்டு கோடியைக் கடைசி வரை இழக்காமல் அடுத்து அடுத்து படம் எடுக்க வேண்டும் என்பதுதான் என் எண்ணம். கடந்த இரு வருடங்களாக பொருளாதார ரீதியாக சரியாகப் போகவில்லை என்றாலும் என் பிராண்ட் வேல்யூ காப்பாற்றியுள்ளது. உதாரணம் கேங்க்ஸ்டர் ஆப் மெட்ராஸ் படம். பெரிய ஆர்ட்டிஸ்ட் யாரும் அதில் கிடையாது. டைட்டிலை மட்டும்தான் அறிவித்தோம். இந்தி ரைட்ஸ்-ஐ மட்டும் 75 லட்சம் ரூபாய்க்கு வாங்கி விட்டனர்.
 
இந்தத் துறையில் நீங்கள் நிலைத்து நிற்க வேண்டுமானால் உங்களுக்கு – உங்கள் கம்பெனிக்கு ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
 
இன்று வரை ஜிகர்தண்டாவை நான்தான் தயாரித்தேன் என்று பலரும் நம்புகின்றனர். ஆனால் நான் தயாரிக்கவில்லை. அந்த மாதிரி வித்தியாசமான படமெல்லாம் இந்தக் கம்பெனியில்தான் பண்ணுவார்கள் என்ற பிராண்டிங் நிலைத்து விட்டது. அதனால்தான் அப்படி நம்புகிறார்கள்.
 
பெயர் வைப்பது. லோகோ வைப்பது, கலரை செலக்ட் செய்வது எல்லாவற்றிலும் கவனம் தேவை. கலர் செலக்ட் செய்வதற்கு எல்லாம் நிபுணர்கள் உள்ளனர். இவை எல்லாம் ஆர்ட். லோகோ எத்னிக்கலாகவும், மாடர்னாகவும் ஆடியன்சோடு ஒன்ற வேண்டும். இதை எல்லாம் செய்தால் லோகோ மனதில் பதிந்து விடும். “இந்தக் கம்பெனி படம் நல்லா இருக்கும்” என்ற மன நிலை உருவாகி விட்டாலே, ‘ஓக்கே’ படம் கூட ‘ஹிட்’ படம் ஆகிவிடும்.
 
படத்தின் உள்ளடக்கத்தை தேர்வு செய்தல் – இதில் முதலில் நாம் செய்ய வேண்டியது என்னவென்றால் இந்த கன்டென்ட்டை நம்மால் பண்ண முடியுமா என்று ஆற யோசித்து முடிவு செய்ய வேண்டும். ஒரு தயாரிப்பாளர் எல்லாத் துறைகள் பற்றியும் ஐம்பது சதமாவது தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் சரியான கன்டென்ட்டை தேர்வு செய்ய முடியும்.
 
பலர், தான் வாழ்கின்ற லைப் ஸ்டைலில்தான் ஒரு கன்டென்ட்டை தேர்வு செய்கின்றனர். இது தவறு.  
 
எனக்கு எப்போதுமே திரில்லர் படங்கள், கதைகள் என்றால் மிகவும் பிடிக்கும். 2015 இல் நான் தேர்வு செய்த கதை காதல் கதை. திரில்லர் இல்லை. ஏன் இதைத் தேர்வு செய்தாய் என நண்பர்கள் கேட்டனர். அந்த ஆண்டு திரில்லர் படங்கள்தான் பெருவாரியாகப் போய்க்கொண்டிருந்தன. எப்படியும் இன்னும் ஒரு வருடத்தில் இந்த மாதிரி சப்ஜெக்ட் போர் அடித்து நல்ல கமர்சியல் / ரொமான்ஸ் படம் வராதா என மக்கள் எதிர்பார்க்கத் தொடங்குவர். அப்போது நமது காதல் சப்ஜெக்டை இறக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். என்னென்ன மாதிரியான படங்கள் வெளிவருகின்றன. நன்கு ஓடும் படங்களின் கண்டென்ட் என்ன? நம்மைச் சுற்றி எடுத்துக் கொண்டிருக்கும் படங்களின் கண்டென்ட் என்ன? அடுத்த ரிலீசின்போது என்ன கண்டென்ட் வரும் என்ற அனைத்து விசயங்களிலும் ஒரு தயாரிப்பாளர் அத்துப்படியாக இருக்க வேண்டும். கதை கேட்கும்போது இன்றைய தேதிக்கான கதையைக் கேட்காதீர்கள். ரிலீஸ் பண்ணும்போது எந்த மாதிரியான கதை தேவை என்பதைக் கேளுங்கள்.
 
கதையைத் தேர்வு செய்யும்போது நம்மால் செய்ய முடியுமா என்பதைப் பரிசீலித்து முடிவு செய்ய வேண்டும். அந்தக் கதைக்குள் நீங்களும் கொஞ்சம் பயணிக்க வேண்டும். நம்மை மீறிப் போகிறார்கள் என்றால் அதை சரிபண்ணும் அளவுக்கு நமக்கு அறிவு இருக்கிறதா என்று பாருங்கள். அப்படி இல்லாவிட்டாலும் அது பற்றிக் கற்றுக் கொள்ளுங்கள். உதாரணமாக ஒரு படம் எடுக்கிறீர்கள் ஒரு ஊரில் நடக்கும் குறிப்பிட்டதொரு விசயத்தைப் பற்றியது அக்கதை என்றால் அந்த மாதிரி விசயங்கள் அந்த ஊரில் இருக்கிறதா என்று அங்குள்ள மக்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். அதன் பின் அந்தக் கன்டென்ட்டைத் தேர்வு செய்ய வேண்டும். அடுத்த விஷயம் பட்ஜெட். உங்களிடம் மூன்று கோடி உள்ளது. படத்தைப் பண்ண ஐந்து கோடி ஆகும். அதனால் மூன்று கோடிக்குள் சுருக்கி எடுத்து விடலாம் என்றால் அதைச் செய்யாதீர்கள். ஐந்து கோடிக்கு உரிய கதையை அந்த பட்ஜெட்டில்தான் பண்ணமுடியும். சிக்கனம் என்று ஒவ்வொரு அம்சத்தையும் சுருக்கிக் கொண்டு வந்தால் பிலிமில் தரம் இருக்காது. அந்தக் கதைக்கான பீலிங்கும் வராது. ஒரு ரொமான்ஸ் படம் எடுக்கிறீர்கள் என்றால் ஹீரோ ஹீரோயின் அழகாக இருக்க வேண்டும். சுற்றி உள்ள காட்சிகள் அழகாக இருக்க வேண்டும். கேமரா பளிச்சென்று இருக்க வேண்டும். நல்ல கலர் இருக்க வேண்டும். ஒவ்வொரு பிரேமும் அழகாக இருக்க வேண்டும். அதற்கு ஏற்ற முதலீடு நாம் போட்டாக வேண்டும். ஒரே ஒரு வீட்டுக்குள் வைத்து அந்த லவ் ஸ்டோரியை எடுக்க முடியாது.
 
ஒரு கதையைக் கேட்டீர்கள் என்றால் அதன் உள்ளடக்கத்தை நீங்கள் ஃபீல் பண்ண வேண்டும். என்ன மாதிரி சீன்கள் இருக்கும் என்பதை உணர்ந்து இப்படி எல்லாம் வரும் என்பதை முழுக்க உங்கள் மனதுக்குள் ஓட விட்டுப் பின், அதாவது அந்தக் கதையை முழுமையில் உள்வாங்கிய பின் தயாரிப்புக்கு செல்லுங்கள். அதாவது ஃபீல் பண்ணிப் படம் எடுங்கள்.
 
கதையை நீங்கள் செலக்ட் செய்த பிறகு பிறத்தியார் யாரிடமும் கருத்துக் கேட்காதீர்கள். நீங்கள்தான் முதல் போட்டு படமெடுக்கப் போகிறீர்கள். எனவே உங்கள் முடிவினை மட்டும் நம்புங்கள்.
 
அட்டக்கத்தி படத்தை முதலில் சவுந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் வேறு ஏதோ காரணத்தால் நின்றுவிட்டது. என்னிடம் ரஞ்சித் கதை சொன்னார். கதை எனக்குப் பிடித்ததால் தயாரித்தேன். பீட்சாவும் அப்படித்தான். அதை பிரிவியூவில் பார்த்த நண்பர்கள் இது எப்படி மக்களுக்குப் பிடிக்கும்? எனக் கேட்டனர். எனக்குக் கதை பிடித்திருந்தது. மதுரையில் தியேட்டரில் பார்த்தேன். எனக்கு பிடித்திருந்தது. மக்களுக்கும் பிடிக்கும் என்ற எனக்கு அந்தக் கதை மீது முழு நம்பிக்கை இருந்தது.
 
அட்டக் கத்தி ரிலீஸ் ஆகும் முன்பே பீட்சா பண்ண ஆரம்பித்து விட்டேன். ஜெயராம் சார்தான் அட்டக் கத்தியை வாங்கினார். அவரைப் பார்த்து பேமென்ட் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை என்று கேட்கப் போயிருந்தேன். இப்போ என்ன அவசரம் என்றார். இல்லை இன்னொரு படம் எடுக்கப் போகிறேன் என்றேன். என்ன இது, முதல் படமே ரிலீஸ் ஆகவில்லை. இரண்டாவதா என்று கேட்டார். ஆம் என்றேன். என்ன படம்? பீட்சா. யார் பண்ணுகிறார்கள் எனக் கேட்டார். விஜய் சேதுபதி, கார்த்திக் சுப்புராஜ் என சொன்னதும், ஜெயராம் சார் இந்தக் கதையை அப்போது (காதலில் சொதப்புவது எப்படி எல்லாம் ஹிட் ஆன நேரம்) பாப்புலராக இருக்கும் சித்தார்த்தை வைத்துப் பண்ண சொன்னார். அதற்கு ஏற்பாடும் நடந்தது. ஆனால் கா.சுப்புராஜ், தனக்கு சேதுபதிதான் சவுகரியமாக இருக்கும்; இது ஆர்ட்டிஸ்ட் தேவைப்படாத படம்; ஆர்ட்டிஸ்ட் வைத்தால் பாட்டு அது இதென்று போய் படத்தின் கண்டென்ட் போய்விடும் என்றார். எனக்கு அது சரியெனப்பட்டது. ஜெயராம் சாரிடம் சொன்னேன். அவர் ‘என்னைய்யா? சித்தார்த்துக்கு ஏற்பாடு செய்கிறேன். அவர் இன்றைக்கு பிரபலமான ஆர்ட்டிஸ்ட். பத்து கோடி முதல் போடுகிறேன். வேண்டாம் என்கிறாயே’ என்றார். இல்லை சார். எனக்கு நல்ல படம்தான் முக்கியம் என்று சொன்னேன். கதைதான் இந்தப் படத்தின் பலம். எனவே கதையை நம்பி, பிரபலம் இல்லாத சேதுபதியை வைத்தே பண்ணலாம் என்று துணிந்து இறங்கினோம். ஜெயித்தோம்.
 
Bucket Specific Movies  என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? லோக்கலாக இதை சென்டரை மையமாகக் கொண்ட சினிமா வகை எனச் சொல்லலாம். ஒரு படத்தை 5 கோடி வரை செலவு பண்ணி எடுக்கிறீர்கள் என்றாலே அது சி சென்டர் வரை ஓடினால்தான் போட்ட பணத்தை எடுக்க முடியும். ஆனால் ஆர்ட்டிஸ்ட் இல்லை என்றால் சி சென்டரில் ஆள் வர மாட்டார்கள். பீட்சா படம் நல்ல உதாரணம். வட ஆர்க்காடு பகுதியில் (சி சென்டர்) பீட்சாவின் மொத்த வசூலே பத்து லட்சம்தான். இந்தப் படத்தை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. அல்லது அந்த உள்ளடக்கம் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. இதை எல்லாம் Bucket Specific படம் என்போம். அங்கெல்லாம் பத்து மணி காட்சிக்கு நூறு பேராவது வரவேண்டும் என்றால் போஸ்டரில் முகம் தெரிந்த, பரிச்சயமான ஒரு ஆர்ட்டிஸ்ட் இருக்க வேண்டும்.
 
ஜீவி என்றொரு படம் வந்தது. அது வெறும் ஏ சென்டரை மையமாக வைத்துதான் வந்தது. இதில் மல்டிப்ளக்ஸில் மட்டும் என்ன வருமானம் வந்து விடும்? அதற்கேற்ற பட்ஜெட்தான் போட வேண்டும்.
 
அதே கண்கள், கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ் இரண்டுமே பக்கெட் ஸ்பெசிபிக் படங்கள்தான். அதற்கு ஏற்றவாறு பட்ஜெட் போட்டோம். லாபம் பெற்றோம்.
 
மிகப்பெரிய பட்ஜெட் போட்டு 40  கோடி விற்பதை விட இந்த மாதிரி பக்கெட் ஸ்பெசிபிக்கில் இப்படி லாபம் எடுப்பது மிகப்பெரிய விசயம்தானே.
 
கண்டென்ட்டை வைத்து எடுக்கும் படங்கள் எல்லாம் ரீமேக்கில் நன்றாகப் போகும். கமர்சியல் படங்களுக்கு அந்த அளவுக்கு ரீமேக் போகாது.
 
அதே போல் சில படங்கள் சி சென்டர் வரை போனாலும் எல்லா மாவட்டத்திலும் போகாது. அட்டக்கத்தி வட தமிழ்நாட்டில் மட்டும்தான் போகும். தேவராட்டம் தென் தமிழ் நாட்டில் மட்டுமே போகும். அதற்கு ஏற்ற மாதிரி பட்ஜெட் போட வேண்டும்.
 
கேங்க்ஸ்டர் ஆப் மெட்ராஸ் நல்லாவே தெரியும் – ஏ படம். ஏ சென்டரில் மட்டுமே போகும். ரத்தம் தெறிக்க எடுக்கப் போகிறோம். மிஞ்சிப்போனால் தியேட்டரில் ஐம்பது லட்சம்தான் வரும் என்று ஏற்கெனவே எதிர்பார்த்துதான் பட்ஜெட் போட்டு செய்தோம். 95 லட்சம்தான் மொத்தம் செலவு செய்தோம். எங்களுக்கு பிராண்ட் வேல்யூ இருந்ததால் இந்தியில் மட்டும் 75 லட்சம் போனது.
 
இதெல்லாமே பக்கெட் ஸ்பெசிபிக்தான். ராம.நாராயணன் சார் இப்படித்தான் பண்ணிக்கொண்டு இருந்தார். முப்பது நாள் படம் பிடிப்பார். நாற்பது லட்சம்தான் செலவழிப்பார். மிடில் கிளாஸ்தான் அவரின் ஆடியன்ஸ். 
 
(இதன் தொடர்ச்சி நாளை வெளியிடப்படும்)
 
- கற்பகவிநாயகம்
 
(BOFTA  திரைப்படக் கல்லூரி நடத்திய திரைப்படப் பயிற்சிப் பட்டறையில் தயாரிப்பாளருமான இயக்குநருமான சிவி குமார் நிகழ்த்திய உரையிலிருந்து)
 
 
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...