
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக நாடெங்கும் முழுஅடைப்பு அமல்படுத்தப்பட்டபிறகு, ஏழைகள், அன்றாடம்காய்ச்சிகள் படுகின்ற துயரங்களைச் செய்திகளாகப் பார்த்துக்கொண்டிருந்தேன். தேனிக்கு அருகே உள்ள பழங்குடியினர் வாழும் ஒரு கிராமத்தில் அன்றாடகூலிக்கு வேலைக்குப் போகமுடியாமல் ஒருநாளைக்கு ஒருவேளை மட்டுமே சாப்பிட்டுவிட்டு மற்ற இரண்டுநேரம் சாப்பிடாமல் உறங்கச்செல்லுகிறார்கள் என்ற செய்தியை தொலைக்காட்சியில் பார்த்தேன். என்னுடைய இதயம் ஒருநிமிடம் நின்றுவிட்டது போல் உணர்ந்தேன். எங்கோ ஒரு கிராமத்தில் மக்கள் பசியாக இருப்பது ஏன் என்னில் பாதிப்பை ஏற்படுத்தவேண்டும்? எனக்கும் அவர்களுக்கும் உள்ள தொடர்பும் உறவும் என்ன? மனிதகுலம் ஒன்றுதான் என்றகருத்தை கொரோனா வைரஸ் நமக்கு மிக அழுத்தமாகச் சுட்டிக்காட்டியிருக்கிறது. உலகம் முழுவதிலும் வாழுகிற மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்படும்போது, ஏற்படும் உயிரிழப்புகள், பசி,பட்டினி, வலி, வேதனை, ஒன்றுதான் என்றுசுடடிக்காட்டுகிறது.
மத்திய மாநில அரசுகள் முழுஅடைப்பை அறிவிப்பதற்கு முன்பாக ஏழைகள், தினக்கூலிகள், அன்றாடம்காய்ச்சிகள், நடைபாதையில் பிறரைச்சார்ந்து வாழ்வோர், ஏதிலிகள், வேலை தேடி மாநிலம் விட்டு மாநிலத்திற்கு இடம்பெயர்ந்தோர், சிறுவியாபாரிகள், திருநங்கைகள், முதியோர், அனாதைகள், நீண்டகாலநோயாளிகள் போன்றோருக்கு என்னதிட்டம் வைத்திருக்கிறோம் என்று யோசித்துப்பார்த்திருக்கவேண்டும். ஏனென்றால், இவா்கள் எல்லோரும் ஒவ்வொரு நாளையும் நிச்சயமற்ற சூழலில் நகா்த்துபவர்கள். அடுத்தநாள்வாழ்க்கை என்பது அவா்களுக்கு உறுதியற்றது. இந்தப் பின்னணியை மனதில் நிறுத்தி,பொதுவாழ்வில் செயல்படும் அறிஞா்களையும், சமூகஆர்வலர்களையும் இணையத்தளத்தின் வாயிலாகவாவதுகலந்து ஆலோசித்திருக்கவேண்டும்.
இந்தியாவிலும் தமிழகத்திலும் இதுபோன்ற கொள்ளை நோய்கள், பேரிடர்களான வறட்சி, கனமழை, சுனாமி, கஜாபுயல், ஒக்கிப்புயல் இதற்கு முன்னர் வந்திருக்கின்றன. ஆனால் அது ஒரு குறிப்பிட்ட எல்லையிலோ, மாநிலத்திலோ பாதிப்பை ஏற்படுத்திவிட்டு சென்றுவிடும். ஆனால் கண்ணுக்குத்தெரியாத இந்த கரோனா என்ற நுண்ணுயிரி உலகம் முழுவதையும் மிரட்டிவிட்டது. வேகமாக இயங்கிக் கொண்டிருந்த மக்களையெல்லாம் வாலைச் சுருட்டிக்கொண்டு மூலையில் உட்காரவைத்துவிட்டது.
கடினப்பட்டு உழைத்து சம்பாதித்தபணம், படிப்பு, பட்டம், பதவி, அந்தஸ்து, வசதிகள், நவீனக்கருவிகள் அனைத்தும் அரை நிமிட நேரத்தில் அர்த்தமற்றதாய் மாறிவிடுவதற்கான ஆபத்துபிறந்துவிட்டதாக மக்கள்நினைக்கிறார்கள். நண்பா்களோடு அலைபேசியில் பேசும்போது ”நண்பா, நாம் மீண்டும் எப்போதாவது சந்திப்போமா? என்று கேட்டுக்கொள்கிறார்கள். இந்த உலகில் எதுவுமே நிச்சயமில்லை என்ற சிந்தனைக்கு மக்கள் வந்துவிட்டார்கள்.
ஆனால், இந்தநெருக்கடியான தருணத்தில் மக்களிடம் மனிதநேயம் இயல்பாகவும், அளவுக்கு அதிகமாகவும் வெளிப்படுவதை நாம்கண்கூடாகப் பார்க்கிறோம்.பெரும்முதலாளிகள் முதல், பரமஏழைகள் வரை தங்களால் முடிந்த உதவிகளைப் பணமாகவும், பொருட்களாகவும், உதவிக்கரங்களாகவும் கொடுக்க அவா்களாகவே முன்வருவது கரோனா தாக்குதல் கொண்டுவந்துள்ள அற்புதமான வெளிப்பாடு.
சாலைவசதி இல்லாத, வாகனங்கள் செல்ல முடியாத கிராமங்களை அடையாளம் கண்டுபிடித்து அங்குசென்று உணவுப்பொருட்கள், சுத்தமான குடிநீர், அடிப்படையான மருந்துப்பொருட்கள் வழங்குவது இந்தநெருக்கடி காலகட்டத்திற்கு அவசியமானஒன்று. ஒரு சில தனிநபர்கள், தொண்டுநிறுவனங்கள் இதைச்சிறப்பாகச்செய்கிறார்கள். இவர்களின் செயல்பாடு பாராட்டுக்குரியது.
மத்திய மாநில அரசுகள் இதுபோன்ற அவசர காலகட்டத்தில் தங்களது அரசுஇயந்திரங்களை முடுக்கிவிடுவதோடு, சுயநலம் கடந்தும் பிறர்நலனில் அக்கறையுடனும் செயல்படுகின்ற தாராளஉள்ளங்கொண்ட தனிமனிதர்களையும் பயன்படுத்தி பொதுநலனைப் பெருக்கவேண்டும். அது கூட்டுமனப்பான்மையையும், சேர்ந்து செயல்படுகின்ற தன்மையையும் வளர்க்கும். கெரோனாவுக்காக கிடைக்கப் பெற்ற நிதியை அரசு எப்படி செலவழிக்கிறது என்பதற்கான வெளிப்படைத்தன்மையையும் அதிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.
கரோனா கற்றுத்தரும் பாடம் என்ன? மனிதன் கர்வத்துடன் கற்பனை செய்து கொள்ளும் எதுவும் உண்மையில்லை. அவன் உயர்வானதாகக் கருதும் எதுவும் அப்படியில்லை. நெருக்கடிக் காலத்தில் மட்டுமே மனிதனிடம் வெளிப்படும் உயிருக்கான பயம், சகமனிதரிடம் காட்டும் அக்கறை, மனிதநேயம், பகிர்வு மனப்பான்மை, சமத்துவப் பார்வை எல்லாக் காலத்திலும் இயல்பாக வெளிப்பட்டால் எப்படியிருக்கும்? இந்தக்கேள்விக்கு விடைதேடும் பயணம்தான் கரோனா வைரஸ் நமக்கு கறாராகக் கற்றுத் தரும் பாடம்.
-அ.இருதயராஜ்,
உதவிப்பேராசிரியா்
காடசித்தகவலியல்துறை
இலயோலாகல்லுாரி