நடிகர் ஷாரூக்கானுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வீட்டிலிருந்தே அவர் சிகிச்சை எடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மாதம் பாலிவுட் நடிகர் அக்சய் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதற்கு முன்பாக பிரபல நடிகர்களான கார்த்திக் ஆர்யன், ஆதித்யா ராய் கபூர் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
அடுத்தடுத்து பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவதால் அடுத்த அலை ஏதேனும் தொடங்கி விட்டதா என்ற அச்சம் பொதுமக்களிடையே எழத் தொடங்கியுள்ளது.
ஷாரூக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படம் தமிழ் உள்பட 5 மொழிகளில் அடுத்த ஆண்டு ஜூன் 2-ம்தேதி வெளியாகவுள்ளது.
இதேபோன்று ஷாரூக்கான், தீபிகா படுகோன் நடிப்பில் உருவாகி வரும் முழு நீள ஆக்சன் படமான பதான், அடுத்த ஆண்டு ஜனவரிக்கு திரைக்கு வருகிறது.
அடுத்த ஆண்டு ஷாரூக்கான் நடிப்பில் 3 படங்கள் திரைக்கு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜவான் படத்தின் அறிவிப்பு குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஷாரூக்கான், ஜவான் திரைப்படத்தின் கதை மொழி, எல்லைகளைத் தாண்டி எல்லோருக்கும் பிடிக்கும் என்றும், இதற்காக இயக்குனர் அட்லீக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.