அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 எட்டாவது முறை பீகார் முதலமைச்சராகப் பதவியேற்றார் நிதிஷ்குமார்! 0 பிளவுகளைக் கடந்து நிச்சயமாக அதிமுக ஒன்றிணையும் – சசிகலா 0 ஒன்றாகத் தேர்வு எழுதி, ஒன்றாகத் தேர்ச்சி பெற்று, அரசு வேலைக்கு செல்லும் தாய் – மகன்! 0 பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி! 0 போதைப் பொருள் விற்பவர்கள் சொத்துகள் முடக்கப்படும் – முதலமைச்சர் 0 நிதிஷ் குமார் செய்தது நம்பிக்கை துரோகம்: பா.ஜ.க. 0 கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் கைதான 64 பேருக்கு நிபந்தனை ஜாமீன் 0 அரசியல் பேச ஆளுநர் மாளிகை கட்சி அலுவலகம் அல்ல: சிபிஐ(எம்) கண்டனம் 0 முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது: மு.க.ஸ்டாலின் பதில் 0 பீகாரை போல் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்: திருமாவளவன் 0 நான் பேசியது சட்டத்துக்கு புறம்பானது இல்லை: கனல் கண்ணன் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் 0 செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வென்ற தமிழக வீரர்கள்! 0 ஆட்சி அமைக்க உரிமை கோரினார் நிதீஷ் குமார்! 0 அதிமுகவின் முதல் எம்பியான மாயத்தேவர் காலமானார்! 0 அரசியல் அலுவலகமா ஆளுநர் மாளிகை? கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

அதிரடி, குழப்படி : ஜரூரில் இலங்கை அதிபர் தேர்தல்!

Posted : சனிக்கிழமை,   ஜுலை   16 , 2022  15:12:41 IST


Andhimazhai Image

இலங்கையில் கொந்தளிப்பு நிலை ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளபோதும் அதற்கான முகாந்திரங்கள் முடிவுக்கு வருவதாக இல்லைபோல என்பதாகவே அண்மைய நிகழ்வுகள் காட்டுகின்றன. 

 

மூன்று மாதங்களுக்கு முன்னர், தலைநகர் கொழும்புவுக்கு அருகில் தனித்தனி போராட்டங்களாகத் தொடங்கிய மக்கள் எழுச்சி, நாட்டின் மிக உயரிய அதிகாரமுடைய - வலுவான (நிறைவேற்று அதிகாரம் கொண்ட) அரசு அதிபரை பதவிவிலகவும் நாட்டைவிட்டு தப்பியோடவும் வைத்துவிட்டது, அவ்வளவு சாதாரணமானது அல்ல. குறிப்பாக, இலங்கை அதிபர் தேர்தல்களில் இதுவரை யாரும் பெற்றிராத அளவுக்கு 52.5 சதவீத வாக்குகளைப் பெற்று பெருவெற்றியின் மூலம் ஏழாவது அரசு அதிபர் ஆனவர், கோத்தாபய இராஜபக்சே. 

 

முன்னாள் இராணுவத் தளபதியான கோத்தாபய ஓய்வுக்குப் பின்னர், தன்பாட்டுக்கு அமெரிக்காவில் மீத வாழ்க்கையைக் கழித்துவந்தார். விடுதலைப்புலிகள் எடுத்த முக்கியமான நிலைப்பாட்டின்படி ஈழத்தமிழர்களால் இரணில் விக்கிரமசிங்கே புறக்கணிக்கப்பட, 2005 அதிபர் தேர்தலில் கோத்தாவின் அண்ணன் மகிந்த இராஜபக்சே அதிபரானார். அதிபர் அண்ணனின் ஆட்சியில் பாதுகாப்புத் துறைக்குச் செயலாளராக நாட்டுக்கு மீண்டும் வந்து, முள்ளிவாய்க்காலில் போய் நிறுத்திய பெயர் கோத்தாபயவுக்கும் உண்டு. 

 

கடந்த 17 ஆண்டுகளாக நாட்டையே தம் கைக்குள் கொண்டுவந்து வைத்திருந்த இராஜபக்சேக்கள் கிட்டத்தட்ட இலங்கையின் பழைய மன்னர் குடும்பம் ஒன்றைப் போல உருமாறினர். சபாநாயகர், பிரதமர், அதிபர், அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர், அரசாங்கத்தின் நாடளாவிய நிறுவனங்கள், வெளிநாடு தொடர்புடைய அரசு அமைப்புகள் என இந்தக் குடும்பத்தின் இராச்சியம், யாராலும் எதிர்க்கப்பட முடியாத ஒன்றாக மாறிப்போனது.

 

தலைமுறை தலைமுறையாக தாங்கள் இருந்துவந்த இலங்கை சுதந்திரக் கட்சியை நினைத்த நேரத்தில் துறந்துவிட்டு, தங்களின் கைப்பாவையான ஒருவரைக் கொண்டு புதிய கட்சியைத் தொடங்கினர். இலங்கை பொதுசன முன்னணி என்கிற அந்தக் கட்சியின் மூலமே இன்னுமொரு அதிகாரப் பரம்பரைக் குடும்பத்தைக் காலூன்றவைக்க விரும்பினார்கள். அப்படியே செய்ய முயன்றார்கள். 

 

ஒரு பக்கம் ஈழத்தமிழர்கள் மீதான போரால் கணிசமாக பொருளாதாரம் காலியாக, முக்கிய அந்நியச் செலாவணி வருவாயான தேயிலை, தோட்டப்பொருள்கள், ஆயத்த ஆடைத் தொழில் போன்றவற்றில் உரிய கவனம்செலுத்தாமல் அவற்றின் மூலமான வருவாய் கைவிட்டுப் போனது. முற்றுமுழுதான செலாவணியை ஈட்டித்தரும் சுற்றுலாத் தொழிலும் கொரோனாவால் காலியாக, இடையில் பெருகிய குடும்ப ஆட்சி அதிகாரம்- அதன் மூலமான சீர்கேடுகள், ஊழல்களும் சேர்ந்துகொள்ள நாடு மீளமுடியாத பொருளாதார நெருக்கடியில் சிக்கிக்கொண்டது. 

 

ஈழத்தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்டபோது வேடிக்கைபார்த்த அல்லது அதை கள்ள மௌனத்தோடு கடந்துபோன சிங்கள மக்களுக்கு தங்களின் வாழ்வாதாரம்/ வாழ்க்கைக்கே வழி இல்லை என்ற நிலை வந்தபோது, வீதியில் இறங்கினர். 

 

கோத்தாவே வீட்டுக்குப் போ என ஒற்றை முழக்கமிட்டு, கொழும்பு காலி முகத் திடலில் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதியன்று ஒருங்கிணைக்கப்பட்ட மக்கள் போராட்டம் தொடங்கியது. அதற்கு இரண்டு வாரங்களுக்கும் முன்னரே அங்குமிங்குமாகப் போராடிய மாணவர்கள், இளைஞர்கள் காலி முகத்திடலில் ஒன்றிணைந்து புதியதொரு போராட்ட வடிவத்தைக் கையிலெடுத்தனர். அரசமைப்புக்கு உட்பட்ட அவர்களின் போராட்டம், மே 9ஆம் தேதியன்று மகிந்த இராஜபக்சே தரப்பால் உசிப்பிவிடப்பட்ட அவர்களின் கட்சியினரின் தாக்குதலால் வன்முறைக்கு மாறியது. 

 

அன்றைக்கு பிரதமர் பதவியிலிருந்து அண்ணன் மகிந்தவும், அடுத்து ஜூன் மாதம் 9ஆம் தேதி நிதியமைச்சர் பதவியிலிருந்து இளைய தம்பி பசில் இராஜபக்சேவும் பதவிவிலக வேண்டியதாயிற்று. குடும்பத்தின் ஒரே பிடியாக இருந்த அதிபர் பதவியிலிருந்து கோத்தா விலகினால், மொத்த குடும்பத்தையும் சாத்தோ சாத்தென சாத்திவிடுவார்கள் என்பதையும் அவர்கள் புரிந்துகொண்டார்கள். 12ஆம் தேதி பசில் நாட்டைவிட்டு தப்பியோட முயன்றும் முடியவில்லை. வரும் 28ஆம் தேதிவரை மகிந்தவும் பசிலும் சிலரும் நாட்டைவிட்டு போக நேற்றைக்கு இலங்கை உயர்நீதிமன்றம் தடைவிதித்திருக்கிறது. 

 

காலிமுகத் திடல் போராட்டக்காரர்களின் முழக்கமும் அவர்களின் செயல்பாடுகளும் பிரதமர்களின் வீடுகளுக்குத் தீவைக்கும் அளவுக்குப் போயிருந்தாலும், அவ்வளவு கொதிநிலைக்கு இடையிலும் அனைவரின் கண்களிலும் மண்ணைத்தூவிவிட்டு அல்லது படுலாவகமாக மாலத்தீவுகளுக்குத் தப்பிச்சென்றார், கோத்தாபய. முன்னர் உறுதியளித்தபடி 13ஆம் தேதி அவர் விலகல் அறிவிப்பு வருமெனக் காத்திருந்தவர்களால் ஒன்றுமே செய்யமுடியாதபடி சிங்கப்பூரில் போய் பத்திரமாக இறங்கியபின்னர், தன்னுடைய அதிபர் பதவியை வைத்து தற்காத்துக்கொண்ட பின்னரே விலகல் கடிதத்தை அனுப்பிவைத்தார்.. ஒரு நாள் கழித்து! 

 

கோத்தாவின் விலகலை அடுத்து, அரசமைப்புச் சட்டப்படி பிரதமராக இருந்த இரணில் தற்காலிக அதிபராக நேற்று பதவியேற்றார். அடுத்த ஒன்றரை ஆண்டுகாலத்துக்கும் இடைக்காலமாக வேறு ஒருவரை அதிபராகத் தேர்வுசெய்ய வேண்டியது, நாடாளுமன்றத்தின் கடமை எனும்நிலையில், அதற்கான முனைப்புகள் தீவிரம் அடைந்துள்ளன. 

 

நாட்டைவிட்டு கோத்தா தப்புவதற்கு பிரதமர் இரணிலும் உதவிசெய்தார் என்பதை சூசகமாக இரு தரப்பும் ஒத்துக்கொண்டபோதே, இலங்கை அரசியலில் ஒன்று உறுதியாகிவிட்டது: எலியும் பூனையுமாக இருந்த இரணிலும் இராஜபக்சேக்களும் ஓரணியில் வந்துவிட்டனர் என்று! அதைத் தொடர்ந்து, எப்படியாவது அதிபர் நாற்காலியில் உட்கார்ந்துவிட வேண்டும் எனத் துடிக்கும் இரணிலுக்கு ஆதரவு என இராஜபக்சேக்கள் உருவாக்கிய இலங்கை பொதுசன முன்னணியின் பொதுச்செயலாளர் நேற்று அறிவித்தார்.  

 

நேற்றுவரை இரணிலும் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசாவும் மட்டுமே போட்டி என இருந்ததுமாறி, இராஜபக்சேக்களின் பொதுசன முன்னணி அதிருப்தி தலைவர் டலஸ் அழகப்பெருமவும் போட்டி என அறிவித்தார். அவரைத் தொடர்ந்து (முன்னொரு காலத்தில் அரசெதிர்ப்பு ஆயுத இயக்கமாக இருந்து பின்னர் தேர்தல் அரசியலுக்கு வந்த) ஜேவிபி கட்சியின் தலைவர் அனுரகுமார திசநாயக்கவும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

 

இப்போதைக்கு இலங்கை அரசு அதிபர் தேர்தலில் நான்கு அறியப்பட்ட முகங்கள் போட்டியில் உள்ளனர். 

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனக்கு ஆதரவளிக்கும் என சஜித் கூறியுள்ளார். மேலும், அவருக்கு ஆதரவு அளிக்கும் எனக் கருதப்பட்ட - இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன, இன்று ஊடகங்களைச் சந்தித்து திடீர்த் திருப்பத்தை அளித்துள்ளார். அனைத்து கட்சிகளும் பொதுவான ஒருவரைத் தெரிவுசெய்வதே சரி என காலையில் கூறியிருந்தவர், நண்பகலில் அளித்த பேட்டியின்போது, நாட்டின் எதிர்காலத்துக்கான செயல்திட்டம் இல்லாதவர்களுக்கு தம் கட்சி வாக்களிக்காது என புதிய குண்டைத் தூக்கிப்போட்டார். இதன்மூலம் அவர் என்ன நிலையை எடுத்திருக்கிறார் என்பது முக்கியமானது. ஒருவேளை அவரின் கட்சி வாக்களிப்பைப் புறக்கணிக்கவும் செய்யலாம். அப்படிச் செய்வது நடப்பு நிலவரத்தை மேலும் ஊகத்துக்கே கொண்டுவிடக்கூடும். 

 

இன்னொரு புறம், இராஜபக்சேக்களின் உத்தரவை அறிவிப்பாக வெளியிட்டதைப் போல அறிவித்த பொதுசன முன்னணியின் பொதுச்செயலாளருக்கு பகிரங்க எதிர்ப்பையும் கேள்விகளையும் முன்வைத்திருக்கிறார், அதே கட்சியின் தலைவர் ஜி.எல். பீரிஸ். இவருடைய முக்கியத்துவம்,  சந்திரிகா, இரணில், மகிந்த மூன்று பேருடனும் இலங்கை அமைச்சரவை, அரசாங்கத்தில் இணைந்து பயணம்செய்தவர். இரணில் அதிபரானால் இராஜபக்சேக்களின் அதிகாரமே இல்லாதபடியான ஒரு சூழல் உருவாகும்; அதில் இரணிலின் விரும்பத்தக்க நபராக இவர் இருப்பது உறுதி இல்லை எனும் நிலையில், இராஜபக்சேக்களின் கமுக்கமான (இரணில் ஆதரவு) விருப்பத்துக்கு கட்டையைப் போட்டிருக்கிறார். 

 

இரணிலை எதிர்ப்பதற்காகவே இராஜபக்சேக்களின் பக்கம் சென்ற பலரும் பொதுசன முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கையில், தம் கட்சிக்காரரான டலசுக்கு வாக்களிக்கவே வாய்ப்பு இருக்கிறது. இதில் கட்சித் தலைவர் பீரிசும் வந்து, இரணிலுக்கு ஆதரவு என எப்போது, எங்கே, எப்படி தீர்மானிக்கப்பட்டது எனக் கேட்டு அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். 

 

நான்காவது தரப்பான ஜேவிபி தலைவர் அனுரகுமார திசநாயக்கவுக்கு போராட்டக்காரர்களிடையே அதிகமான செல்வாக்கு இருக்கிறது; ஆனால் தேவை, அவர்களின் ஆதரவு அல்ல; நாடாளுமன்றத்தில் அவருடைய சக உறுப்பினர்கள் எத்தனை பேர் அவரை ஆதரிப்பார்கள் என்பதுதான்!

 

சபாநாயகர், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் போன்ற தரப்பினரின் வேண்டுகோளின்படி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம் அரசியலைவிட நாட்டு நலனை மனதில்கொண்டு இடைக்கால அதிபரைத் தேர்ந்தெடுக்க நினைத்தால், கட்சிக் கணக்கீடுகள் மூலம் நிலவரத்தைத் தீர்மானித்துச் சொல்லமுடியாது. 

 

இறுதி வரிகள் தட்டச்சப்படும் நேரப்படி, நான்கு தரப்புக்கும் தனித்தனியாக வாக்குகள் பிரியும் என்பது உறுதி. எதிர்க்கட்சித் தலைவர் சஜித்தின் கூற்றுப்படி, ’இராஜபக்சேக்களின் செல்வாக்குக்கு உட்பட்ட ஒட்டுமொத்த நாடாளுமன்றத்தில்’ யார்யார் என்ன அடிப்படையில் வாக்களிப்பார்கள் என்பதும் புதிராகத்தான் இருக்கிறது! 

 

அறகலய எனப்படும் கொழும்புக்களத்தின் அதிரடியில் தொடங்கிய போராட்டம், நாடாளுமன்ற முற்றுகை எனப் போனபோது குழப்பமாக ஆனது. காலிமுகத்திடல் களமே மெய்யானது; மற்றவை பொய் என விளக்கவேண்டிய நிர்பந்தம் போராட்டக்காரர்களுக்கு ஏற்பட்டது. ஆனால், அந்த நாளின் தொடக்கமே இலங்கை அரசியல் கட்சிகளின் வழக்கமான- அவரவர் அடையாள அரசியல் பிடிமானங்கள், முன்னிறுத்தல்கள் முனைப்புக்கு வரத் தொடங்கின. போராட்டக்காரர்கள் முன்வைத்தபடி, கோத்தாபய வீட்டுக்குப் போய்விட்டார்.

 

அடுத்து என்ன நடக்கவேண்டும் என அவர்கள் பலவற்றைச் சொல்லி போராட்டத்தைத் தொடர்வது ஒருபுறம் என்றால், போராட்டத்தைப் பயன்படுத்தி ஆட்சிபீடத்தில் ஏறமுயலும் அரசியல் கட்சிகளோ குழப்படிக்கு மேல் குழப்படியை உண்டுபண்ணுகின்றன! 

 

- இர.இரா. தமிழ்க்கனல் 


English Summary
Continuing changes in Srilanka President election

 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...