???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நாளை கடைசி கட்ட வாக்குப்பதிவு! 0 நீர் திருட்டைத் தடுக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன?: நீதிமன்றம் கேள்வி 0 பரபரப்பான அரசியல் சூழலில் ராகுல்-சந்திரபாபு நாயுடு சந்திப்பு! 0 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி! 0 சிறப்பான செய்தியாளர் சந்திப்பு: மோடி குறித்து ராகுல் 0 சென்னையில் மழைக்கு வாய்ப்பு! 0 பி.எட். தேர்வு தேதி மாற்றம்: உயர் கல்வித்துறை அறிவிப்பு 0 மே 23-க்கு பிறகு திமுக ஆட்சி அமைக்கும்: ஸ்டாலின் உறுதி 0 நாளை மறுதினம் இறுதிகட்டத் தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவு! 0 கோட்சே விவகாரம்: பிரக்யா தாகுர் மன்னிப்பு கோரினார்! 0 கரூரில் கமல்ஹாசனை நோக்கி செருப்பு, முட்டை வீச்சு! 0 கோவில் கல்வெட்டில் தேனி எம்.பி. ஆனார் ஓபிஎஸ் மகன்! 0 கமல் முன்ஜாமின் கோரிய மனு: தீர்ப்பு ஒத்திவைப்பு! 0 மருத்துவ படிப்படிகளுக்கான கலந்தாய்வு: ஜூன் 26ம் தேதி தொடங்கும் என அறிவிப்பு! 0 இந்தியாவில் 300 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ஐபிஎம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நேதாஜி உயிருடன் இருக்கிறார் என்றார் தேவர்! - மதுரைக்காரய்ங்க-4

Posted : புதன்கிழமை,   பிப்ரவரி   20 , 2013  06:50:43 IST


Andhimazhai Image

இது மதுரை மண்ணின் வரலாற்று அரசியல் நிகழ்ச்சிகளை படம்பிடிக்கும் பரபரப்பான அரசியல் தொடர். காலத்தின் முன்னும் பின்னும் சென்று முக்கியமான அரசியல் சம்பவங்களை இத்தொடரில்  படம்பிடிக்கிறார் சஞ்சனா மீனாட்சி.

 

விடுதலைப் போராட்டங்களில் பங்கேற்று தன் வாழ்நாளில் ஐந்தில் ஒரு பகுதிக்கும் மேலான காலத்தை சிறையில் கழித்தவர் தேவர்.வேலூர், திருச்சி, சென்னை, மதுரை, அலிப்பூர், அமராவதி, ராஜமுந்திரி, டாமோராணுவச்சிறை போன்ற சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார்.  இந்த சிறைச்சாலைகளில் இருந்ததால் வி.வி.கிரி, அனந்தசயனம் அய்யங்கார், எஸ். சத்தியமூர்த்தி, ஜீவானந்தம், பி. ராமமூர்த்தி, என்.ஜி. ரங்கா போன்றவர்கள் இவரது சிறை நண்பர்களாக இருந்தனர்.
மதுரை அரசியல் திருப்பு முனையை ஏற்படுத்தும் இடம். அப்படித்தான் 1945 -ம் ஆண்டு அக்டோபர் முப்பதாம் தேதி காங்கிரஸ் செயற்குழு மதுரை திருப்பரங்குன்றத்தில் கூடியது. தலைவரைத் தேர்வு செய்வதற்கு கூச்சலும் குழப்பமும் நிலவியது. இந்த சூழலில் தமிழ்நாடு காங்கிரஸ் குழுவின் தலைவராக காமராசர் தேர்வானார். இது தேவரின் ஆதரவால் நடந்த ஒன்று. காமராஜரின் எதிர்கால அரசியல் வளர்ச்சிக்கு இது அடித்தளமாக இருந்தது.

 

1911ம் ஆண்டு குற்றப் பரம்பரை சட்டம் என்னும் சட்டத்தை ஆங்கிலேய அரசு கொண்டு வந்தது. அதை தேசிய அளவில் எண்பத்தொன்பது சாதிகளைச் சேர்ந்த மக்கள் மீது பாய்ச்சியது. இந்த சட்ட எதிர்ப்பு மாநாடுகளையும் போராட்டங்களையும் ராமநாதபுரம் மற்றும் மதுரை மாவட்டங்களில் தேவர் தீவிரமாக நடத்தி வந்தார். மதுரை மாவட்டம் பேரையூரில் 1936ம் ஆண்டு அக்டோபர் 27ம் நாள் நடத்திய மாநாடும் இதில் அவர் பேசிய பேச்சும்தான் இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக்காரணமாக இருந்தது.  "வெள்ளைக்காரர்களே கொள்ளையடிப்பதற்காக இந்தியா வந்திருக்கிறார்கள். அப்படியிருக்கையில் இங்குள்ள ஒரு பிரிவினரை குற்றப் பரம்பரையினர் என அறிவித்திருக்கிறார்கள்" எனக் கடுமையாக விமர்சித்தார். இதன் பிறகு அவரது இந்தப் போராட்டத்தில் பல்வேறு சாதியினரும் இணைந்து கொண்டு போராடினார்கள். நெஞ்சுரம் கொண்டவர்களே வெள்ளையனை அப்போது இந்த அளவுக்கு விமர்சிக்க முடியும் என்ற பேச்சு எழுந்தது. தேவருடைய பேச்சுக்களால் பல்வேறு சாதியினர் ஒன்றிணைந்து ஆங்கிலேயரை எதிர்க்கத் துணிந்து விட்டார்கள் என ஆங்கிலேய அதிகாரிகள் குறிப்புகளில் எழுதினார்கள். எனவே பேரையூரில் ஆற்றிய உரையைத் தொடர்ந்து அவர் பொதுமேடைகளில் பேசக்கூடாது என ஆங்கிலேய அரசு தடைவிதித்தது.

 

மதுரைமாவட்டம் உசிலம்பட்டியில் 1939 சூன் 18ம் நாள் நடந்த இளைஞர் மாநாட்டில் பேசியத் தேவர், "இளைஞர்கள் தங்கள் கை ரேகைகளை காவல் நிலையத்தில் பதிவு செய்வதை விட இந்தக் கொடூரச் சட்டத்தை எதிர்த்துப் போராடி கைகளில் விலங்கு வாங்கிக் கொண்டு சிறைக்குச் செல்வதே சிறந்தது.." என்றார். அவரது பேச்சு இளைஞர்களை தூண்டி விடுவதாக ஆங்கிலேய அரசு குற்றம் சாட்டி எனவே தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தேவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அப்போது முதல்வராக இருந்த ராஜாஜி மதுரை வந்திருந்த போது கள்ளர் சமுதாயத்தினர் இரண்டு மைல் நீளம் கொண்ட பிரம்மாண்ட ஊர்வலமாக கம்பத்திலிருந்து மதுரை வரை நடந்து வந்து ராஜாஜியிடம் குற்றப் பரம்பரை சட்டத்தை ரத்து செய்ய மனு அளித்தனர். ஆனால் 1947ம் ஆண்டு மே மாதம் தான் இந்தச் சட்டத்தை நீக்குவதற்கான ஆளுநர் ஜெனரலின் அனுமதி கிடைத்தது.

 

பார்வர்டு பிளாக் இயக்கத்தை வலுப் பெற செய்த பசும்பொன் தேவர் காங்கிரஸ் அரசுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார். காங்கிரசின் கொள்கைகளை மட்டுமல்ல நடவடிக்கைகளையும் எதிர்த்தார்.  6-5-1956 அன்று மதுரையில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசுகையில், இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த மௌண்ட் பேட்டன் சிங்கப்பூரில் அட்மினரலாக இருக்கிறார். அவர் இந்தியா வந்த போது பிரதமர் நேரு அவரை நேரடியாகச் சென்று வரவேற்றார். ஒரு அட்மினரலை பிரதமர் சென்று வரவேற்பதா?  இது பிரதமர் பதவிக்கு அவமானம். இந்திய இறையாண்மைக்கு அசிங்கம் என்றார். தொடர்ந்து "தலைவராக இருப்பவர் சிந்தனை சக்தி கொண்ட தலையையும் வீரம் செறிந்த நெஞ்சுரத்தையும் கொண்டவராகத் திகழவேண்டும்" என்றார்.

 

அதுபோல 28-6-1957ல் மதுரை மாவட்டம் பேரையூரில் நடந்த கூட்டத்தில் காமராசரை கடுமையாக விமர்சித்தார். காமராசர் ஆதரவுடன் கள்ள நோட்டுக்கள் அச்சிடப்படுவதாகவும் வியாபாரிகள் வரிமானவரி ஏய்ப்பு செய்துவருவதாகவும் இப்படி முறையற்ற முறையில் வரும் பணத்தை வைத்துக் கொண்டு காங்கிரஸ் கட்சி ஓட்டுக்களை விலைக்கு வாங்கிவருவதாகவும் குற்றம் சாட்டினார். இந்த மதுரை மாவட்டப் பேச்சு அரசியல் சூறாவளியைக் கிளப்பியது.

 

பிரிக்கப்படாத ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு தொகுதிகளில் போட்டியிட்டு தொடர்ந்து வெற்றிபெற்று வந்தவர் தேவர். ஒரே நேரத்தில் சட்டசபைக்கும் மக்களவைக்கும் போட்டியிடுவார். இரண்டிலும் வெற்றி பெறுவார். அதில் ஒன்றை வைத்துக் கொண்டு மற்றதை ராஜினாமா செய்து விடுவார். இந்த நிலையில் காங்கிரஸ் வசமிருந்த மதுரை மாநகராட்சியைக் கைப்பற்ற முடிவு செய்தார் தேவர். ஒரு சக்தி மிக்க கூட்டணியை உருவாக்கினார். இந்த தேர்தலில் பார்வர்டு பிளாக் கட்சியைச் சேர்ந்தவர்கள் இந்திய தேசிய ஜனநாயக காங்கிரஸ் என்ற அமைப்பின் கீழ் போட்டியிட்டார்கள். காங்கிரஸை தோல்வியடையச் செய்தார். தேவரின் ஆதரவு பெற்ற தேவசகாயம் மதுரை மாநகராட்சி தலைவரானார்.  அதனால் அவரை "தேவர் சகாயம்" என்றுஅழைத்தார்கள்.


 

காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே பார்வர்டு பிளாக் என்ற அமைப்பை நேதாஜி 1939ம் ஆண்டு சூலை 22-ம் தேதி தொடங்கினார். தேவரின் அழைப்பின் பேரில் 1939ம் ஆண்டு செப்டம்பர் 6-ம் தேதி நேதாஜி மதுரை வந்தார். மதுரை வெளி வீதிகளில் மிகப்பெரிய ஊர்வலமும் அதைத் தொடர்ந்து தமுக்கம் மைதானத்தில் நேதாஜி பங்கேற்ற பொதுக்கூட்டமும் நடந்தது. இந்தப் பொதுக் கூட்டம் தமிழக அரசியலில் திருப்பு முனையாக அமைந்தது.
 

 

1940ம் ஆண்டு சூன்18ம் தேதியிலிருந்து 22-ம் தேதி வரை நாக்பூரில் நடந்த பார்வர்டு பிளாக் மாநாட்டில் நேதாஜி தலைமை தாங்கிப் பேசினார். "இந்திய மக்களுக்கே அனைத்து அதிகாரமும்" என முழங்கினார். இது ஆங்கில அரசை கடுப்பேத்தியது. நாடு முழுவதும் பார்வர்டு .பிளாக் தலைவர்கள் கைதானார்கள். இந்திய பாதுகாப்பு சட்ட வளையத்துக்குள் தேவர் கொண்டு வரப்பட்டார். அவர் மதுரையை விட்டு வேறு இடங்களுக்குச் செல்வதை ஆங்கில அரசு தடை செய்தது. இதை மீறியதால் தேவர் பதினைந்து மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். 1942-ம் ஆண்டு பார்வர்டு பிளாக் இயக்கத்தை அரசு தடை செய்தது. நேதாஜியின் கொள்கைகளைப் பரப்புவதற்காக 1949-ம் ஆண்டு ஜனவரி 23ம் தேதி மதுரையில் "நேதாஜி" என்ற பத்திரிகையைத் தொடங்கினார். அந்த நாளிதழை பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அதில் "நேதாஜியைப்பற்றி" என்று அவர் எழுதியுள்ள கட்டுரையில் "நேதாஜி சாகவில்லை. அவர் உயிரோடிருக்கிறார். அவர் வாழ்கிறார் என்பதுற்கு மக்கள்முன் நான் எடுத்து வைக்கும் உதாரணங்கள். நேதாஜியின் சவத்திற்கு படமில்லை. அவருடைய சவச் சடங்கு நடைபெறவில்லை. அதற்கு உடனிருந்ததாக எந்த இந்தியனும் ஒப்புக் கொள்ளவில்லை. காந்தியக் காங்கிரஸ்காரர்கள், இதுவரை அனுதாபத் தீர்மானம் நிறைவேற்றவில்லை.." என்கிறார்.

 

1949ம் ஆண்டு டிசம்பர் மாதம் தேவர் கொல்கத்தா சென்றார். சுமார் ஒரு ஆண்டு காலம் பொது வாழ்விலிருந்து ஒதுங்கியிருந்த அவர் 1951ம் ஆண்டு ஜனவரி 23-ம் தேதி மதுரை தமுக்கம் திடலில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார். நேதாஜி குறித்து அறிவிப்பதற்காக ஏற்பாடான கூட்டம் என்பதால் பெரும் கூட்டம் கூடியது. நேதாஜி சீனாவில் திபெத் அருகில் சிட்டகாங் என்ற இடத்தில் உயிருடன் இருப்பதாகதேவர் அறிவித்தார். இந்த பொதுக் கூட்டத்துக்கு வந்த போது தான் அவரது தோற்றம் முற்றிலுமாக மாறியிருந்தது. அடர்த்தியானமீசை அகற்றப்பட்டிருந்தது. மீசை இல்லாமல் கிராப் வெட்டிய தலைமுடிக்குப் பதிலாக நீளமானமுடியுடன்தேவர்தோற்றமளித்தார்!!

 

சஞ்சனா மீனாட்சி மதுரையைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர். தமிழின் முக்கியமான செய்தித்தாள்கள், வார இதழ்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அவர் எழுதும் இத்தொடர் வாரந்தோறும் புதன் அன்று வெளிவரும்.

 

மதுரைக்காரய்ங்க- 1

மதுரைக்காரய்ங்க- 2

மதுரைக்காரய்ங்க- 3

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...