அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டெல்லி பயணம் மகிழ்ச்சியாக இருந்தது – ஓபிஎஸ் 0 இலங்கைக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய இந்திய மகளிர் அணி! 0 எகிறியடிக்கும் ஏக்நாத் ஷிண்டே.. ஆபத்தில் மகாராஷ்டிர ஆட்சி! 0 குஜராத் கலவர வழக்கு: பிரதமர் மோடிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்! 0 மெட்ரிக் பள்ளிகளில் கட்டாயம் இடஒதுக்கீடு! 0 தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு தாக்கல்! 0 பா.ஜ.கவையும் யாராவது உடைக்கலாம்: மம்தா பானர்ஜி எச்சரிக்கை 0 அக்னிபத் திட்டத்தின் கீழ், விமானப்படை, கடற்படையில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! 0 ஜனாதிபதி தேர்தல்: இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் திரவுபதி முர்மு 0 அ.தி.மு.க. உள்விவகாரங்களில் பா.ஜ.க. என்றுமே தலையிட முடியாது: ஜெயக்குமார் 0 திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்துபோயிருக்கிறார்கள்: மு.க. ஸ்டாலின் 0 ஜூலை 11-ல் அதிமுக பொதுக்குழு கூட்டம்: அவைத் தலைவர் அறிவிப்பு 0 சட்டத்துக்கு புறம்பான பொதுக்குழுவை நிராகரிப்பதாக கூறி மேடையில் கோஷமிட்ட ஓபிஎஸ் தரப்பு 0 அதிமுக பொதுக்குழு: சி.வி.சண்முகம் ஆவேசம் 0 அக்னிபத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் பொறுக்கிகள்: இயக்குநர் பேரரசு காட்டம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

ஈராண்டல்ல நூறாண்டைக் கடந்து நிற்கும் சாதனை எது?- பாமரன்

Posted : திங்கட்கிழமை,   ஜுன்   10 , 2013  17:11:59 IST


Andhimazhai Image

அத்தியாயம் : ஒன்று


மகனைப் பள்ளியில் சேர்த்துவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தேன். எங்கிருந்தோ அதைப் பார்த்துவிட்ட எனது நண்பர் ஜெயச்சந்திரன் ஓடி வந்தார்.


“என்ன தோழர் நீங்க போய் வரிசைல நின்னுகிட்டு? இருங்க நான் போய் டோக்கன் வாங்கீட்டு வந்தர்றேன்” எனப் பரபரத்தார்.  நான் மட்டுமென்ன பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்தா வந்திருக்கிறேன். நானே ஊருக்குள்ள அனாமத்து. இங்க நின்னா என்ன? எங்க நின்னா என்ன? வேண்டாம் தோழர் விடுங்க. இந்த அனுபவங்களையெல்லாம் அப்புறம் நான் எப்படிப் பெறுவது... எனத் தடுத்தேன் அவரை.


“வீட்டுக்கு எதிர்லயே ஸ்கூலை வெச்சுகிட்டு இவ்வளவு தூரம் தள்ளி வந்து தம்பிய சேர்த்தறீங்களே” என அங்கலாய்த்தார் நண்பர்.  நம்மாளை சிறுவயதிலேயே சிறையில் தள்ள வேண்டாம் என்கிற நப்பாசைதான் வேறென்ன? என்றேன். அதைக் கேட்டதும் சிரிக்கத் துவங்கி விட்டார் ஜெயச்சந்திரன். அப்போது அவர் ஆதித் தமிழர் பேரவையில் ஏதோ ஒரு பொறுப்பில் இருந்ததாக நினைவு.


அவர் சொன்னதைப் போல எங்கள் வீட்டுக்கு நேர் எதிரிலேயே இருந்தது ஒரு மெட்ரிகுலேஷன் பள்ளி. பரபரப்புகளின்றி பள்ளிக்குப் போய் கூட பல் விளக்கிக் கொள்ளலாம் பையன். ஆனால் அங்கு தும்முவது கூட இங்கிலீஷில்தான் தும்ம வேண்டும். நான் மகனின் சேர்க்கைக்காக நின்று கொண்டிருந்த பள்ளியோ எளியவர்கள் மட்டுமே பயிலும் பள்ளி. அதிலும் தங்களை அழுக்காக்கிக் கொண்டு நகரை சுத்தமாக்கிக் கொண்டிருக்கிற அருந்ததிய மக்களது மழலைகளுக்கு எழுத்தறிவித்துக் கொண்டிருந்த பள்ளி. அதுவும் தமிழைத் தாய் போல் தாங்கிக் கொண்டிருந்த பள்ளி.

 

தமிழ் மீடியமா? இங்கிலீஷ் மீடியமா? என்கிற பட்டிமன்றமே எழவில்லை எம் இல்லத்திற்குள். இந்தக் கட்டுரையை நெஞ்சு நிமிர்த்தி எழுதுகிறேன் என்றால் அதற்கு அடிப்படைக் காரணமே எனது அம்மாவும், துணைவியும்தான். “வாழ்க்கைக்குத் தமிழ்”,


“வசதிக்கு ஆங்கிலம்” என்கிற பம்மாத்துகளுக்குள் பதுங்கிக் கொள்ளாதவர்கள் அவர்கள். ஒருவேளை  ‘மகனை இங்கிலீஷ் மீடியத்தில் சேர்ப்பேன்’ என்று நான் சண்டித்தனம் செய்திருந்தால் கூட இருவரும் இணைந்து என்னைப் பின்னிப் பெடல் எடுத்திருப்பார்களே ஒழிய ஒருபோதும் தாய்வழிக் கல்விக்கு மாறாக மாற்று சிந்தனையே இருந்ததில்லை அவர்கள் இருவருக்குள்ளும்.


ஆக அப்படிச் சேர்க்கப்பட்ட சிறுவன்... பனிரெண்டாம் வகுப்புவரை தங்கு தடையில்லாமல் தமிழில் சிந்தித்து... தமிழில் சுவாசித்து... தமிழில் வாசித்து.. பிற்பாடு பொறியியலில் சேர்ந்து... அதில் தேர்ந்து.. எந்தக் குறைவும் இல்லாமல் இப்போது அலப்பரை பண்ணிக் கொண்டிருக்கிறான் என்பதெல்லாம் இந்த அத்தியாயத்திற்குள் முடித்துக் கொள்ள வேண்டிய சமாச்சாரங்கள்.


அத்தியாயம் : இரண்டு.


சரி எதற்காக இந்தக் கண்றாவி பிடித்த தமிழ் மீடியத்தில் சேர்த்த வேண்டும் நம் மழலைகளை? தமிழில் என்ன இருக்கு? உலகம் போற வேகத்துக்கு நம்ம குழந்தைகளால் ஈடு கொடுக்க முடியுமா? குட் கொஸ்டீன்ஸ்.


தாய் மொழியில் கல்வி கற்கும் குழந்தைக்கு மிதிவண்டி என்று சொல்லித் தந்தால்... மிதிக்காத வண்டி ஒன்று உண்டா? என்கிற சிந்தனை பிறக்கும். வானூர்தி என்று ஒன்றைச் சொன்னால்.. அப்ப தரையூர்தின்னு ஒன்னு இருக்கா? என்கிற கேள்வி பிறக்கும். சைக்கிள் என்று சொன்னால் அது சைக்கிளை மட்டுமே சிந்திக்கும். ஏரோபிளேன் என்று மட்டுமே வாசித்த மழலைகளுக்கு அந்த ஏரோபிளேனிலேயே ஏற்றி அனுப்பினாலும் எந்தச் சிந்தனையும் துளிர்க்காது. இதுதான் எதார்த்தம். இதுதான் ஆங்கில மொழியில் கற்ற குழந்தைக்கும், தாய் மொழியில் கற்ற குழந்தைக்கும் உள்ள சிந்திக்கும் திறனில் உள்ள வேறுபாடு. (பிரிட்டிஷ்... அமெரிக்கக் கலப்புள்ள தமிழ்க் குடும்பங்களுக்கு இது பொருந்தாது)


+2 வரை தமிழ் மீடியத்தில் படித்து விட்டு கல்லூரியில் கால்வைக்கும் இளைய சமுதாயம் அதன் பிறகு ஆங்கில மீடியத்தில் ஐந்தாறு மாதம் தடுமாறும் என்பது உண்மைதான். ஆனால் அதன் பின் வரும் ஆண்டுகள் அவர்களுக்கானது. இதுவரை படித்த “இலை”தான் “லீப்” என்பதையும், “குடுவை”தான் கோனிக்கல் பிளாஸ்க் என்பதையும் மிக அசால்ட்டாக அறிந்து கொள்ளும். ஏனெனில் இதுவரை தாய் மொழியில் புரிந்து படித்து வந்ததற்கான வார்த்தைகள்தான் புதுசு. விஷயங்கள் அவர்கள் ஏற்கெனவே புரிந்து கொண்ட ஒன்று. அண்மையில் வந்த அநேக ஆய்வுகள் தாய்மொழியில் படித்துவிட்டு வந்த மாணவர்களே கல்லூரி இரண்டாம் ஆண்டில் இருந்து தூள் கிளப்புகிறார்கள் என்கிறது.


இதைப் புரிந்து கொள்ளாமல் “வீட்டுல மனைவி ஒத்துக் கலீங்க”. “மச்சினிச்சி ஒத்துக்கலீங்க” என்பதெல்லாம் முற்போக்கு வெங்காயங்கள் செய்யும்  பம்மாத்து. உண்மையில் ஆண்களுக்குத்தான்  தாய்வழிக் கல்வியில் நம்பிக்கையில்லாமல் பழியை பெண்கள் மீது போடுகிறார்களோ என்கிற பெருத்த சந்தேகம் எனக்குள் உண்டு.


தாய்வழிக் கல்வியில் படிக்காமல் தண்ணி காட்டு பவர்களுக்கு வசதியாக தலைவர்கள் வேறு கிடைத்து விடுகிறார்கள் அவ்வப்போது. “இவ்வளவு பேசுற இந்தத் தலைவரோட மகள் எந்தக் கான்வென்ட்ல படிச்சுது தெரியுமா?....” “அந்தத் தலைவரோட பேரன் இங்கிலீஷ் மட்டுமில்ல... இந்தியும் படிக்கிறான்..” என்கிற அசரீரி எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கும். அவர்கள் இந்தியோ எந்தக் கர்மமோ படித்துவிட்டு வந்து தமிழ்நாட்டில் பானி பூரி கடை வைக்கட்டும் அல்லது எக்கேடோ கெடட்டும்... ஆனால் இந்தத் தலைவர்கள் பிறக்கும் முன்பே தமிழ் இருந்தது... இவர்கள் போய்ச் சேர்ந்த பிறகும் தமிழ் இருக்கும். தமிழை இவர்கள் அறிமுகப்படுத்தவில்லை நமக்கு. தமிழ்தான் இவர்களை நமக்கு அறிமுகப்படுத்தியது. ஆனால் நம் குழந்தை புரிந்து படித்ததா இல்லையா என்பதுதான் நமது கவலை.


அத்தியாயம் : மூன்று


இனி வரும் அத்தியாயம்
மேய்ச்சா மதனிய மேய்ப்பேன்... இல்லாட்டி பரதேசம் போவேன் என்கிற பேர்வழிகளுக்கு...
எவ்வளவு சொன்னாலும் கேட்காமல் “பெட்ரோமேக்ஸ் லைட்டேதான் வேணும்” என்று இங்கிலீஷ் மீடியத்தில் கொண்டுபோய்த் தள்ளும் ஜென்மங்களுக்காகவே அரசு பள்ளிகளிலும் ஆங்கில வாயிலைக் கொண்டு வந்திருக்கிறதோ தமிழக அரசு என்று எண்ணத் தோன்றுகிறது. “நான் படிக்காட்டியும் எம் புள்ளையாவது நல்லா இருக்கட்டும்” என்கிற அக்கறையில் எழுந்த அறியாமை இது. இதன் விளைவாக கிரிக்கெட் புக்கிகளை விட மோசமான தனியார் பள்ளிகளைச்
சரணடைந்து கடன் வாங்கியாவது காசைக் கொண்டுபோய் கொட்டும் ஏழைப் பெற்றோரை நினைத்துக் கொண்டு வரப்பட்டிருக்கலாம் இத் திட்டம். அரசு தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி என்கிற இத்திட்டத்தை நாம் முற்றாக நிராகரித்து விடவும் முடியாது. முழு மனதோடு ஆதரித்து விடவும் முடியாது என்பதுதான் என்னுடைய புரிதலுக்கு உட்பட்ட சமாச்சாரமாய் இருக்கிறது.


என்ன தலை சுற்றுகிறதா? இதை எப்படிப் புரியவைப்பது? ஆங்..மது கூடாது. மது விலக்குதான் வேண்டும். ஆனால் குடித்துத்தான் தீருவேன் என்று அடம் பிடிப்பவர்கள் எக்கச்சக்கம்.
சரி தொலை.. காலை 10 மணிக்கு முன்னாடி குடிக் காதே... இரவு 10 மணிக்கு மேல் பொது இடத்தில் (அதுவாகப்பட்டது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில்) குடிக்காதே. 18 வயதுக்குள் குடிக்காதே... குடித்துவிட்டு வாகனம் ஓட்டாதே.. என்பதைப்போல. “ஆசையை துற” என்றார் புத்தர். அவர் சொன்னதைத் தவிர மற்ற எல்லாவற்றையும் துறந்ததனால்... பல புதிரா? புனிதமா?க்களை நடத்த மாத்ருபூதங்களும் சேலம்
சிவராஜ் சித்த வைத்தியர்களும் வரவேண்டியதாயிற்று.
அதைப்போல..


“தமிழ் வழிக்கல்விதான் சரி.” ஆனால் கேட்காத ஜென்மங்களுக்கு? சரி தொலை. காசைக் கொண்டு போய் கள்ளச்சாராயம் காய்ச்சிய கல்வித் தந்தைகளிடம் எல்லாம்  கொட்டாதே. அந்தக் கர்மத்தை அரசுப்பள்ளியிலேயே படித்துத் தொலை. என்பதாகத்தான் பார்க்கத் தோன்றுகிறது எனக்கு.
ஆனால்... மொழி ஆசிரியர்களே அற்ற ஓராசிரியர் ஈராசிரியர் பள்ளிகளில் எப்படி செயல்படப் போகிறது இந்த ஆங்கில வழிக் கல்வி? ஆங்கில மொழிக்கே ஆசிரியர் பற்றாக்குறையால் நாம் திண்டாடிக் கொண்டிருக்கும்போது ஆங்கில வழிக்கு எப்படி சமாளிப்பது? முதலில் கூரையும் கழிப்பறையும் இன்றி கந்தலாய்க் கிடக்கும் பள்ளிகளை மேம்படுத்தி... மொழிப்புலமை மிக்க ஆசிரியர்களை போதுமான அளவுக்கு நியமித்து... அதன் பிற்பாடு இதனை யோசித் திருக்கலாம் அரசு.
 

அத்தியாயம் : 4
இவை எல்லாவற்றுக்கும் மேலாக நேற்றைய... இன்றைய அரசுகளிடம் கேட்பதற்கான கேள்விகள் அநேகம் இருக்கிறது.
கேள்வி 1 :மாநில அரசின் கல்விக் கொள்கையை ஒப்புக்கொண்டு ஒன்றாம் வகுப்பில் இருந்து பனிரெண்டாம் வகுப்புவரை அரசுப் பள்ளியையே நம்பி அதிலேயே பயின்று... கல்லூரியை எட்டுபவர்களுக்கு அரசு என்ன செய்திருக்கிறது?
கிண்டர் கார்டனில் இருந்து +2 வரைக்கும் அரசுப் பள்ளிகள் பக்கம் தலைவைத்துக் கூட படுக்காமல் அரசை உதாசீனப்படுத்தியவர்களுக்கு மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு மட்டும் அரசு கல்லூரிகளை நாடி வர என்ன தார்மீக நியாயம் இருக்கிறது?
கேள்வி 2 :கொள்ளையடிக்கும் தனியார் பள்ளிகளைப் புறம்தள்ளி அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் மட்டுமே படித்து  அரசினை ஆதரித்து நின்றவர்களுக்கு ஏன் முன்னுரிமை வழங்கவில்லை?


குடும்பத்தில் முதல் பட்டதாரி மாணவர்களுக்கு மதிப்பெண் கட் ஆப் இல் முன்னுரிமை தருவதைப் போல அரசு பள்ளி மாணவர்களுக்கும் ஏன் அத்தகைய முன்னுரிமை வழங்கக்கூடாது...?
இப்படி எண்ணற்ற கேள்விகள் நம் முன்னே.
இவை அனைத்திற்கும் மேலாக நம் தமிழ் உணர்வாளர்கள் கூடுதலாக கவனத்தைக் குவித் தாக வேண்டிய பக்கம் ஒன்றிருக்கிறது. அதுதான் பொறியியல், மருத்துவம் போன்றவற்றின் அனைத்து பிரிவு பாடங்களையும்  தமிழில் கொண்டு வர அரசுகளுக்கு அழுத்தம் கொடுப்பது. அதைச் செய்தால் மட்டுமே நாம் ஆங்கிலத்தையே அறிவென்று நம்பிக் கிடக்கும் நம் எளிய மக்களை எதிர்கொண்டு ஏற்றுக் கொள்ள வைக்க இயலும். கடந்த ஆட்சியில்
பரிசோதனை முயற்சியாக பொறியியலில் ஓரிரு பிரிவுகள் தமிழில் தொடங்கப் பட்டதனை நினைவு கூர்ந்தாக வேண்டிய வேளையிது. வரவேற்கப்பட வேண்டிய முயற்சியாயினும் B.E. படிப்புகள் சிலவற்றிற்கு இருந்த தமிழ் பாட நூல்கள் M.E., P.hd போன்ற மேற்படிப்புகளுக்கு இல்லாததால் முடங்கிப் போயிற்று.


இறுதியாக தமிழக அரசிடம் அழுத்தமாக வலியுறுத்துவதற்கான விஷயமும் ஒன்றுண்டு.
அது இதுதான் :
மருத்துவம், பொறியியல் மட்டுமன்றி தமிழகத்தில் பயிலப்படும் அனைத்து கலை அறிவியல் பிரிவுகளுக்குமான பாட நூல்கள் அனைத்தும்  முனைவர் பட்டம் வரை போர்க்கால நடவடிக்கையாக தமிழில் மொழி பெயர்க்கப்பட்டேயாக   வேண்டும். அதற்கான நிபுணர் குழு எவ்வளவு விரைவில் இயலுமோ அவ்வளவு விரைவில் உருவாக்கப்பட வேண்டும்.


அல்லது தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தினரை வகுப்பறைப் பாடங்களுக்கு ஓரிரு ஆண்டுகளுக்கு விடை கொடுக்கச் சொல்லி விட்டு அங்குள்ளவர்களையே அனைத்து தொழில் நுட்பப் பாடப் பிரிவுகளையும் தமிழ் மயப்படுத்த பணிக்க வேண்டும் (புலவர் தமிழில் அல்ல).
இலக்கியமானாலும்... தொழில் நுட்பமானாலும் தமிழில் இல்லாதது எதுவும் இல்லை என்கிற நிலை உருவாக்கப்படுமேயானால் அதுதான் ஈராண்டல்ல... நூறாண்டைக் கடந்தும் நிற்கிற சாதனையாக இருக்கும்.


பி.கு : என்னடா... பட்டப்படிப்பையே இன்னும் முடிக்காம மிச்சம் வெச்சிருக்கிறவன்
சொல்றானேன்னு நினைக்கக் கூடாது... அரசு தமிழ்ப் பள்ளிகள்ல இங்கிலீஷ் மீடியத்தக் கொண்டு வர்றதுக்கு முன்னாடி.... புகழ்பெற்ற தனியார் பள்ளிகள்ல ஏன் நாம ஒரு பிரிவாவது தமிழ் மீடியம் கொண்டு வரச்சொல்லி ஒரு உத்தரவப் போடக் கூடாது?


ஏன்னா.. “தமிழ்ல சேர்த்தணும்னுதான் ஆசை... ஆனா எங்கீங்க நல்ல தமிழ் ஸ்கூல் இருக்கு?”ன்னு நம்மையே கேக்குற பல பசங்க வசமா சிக்குவானுகளே
அதுக்குத்தான் இந்த அப்பாடக்கர் ஐடியா.

 

அந்திமழை ஜூன் 2013 இதழை முழுவதும் படிக்க:

http://www.magzter.com/search_magazine.php?search_magazine=andhimazhai&x=0&y=0

  

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...