சிங்கள இனவாத அமைப்புகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தாரெனக் கூறப்பட்ட பிரபாகரனை வீழ்த்தியவர் என்ற பெயர், இலங்கை அரசின் இன்றைய அதிபர் கோத்தபாய இராஜபக்சேவுக்கு உண்டு. அவரினது வெற்றிக்கும்கூட இது ஒரு முக்கிய காரணம். இதற்காகவே, வடக்கு, கிழக்குப் பகுதிகளைத் தவிர்த்த பெரும்பான்மை இலங்கையும் கோத்தபாயவைக் கொண்டாடியது. தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடிய அந்த கோத்தபாயவைத்தான் அதே சிங்கள+(சிறுபான்மையாக பிற இன) மக்களே, வீட்டுக்குப் போ என்று கடந்த நான்கு நாள்களாக வீதிகளில் இறங்கி முழங்கிக்கொண்டு இருக்கின்றனர்.
பெரும்பான்மை சிங்கள சிவிலியன்களின் கோப ஆவேசத்தை ஒரு கட்டத்துக்கும் மேல் முன்னாள் இராணுவத் தளபதி கோத்தபாயவால் கட்டுப்படுத்த முடியவில்லை. நாட்டின் தற்போதைய நிலைமைக்கு நான் மட்டும் காரணம் இல்லை; என் கையை மீறிய விவகாரமே அது என நாட்டு மக்களுக்கு அவர் தன்னிலை விளக்கமளித்தார். ஆனால் அதைக் காதில் வாங்கிக்கொள்ளக்கூட மக்கள் விரும்பவில்லை.
மெய்யாகவே, இலங்கையின் நிலவரம் கையை மீறிப் போய்விட்டது.
பின்னே, அந்தத் தீவு நாட்டின் பெரும்பகுதி பெரும்பாலான நேரத்தில் மின்சாரம் கிடைக்காமல் இருளிலேயே மூழ்கிக் கிடந்தால்...?
அதென்ன, சிங்கள ஆட்சியாளர்களால் போர்கொண்டு அழிக்கப்பட்ட தமிழீழப் பகுதியான வடக்கு, கிழக்கு மாகாணங்களா... 25 ஆண்டுகளுக்கும் மேல் இடைவிடாத பொருளாதாரத் தடையால் மண்ணெண்ணெயும் சர்க்கரையும் பால் மாவும் (பவுடர்) கிடைக்காதபோதும், ஒரு தலைமுறையே தடம்பார்த்து கடந்துவிட? என கேள்விகளை வரிசைப்படுத்துகிறார்கள், இலங்கையில் வசிக்கும் ஈழத்துத் தமிழர்களில் ஒரு தரப்பார்!
அதாவது, மூன்று நான்கு நாள்களுக்கே அது இல்லை இது இல்லையென அலறித்துடிக்கும் வாழ்வை, போர்ச்சூழல் பீடித்த ஈழத்துத் தமிழர்கள் அனுபவித்து முடித்துவிட்டார்கள்.
ஒப்புமை ஒரு புறம் இருக்க, இலங்கை மக்கள் மன்றங்களில் வெடித்த போராட்டம், நேற்றும் இன்றும் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் கொந்தளிப்புடன் வெளிப்பட்டது.
பெரும்பான்மைச் சமூகமான சிங்கள இனத்தவரில் படித்தவர்கள், அரசு ஊழியர்கள், மாத சம்பளதாரர்கள் என கணிசமான கூட்டத்தினர், ‘கோட்டபாயவே, வீட்டுக்குப் போ’ என சுருக்கெனவும் நாடு முழுவதும் சீராகவும் ஒரே முழக்கத்தை முன்வைத்து, கொடி பிடித்தனர்.
இளைஞர்கள் குறிப்பாக பெண்களின் பங்களிப்பு இதில் கவனிக்கத்தக்க அளவில் இருந்தது.
தமிழர் பகுதிகளைப் பொறுத்தவரை, பல்கலைக்கழக மாணவர்கள், அரசு ஊழியர்கள் போன்ற குறிப்பிட்ட பிரிவினரே போராட்டங்களில் ஈடுபட்டனர்.
தமிழராக இருப்பினும் தனித்தொகுதியினராகவும் இருக்கும் முசுலிம்களும் இசுலாமிய அடையாளக் கட்சிகள் நடத்திய போராட்டங்களில் பங்கெடுத்தனர்.
நாடு முழுக்க போராட்டத்துக்குப் பஞ்சமில்லை என்கிறபடி, தீவு முழுவதும் போராட்டக் கண்ணி பாவியபடி இருந்துவருகிறது, ஒரு வாரத்துக்கும் மேல்!
மக்களின் வாழ்க்கை நெருக்கடியானது சடுதியில் மாறிவிட்டது...
” கொழும்பு போன்ற நகர வாழ்க்கையில், நேற்றுவரை லிஃப்ட்தான் எல்லாமே... அதன்மூலமே அவர்களுக்கு அத்தியாவசிய உணவு, மருந்துப் பொருள்கள் கொண்டுசெல்லப்பட்டன. ஒரே நாளில் மின்சாரமே இல்லை என்றால் அவர்களின் வாழ்க்கை என்ன ஆகும்? எரிவாயுவும் இல்லை என்கிறபோது உணவுக்கு என்ன வழி? நேற்றுவரை எல்லாம் இருந்தும் அவை எல்லாமே பறிபோனதைப்போல ஆனவர்கள், அவர்கள் வாழ்க்கையின் எந்தத் தட்டில் இருந்தாலும் உயிர்வாழும் உந்துதல் எல்லா மனிதரைப் போலத்தானே அவருக்கும்... இதுதான் இங்கத்தைய நிலைமை..!” என்கிறார், கொழும்பு நகரத்தில் வசிக்கும் பத்திரிகையாளர் ஒருவர்.
ஒன்றரை இலட்சம் பேரையும் கொன்றுகுவித்தபோது துளி கண்ணீர்கூட வடிக்காத சிங்களவர்களின் பெருந்தொகையினர், இன்று தமிழர்களையும் ஒன்றுபட்டுப் போராட வருமாறு அழைப்பு விடுக்கிறார்கள்.
ஈழத் தமிழர் கட்சியினருக்கு சிங்கள பௌத்த ஆதிக்கக் கட்சிகளின் தலைவர்கள் புதியதாக இணக்கம் தெரிவிக்கிறார்கள்.
தேசத்தைப் பாதுகாக்க கைகோர்க்கும்படி பாசம் காட்டுகிறார்கள்.
சில நாள்களுக்கு முன்னர்வரை பொருளாதார நெருக்கடிக்குள் மட்டும் சிக்கியிருந்த நிலைமை மாறி, நாட்டையே ஆட்டிப்படைத்துவரும் இராஜபக்சே குடும்பம் ஆட்டம்காணும் அளவுக்கு அங்கு அரசியல் நெருக்கடியும் உருவாகியுள்ளது.
இலங்கையின் முன்னாள் அரசதிபர் மைத்திரிபால சிறீசேனாவைத் தவிர்த்துவிட்டு, இந்த பக்சேக்கள் குடும்பம் கட்டிய புதிய கட்சியான இலங்கை மக்கள் முன்னணி அதிக இடங்களைப் பிடித்து, ஆட்சிபீடத்திலும் அமர்ந்தது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் சூத்திரதாரியாகக் குற்றம்சாட்டப்படும் தம்பியும் அண்ணனும் அரசு அதிபராகவும் பிரதமராகவும் ஆனார்கள். தன்னை ஒதுக்கியபோதும் அவர்கள் அரியனை ஏறுவதற்கு உதவிபுரிந்தார், மைத்திரி. ஈழத்தமிழர்கள், முசுலிம்கள் மீது இனவெறித் தாக்குதலையும் தொடுக்கும் சிங்கள பௌத்த வெறி அமைப்புகள் பலவும் தம் ஆதரவை பக்சேக்களுக்கு வழங்கின.
இலங்கையின் முற்போக்கு கட்சியாகக் கூறப்படும் மக்கள் விடுதலை முன்னணி- ஜேவிபியின் முன்னாள் புள்ளியும் கோத்தபாயவால் அமைச்சராக்கப்பட்டவருமான விமல் வீரவன்ச, உலக மனிதவுரிமையெல்லாம் பேசிவிட்டு கடைசியில் பக்சே குடும்பத்திடம் அமைச்சர் பதவிக்காக சரணடைந்த வாசுதேவ நாணயக்கார போன்றவர்களும் அந்தப் பக்கம் சாய்ந்தனர். இன்னும் சில தரப்பினரின் ஆதரவோடு, 221 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் 145 இடங்களுடன் பலமாக இருந்தது, பக்சேக்களின் அரசாங்கம்.
மக்களின் போராட்டங்கள் புலம்பெயர்ந்த நாடுகளிலும் வெடிக்க, மூன்று நாள்களுக்கு முன்னர் அண்ணன் ஒத்துழைப்புடன் தம்பி பக்சே அவசர நிலையை அறிவிக்க, அரசியல் கட்சிகளிடையே ஆதரவு, எதிர்ப்பு சமன்பாடு குலைந்தது.
அரசாங்கத்தை ஆதரித்துவந்த மைத்திரி கட்சி, விமல், வாசுதேவ அணியினர் உள்பட 10 கட்சிகளைச் சேர்ந்த 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பக்கம் செல்வதாக அறிவித்தனர். அப்படி அறிவித்த மூன்று பேர் பல்டியடித்தது தனிக்கதையும் கூத்தும்!
பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க இந்தியாவிடமும் சீனத்திடமும் மாறிமாறி முகம்காட்டி அவசர உதவிகளையும் பெற்றுக்கொண்டார்கள், பக்சேக்கள்.
சொந்த நாட்டு நெருக்கடியிலும் அண்டை நாடான இலங்கையின் நெருக்கடியைத் தீர்க்க, ஒரு பில்லியன் அமெரிக்க டாலரை அள்ளிக்கொடுப்பதாக அறிவித்தது, இந்திய அரசாங்கம்.
சீனமும் தன் பங்குக்கு அனுசரணைகளைச் செய்யத் தொடங்கியுள்ளது.
இந்த சூழலைப் பயன்படுத்திக்கொண்டு அமெரிக்க அரசு இந்தியப் பெருங்கடலில் அரசியல் செய்துவிடக் கூடாது என்பதில் டெல்லிக்கும் பீஜிங்குக்கும் கவனமோ கவனம்.
இவ்விரண்டு நாடுகள் எவ்வளவுதான் தூக்கிப்பிடித்தாலும் நாள்கள் கணக்கில் மட்டுமே நாட்டின் கதியைக் காப்பாற்றமுடியும் என்பதால், உலக நாணய நிதியத்தின் உதவியை வாங்குவதற்காக, அமெரிக்காவுக்கு ஓடிப்போயிருக்கிறார், பக்சே குடும்பத்தின் இன்னொரு புள்ளியான நிதியமைச்சர் பசில் ராஜபக்சே!
இதற்கிடையே, ஒட்டுமொத்த நெருக்கடிக்கும் இந்த பசில்தான் காரணம் என்பதாக பெரிய பக்சேவான மகிந்தவின் கூட்டாளிகளே வெளிப்படையாக கருத்துகளை முன்வைக்க... கடந்த ஞாயிறன்று, மகிந்தவைத் தவிர்த்து அமைச்சரவையின் மற்ற உறுப்பினர்கள் பதவிவிலகுவதாக அறிவிக்கப்பட்டது. பதிலாக நான்கு அமைச்சர்களுக்கும் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார், அரசு அதிபர் கோத்தபாய. பசிலுக்குப் பதிலாக நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட சலி அப்தாரி, அடுத்த 24 மணி நேரத்துக்கு உள்ளாகவே, தான் பதவிவிலகுவதாக அறிவித்தார்.
இந்த சூழலில் செவ்வாயன்று கூடிய நாடாளுமன்றத்தில் சிங்களத் தரப்புக் கட்சிகள் அனைத்தும் கோத்தபாயவைக் கொந்தி எடுத்தன. அரசாங்கத்தின் நடவடிக்கைகளை அக்குவேறு ஆணிவேறாகப் பிய்த்து எடுத்தன.
அண்ணன் மகிந்த, அவரின் மகன் நாமலுடன் நாடாளுமன்றத்தில் அமர்ந்திருந்த பசிலைப் பார்த்தபடியே, அவரின் திறனில்லாமைதான் நாட்டின் இந்த மோசமான நிலைமைக்குக் காரணம் என்று வீசினார், அமைச்சர் பதவியிலிருந்து அண்மையில் நீக்கப்பட்ட விமல் வீரவன்ச.
அவர் பேசியது அவ்வளவையும் கேட்டு அசராமல் அப்படியே உட்கார்ந்துகொண்டிருந்தார், மகிந்தா; அவரின் மகனும் தம்பியும் இடையில் வெளியே போய்விட்டு வந்தார்கள் என்பதை இலங்கையின் காட்சி ஊடகங்கள் மீண்டும் மீண்டும் காட்டின.
அரசு அதிபருக்குரிய அதிகாரத்தின்படி நாடு முழுவதும் அவசர நிலையை கோத்தபாய அறிவித்தபோதும், அதற்கு, நாடாளுமன்றத்தில் 15 நாள்களுக்குள் அனுமதி பெற்றாகவேண்டும்.
நேற்றுவரை நிபந்தனை இல்லாமல் ஆதரவு தந்த கூட்டாளிகள் ஒரே நாளில் அரசுக்கு எதிர்ப்பக்கம் போய்விடவே, அந்த அவசரநிலை அறிவிப்பையே ரத்துசெய்வதாக அறிவிப்பு வெளியிட்டார், கோத்தா.
மெய்யாக, அவரின் தரப்புக்கு வேறு வழி எதுவும் இல்லை என்பதே நிதர்சனம்.
ஒருவேளை அவசர நிலைக்கு அனுமதி கேட்டு தீர்மானம் கொண்டுவரப்பட்டிருந்தால், நிச்சயமாக, நேற்று ஆதரவை மாற்றிக்கொண்ட முன்னாள் கூட்டாளிகள் அரசுக்கு எதிராகத்தான் வாக்களிப்பார்கள்.
221 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 159 பேர் ஆதரவு என்கிற பலம், 119 ஆகிவிட்டது. அப்படி இப்படியென இருக்கும் சில கட்சிகள் எதிராக முடிவெடுத்துவிட்டால், 111 என்கிற குறைந்தபட்ச பலத்தையும் அரசாங்கம் இழப்பது உறுதி என்பதே அவர்கள் தரப்பின் கணிப்புமே!
இந்த நிலையில், தீர்மானம் தோற்றால், கோத்தபாயவே வீட்டுக்குப் போ என்கிற முழக்கத்துக்கு இன்னும் வலு கூடிவிடும்.
அண்ணனும் தம்பியும் சேர்ந்து செய்த அமைச்சர்கள் விலகல் அறிவிப்பை, பொதுசனமேகூட பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
ஏனென்றால் அந்த நாட்டில் அரசின் அதிபருக்கே உச்ச அதிகாரம். பிரதமரெல்லாம் அவர் வைத்தபடி ஆடக்கூடிய ஒரு ஆட்டக்காய்தான்.
எனவேதான், இந்தப் போராட்டத்தின் ஒரே முழக்கமாக, கோத்தபாயவே வீட்டுக்குப் போ என்பது அந்த நாட்டின் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் இன்று எதிரொலித்தது.
அதையொட்டி அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்படவும் நேர்ந்தது.
இப்போதைக்கு அவசர நிலைத் தீர்மானத் தோல்வி ஒன்றிலிருந்து கவனமாகத் தப்பியிருக்கிறது, பக்சே
குடும்பம்.
ஆம், ஒருவேளை மக்கள் போராட்டம் இன்னும் வலுக்குமானால், கோத்தபாய வீட்டுக்குப் போகவும் கூடும். அப்போது இதே பக்சே குடும்பத்திலிருந்து பெரிய பக்சேவின் பிள்ளையான நாமல் இராஜபக்சே நாயகனாக நிறுத்தப்படலாம் என்கிறார்கள், கொழும்பு அரசியல் ஆய்வாளர்கள்.
அதையொட்டியே சமூக ஊடகங்களின் மீதான சித்தப்பா கோத்தபாயவின் தடைக்கு எதிராக கருத்துரிமைக் குரல் கொடுத்தார், குட்டி பக்சே நாமல்.
அந்த பக்சே இல்லாவிட்டால், இந்த பக்சே என அதற்கும் ஆதரவளிக்க காத்துக்கொண்டிருக்கிறார்கள், சிங்களர், தமிழ் முசுலிம், தமிழ் முசுலிமல்லாத கட்சிகளின் பல தலைவர்கள். அதில் முன்வரிசையில் இருக்கிறார்கள், ஈபிடிபியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான பிள்ளையானும்!
- இர. இரா. தமிழ்க்கனல்