???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: இம்ரான் கான் 0 ப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி 0 அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு! 0 ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா? ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு 0 ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது! 0 அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 0 நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் - 2 0 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி 0 காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் 0 ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி 0 நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் 0 ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் 0 காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் 0 ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 0 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மரணத்தின் மறுபக்கம்! - கர்னல் ஹரிஹரன்

Posted : வெள்ளிக்கிழமை,   மார்ச்   01 , 2019  01:46:13 IST


Andhimazhai Image
 
 
 
 
என் கனவில் பல  ஆண்டுகளாக பால்யகால நண்பர்கள் மூன்று பேர் தோன்றிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் மாணவப் பருவத்திலேயே மரணத்தைத் தழுவிவிட்டவர்கள். ஒருவர் என் நண்பன் கண்ணனின் அண்ணன் பார்த்தசாரதி. அவன் பிணமாய் தேர்ப்பாடையில் ஊர்வலம் வந்த  காட்சி டெக்னிக் கலரில் தோன்றும். இரண்டாவது வருவது, என்னுடன் படித்த மார்க்கபந்து எட்டு வயதில் தெற்றுப் பல் தெரிய சிரிக்கும் கருப்பு வெள்ளைக் காட்சி. மூன்றாவது என்னுடன் நாலாம் வகுப்பில் படித்த எப்போதும் சிரிப்புடன் இருந்த கமலாவின் முகம் கலரில் தெரியும். மார்க்கபந்து எங்களுக்குத் தெரிந்த தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியரின் மகன். கமலாவின் அப்பா தபால்காரர். கமலா இறந்த பின் தினசரி அவர் என் வீட்டுக்கு என் பெயரைச் சொல்லி அழைத்துக் கொண்டே என்னைப் பார்க்க வருவார். வரும் போதெல்லாம் கமலாவைப் பற்றிப் பேசுவார். இது பல ஆண்டுகள் தொடர்ந்தது. ஆகவே அவரைப் பொருத்தவரை நான் அவரது இழப்புகளுக்கு ஒரு நினைவுச் சின்னமாகவே கருதப் பட்டிருந்தேன். 
 
 
இதுபோல என் மகன் அசோக் தனது ஆறாம் வயதில் ஒரு மரணத்தின்  விளைவை  நேரில் கண்ட காட்சி என் நினைவில் நிற்கிறது. அப்போது நான் டெல்லியில் ராணுவத் தலைமையகத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். அசோக் கரோல்பாக்கில் அறுபது வயதான ஒரு தமிழ் பெரியவர் நடத்திய சங்கீதப் பள்ளியில் மிருதங்கம் பயின்றுவந்தான். வாரம் இரு முறை அவனை அழைத்துக் கொண்டு போவேன். நாலைந்து மாதங்கள் பயிற்சிக்குப் பிறகு ஒரு நாள் அவனை அவர் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போன போது வழக்கத்தைப் போல  மிருதங்க சப்தம் கேட்கவில்லை.  அந்த மாடி வீட்டின் கதவைத் திறந்து கொண்டு நாங்கள் இரண்டு பேரும் உள்ளே எட்டிப் பார்த்தாம். வெறிச்சோடியிருந்த  அறையின் ஒரு மூலையில் அவர் வயதான மனைவி குந்திட்டு உட்கார்ந்திருந்தார்.  இன்னொரு மூலையில் மிருதங்கங்கள் அடுக்கப் பட்டிருந்தன.
“என்ன இன்னிக்கி கிளாஸ் இல்லையா?” என்ற என் கேள்விக்கு, அந்த அம்மாள் “ஐயையோ உங்களுக்குத் தெரியாதா, முந்தாநாள் அவர் போயிட்டாரே...இனிமே எங்க” என்று தொடர்ந்ததும், நான் என் மகனை இழுத்துக் கொண்டு போனேன். நல்லா இருந்த மனிதர் எப்படி திடீரென்று இறந்தார் என்று நான் யோசித்துக் கொண்டிருந்த போது வெளியே வந்த  அசோக் “அப்பா, டீச்சர் போயிட்டார்னா என்ன அர்த்தம்? எங்க போயிட்டார்?” என்று வியப்புடன் கேட்டான். அந்தக் காட்சி இன்னமும் என்  மனத்திரையில் நிற்கிறது. நான் மட்டும் அல்ல நாம் எல்லோரும் இன்னமும் வாழ்நாள் முழுவதும் அந்தக் கேள்வியைக்  கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
 
 
 1965 மற்றும் 1971ல் நடந்த போர்களிலும், அசாம், நாகாலாந்து, மணிப்பூர், திரிபுரா மாநிலங்களிலும் மற்றும் இலங்கையில் விடுதலைப்புலிகள் போன்ற இயக்கங்களுடன் நடந்த மோதல்களிலும் நான் பங்கு பெற்றவன். என்னுடைய ராணுவ சேவை பெரும்பாலும் நுண்ணறிவுத் துறை (உளவுத்துறை என்று தவறாகக் கூறப்படும் “இண்டெலிஜென்ஸ் கோர்”) சார்ந்ததே. ஆனால் 1965 மற்றும் 1971 போர்களின் போது நான் பீரங்கிப்படையில் இருந்தேன். ஆக அந்தப் போர்களில் உயிரிழந்தவர்களில் பலர் எனக்கு நன்கு பரிச்சயமான பல ராணுவ சகாக்கள். தீவிரவாத இயக்கங்களைச் 
சேர்ந்தவர்கள், மற்றும் சாதாரண மக்களும் இந்த பட்டியலில் உண்டு. அந்த இழப்புகள் எனக்கு மரணத்தின் பல கோணங்களைக் காட்டியிருப்பதை இப்போதுதான் உணர்கிறேன்.  
 
 
அவற்றில் சில நினைவுகள் மறக்க முடியாதவை. 1965-ல் நடந்த கட்ச் போரில், ஒரு பாகிஸ்தான் ராணுவப் பிரிவு நமது முன்னிலைப் பகுதியில் ஊடுருவ 
யத்தனித்தது. அதில் ஏறத்தாழ எட்டு பேர் நாம் வைத்திருந்த கண்ணிவெடிகளில் சிக்கி உயிர் இழந்தார்கள். கண்ணிவெடிகளுக்கு இடையே சிதறிய அவர்களுடைய சடலங்களை மீட்டு வெளியே எடுத்துச்செல்ல எவருக்கும் தைரியம் இல்லை. இரவு நேரங்களில் நரிகள் அந்தப் பிணங்களை இழுக்க முயற்சிக்கும் போது ஊடுருவல்களை எச்சரிக்க கண்ணிவெடிகளுடன் நமது படைகள் இணைத்திருந்த “ஃப்ளேர்ஸ்” என்ற வாணங்கள் பச்சையும் சிவப்புமாக சுர்ர்ர்.. என்று ஆகாயத்தில் வெளிச்சத்துடன் சீறிப் பாயும். சில சமயங்களில் சில கண்ணி வெடிகள் படார் படார் என்று வெடித்து எங்கள் நிம்மதியைக் குலைக்கும். பகலில் பிணந்தின்னிக் கழுகுகள் நரிகளைப் போல பிணங்களின் மீது பாயும் போதும் வாண வேடிக்கை தொடரும். அந்தப் பிணங்களில் என்னைப் போன்ற இளம் பாகிஸ்தான் பீரங்கிப்படைஆபீசர் ஒருவனும் 
சிதிலமாகிக் கிடந்தான். அவனுக்கு நேர்ந்த கதியைப் பார்த்து  செத்தான் எதிரி என்ற மகிழ்ச்சி எனக்குத் தோன்றவில்லை. அதற்கு மாறாக, ஐயோ பாவம் நம்மைப் போல் ஒருவன்,  இந்த அவல நிலையில் பிணமாகக் கிடக்கிறானே என்றே தோன்றியது.
 
 
அது போல 1971-ல் பிரம்மன்பாரியா பகுதியில் நாங்கள் போரில் இறந்த மஜூம்தார் என்ற இளம் ஆபீசரின் சடலத்தை தேடியபோது இறந்து கிடந்தவர்களில் இந்தியருக்கும் பாகிஸ்தானிக்கும் வித்தியாசம் தெரியாமல் திண்டாடியது நினைவில் நிற்கிறது. வேறுபாடுகள் உயிருள்ளவரைதான். சாவு எல்லாவற்றையும் சமநிலைப் படுத்துகிறது.
ஆனால் மரணத்தின் இன்னொரு பக்கமும் இருக்கிறது. என்னுடன் ஆபீசர் பயிற்சியில் பங்கு பெற்ற காப்டன் மாட்வெல் 1965 போரின் போது காஷ்மீர் பகுதியில் ‘காணாமல்’ போய்விட்டான். நாங்கள் பயிற்சி முடிந்து, உடல்வலியுடன் இரவு படுக்கும் போது மாட்வெல் தனது கிடார் பயிற்சியைத் துவக்கி எல்லோரிடமும் திட்டு வாங்குவான். யார் மோதிக் கொண்டாலும் உடனே ஒரு கடி ஜோக் அடித்து திசை திருப்புவான். அந்த ஜாலியான மாட்வெல் மறைந்த செய்தியை என்னால் நம்பவே முடியவில்லை. ‘இடியட், ஏண்டா இப்படி செத்தே’ என்ற கேள்வி என் மனதுக்குள் பலமுறை இடித்திருக்கிறது.
 
 
1971-ல் நடந்த சம்பவம் இது. மேஜர் கோபாலகிருஷ்ணா என்ற மதுரைக்காரர், விதவைத் தாயின் ஒரே மகன், எனக்கு அகர்தலாவில் நண்பரானார். ஒரு  பயிற்சிக்காக கோபாலகிருஷ்ணாவுக்கு உடனடியாக சோவியத் நாட்டுக்கு பயணிக்க உத்தரவு வந்தது. அவர் அகர்தலாவில் விமானத்தில் ஏறி உட்கார்ந்த பின்பு, போர் சீக்கிரமே ஆரம்பிக்கப் போகிறது என்ற செய்தி கிடைக்க அவர் பயணம் ரத்தானது. அவர் இரண்டு நாள் கழித்து, போர் துவங்குவதற்கு முந்தைய தினம் எல்லைப் பகுதியில் போர் நடத்த வேண்டிய குறிப்பிட்ட இடங்களைப் பார்க்கப் போனார். அங்கு எங்கிருந்தோ திடீரென்று ஒரே ஒரு துப்பாக்கி சுட, மறுகணமே கோபாலகிருஷ்ணா பிணமாக கீழே விழுந்தார். இத்தகைய இழப்புக்களை வாழ்க்கையில் எதிர்பார்க்க வேண்டியதுதான் என்றாலும் சில நினைவுகளை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. அடிமனதின் ஆழத்தில் அவற்றின் வடுக்கள் நிலைத்து நிற்கின்றன. அதனால்தான் மார்க்கபந்துவும், கமலாவும், கோபாலகிருஷ்ணனும், மாட்வெல்லும் திடீரென்று அவ்வப்போது மனத்திரையில் தோன்றுகிறார்களா? விடை தெரியவில்லை.
 
 
சமீபத்தில் எனது மூத்த அண்ணன் சீனிவாசன் (தமிழ் எழுத்துலகில் ‘சார்வாகன்’ என்ற பெயரால் அறியப்பட்டவர்) மறைந்தார். அவர் மறைவு மரணத்தின் மறுபக்கம் என்ன என்ற கேள்வியை என்னுள் சமீபத்தில் எழுப்பியது. அதற்கு அவரே கடைசிக் காலத்தில் உடல்நலக் குறைவால் அவதியில் இருந்த போது “சாவு  என்பது ஒரு விடுதலை என்றே  சொல்ல வேணும்” என்று விளக்கம் அளித்தார்.
 
 
லெபனானைச் சேர்ந்த சிந்தனையாளர் கலீல் கிப்ரான் கூறியபடி வாழ்வும் மரணமும் நதியும் கடலும் போன்றவை. ஒன்றின் தொடர்ச்சியே இன்னொன்றின் துவக்கம்.  இந்த விளக்கத்தை மறைந்த என் தாயார் கேட்டிருந்தால், ‘போதுண்டா மசான வைராக்கியம், உருப்படியான விஷயத்தைப் பேசு’ என்றிருப்பாள். அது சரிதான். ஏனெனில் மரணம் மறக்க  வேண்டிய டாபிக். அந்த வேலையை இயற்கையே செய்து விடுகிறது, நல்ல காலம்.
 
(அந்திமழை 2016 ஏப்ரல் இதழில் வெளியான கட்டுரை. மீள் பிரசுரம்)


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...