![]() |
கோப்ரா: திரைவிமர்சனம்!Posted : வியாழக்கிழமை, செப்டம்பர் 01 , 2022 11:50:55 IST
![]() கணிதத்தில் கைதேர்ந்தவர் நிகழ்த்தும் சாகசங்களே கோப்ரா திரைப்படம்.
படத்தின் தொடக்கத்திலேயே பல்வேறு நாடுகள் காட்டப்படுவதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துவிடுகிறது. ஆப்ரிக்க பாதிரியார் வேடத்தில்,ஸ்காட்லாந்து நாட்டு இளவரசரை நாயகன் விக்ரம் கொலை செய்யும் காட்சி பிரமிக்க வைக்கிறது. அந்தக் கொலை எப்படி நடந்தது என்பதை இன்டர்போல் போலீஸ் அதிகாரியான இர்பான் பதான் விசாரிக்க ஆரம்பிக்கிறார். கணித முறைப்படி நடத்தப்பட்ட அந்த இளவரசர் கொலையும், அதே முறையில் இந்தியாவில் ஒரிசா முதல்வர் ஒருவர் கொல்லப்பட்டதிலும் ஒற்றுமை இருக்கிறது என சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி மீனாட்சி என்பவர் ஆராய்ச்சி செய்திருப்பார். அது பற்றிய தகவல் கிடைத்து இந்தியா வருகிறார் இர்பான் பதான். விக்ரம் செய்யும் கொலைகளுக்குப் பின்னணியில் கார்ப்பரேட் கம்பெனி முதலாளியான ரோஷன் மாத்யூ இருக்கிறார். இதற்கிடையே, விக்ரமை உருகி உருகி காதலிக்கிறார் ஶ்ரீநிதி ஷெட்டி. இருவருக்கும் திருமணம் உறுதியாக, விக்ரம் காணாமல் போகிறார். இதனைத் தொடர்ந்து, படத்தில் அடுத்தடுத்து சில எதிர்பாராத திருப்பங்கள் நிகழ, பணத்திற்காக ஏன் விக்ரம் கொலை செய்கிறார்? சர்வதேச கொலையாளிகளை இர்பான் கண்டுபிடிக்கிறாரா? இல்லையா? என்பது தான் படத்தின் மீதிக் கதை.
கணித அறிவை பயன்படுத்தி விக்ரம் செய்யும் கொலை வித்தியாசமாக இருந்தாலும், ஏகப்பட்ட லாஜிக் மிஸ்ஸிங். சாகச நாயகன் கதை என்பதால், அதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாதுபோல. மாஸாக தொடங்கும் படம் இடையில் தொய்வடைந்துவிடுகிறது. இறுதிக் காட்சிக்கு விக்ரமின் பின்னணி பற்றி சொல்லும் காட்சிகள் கொஞ்சம் உருக வைக்கிறது. அண்ணன் - தம்பி பாசத்தை வித்தியாசமான பின்னணியில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் அஜய் ஞானமுத்து. காதல் காட்சிகள் தேவையா என்று கேள்வி எழுப்பும் அளவிற்கு, அது படத்தில் ஒட்டவில்லை.
விக்ரமின் நடிப்பு எல்லா குறைகளையும் நிவர்த்தி செய்துவிடுகிறது. அவர், தலைமுடியை அள்ளி கொண்டை போடும் காட்சிகள் விக்ரம் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும். ஸ்ரீநிதி ஷெட்டிக்கு வழக்கமான கதாநாயகி பாத்திரம். மிருணாளினி ரவி, மீனாட்சி, இர்பான் பதான், ரோஷன் மேத்யூ, கே.எஸ். ரவிக்குமார், ரோபோ ஷங்கர் ஆகியோர் சிறப்பாகவே நடித்திருந்தாலும், அவர்களுடைய கதாபாத்திரம் வலுவாக எழுதப்படவில்லை. அதேபோல், டப்பிங் பிரச்சனையை நன்றாகவே தெரிகிறது.
இசை ஏ.ஆர்.ரஹ்மான் என டைட்டில் கார்டில் பார்த்ததோடு சரி. ஒளிப்பதிவாளர் ஹரிஷ் கண்ணனின் ஒளிப்பதிவு சிறப்பு.புவன் ஸ்ரீனிவாசனின் படத்தொகுப்பு சில இடங்களில் தொய்வை ஏற்படுத்துகிறது.
மாஸ் ஹீரோ படங்கள் என்றால் அம்மா செண்ட்டிமெண்ட் பேச வேண்டும் என்பது எழுதப்படாத விதி போல். கோப்ராவிலும் அதே பல்லவி. லாஜிக் மிஸ்ஸிங், படத்தின் நீளம், இரண்டாம் பாதி தொய்வாக இருப்பது போன்ற காரணங்களால், கோப்ரா படமெடுத்து ஆடுமா என்று தெரியாது.
|
|