கமிஷனுக்காகவே முதலமைச்சர் பதவியைப் பயன்படுத்தும் எடப்பாடி பழனிசாமிக்கு கழகத்தையோ, எங்கள் கழகத் தலைவரையோ விமர்சிக்கத் தகுதியில்லை என திமுக துணைப் பொதுச்செயலாளர் பொன்முடி சாடியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மக்கள் சேவையில் மகத்தான பணியாற்றி வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பார்த்து “சுயநலக் கட்சி” என்று நாவில் நரம்பு இல்லாமல் முதலமைச்சர் திரு. பழனிசாமி பேசியிருப்பதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அ.தி.மு.க. ஒரு ஊழல் கட்சி. பதவியிலிருக்கும் போதே ஜெயிலுக்குப் போன முதலமைச்சரைக் கொண்ட கட்சி. பதவியில் இருக்கும் போதே சி.பி.ஐ. விசாரணையைச் சந்திக்கும் முதலமைச்சர் திரு. பழனிசாமியைக் கொண்ட கட்சி.
ஏன் பதவியிலிருக்கும் போதே கோட்டையில் வருமான வரித்துறை சோதனை நடத்திய முதலமைச்சர் உள்ள ஒரே ஆட்சி அ.தி.மு.க. ஆட்சி. ஆகவே “சி.பி.ஐ. வழக்கு” “சொத்துக் குவிப்பு வழக்கு” இரண்டையும் வைத்துக் கொண்டுள்ள முதலமைச்சர் திரு. பழனிசாமியும்- துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தையும் கொண்ட அ.தி.மு.க. கட்சியை நடத்திக் கொண்டு தி.மு.க.வை “சுயநலக் கட்சி” என்று கூற முதலமைச்சர் தி.ரு பழனிசாமிக்கு என்ன தகுதி இருக்கிறது?
முதலமைச்சரோ, அமைச்சர்களோ மக்கள் பணியாற்றவோ- கொரோனாவை கட்டுப்படுத்தவோ மாவட்டங்களுக்குப் போகவில்லை. அந்தந்த மாவட்டங்களில் டெண்டர்- கமிஷன் போக்குவரத்துக்களை முறைப்படி கண்காணிக்கவே மாவட்டங்களுக்குச் சென்றார்கள். இல்லையென்று முதலமைச்சராலும்- அமைச்சர்களாலும் மறுக்க முடியுமா?. முதலமைச்சர் ஆய்வு செய்ததால் ஏதாவது ஒரு மாவட்டத்தில் கொரோனா குறைந்ததா? அதன்பிறகுதான் அதிகரித்தது.
இப்போது இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு இயற்கையாகக் குறைகிறது. அப்படித்தான் தமிழகத்திலும் குறையத் தொடங்கியது. இதற்கும் முதலமைச்சர் பழனிசாமியின் ஆய்வுக்கும் தொடர்பில்லை. அவர் நடத்திய ஆய்வு பக்காவான அரசியல். அதனால்தான் தி.மு,க.வினரும், மற்ற கட்சியினரும் வெளியே போகக்கூடாது என்று “கொரோனாவை”க் காட்டி தடுத்தார். ஏன் வழக்குகளே பதிவு செய்தவரும் முதலமைச்சர் திரு பழனிச்சாமி என்பது நாட்டு மக்களுக்குத் தெரியும்.
கொரானாவில் பணியாற்றிய முதலமைச்சர் மற்றும் அ.தி.மு.க அமைச்சர்களின் கதை 7500 கோடி ரூபாய் செலவிட்டதைப் பார்க்கும் போது நிச்சயம் வெளியே வரும். அப்போது முதலமைச்சரும், அமைச்சர்களும் கொரோனாவைப் பயன்படுத்தி “பேரிடர் நிதியில்” நடத்திய திருவிளையாடல்கள் அனைத்தும் வெளிச்சத்திற்கு வரும். அதில் சந்தேகமில்லை. எனவே, இந்த மாநிலத்தைப் பத்தாண்டுகள் பாழ்படுத்தியது அ.தி.மு.க. ஆட்சி. இளைஞர்களின் வேலை வாய்ப்பைக் கெடுத்த ஆட்சி அ.தி.மு.க. ஆட்சி.
தொழிற்சாலைகள் தமிழகத்திற்கே வராமல் விரட்டிய ஆட்சி அதிமுக ஆட்சி. பேரிடர்களில் எல்லாம் கொள்ளையடித்த ஆட்சி அதிமுக ஆட்சி. ஒரு துறை விடாமல் டெண்டரில் ஊழல்- கான்டிராக்டில் கமிஷன் என்று இடதும் வலதுமாக வாங்கிக்கொண்டிருக்கும் ஊழல் அமைச்சர்களைக் கொண்டது அதிமுக. ஆட்சி. இந்த ஆட்சிக்குத் தலைமை தாங்கிக் கொண்டிருக்கும் – எந்த நேரத்திலும் நெடுஞ்சாலைத்துறை ஊழலில் சி.பி.ஐ. விசாரணையைச் சந்திக்க வேண்டியதிருக்கும் - முதலமைச்சர் திரு. பழனிசாமி “சுயநலத்தின்” ஒட்டுமொத்த உருவம். ஊழல் சாக்கடையில் மிதந்து – நீந்திக் கொண்டிருக்கும் நேரத்தில் தி.மு.க. பற்றிப் பேச திரு. பழனிசாமிக்கு துளியும் தகுதியில்லை- அருகதை இல்லை! மக்கள் பணியாற்றும் எங்கள் கழகத் தலைவரை விமர்சிக்கும் முன்பு - கமிஷனுக்காகவே முதலமைச்சர் பதவியைப் பயன்படுத்தும் திரு. பழனிசாமிக்கு நாவடக்கம் தேவை என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.