???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தொடங்கியது! 0 காஷ்மீரில் கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் தாக்கல் 0 குடியுரிமை மசோதா மக்களவையில் இன்று தாக்கல் 0 கர்நாடகா இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது 0 திராவிடம் அழிந்துவருகிறது;ஆன்மீகம் தழைக்கிறது: குருமூர்த்தி 0 மக்களுக்கு பாஜக அரசு துரோகம் செய்துவிட்டது: ப. சிதம்பரம் 0 உள்ளாட்சித் தேர்தலில் போட்டியில்லை: கமல் அறிவிப்பு 0 டெல்லி தீவிபத்து: உயிரிழப்பு 43 ஆக அதிகரிப்பு 0 உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: ரஜினி மக்கள் மன்றம் 0 தமிழகத்தில் மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் 0 பொங்கல் பரிசை வழங்க தடையில்லை: தேர்தல் ஆணையர் 0 உள்ளாட்சி தேர்தல்: திமுக மீண்டும் வழக்கு 0 தெலங்கானா என்கவுண்டர்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அதிருப்தி 0 ”நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரம் புரியனுமே": சுப்பிரமணியன் சுவாமி 0 தமிழக மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது: ரஜினி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

வாடகை வீட்டுப்புராணம் : வெத்தலைக்காரம்மா வீடு - ஒளிப்பதிவாளர் வைட் ஆங்கிள் ரவிசங்கரன்!

Posted : ஞாயிற்றுக்கிழமை,   ஜுன்   24 , 2018  03:11:32 IST


Andhimazhai Image
என்னுடைய  வாடகை வீட்டுப்புராணம்  நான் அம்மா வயிற்றில் ஆறுமாத குழந்தையாக இருந்தபோதில் இருந்தே ஆரம்பித்துவிட்டது. மதுரையில் இருந்து பத்திரிகையாளரான என் தந்தை மு.காமராஜுலு, சென்னைக்கு மாறுதல் ஆகிவந்ததால் அப்போது ஆறுமாத கர்ப்பிணியாக இருந்த என் அம்மா சுதர்சனா, மதுரையில் இருந்து சென்னைக்கு அவருடன் ரயிலில் வந்து வாடகை வீட்டில் 1960-ல் குடியேறினார். அப்போது வாடகை 18 ரூபாய்! ராயப்பேட்டையில் வெத்தலைக்காரம்மா வீடு என்றால் இப்போதும் சொல்வார்கள். ஓட்டு வீடு. நிறைய குடித்தனக்காரர்கள் இருந்தார்கள். அதில் தங்கியிருந்த வி.என்.சாமி என்கிற மூத்த பத்திரிகையாளர் தன் தம்பியுடன் ரயில்வே குடியிருப்புக்குச் சென்றதால் தான் குடியிருந்த வீட்டை எங்களுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்.
 
 
அப்பா பத்திரிகைப்பணிக்கு வெளியே சென்று விடுவார். தனியே இருக்கும் அம்மாவுடன் வீட்டு உரிமையாளர் தம்பதியான ஏழுமலை தாத்தா- இந்திராணி பாட்டி இருவரும் நன்றாகப் பழகிவிட்டனர். கர்ப்பிணியாக இருக்கும் என் அம்மாவிடம் உனக்கு யார் வளைகாப்பு செய்வார்கள் என்று கேட்டிருக்கிறார் பாட்டி. என் அம்மாவுக்கு அந்த அளவுக்கு நெருக்கமான உறவு யாரும் இல்லை என்பதைத் தெரிந்துகொண்டதும் அவரே தெருவில் இருந்த பிறரை அழைத்து அவரது செலவில் வளைகாப்பு நடத்தி இருக்கிறார். அத்துடன் அன்று மாலையே பக்கத்திலிருந்த ஒரு ஸ்டூடியோவுக்குக் கூட்டிச் சென்று புகைப்படமும் எடுத்திருக்கிறார்.
 
 
நான் அதே வீட்டில்தான் பிறந்தேன். எனக்கு அது வாடகை வீடு என்ற எண்ணம் எப்போதும் வந்ததே இல்லை. உரிமையாளரை தாத்தா என்று அவரது துணைவி இந்திராணி பாட்டியை ஆயா என்றும் அழைப்பேன் அவர்களுக்குச் சுலோசனா என்று ஒரு மகள் மட்டும். என் அம்மாவை அவர்களின் மூத்தமகள் என்றே பிறர் நினைத்தனர். என்னைப் பள்ளியில் சேர்த்தது முதல் எல்லா விஷயங்களிலும் தாத்தாவும் ஆயாவுமே பார்த்துக்கொண்டனர். பிறந்த நாள், தீபாவளி, பொங்கல் என்றால் எனக்கு நிச்சயம் துணி உண்டு. சில சமயங்களில் அப்பாவுக்கு தீபாவளி சமயத்தில் பணக்கஷ்டம் என்றால் ஆயாவே அவருக்கு கணக்கு இருக்கும் சில துணிக்கடைகளில் துணி எடுத்துக் கொடுத்துவிடுவார். வாடகை என்று வாய் திறந்து கேட்டதே இல்லை. கொடுக்கும்போது வாங்கிக்கொள்வார். என்னைப் பொறுத்தவரை அந்த வீட்டு உரிமையாளர் போலவே நான் வலம் வருவேன். எந்தப் பிரச்னையிலும் என்னை தாத்தாவும் ஆயாவும் விட்டே தரமாட்டார்கள்.
 
 
அவர்கள் வீட்டில் ஒரு பெரிய தேக்குமர ஊஞ்சல் உண்டு. நான் குழந்தையாக இருக்கும் போது இரவு பத்துமணிக்கு மேல் அழ ஆரம்பிப்பேனாம். அப்போது அந்த வீட்டு அக்கா என்னை அந்த ஊஞ்சலில் படுக்கவைத்து சாப்பிடக் கொடுத்து சமாதானப்படுத்துவார்களாம். என் சிறுவயதிலேயே அந்த அக்காவுக்கு திருமணம் ஆகிவிட்டது. இடையில் அந்த ஓட்டு வீடுகளை இடித்துவிட்டு கான்க்ரீட் வீடாகக் கட்டினார்கள். அப்போது எங்கள் குடும்பம் தவிர மீதி அனைத்து குடும்பங்களையும் காலி செய்யச் சொன்னார்கள். எங்களுக்கு கடைசியில் இருந்த ஒரு வீட்டைக் கொடுத்தார்கள், பிறகு புதிய இல்லம் கட்டியபிறகு அங்கே குடிவந்தோம். இந்த காலகட்டத்தில் 1980-ல் என் அப்பா ஒரு ப்ளாட் வாங்கினார். அங்கே குடியேறுவதாகத் திட்டம். ஆனால் அதைப் போய் தாத்தாவிடம் 
சொல்லும் தைரியம் யாருக்கும் இல்லை. சொந்தவீடு என்பது நல்ல சமாச்சாரம்தான். ஆனால் அந்த சந்தோஷத்தைவிட இங்கிருந்து பிரிந்து செல்வது என்பது பெரும் துயரம். ஒருவழியாக வேறு வழி இன்றி என் அப்பா போய் விவரத்தைச் சொன்னார். விடிகாலையில் கிரகப்பிரவேசம். முதல் நாள் மாலை கிளம்பிச்செல்லும்  அன்று, முதன்முதலாக அப்பா அழுது நான் பார்த்தேன்!
 
 
நாங்கள் சொந்த வீட்டுக்குப் போனாலும் வாராவாரம் வெள்ளிக்கிழமைதோறும் தாத்தா சைக்கிளில் ஏறி கபாலீஸ்வரர் கோவிலுக்குப் போய்விட்டு எங்கள் வீட்டுக்கு வந்துவிடுவார். காலையில் டிபன் சாப்பிட்டுவிட்டுத்தான் போவார். ஆனால் ஆயாவால் எங்கள் பிரிவைத் தாங்கவே முடியவில்லை. ஒவ்வொரு வாரமும் என் அம்மா போய் அவரைப் பார்த்துக்கொண்டிருந்தார். பிறகு ஆயா தன் மகள் வீட்டுக்கே போய்விட்டார். என் தங்கையின் திருமணத்தை அந்தத் தாத்தாதான் முன்னின்று நடத்தித்தந்தார். பின்னாளில் என் திருமணத்தையும் அவர்தான் முன்னின்று நடத்தினார். சுலோச்சனா அக்காவின் குடும்ப நிகழ்வுகள் அனைத்திலும் நாங்கள் இன்றுவரை மூன்றாவது தலைமுறை ஆனபிறகும்கூட பழைய காலம்போல் உறவினர்களாகத்தான் கலந்து கொள்கிறோம். எந்த வேறுபாடும் இல்லை.
 
 
சமீபத்தில் தாத்தாவின் வீடு இடிக்கப்பட்டது. அவர் நினைவாக எதையாவது எடுத்துக்கொள்ளச் சென்றேன். அங்கே பிரம்மாண்டமான தேக்குமர ஊஞ்சல் இருந்தது. அதை எடுத்துக்கொள்ள விரும்பினாலும் அதற்கு என் வீட்டில் இடம் இல்லை! எனவே பழைய துணிகள் போட்டுவைக்கும் பழங்கால மரப்பெட்டியை எடுத்துக் கொள்ள விரும்பினேன். அதைத் திறந்தேன். உள்ளே இருந்த பொருட்களை எடுத்து வெளியே போட்டேன். அதில் 1936-ல் தாத்தா வாங்கியிருந்த ஓட்டுநர் உரிமம் இருந்தது. அப்போதைய சென்னை காவல்துறை ஆணையர் அதில் கையெழுத்துப் போட்டிருந்த ஆவணம் அது. அதைப் பத்திரமாக எடுத்துக்கொண்டேன். அந்த பெட்டியில் இருந்த இன்னொரு பொருள் ஒரு புகைப்பட ஆல்பம்! அதைப் புரட்டினேன். அதில்  என் அம்மா கர்ப்பிணியாக என்னை வயிற்றில் சுமந்துகொண்டிருந்தபோது, தாத்தாவும் பாட்டியும் வளைகாப்பு நடத்தி, ஸ்டூடியோவுக்கு அழைத்துச் சென்று எடுத்த படம் பத்திரமாக இருந்தது!
 
 
 
[அந்திமழை ஜூன் 2018 இதழில் வெளியான கட்டுரை]


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...