???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உச்சநீதிமன்றத்துக்கு இரவில் வழக்கறிஞர்கள் அனுப்பிய கடிதம்! 0 இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனையில் சமரசம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் 0 தமிழகத்தில் புதிதாக 675 மருத்துவர்கள் 3 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமனம் 0 அயனாவரம் சிறுமி வன்கொடுமை: கைதி சிறையில் தற்கொலை 0 சென்னையில் கொரோனா தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்தது! 0 தமிழகத்தில் ரூ.15 ஆயிரம் கோடி முதலீடு: 17 நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் 0 2020-21-ம் ஆண்டுக்கான புதிய பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் 0 சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தலைமை செவிலியர் உயிரிழப்பு 0 கொரோனா இன்று: தமிழகம் 853; சென்னை 558! 0 ஜெ. வீட்டை தமிழக முதல்வர் இல்லமாக பயன்படுத்தலாம்!- நீதிமன்றம் 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17 ஆயிரத்து 728 ஆனது! 0 அரசுக்கு தெரிவிக்காமல் ரயில்களை அனுப்பக்கூடாது: பினராயி விஜயன் 0 ஊரடங்கு தோல்வியடைந்துவிட்டது என்பதை ஒப்புக்கொள்ளுங்கள்: ராகுல் காந்தி 0 புலம்பெயர் தொழிலாளர்கள் நிலை குறித்து உச்சநீதிமன்றம் வேதனை 0 11 நாட்கள் மது விற்பனை வருமானம் ரூ. 1062 கோடி!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

காலா: கருப்புக்கும் வெள்ளைக்குமான போராட்டம் - ஒளிப்பதிவாளர் ஜி.முரளி நேர்காணல்!

Posted : வெள்ளிக்கிழமை,   ஜுன்   08 , 2018  01:15:32 IST


Andhimazhai Image

நேர்காணல் என்றதும் முதலில் தயங்கினார் ஜி.முரளி. இயக்குநர் ரஞ்சித்தின் மெட்ராஸ் முதல் காலா வரையிலான படங்களின் ஒளிப்பதிவாளர். அதிர்ந்து பேசத்தெரியாதவரான முரளி அணிந்திருக்கும் வெளிர் நிற உடைகள் அவரைப்பற்றி சொல்லாமல் சொல்கின்றன. இனி முரளி...

 

“நான் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே காரப்பட்டு என்னும் ஒரு சின்ன கிராமத்தில் பிறந்தேன். அப்பா அம்மா இரண்டு பேரும் பள்ளி ஆசிரியர்கள். படிப்பில் பள்ளி இறுதி வகுப்புவரை நான் சாதாரண மாணவன்தான். அதற்குப் பிறகும் கூட டாக்டராகணும், என்ஜினியராகணும்னு பெரிய லட்சியமெல்லாம் இல்லை. படிக்கும் போது எந்த கல்வி சார்ந்த அழுத்தத்தையும் எனக்கு பெற்றோர்கள் தந்ததில்லை. படிப்பின்மீது பெரிய நாட்டமெல்லாம் இருந்ததில்லை. +2 வுக்குப்பிறகு மூன்று வருடங்களுக்கும் மேலாக படிக்காமல் சுற்றிக்கொண்டிருந்தேன். ஒருநாள்கூட என் அப்பா அம்மா என்னை ஏன் படிக்காமல் ஜாலியாக ஊர் சுற்றிக்கொண்டிருக்கிறாய் என்று கேட்டதில்லை. அந்தக் காலகட்டத்தில்தான்  திருவண்ணாமலை கலை இலக்கியப் பெருமன்றத்தில் தோழர் கோவி.செல்வராஜ் அவர்கள் நடத்திய அரும்பு கலைக்குழுவுடன் தொடர்பு ஏற்பட்டது. அவர்கள் நடத்திய வீதி நாடகங்களில் நடித்தேன். பெரும்பாலும் அரசியல் விழிப்புணர்வை உண்டாக்குவதற்காக நிகழ்த்தப்பட்டவை அந்த வீதி நாடகங்கள். ஏறக்குறைய மூன்று வருடங்கள் இலக்குகள் ஏதுமின்றி நாட்களைச் செலவிட்டேன். ஆனால் அங்குதான் நான் என் வாழ்க்கையை, சக மனிதர்களைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன். அன்று முதல் இன்று வரை திருவண்ணாமலை என் வாழ்க்கையின் மீது அதிகம் பாதிப்பு செலுத்தும் இடமாக இருக்கிறது. வேலை சார்ந்த அழுத்தங்கள் கூடும்போதெல்லாம் நான் திருவண்ணாமலைக்குச் சென்றுவிடுவேன்.

 

வீதி நாடக அனுபவங்கள் என்னைக் கொஞ்சம் கொஞ்சமாய் மாற்றின. என்னை நானே கேள்வி கேட்க ஆரம்பித்தேன். எதாவது படைப்பு சார்ந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் தீவிரமாய் எழுந்தது. பாண்டிச்சேரியில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் கர்நாடக இசை கற்றுக்கொள்ள சேர்ந்தேன். அங்கு ஒரு வருடம்கூட என்னால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. கர்நாடக இசையில் சாகித்யங்கள் சமஸ்கிருதத்தில் இருந்ததால் என்னால் சரியாகக் கற்றுக்கொள்ள முடியவில்லை. பின்னர் அங்கிருந்து வெளியேறி 1998ல் கும்பகோணம் ஓவியக் கல்லூரியில் சேர்ந்தேன். அந்த ஐந்து வருடங்கள் எனக்கு மிக முக்கியமானவை. ஓவியர் சந்ரு, அருளரசன் முதலான ஆசிரியர்கள் என்னை பட்டை தீட்டினார்கள். ஓவியக்கல்லூரியில் படிக்கும் போது ஓவியத்துக்கும் சினிமாவுக்குமான தொடர்பு பற்றி தீவிரமாகப் படிக்க ஆரம்பித்தேன். அசையும் ஓவியம் என்பதுதான் என்னுடைய புராஜெக்ட்டின் தலைப்பு. சினிமா ஒரு அசையும் ஓவியம் என்ற புரிதல் என்னை சினிமாவை நோக்கி நகர்த்த ஆரம்பித்தது.

 

ஓவியக் கல்லூரி முடித்தவுடன் புனே திரைப்படக் கல்லூரியில் 2004ஆம் ஆண்டு இயக்குநர் படிப்புக்கு விண்ணப்பித்தேன். அப்போது சினிமாவில் டெக்னிசியன் என்றால் அது டைரக்டர் மட்டும்தான். அப்படியான புரிதல்தான் எனக்கு இருந்தது. ஆனால் எனக்கு புனே கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. பின்னர் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர் சி.மகேந்திரன் மூலமாக பாலுமகேந்திரா ஸாரைச் சந்தித்தேன். அவர்தான்  சினிமாவைப் பற்றிய ஆழமான புரிதலுக்குள் என்னைச் செலுத்தினார். சினிமாவை ஒரு மீடியமாக புரிந்துகொள்ள விரும்பினால் ஒளிப்பதிவை கற்றுக்கொள் என்றார். மேலும் புனேவில் ஒளிப்பதிவு பாடத்துக்கு விண்ணப்பிக்கச் சொல்லி அவர்தான் அறிவுரை சொன்னார்.

 

ஒருவேளை புனேவில் உனக்கு ஒளிப்பதிவு படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் நான் உனக்கு ஒளிப்பதிவு பற்றி மூன்றே மாதத்தில் கற்றுக்கொடுக்கிறேன், ஆனால் புனே திரைப்படக் கல்லூரி அனுபவம் உன்னை சினிமாவில் நிலைநிறுத்த உதவும் என்றார். அடுத்த வருடம்(2005) எனக்கு புனேவில் இடம் கிடைத்தது. பாலுமகேந்திரா ஸாரை இரண்டு முறைதான் சந்தித்திருக்கிறேன். ஆனால் என் வாழ்க்கையில் என்னை வழிநடத்திய மிக முக்கியமான மனிதர் அவர். 

 

புனே திரைப்படக் கல்லூரியில் சேர்ந்ததும் நான் பாலுமகேந்திரா ஸாரின் வார்த்தைகளை அனுபவப் பூர்வமாக உணர்ந்தேன். மரங்கள் அடர்ந்த அந்தக் கல்லூரி வளாகம், முதலாம் ஆண்டு வகுப்புகள், மிகச்சிறந்த ஆசிரியர்கள், சீனியர் மாணவர்களின் வழிநடத்துதல்கள், என முற்றிலும் வேறு ஒரு உலகத்துக்குள் நான் சென்று விழுந்துவிட்ட மாதிரியான உணர்வு அது. குழு உணர்வை நான் அங்குதான் முழுமையாகக் கற்றுக்கொண்டேன்.

 

சினிமாவில் நீடித்து நிலைக்க குழு உணர்வு ரொம்ப அவசியம். ஏனெனில் சினிமா எப்போதுமே ஒரு தனிநபரின் சாகசமல்ல. புனே திரைப்படக் கல்லூரியில் படித்த சீனியர் மாணவர்கள் எல்லோரும் கல்லூரிக்கு எப்போது வேண்டுமானாலும் வருவார்கள். எங்களுக்குப் பாடம் எடுப்பார்கள். அது ஒரு அற்புதமான சூழல். இந்தியாவின் முக்கியமான ஒளிப்பதிவாளரான ராஜீவ் ரவி திரைப்படக் கல்லூரிக்கு சாதாரணமாக வந்து மாணவர்களுடன் தங்குவார். சீனியர் பேட்ஜ் ஒளிப்பதிவாளர், இயக்குநர், படத்தொகுப்பாளர் திரைப்படங்களில், எங்களுக்குப் படிக்கும்போது வேலை செய்யும் வாய்ப்புகள் கிடைக்கும். அப்படித்தான் நான் படிக்கும்போதே ராஜீவ் ரவி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய அனுராக் காஷ்யப்பின் தேவ்-டி படத்தில் உதவி ஒளிப்பதிவாளராக வேலை செய்தேன். 

 

உலக அளவில் எனக்குப் பிடித்த ஒளிப்பதிவாளர் கிரிஸ்டோபர் டாய்ல். சீன இயக்குநர் வாங்கர் வய்-யுடன் அவர் சேர்ந்து பணிபுரிந்த திரைப்படங்கள் ஒளிப்பதிவு பற்றிய எனது பார்வையை அதிகம் பாதித்தன. புனே திரைப்படக் கல்லூரியில் படிப்பு முழுமையாக முடிந்த பின்னர் 2011ல் தெலுங்கு நண்பர்கள் மூலமாக முதல் படம் வாய்ப்பு கிடைத்தது. கல்லூரியில் கலை இயக்கம் பயின்ற ராமகிருஷ்ணன் என்ற நண்பர் மூலமாகத்தான் இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது. படத்தின் பெயர் அண்டாள ராட்சசி. சிறு முதலீட்டுப் படம். நடிகர்கள்,  இயக்குநர் ஹனு ராகவப்புடி, நான் மற்றும் இதர தொழில்நுட்பப் பணியாளர்கள் எல்லாருமே புதியவர்கள். ஒரு வழக்கமான சினிமா படப்பிடிப்பின்போது இருக்கும் நெருக்கடிகள் இல்லாமல் ஒரு குழுவாக ஜாலியாகத்தான் இந்தப் படத்தில் பணிபுரிந்தேன். படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் எனக்கு நல்ல பெயர் வாங்கித் தந்தது. அந்தப்படத்தின் கடைசி ஷெட்யூல் வேலை செய்யும்போதுதான் ரஞ்சித் என்னை அட்டகத்தி படத்தில் பணிபுரிய அழைத்தார். ஆனால் அண்டாள ராட்சசி படத்தின் போஸ்ட் புரடெக்‌ஷன் வேலைகள் மீதம் இருந்ததால் அட்டகத்தியில் என்னால் ரஞ்சித்துடன் சேர்ந்து வேலை செய்ய முடியவில்லை.  

 

ஆனால் அப்போது ரஞ்சித்திடம் உரையாடியதன் மூலமாக அவரைப் பற்றி நான் புரிந்துகொண்டேன். அட்டகத்தி படத்தின் வெற்றிக்குப் பின்பு மீண்டும் நாங்கள் சிலமுறை சந்தித்துப் பேசினோம். அதன் பிறகுதான் மெட்ராஸ் படத்தில் நானும் ரஞ்சித்தும் இணைந்து வேலை செய்தோம். சினிமாவைவிட சினிமாவுக்கு அப்பாலான புரிதல்தான் எனக்கும் ரஞ்சித்துக்கும் ஒரு நல்ல பிணைப்பை ஏற்படுத்தியது.

 

ரஜினிகாந்த் மாதிரியான மாஸ் ஹீரோக்களுடன் தொடர்ந்து வேலை செய்வது மகிழ்ச்சியளிக்கும் விஷயம்தான். கபாலி படத்தின் தொடக்கக்காட்சி பரவலான கவனிப்பையும் பாராட்டைப்பெற்றது. ஆனால் ஒரு ஒளிப்பதிவாளருக்கு இருக்கும் எந்த அழுத்தத்தையும் நான் அந்தப்படத்தில் உணர்ந்ததில்லை. ரஜினி முழுமையாகவே இயக்குநரின் நடிகர். படப்பிடிப்பு தளத்தில் அவர் இயக்குநரின் பார்வையை, எதிர்பார்ப்பை உள்வாங்கி ஒரே டேக்கில் நடித்துக்கொடுத்துவிடுவார். கபாலியின் வணிக வெற்றிதான் அடுத்த படமான காலாவில் நான் பணியாற்றக் காரணம்.  ஆனால் கபாலியைப் போல காலா பெர்சனலான படம் இல்லை. கபாலி கேங்ஸ்டர் படம் என்றாலும் ரஜினியின் இழப்பும் ஏக்கமும் தேடலும்தான் படத்தின் பிரதான மையமாக இருந்தது. எனவே படத்தில் பல சண்டைக்காட்சிகள் இருந்தாலும் ரஜினி ஸாருக்கு எமோஷனல் காட்சிகள்தான் அதிகம். 

 

 

காலா-வில் ரஜினி மும்பை தாராவி பகுதியின் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கியப்புள்ளி. மக்கள் கூட்டத்திலிருந்து முளைத்து வரும் தலைவன். எனவே காட்சி ரீதியாகவே காலா படத்தின் ஒளிப்பதிவு பெரிய கேன்வாஸ்தான். மக்களில் இருந்து ரஜினியை தனியே பிரித்துப் பார்க்கமுடியாத ஃப்ரேம்கள். அடர்த்தியான வண்ணங்கள் பயன்படுத்தியுள்ளோம். காலாவை கருப்புக்கும் வெள்ளைக்குமான போராட்டம் என்றும் சொல்லலாம்.  காலாவுக்காக மழையில் ஒரு சண்டைக் காட்சி  எடுத்தோம். திலீப் சுப்பராயன் அதை நேர்த்தியாக வடிவமைத்துள்ளார். இதுவரை ரஜினி ஸார் படங்களில் அறிமுகக் காட்சிகளில் கபாலிதான் சிறந்தது. ஆனால் அதைவிடவும் சிறந்த ஒரு அறிமுகக் காட்சியை காலாவில் நீங்கள் பார்க்கலாம்!

 

சந்திப்பு: சரோ லாமா

 

[ஏப்ரல் 2018 அந்திமழை இதழில் வெளியான நேர்காணல்.]click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...